இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

 

நகரத்தாரின் இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஈடுபாடும், வரலாற்று உண்மைகளில் ஒன்று. தொன்று தொட்டு இலக்கியம் வளர்த்த செட்டிநாட்டு அரசர்களின் கருணையில், இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது இலக்கிய சிந்தனை அமைப்பு.

லட்சுமணன் வழிகாட்டலில், மாதந்தோறும் ஆழ்வார்பேட்டையில், ஒரு  சிறிய அரங்கில், கடைசி சனிக்கிழமை அன்று கூடும் இலக்கிய ஆர்வலர்கள் கூட்டம். தொடக்க காலத்தில், இங்கு வருகை தராத இலக்கிய பிரபலங்களே இல்லை எனலாம். ஆனால் அப்போது அவர்கள் பிரபலங்கள் இல்லை என்பது தான் நினைவில் கொள்ள வேண்டிய செய்தி. ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், அசோகமித்திரன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகிய பெயர்கள் அங்குள்ள பதிவேட்டில் இடம் பெற்ற நாட்கள், காலத்தால் அழிக்க முடியாதவை.

இன்று இலக்கிய சிந்தனையின் மாதாந்திர கூட்டங்களைச் சீந்துவாரில்லை. நான்கைந்து நபர்களுடன் கூட்டம் முடிந்து விடுகிறது. அதில் அமைப்பாளராக செயல்படும் பாரதி ஒருவர். ஆலோசனை கூறி வழி நடத்தும் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இன்னொருவர். அப்புறம் முன்று நான்கு பேர். அவ்வளவுதான். பாரதி ஒரு இருபது நிமிடம் பேசுவார். ஏதாவதொரு தலைப்பில், நாவன்மை அதிகம் இல்லாத ஒருவர், எழுதிக் கொண்டு வந்ததைத், தட்டுத் தடுமாறி படிப்பார். சிலசமயம் அதற்குக் கூட  ஆள் கிடைக்காமல், கலந்துரையாடல் என்கிற பெயரில், வந்திருந்தவர்கள் ஷேம லாபம் விசாரித்துக் கொண்டு பிரிந்து விடுவார்கள்.

முன்பெல்லாம் இலக்கிய சிந்தனை அமைப்பின் கீழ், அனைத்து இதழ்களும் வாங்கப்பட்டு, ஒருவரால் வாசிக்கப்பட்டு, அதில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்கும் நியதி இருந்தது. அதற்கும் ஆட்கள் அருகிப் போனதால், இரண்டு வருடங்களாக அது நிறுத்தப்பட்டு விட்டது. ஆண்டு தோறும் வெளிவந்த சிறுகதைகளில், சிறந்த ஒன்றுக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்தது. அதையும் இந்த ஆண்டு தொலைத்து விட்டது இலக்கிய சிந்தனை. வேறு வழியில்லாமல் இந்த வருடம் ஒரு நாடகத்திற்கு பரிசு கொடுக்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டான ஏப்ரல் பதினான்கு அன்று, ஏ.வி.எம்.ராஜேஸ்வரியின் குளிரூட்டப்பட்ட அரங்கில் 44ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. கே.பாலச்சந்தர் மற்றும் விவேக் ராஜகோபால் இயற்றிய, ஷ்ரத்தா குழுவினரால் மேடையேறிய, “ இடியுடன் கூடிய அன்பு மழை” என்கிற  நாடகத்திற்கு ரூ. 5000/- பரிசு வழங்கப்பட்டது. உடல் நிலை  சரியில்லாத காரணத்தால் பாலச்சந்தர் வரவில்லை. விவேக் ராஜகோபால் பெங்களூரில் இருப்பதால், வர இயலவில்லை. கடைசியில் ஷ்ரத்தா குழுவின் சிவாஜி சதுர்வேதியும், டி.டி. சுந்தர்ராஜனும் பரிசைப் பெற்றுக் கொண்டார்கள்.

தினமணிக் கதிரில் வெளிவந்த, “ ஏன் கலவரம்?” என்கிற சிறுகதைக்கு ரூ 1000’- பரிசு. எழுதியவர்  பி.சுந்தர்ராஜன். வெளியிட்ட தினமணிக் கதிருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு என்பதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது. சிறுகதையைத் தேர்ந்தெடுத்தவர் கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி.

திரு. இராமநாதன் பழனியப்பன் எழுதிய ‘ அபிராமி சமயம் நன்றே’ என்கிற  நூலை வானதி பதிப்பகம் மூலமாக இலக்கிய சிந்தனை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி பேச வந்த முனைவர் இரா. செல்வகணபதியின் உரையில் பல சுவையான தகவல்கள்.

“ ரவிவர்மாவின் ஓவியங்களை ரசித்திருக்கிறேன். ஆனால் அவரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் இன்று வாழும் ரவிவர்மாவாக ஓவியர் மணியம் செல்வன் இருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு, ஒவ்வொரு பயணத்தின் போதும், ஒரு பெட்டியில் அறுபது நூல்களை எடுத்துச் செல்வார். அவரது மகள் இந்திரா, மூன்று மணிநேர விமானப் பயணத்தில் இவைகளை எப்படி படிக்க முடியும் என்று கேட்பாராம். அதற்கு நேரு ‘ இந்தப் புத்தகங்களோடு பயணம் செய்தால், அறுபது நூலாசிரியர்களோடு பயணம் செய்வது போன்ற நிறைவு ஏற்படுகிறது என்பாராம்.”

ஒன்பது தொகுதிகளாக கம்ப ராமாயணத்திற்கு புதிய உரை எழுதிய திரு. பழ.பழனியப்பனுக்கு, தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்கள் என்கிற வகையில், ரூ.15000/- பரிசு வழங்கப்பட்டது.

ஏற்புரையில் திரு. பழனியப்பன், “ நான் வங்கிப்பணியில் நாமக்கல்லில் இருந்தேன். தினமும் அந்த ஊர் ஆஞ்சநேயரை தரிசிப்பது எனது வழக்கம். ‘இப்படியே இருந்து விடப் போகிறாயா? வாழுவதற்கு அர்த்தமாக ஏதாவது செய்ய வேண்டாமா? ‘ என்று ஆஞ்சநேயர் என்னை தூண்டி விட்டதாக உணர்ந்தேன். உடனே விருப்ப ஓய்வு கொடுத்து விட்டேன்.  நாமக்கல்லின் நூலகமே கிடையாது. கோவைக்குப் போய் சில நூல்களை வாசித்தேன். அதற்குள் எனக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டார்கள். அம்பத்தூரில் தங்கிக் கொண்டேன். அருகிலிருக்கும் திருமுல்லைவாயில் நூலகத்திற்குப் போனேன். ஆனால் அது  கவனிப்பார் இன்றி பூட்டிக் கிடந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு, அதைத் திறந்து பார்த்தால், கம்பராமாயணத்திற்கு இதுவரை உரை எழுதிய அத்தனை பேரின் நூல்களும் அங்கு சீந்துவாரின்றி கிடந்தன. எனது கனவைச் சொல்லி,  நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு ஒரு அறையையே ஒதுக்கி தந்து விட்டார்கள். தரையிலும் மரப்பெஞ்சிலும் எட்டு வருடங்கள் படுத்து ஒருவழியாக 2007ல் முதல் பதிப்பு கொண்டு வந்தேன். ஆனால் அதை வாங்க ஆளில்லை. என் நிரந்தர வைப்பு நிதி எட்டு லட்சம் செலவானது தான் மிச்சம். 2007லிருந்து மூன்று ஆண்டுகள் அப்போதைய கலைஞர் அரசு  நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கும் ஆணையைப் பிறப்பிக்கவே இல்லை. அதனாலும் என் புத்தகம் தேங்கிப் போனது. ஒருவழியாக கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகளுக்கு கடிதம் எழுதி நூறு பிரதிகள் விற்றேன். எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. எழுதுவதற்கு முன் ஏதாவது ஒரு பதிப்பகத்தை அணுகி, உங்கள் நூலை அவர்கள் வெளியிடுவார்களா என்று தெரிந்து கொண்டு எழுத ஆரம்பியுங்கள். இல்லையென்றால் கைக்காசு கரைந்து போகும்.”

0

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *