அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…
சுப்ரபாரதிமணீயன்

கவிதை என்பது கைவாளா, போர்வாளா , காலவிரையமான பொழுதுபோக்கா, சொல்விளையாட்டா, ஆன்ம தரிசனமா, உளறலா, தத்துவமா, மொழியியல் ஜாலமா, கலாச்சார பரிவர்த்தனையா,கடவுளா, சாத்தானா, உயிரா , மயிரா என்று விவாதம் எப்போதும் இருக்கிறது.

கட்சி சார்ந்து இயங்குகிறவனுக்கு அது எப்படியும் ஆயுதம்தான். வெகுஜன அரசியல் சார்ந்த வாக்குப்பொறுக்கிக்கு அது வெற்று ஜாலம். ” நீ நிமிர்ந்தால் இமயமலை, நடந்தால் பாரத நதி ” என்று எந்தத்தலைவனையோ, தலைவியையோ புகழ்ந்து பாடும் யாசகக் குரல். ஆனால் சமூக நீதி இயக்கம் சார்ந்து இயங்குபவனுக்கு அது கைவாள்தான். மக்களிடம் தன் அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு செல்லும் கருவிதான்.
பாரதிவாசன் தொடர்ந்து அரசியல் தளங்களில் இயங்கி வருகிறவர். 15 ஆண்டுகளுக்கு முன் அவரின் முதல் தொகுப்பு ” யாதெனீல் ..” கனவு வெளியீடாக வந்தது. அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது முக்கிய நிகழ்வாகும். பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டனர். ஞானக்கூத்தன், திலகவதி, கவிதாபாரதி, டொமினிக் ஜீவா, வ.அய். செ. ஜெயபாலன், அறிவுமதி மறைந்த இதயக்கனி இயக்குனர் செகநாதன், நிகழ் திருநாவுக்கரசு என்று பலர் கலந்து கொண்டனர். 15 ஆண்டுகள கழித்து 90 பக்கத்தில் அவரின் இரண்டாம் கவிதைத்தொகுப்பு வந்துள்ளது. கவிதையின் தேர்ந்த வாசகன் ஒருவனுக்கு, முறையான கவிதைப் பயிற்சி உள்ளவனுக்கு ஒருமாதம் என்பது ஒரு தொகுப்பை எழுதி வெளியிடபோதுமானது. ஆனால் 15 ஆண்டுகள் என்பது நீண்ட இடைவெளி . இந்த இடைவெளியில் அவர் அரசியல் செயல்பாடுகளால் தன் வானத்தை நிரப்பிக்கொண்டிருந்தார்.

மாற்றுத்திரைப்பட புத்தகங்களை வெளியிடுதல், அவற்றை விற்றல், மாற்றுத்திரைப்பட குறும்பட நிகழ்வுகள்,குறும்பட பயிற்சிப்பட்டறைகள், மாற்றுக் கல்வியான தாய்த்தமிழ்ப்பள்ளியின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு, மாற்று உணவு சார்ந்த விற்பனையக செயல்பாடுகள் , மாற்று மருத்துவம் சார்ந்த செயலாக்கங்களில் ஒருங்கிணைப்பு என்று தொடந்த செயல்பாடுகளில் இருந்திருக்கிறார். இவையெல்லாம் மாற்று பண்பாடு, மாற்று சமூகம் குறித்த அக்கறையான செயல்பாடுகள். இந்த மாற்றுப்பண்பாட்டுச் செயல்களுக்குப் பின் ஒரு அரசியல் இருக்கிறது அது தமிழ் தேசிய அரசியல்..ஒரு வகையில் சமரசம் செய்யாத அரசியல் குரல் அவருடையது. அவர் கடந்து வந்த பொதுவுடமைக் கட்சிகளின் மீதான விமர்சனத்தினூடே இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு வந்திருக்கிறார். அது ஈழம், முல்லைபெரியாறு, கூடாங்குளம் அணுமின்சக்தி என்ற கருத்து மோதல்களால் நிகழ்ந்ததாகும்.
அரசியலில் அக்கறை கொண்ட கவிதை மனம் எப்படி செயல்படும் . அதற்கு உதாரணம் இத்தொகுப்பு. அதிகமாய் காதல் கவிதைகள் இருந்தாலும் அவை சாதி மறுப்பை முன்வைக்கும் செயல்பாடுகளாகும்.காதலை எழுதுகிறவன் சாதியை வெளியேற்றுகிறவன் சாதி மறுப்பை செயல்பாடுகளால் காட்டுபவன் . காதல் உணர்வுகளோடு சமூகம் தரும் எல்லா வித செயல்பாடுகளுக்கும் தன் அரசியல் செயல்பாடுகளோடு இலக்கியத்திலும் பதிவு செய்கிறவனாகிறான்.அந்த வகையில் பாரதிவாசன் மாற்றுப் பண்பாடு குறித்த அரசியல் செயல்பாடுகளோடு தமிழ் இலக்கிய வாசகனாகவும், போராளியாகவும் பன்முகத்தன்மைகொண்டு செயல்படுகிற நிர்பந்தத்தில் தன்னைச் சளைக்காமல் ஈடுபடுத்திக் கொள்வேதே அவரின் இருப்பை இளைஞர்கள் மத்தியில் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பின் மூலமும்.

( பாரதி வாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம் “ கவிதைத்தொகுப்பு.. . ரூ60 / வெளியீடு : நிழல், 31/48 இராணி அண்ணா நக்ர், சென்னை 78 9444484868 ).

Series Navigation
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *