தினம் என் பயணங்கள் – 19 இரண்டாம் நாள் தேர்வு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

வாழைத் தண்டு கலவை கீரை மணத்தக்காளி கீகீகீகீகீரெய்ய்ய்ய்ய்….. என்று ராகமாய் செவி தீண்டிய வார்த்தைகளில் கண்விழித்தேன். நேற்று பிலிட் [B. Litt] பட்டப் படிப்பிற்கான பாட இலக்கணத் தேர்வு. நேற்று இருந்த பதட்டம் இன்று இல்லை. வெகு நேரம் கண் விழித்துப் படித்ததில் கண் எரிந்தது. புத்தகம் வாங்கிய போதிலிருந்தே படித்திருக்க வேண்டும். இதென்ன சாகுற நேரத்துல சங்கரா சங்கரான்னு என்று இடித்துரைத்த மனதை அதட்டியது மற்றொரு மனம்.

தேர்தல் வேலை இருந்தது. வாக்காளர் பட்டியல் சேர்க்கை, வாக்குச் சாவடி பிரித்தல் என எவ்வளவு வேலைகள். இரவு வீடு திரும்பு வதற்கே 11 மணிக்கு மேல் ஆகி எப்படிப் படிப்பது என்று எடுத்துரைத்த போதும் படிக்கனும்ன்னு நெனப்பிருந்தா எப்படியும் படிக்கலாம் என்று சுணங்கிய மனதை ஒருவாரு தேற்ற முயன்று தோற்றுப் போனேன்.

இரண்டாம் நாள் இலக்கியப் பாடத் தேர்வு. அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்தது தான். வெகு நேரம் அலுவல கத்திலேயே இருந்ததால் 3 பாடங்கள் அலுவலகத்திலும் 2 பாடங்களை வீட்டிலும் படிப்பது என்று முடிவு செய்திருந்தேன்.

வீட்டில் படிக்க முடிய வில்லை. தம்பி குழந்தைகள் ஒரு புறம். என் மகள் அருள்மொழி ஒரு புறம். நான் புத்தகத்தைக் கையில் எடுத்ததும் மடியில் வந்து படுத்துக் கொள்வாள். கொஞ்சம் தள்ளுடா தலை யணையில படு என்றால், என்னை விட உனக்கு படிப்புதான் முக்கியமா போச்சா என்று தலை யணையை தூக்கி எறிவாள். இதென்னடா தர்ம சங்கடம் என்று எல்லோரும் உறங்கும் வரை காத்திருக்க வேண்டும்.

இதற்காக அலுவலகத்தில் அதிக வேலை என்று பொய் சொல்லி விட்டு சீக்கிரமாக அலுவலகத்திற்கு செல்லத் துவங்கினேன். உடன் ஊழியர்கள் வரும் வரை படித்துவிட்டு, திரும்பவும் மாலை அதிக நேரம் அங்கே இருந்து படித்தேன்.

படிக்கப் புத்தகம் எடுத்த ஒவ்வொரு நாழிகையும் மனம் வெளியில் ஓடியது. மகள் அருள்மொழிக்கு பள்ளிக் கட்டணம் ரூ. 20,000 எப்படி கட்டுவது, நிர்மலாவிற்கு [மாற்றுத் திறனாளி தோழி] எப்படி வகுப்பெடுக்க செல்வது. வீட்டு வாடகை, கரண்ட் பில், உறவினர் களின் தொல்லை. இடையிடையே வந்துவிட்ட திருமண, காது குத்து, மஞ்சள் நீராட்டு விழாக்கள், அக்காவிற்கும் எனக்குமான கருத்து வேறுபாடு. சகோதரனுடனா சச்சரவு என்று, உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிணக்கு என மனம் படிப்பில் லயிக்க மறுத்தது.

ஒரு வழியாக ஓடிய மனதை ஒடவிட்டுத் திரும்பவும் படிப்பில் லயிக்கச் செய்ய குழந்தைப் பருவத்தில் கத்தி சத்தமாய்ப் படித்ததைப் போல படித்தேன். என் மகள் என்ன மம்மி இப்படி படிக்கறீங்க என்று கேலி செய்தாள். என் கஷ்டம் எனக்கு என்று சிரித்துக் கொண்டேன்.

இப்படிப் படித்தும் கடைசி நேரத்தில் மனதில் நிற்காதது தான் வேதனை. உறவினன் விஜய் மேல்வணக்கம்பாடி கிராமத்தில் இருந்து வர வேண்டும். ஆட்டோ ஓட்டுநர், தேவன் ஆலப்புத்தூர் கிராமத்தில் இருந்து வர வேண்டும். விஜய்க்கு போன் செய்ய நேற்று போல் முறையாறில் வந்து காத்திருப்பதாக கூறினான்.

தேவன் காலை 11.40 மணிக்கு வர நான் வீட்டிற்குள் இருந்து வந்து ஆட்டோவில் ஏறும் போது மேல்வீட்டில் குடியிருப்பவர்கள் வேடிக்கைப் பார்த்தது ஒரு வேற்று உணர்வை தோற்றுவித்தது. அம்மா பேனாவைப் பிரார்த்தனை செய்து தந்தாள். அவளின் நம்பிக்கை அது. நான் உடன் இருப்பவர்களின் நம்பிக்கை குறித்து எந்த மாற்றுக்கருத்தும் தருவ தில்லை.

நானும் தேவனும் செங்கத்தில் இருந்து வருவதற்குள்ளாக அந்த தண்டாகார பெண்மணியிடமிருந்து இரு முறை அழைப்பு வந்துவிட்டது. அவளும் விஜயும் முறையாறில் காத்திருப்பதாக. அவர்கள் இருவரின் ஊரும் அருகருகாமை கிராமங்களாதலால் ஒன்றாக வந்திருந்தார்கள்.

நானும் தேவனும் மேல்மண்மலை கடக்கும் போது ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியாக மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஆட்டோவை நிறுத்தும் படி கையசைத்தாள். எங்கு போக வேண்டும் என்று வினவ கரிய மங்கலம் என்றாள்.

எங்கள் ஆட்டோவில் அவளுக்கு இடம் ஒதுக்கி நாங்கள் அமர்ந்து கொண்ட பிறகு இது போல் வேறு சமயத்தில் வேறு ஆட்டோ நிறுத்தக் கூடாது என்று கூறினேன். அதற்கு அந்த சிறுமி அமைதியாகவே இருந்தாள். பெரும்பாலும் பேருந்தில் பயணிப்பதே பாதுகாப்பு என்று கூற அந்தச் சிறுமி விளங்கிக் கொண்டதாகத் தெரிய வில்லை.

அப்படின்னா ஆட்டோகாரங்க கெட்டவங்களா என்றான் தேவன்
கெட்டவர்கள் என்று சொல்ல வில்லை ஐந்து விரல்கள் ஒன்று போலவா இருக்கிறது என்றேன்.

முறையாறு வந்ததும் அந்த தண்டாக்கார பெண்ணும், (மன்னிக்க அவளிடம் நான் பெயரே கேட்கவில்லை), அவள் சத்துணவு டீச்சராக பணியாற்றுவதாகக் கூறினாள். அதிக விவரங்கள் கேட்கும் ஆர்வம் இல்லை. தன் செயலுக்கு உடன்பட நிர்பந்திக்கும் யாரிடமும் நாட்டம் ஏற்படுவதில்லை. அவளின் உறவினர் இருவரும் விஜயும் ஏறினார்கள்.

நான் ஆட்டோவில் சில பாடங்களை திரும்ப படிக்க வேண்டும் என்று எண்ணினேன். அது சாத்தியப்படவில்லை. விஜய் அந்த பெண் தேவன் மூவரும் எதை எதையோ பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் ஊர், சாத்தனூர் அணை, அங்கு திருட்டுத்தனமாக மீன் பிடிப்பது, அந்த பெண்ணின் கணவர் நடத்தும் கேபில் டிவி கனெக்ஷன் இப்படி பேச்சு வேறு வேறு திசை நோக்கி சென்று கொண்டிருக்க, என் கண்கள் விரைவாக நகர்ந்து கொண்டிருந்த வானத்தைப் பார்த்தது.

நேற்று அந்த பெண் உடன் வருவதாக கூறிய போதே மறுத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். மறுக்க வேண்டிய நேரத்தில் மறுக்காதது எத்தகைய இடைஞ்சலை உண்டு பண்ணுகிறது? இருமுறை அமைதியாக இருக்கும் படி கூறியும் சிறு இடைவெளிக்கு பிறகு அவர்கள் பேச்சு தொடர்ந்தது.

அவர்கள் பேசிப் பழகியவர்கள். நான் அமைதியாக இருந்து பழகியவள். இந்த முரண்பட்ட மனிதர்களோடு பயணிப்பதில் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமையை எண்ணி வியந்தேன். நான் அதிகம் அநேகரோடு பேசாதவள். அதற்காக அம்மாஞ்சி என்றும் சொல்வதற்கில்லை.

திருவண்ணாமலை ரமணாச்சிரமம் அருகில் சைக்கிளில் சென்ற வெள்ளைக்கார பெண், அவளின் உடை என்னை மிகவும் கவர்ந்தது. நகை அணியாத எளிமை. ஒரு பையை முதுகில் சுமந்த படி விடுவிடு வென்று நடந்துக்கொண்டிருந்த வெள்ளைக்கார இளைஞன். வெளி நாட்டவர்கள் சிறுநீர் கழிக்கவெனச் சாலையோரம் ஒதுங்குவதை நான் எப்போதும் பார்த்ததில்லை. உணவை நளினமாக நடந்துக்கொண்டே உண்டு விடுகிறார்கள். நம்மவர்கள் தான் கம்பம் பார்ததும் காலை தூக்கும் நாய் போல நடந்துக்கொள்கிறார்கள்.

ஷண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலை பள்ளி…!
விஜய் போய் எனக்கான தேர்வறையை காணச் சென்றான். நான் ஆட்டோவிலேயே காத்திருந்தேன். பசித்தது. காலையில் உணவருந்த வில்லை. அம்மா கால் வலி என்று சுணங்கினாள். என் முகக்குறிப் புணர்ந்தவன் போல் அக்கா கூழு குடிக்கிறியா என்றான் தேவன்.

சரி என்றேன்.

பிளாஸ்டிக் வாட்டர் கேனில் கூழை கரைத்து ஊற்றிக் கொண்டு வந்திருந்தான். அதை வாயில் சரிக்க வெளியே வர மறுத்தது கூழ்.
கோந்தை அழுத்தி வெளியேற்றுவது போல் மூன்று வாய் விழுங்க மூன்றாவது வாய் கூழ் வயிற்றில் இறங்கியதுமே வேண்டாம் என்று விட்டேன். வெயிலில் அதிகம் புளித்து போயிருந்த போதும். அதற்கு அழுத்தம் கொடுத்து வெளிவர வைப்பது தான் எனக்கு எரிச்சலை உண்டாக்கியது.

தண்டா பெண் இறங்கி அவள் இடத்தைத் தேடப் போய் விட்டாள். தேவனிடம் மட்டும் சிறு தலையசைப்பு விடைபெறல். விஜய் வந்ததும் தேர்வு எழுத எனக்குக் கீழேதான் அறை என்றான்.

ஒருபுறம் சாய்தளம் இருந்தது. ஏறிவிடலாம் ஆனால் கடுமையான வெயில். இன்று நாற்காலியும் கொண்டு வரவில்லை. ஆட்டோவில் இருந்து காலை தரையில் வைத்ததுமே ஹா என்றேன். வெப்பம் தாங்காத என் பாத வலியை உணர்ந்த தேவன் நாற்காலி எங்கு கிடைக்கும் என்று தேடி சென்றான். நாலு எட்டு எடுத்து வைச்சா முடிஞ்சது என்றான் விஜய்.

எப்போதும் முணுக்கென்று முன் நிற்கும் கண்ணீர் வரவில்லை. தமிழ்ச்செல்வி திடம் கொண்டு விட்டேனா என்ன என்று ஆச்சர்யப் பட்டுக் கொண்டேன்.

அப்பொழுதுதான் நான் அந்த பெண்ணை பார்த்தேன். குள்ளமாக இருந்தாள். வட்ட முகம். துரு துரு கண்கள். சாதாரணமாய்ப் பின்னலிட்ட கூந்தல். காட்டன் புடவை கட்டியிருந்தாள். ஸ்கூட்டி பெப்பின் ஒருபுறம் இரு ஊன்றுகோலை ஆங்கிளில் மாட்டி யிருந்தாள். சர்ர்ர்ரென்று ஆட்டோவை ஸ்கூட்டி பெப்பில் கடந்து அலுவலக அறைக்காக செல்ல அதற்குள் தேவன் வந்துவிட கவனம் மாறியது.

பள்ளியின் மரச்சேரில் என்னை அமர்த்தி நான்கு படி மேற்கொண்டு போய் விட்டார்கள் தேவனும் விஜயும். நேற்று வந்த சூப்பர்வைசர் அல்ல இன்று. இன்று வேறு யாரோ! கடைசி நேரத்தில் விஜய் பிட் எடுத்து வந்து கையில் திணிக்க வேண்டவே வேண்டாம் என்றேன்.
ஹால் சூப்பர்வைசரிடம் சொல்வதாகவும், பயப்பட வேண்டாம் என்றும் கூறியவனிடம், வேண்டாண்டா ப்ளீஸ் என்றேன்.

உனக்கென்ன இப்ப, உன்னை யாரும் எழுப்ப மாட்டாங்க, எழுதிட்டு தைரியமா ஹால் சூப்பர்வைசரிடம் கொடுத்துடு.

ஒண்ணும் வேணாம், என் மூஞ்சியே காட்டிக்கொடுக்கும் நான் திருட்டு தனம் பண்றேன்னு.

இன்னொரு முறை ஒரு தினத்துக்கு 1000 ரூபாய் செலவு பண்ண போறியோ, நீ இப்படி இருக்குறதால யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கப்பா.

தெரிஞ்சவரைக்கும் எழுதறேன், தெரியலேன்னா அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்.

நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று தலையில் அடித்துக்கொண்டு வெளியேறினான் விஜய்.

வந்த ஹால் சூப்பர்வைசரைப் பார்த்து நம்ம சார் தான் என்று மகிழ்ந்து கொண்டார்கள் உடனிருந்தவர்கள்.

நித்தியகண்டம் ஹால் சூப்பர்வைசர் அல்ல கோஆர்டினேட்டர் தான். அந்த கம்பீரம், அந்த கணீர் குரல், அந்த நடை, அதில் தெரிந்த தைரியம் என்னை நேர்மை நோக்கி நகர்த்தியது. நான் ஏன் பிட் அடித்து பாஸ் செய்ய வேண்டும் ? அதன் அவசியம் என்ன வந்தது ? என்று என்னையே வினா எழுப்பிக் கொண்டேன். நான் படிக்க வேண்டும் இன்னும் நன்றாய் அதிகமாய், இந்த தேர்வுக்கு மட்டும் இல்லை, வாழ்க்கையில் ஏற்படும் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று வைராக்கியம் எனக்குள் பிறந்தது. அவர் தேர்வு அறையில் நுழைந்த போதெல்லாம் என் பார்வை அவரைச் சுற்றியே வட்டமிட்டது.

அவரிடத்தில் துணிச்சல் கண்டேன். அது என்னிடத்தில் இல்லை. தமிழ்ராஜா கூறிய அந்த துணி்ச்சல். தவறு நடக்கும் இடத்து பொங்கி வரும் அந்த கோபம், அவர் குரலிலும் அவர் பார்வையிலும் தெரிந்தது. ஓ இது தான் துணிச்சலோ என்று என்னிடம் கேட்டுக் கொள்ளவும் செய்தது.

உங்களிடம் இல்லாத துணிச்சலினால் தான் நீங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டீர்கள் என்பான் தமிழ்ராஜா. அவ்வப்போது நான் வாழ்க்கையில் முக்கியமாக என் வாழ்வாதாரமாக எண்ணிய ஒவ்வொன்றும் என்னை விட்டுப் போனது. அந்த துணிச்சல் இன்மையினால் தான் என்பதைப் பொட்டில் அடித்து சொன்னது அவரின் செயல்.

இன்று ஹால் சூப்பர்வைசரே மிகவும் கராராகத்தான் இருந்தார். வந்ததும் புத்தகங்களை வெளியில் வைக்க சொன்னார். பிட் ஏதும் வைத்திருந்தால் வெளியில் போட்டுவிடுங்கள் என்றார். என்னிடத்தில் எதுவுமில்லை. யார் வந்து பார்த்தாலும் எனக்கெந்த கவலையும இல்லை. ஆனாலும் ஒரு மனம் வேண்டியது. அந்த விடாக் கொண்டன் மட்டும் என்னருகில் வரக் கூடாது கடவுளே! என்னை நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. இன்று நான் அந்த மனிதரைப் பார்க்கப் போவதே இல்லை என்று.

கோஆர்டினேட்டர் உள் நுழைந்ததும் ஒரு ஆசிரியை மாட்டினாள். “நீங்க எல்லாம் பசங்களுக்கு பாடம் எடுத்து என்னத்தை கிழிக்க போறீங்க,” என்றார் அவர். அதை தொடர்ந்து அநேகர் பிட் அடித்ததற்காக வெளியில் அனுப்பப்பட்டார்கள். அவர் முகத்தை பார்க்கவே பயமாக இருந்ததால் நான் அந்த பக்கம் திரும்புவதை தவிர்த்தேன்.

தேர்வு முடிந்த பிறகு எப்போதும் போல் விஜய் மற்றும் தேவனின் பல்லக்குத் தூக்கும் படலம் தான். நான் ஆட்டோவில் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருக்கும் போது கோஆர்டினேட்டர் வந்து நீ ஏன் வந்து என்னைப் பார்க்கவில்லை என்றார். நான் திகைத்தேன், இந்த கடவுள் என்பவர் இருக்கிறாரா இல்லையா? நான் யாரைப் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகிறேனோ அவரைக் கொண்டுவந்து என்னுடன் பேச வைக்கிறார்.

சே பேச்சு எழவில்லை, சாரி சார் என்றேன். கொஞ்ச நேரத்தில் பெயிலாக பார்த்தாயே என்றார்.

விஜய் அவர் பின்னாலேயே ஓடினான் என்ன சார் என்ன ஆச்சு!

பார்த்திருந்தால் கீழ் ஹாலிலேயே போட்டிருப்பேன் என்பதற்காகச் சொன்னேன் என்று கூறியதாக விஜய் வந்து சொன்னான்.

அன்று ஆட்டோவில் வீடு திரும்பும் போது விஜய்யும் தேவனும் நாளை பிட் எடுத்து செல்வதைப்பற்றி தான் பேசினார்கள்.

கோஆடினேட்டருக்கு நான் பிரண்ட் ஆகிவிட்டதாகவும் இனி அவர் நான் பிட் அடித்தாலும் கண்டு கொள்ள மாட்டார் என்றும் கூறிக் கொண்டு வந்தார்கள்.

அவர் வந்து என்னிடம் பேசியது என்மேல் கொண்ட ஒரு பரிதாப உணர்வு. அதை நான் எப்படி நட்பாகக் கொள்ள முடியும் ? அவர் தேர்வு நடத்தும் அலுவலர். நான் அவர் பணியாற்றும் பல்கலைக் கழகத்தின் மாணவி. இதில் நட்பு என்பது எப்படி சாத்தியமாகும். உடன்படாத இந்த கூற்றுகளை வைத்து அவர்கள் என்னைத் தவறு செய்ய உந்துவதில் எனக்கு சிறிதும் உடன்பாடிருக்கவில்லை.

பிட் அடிக்க அனுமதிக்கும் அளவிற்கு நேர்மை அற்றவராக அவரைக் காண்பதில் எனக்கு துளியும் சம்மதமும் இல்லை. மனம் ஒருவாறு அவரை உருவகப்படுத்தியிருக்க அந்த நேர்மை உருவை அழிக்க நானே முன்னகப்படுவது குற்றமாக தோன்றியது. நான் வீட்டிற்கு வந்த பிறகும் கூட எண்ணம் அவரை அசைபோட்டுக் கொண்டிருந்தது. அவரின் துணிச்சலும் தைரியத்திற்குமாக.

[மூன்றாம் நாள் தேர்வு தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *