நாகரத்தினம் கிருஷ்ணா
மே -10 -2014
இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு மட்டுமல்ல, கொடுத்துள்ள தலைப்பிற்குள்ளும் இப்போதுதான் வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை (?) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். அவரோடு உரையாடினேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது? ஏன் அமைந்தது? எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
செக் நாட்டிற்கு பெரிய வரலாறு என்று எதுவுமில்லை. பத்தாண்டுகளாகத்தான் செக் நாடு. 1993 வரை செக்கோஸ்லோவோகியா (இதுவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானதுதான்) என்றிருந்த நாட்டை செக்-ஸ்லோவாக் அண்ணன் தம்பிகள் இருவரும் அடிதடியின்றி பாகம் பிரித்துக்கொண்டார்கள். தனிக்குடித்தனம் போனபிறகு அவர்களுக்கிடை காவிரி- முல்லைப்பெரியாறு சண்டை சச்சரவுகள் இல்லை. அவரவர் பாட்டுக்குத் தாமுண்டு தமது நாடுண்டு என்றிருக்கிறார்கள். செக்நாடு நிலப்பரப்பு 80000 ச.கி.மீ. (தமிழ் நாடு 13060 ச.கீ); மக்கட்தொகை 2012ம் ஆண்டுக் கணக்கின்படி 11 மில்லியன் மக்கள் (தமிழ்நாடு தோராயமாக 72 மில்லியன் மக்கள்). செக் நாட்டுக் கல்வியாளர்கள், கலை, சிற்ப, இலக்கிய ஆளுமைகள் உலகறியப்பட்டவர்கள். சமீபத்திய உதாரணத்திற்கு: 1984ம் வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற அவான் கார்டிஸ்ட்டும் கவிஞருமான Jaroslav Seifert. நோபெல் பரிசெல்லாம் வேண்டாம், « நொந்தே போயினும் வெந்தே மாயினும் …… வந்தே மாதரம் » என்று முழங்கிய பாரதிக்கு, இந்தியாவின் அண்டைமாநில மொழித்துறைகள் செலுத்தும் மரியாதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை. எலிவளையென்றாலும் தனிவளைவேண்டும் என்பது இதற்காகத்தான்.
நேற்றிரவு நாங்கள் தங்கியிருந்த உணவு விடுதிக்குத் திரும்ப, முதல் நாளைப்போலவே இரவு பத்து மணி ஆகியிருந்தது. டிராம்வேயில் இறங்கி விடுதியின் ரிசப்ஷன் டெஸ்க்கை நெருங்கினால், ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சற்றுதள்ளி அவர்களுடைய கைப்பெட்டிகள், முதுகுப் பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இரவு அந்த ஓட்டலில் தங்கவந்த சுற்றுலா பயணிகள் போலிருக்கிறது. அவர்கள் ஸ்லாவ் மொழிதான் பேசினார்கள் என்றாலும் செக், ஸ்லோவாக், செர்பியா இவற்றுள் ஏதோ ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பது புரிந்தது. ரஷ்ய மொழி தெரியாதென்றாலும் அவர்கள் உச்சரிக்குவிதம் ஓரளவு பழகியிருந்தது. எங்களுடைய அறைக்குறிய ஓட்டல் விதிப்படி காலையில் புறப்படுகிறபோது ரிசப்ஷனிஸ்ட்டிடம் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். எங்களுடன் வந்திருந்த பயணிகளில் பலர் சாவியைக் கொடுக்காமலேயே கையில் வைத்திருந்தனர். அவர்கள் செய்த காரியம் சரியா தவறா என்பது இங்கே முக்கியமில்லை, ஆனால் அதிலுள்ள சௌகரியம் அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. அவர்கள் வந்த வேகத்தில் லிப்ட் எடுத்து அவரவர் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நானும் மனைவியுமாக எங்கள் அறை சாவிக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிடக் காத்திருப்பு பத்து நிமிடமாயிற்று. ஏற்கனவே வரவேற்பு பெண்மணியைச் சுற்றியிருந்த கும்பல் கலைந்துபோனதும் மற்றொரு கும்பல் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டது. ரிசப்சனிஷ்ட்டைச்சூழ்ந்த கும்பலைப்பார்க்க எனக்கு மோடியைச் சூழ்ந்த NDA எம்.பிக்கள்தான் நினைவுக்கு வந்தனர். நமக்கென்று உள்ளது எங்கே போய்விடும் என பொன். இராதாகிருஷ்ணன் போல ஒரு ஓரமாக நிற்கிறேன். ரிசப்னிஷ்ட் பெண் கடைக்கண் பார்வைகூட என் மேல் விழவில்லை. அப்பெண்மணியைக் குறை சொல்ல முடியாது. அத்தனை பேரையும் அவர் ஒருவராய் எப்படி சமாளிப்பாரென மனம் சமாதானம் செய்துகொண்டாலும், காத்திருக்க பொறுமையில்லை. கும்பலை விலக்கிவிட்டு, எனது அறை எண்ணைக்கூறி சாவி வேண்டும் என்றேன். அந்த எண்ணுக்குரிய புறாக்கூட்டில் சாவியை சில நொடிகள் தேடினார். தேடிய வேகத்தில் திரும்ப வந்தார். சாவி இங்கில்லை என்றார். உடனே மீண்டும் கும்பலிலிருந்த பயணிகள் பக்கம் அப்பெண்மணியின் கவனம் சென்றது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன மீண்டு அப்பெண்மணியை விடுவதாக இல்லை. ”மீண்டும் சாவி?” என்றேன். அதுதான் இங்கில்லை என்றேனே, என்றாள். நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை உடனே கூப்பிடு, எனக்குரிய பதில் கிடைத்த பிறகுதான் மற்றவர்களை கவனிக்க அனுமதிப்பேன் என்றேன். இரண்டொரு விநாடிகள் அவள் மூக்கும் முழியும், காதுகளும் சேர்ந்தாற்போல சிவந்தன. தொலைபேசியை எடுத்தாள். யாரையோ அழைத்தாள். நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அழைக்கிறாள் என நினைத்தேன். பாதுகாவலர் ஒருவரை அழைத்தார். அவருக்கு ஸ்லாவ் மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அவர் என்னவோ கூறினார். கையிலிருந்த சிறு பெட்டியைக்காட்டினார். ரிசப்னிஷ்ட் அவர் உங்கள் அறையைத் திறந்துகொடுப்பார் என்றார். அவர் எங்களுடன் வந்து அறையைத் திறந்துகொடுக்க, அன்றிரவும் மணி பதினொன்று ஆகியிருந்தது.
மே பத்தாம் தேதி வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்டபோதிலும், மற்ற நண்பர்கள் பத்துமணிக்கு முன்பாக புறப்படுவதில்லை என்று தீர்மானித்தவர்கள்போல பொறுமை காப்பதால் நிதானமாகமாகவே கீழே இறங்கினோம். டைனிங்ஹாலில் வழக்கம் போல ஐரோப்பிய உணவுகள். செக் மக்கள் காலையில் பெரும்பாலோர் சாசேஜ் சூப் உடன் ரோஹ்லிக் என்ற பிரெட், தயிர், சீஸ் இவற்றையெல்லாங்கூட பிற ஐரோப்பியர்களைப்போலவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள்; நானும் மனவியும் வழக்கம்போல், அவர்களுடைய ரோஹ்லிக், ஆம்லேட் ஆரஞ்சு ஜூஸில் காலை உணவை முடித்துக்கொண்டோம். முடித்து விட்டு வரும்போது பயணிகளில் ஒருவர் எங்கள் அறை சாவியைக்கொண்டுவந்து கொடுத்தார். தவறுதலாக, வந்திருந்த சக பயணி ஒருவர் அறையில் கிடைத்தது என்றார்கள். அதன் பூர்வாங்க விசாரணையில் இறங்கவில்லை. மீண்டும் அறைக்குச்சென்று கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்கினோம். இன்றைய திட்டம் வெல்ட்டாவா (Vltava – உச்சரிப்பு குழப்பம் இருக்கிறது, முந்தைய பக்கங்களில் வல்ட்டாவா என எழுதியிருந்தேன், தற்போது வெல்ட்டாவா என உச்சரிப்பதுதான் சரியென அறியவந்தேன்) – நதியில் படகு சவாரி, பிற்பகல் மீண்டும் பிராகு நகரத்தை வலம்வருவது. ஓட்டலை காலிசெய்துவிட்டு பேருந்தில் நாங்கள் கொண்டுவந்த பெட்டிகளை வைத்தாயிற்று. பேருந்து ஓட்டுனர்கள் படகுசவாரிக்கு வசதியாக எங்கள் பேருந்து, படகுத் துறைக்கே எங்களைக் கொண்டுபோய் சேர்த்தது
வெல்ட்டாவா படகு சவாரி
வெல்ட்டாவா நதியில் இரவுவேளையில் படகிற் செல்ல கொடுப்பினை வேண்டும். எங்கள் பயணத்திட்டத்தில் இரண்டாம் நாள் மாலை படகு சவாரி எனச்சொல்லியிருந்தார்கள். பயணச் சீட்டை எங்கே பெறலாம் என்கிற தகவலின்மையும், மாலை ஆறுமணிக்குமேல் பயணச்சீட்டு விற்கும் முகமைகள் தொழில் புரிவதில்லை என்ற காரணத்தினாலும் அம்முயற்சியை பயண ஏற்பாட்டாளர்கள் கைவிட்டனர். ஆக 10ந்தேதி காலை படகுச்சவாரிக்குத் தயார்படுத்திக்கொண்டவர்களாய்ப் புறப்பட்டோம். மதிய உணவை படகிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற சிலரின் யோசனையைப் பெரும்பானமை நிராகரித்துவிட்டது. படகுச் சவாரியை முடித்துக்கொண்டு அவரவர் விருப்பத்திற்கு எங்கேயேனும் மதிய உணவை எடுக்கலாம் எனத் தீர்மானித்து படகடிக்குச் சென்றோம். நாங்கள் ஐம்பதுபேருக்குமேல் இருந்ததால் மொத்தமாக படகொன்றை ஒரு மணிநேர சவாரிக்கு வாடகைக்கு எடுத்தோம். அதிலேயே உண்வு எடுத்துக்கொள்வதெனில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகலாம். மொத்தபேரும் மேற் தளத்தில் அமர்ந்துகொண்டோம். உடலை வருத்தாத வெயில், நதியில்விளையாடி கொடியிற் தலைசீவி நடந்துவந்த இளங்காற்றின் சிலுசிலுப்பு, வலப்பக்கம் எனது வாழ்க்கைத் துணை, சற்று தூரத்தில் கூச்சலும் கும்மாளமுமாக ஆண்கள் ஓரணி பெண்கள் ஓரணியென உத்திபிரித்து பாட்டுக்குப் பாட்டு, இடைக்கிடை கொறிப்பதற்கு நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பகடிகள், கேலிகள், கிண்டல்கள், சிப்ஸ், வேர்க்கடலை, வீட்டுப் பக்குவத்துடன் செய்திருந்த முறுக்கு…. மகிழ்ச்சியை அளிக்க நீட்டல், நிறுத்தல், கொள்ளளவு… எதுவும் காணாது. கம்பனைத்தான் அழைக்கவேண்டும். நதிக்கரையெங்கும் பிராகு நகரத்தின் கட்டிடம் மற்றும் கலை அற்புதங்கள் – சார்லஸ் பாலம், பிராகு கோட்டை, நேஷனல் தியேட்டர்…- எழில் கொஞ்ச முறுவலிக்கின்றன. அப்போதுதான் ஒருநொடி, ஐம்பது நொடியென ஆரம்பித்து நிமிடங்களைஉண்டு ஒரு பெயர் கண் சிமிட்டுகிறது, கண்ணாடியைச் சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு முறை படிக்கிறேன். வெள்ளைப் பதாகை விரித்ததுபோல பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை: ‘காஃப்கா மியூசியம்’ என்று எழுதியிருக்கிறது. படித்து முடித்த மாத்திரத்தில் ஒரு சோர்வு தட்டியது. அடடா! எப்படியான வாய்ப்பைத் தவறவிட்டோம்! என நினைத்துக்கொண்டேன். நண்பர்களே! பிராகுவிற்கும் காஃப்காவிற்குமுள்ள பந்தம் குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று பயணம் செய்திருக்கிறேன் என நான் கூறுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். படகுச்சவாரி முடிந்ததும், வந்திருக்கிற நண்பர்களில் எவராவது விரும்பினால் அழைத்துக்கொண்டு மியூசியத்தைப் பார்த்து வருவது என சட்டென்று முடிவெடுத்தேன். படகு சவாரி முடிவுக்குவந்து, நண்பர்கள் படகைவிட்டு இறங்கியதும் “இரவு 10மணிக்கு பேருந்து நிற்கும் இடம் இதுதான் இங்கேயே வந்துவிடவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வார்த்தைக்குக் காத்திருந்ததுபோல சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வந்திருந்த நண்பர்கள் சென்றார்கள். பயண ஏற்பாட்டாளர் வேறு, “தனித்தனியே எங்கும் போகவேண்டாம், நான்கைந்து பேராகச் செல்லவும். அப்போதுதான் இரவு பத்துமணிக்கு எளிதாக அனைவரும் ஒன்றுசேர முடியுமென்றார். அவர் கூறிய மறுகணம் காஃப்கா மியூசியத்தைப் பார்க்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். தவிர பிரான்சிலிருந்து புறப்படும்போது காஃப்கா குறித்து இம்மிகூட நினைப்பு இல்லை என்கிறபோதும், முதன்முறையாக அதொரு குறையாக அரித்தது.
காஃப்கா பிறந்த வீடு
படகுத் துறையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் பிரிந்து, நகரத்தின் இதயப்பகுதியில் 200 கடைகள் சேர்ந்தாற்போலவிருந்த ஒரு பேரங்காடி மையத்தில், ஓர் இந்தியத் தமிழர் எங்களைபார்த்ததும் தனது மனைவியிடம் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனக்கூறியது காதில் விழுந்தது. மணி பிற்பகல் இரண்டு. நல்ல பசி. மூன்றாவது தளத்தில், பொதுவாகப் பேரங்காடி மையங்களிற் காண்கிற எல்லாவிதமான உணவகங்களும் இருந்தன. ஒரு சீன உணவகத்தைத் தேர்வுசெய்து நானும் மனைவியும் சாப்பிட்டோம். அருகிலேயே பயண ஏற்பாட்டாளரின் சகோதரியும் கணவரும், பிள்ளைகளுமாக உணவருந்தினார்கள். பேரங்காடி மையத்திலேயே காலாற நடந்துவிட்டு ஐந்து மணி அளவில் கீழே இறங்கினோம். வொரெயால் தமிழ்ச் சங்கதலைவர் இலங்கைவேந்தன், திரு திருமதி குரோ என நாங்கள் ஐந்து பேருமாக பழைய பிராகுவில் இதுவரை காலெடுத்துவைக்காத பகுதிகளுக்குள் நுழைவதெனத் தீர்மானித்து Starmestske Namesti க்கு மேற்காக நடந்தோம், அதாவது புனித நிக்கோலாஸ் தேவாலயத்தினை நோக்கி. இங்கும் வழியெங்கும் நினைவுப்பொருட்கள் கடைகள், ஓவியக் கண்காட்சி சாலைகள். மனிதர்களை சித்திரவதைப் படுத்த உபயோகித்த கருவிகளையுங்கூட ஓரிடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள், தாய் மசாஜ்க்கான இடங்களும் இருந்தன. கிரிஸ்ட்டல், விலையுயர்ந்த கற்களில் செய்த பொருட்களின் விற்பனையகங்கள் இங்கும் நிறைய இருந்தன. ஒரு திறந்தவெளியில் முடிந்தது. அங்கு முதன் முத்லாக கத்தோலிக்க மதச்பைக்கு குர்ல்கொடுத்ததால் உயிருடன் எரிக்கபட்ட ஜான் ஹஸ் (Jan Hus) நினைவுசின்னம் இருக்கிறது. அதை பார்த்துவிட்டு காப்பி குடிக்கலாம் என்று ஒரு விடுதிக்குச் சென்று வெளியில் போட்டுவைத்திருந்த மேசையில் அமர்ந்து ஐந்துபேரும் அவரவர்க்கு பிடித்தமான காப்பியை வரவழைத்து குடித்துவிட்டு வெரெயால் தமிழ்ச் சங்கதலைவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வலது பக்கம் வீதியோரம் கட்டிடத்தின் முகப்பில் காஃப்காவின் பாதி உடல் சிலையாக பொறித்திருந்தது. அந்த இடத்திற்கு Namesti Franz Kafka என்று எழுதியிருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. இலங்கைவேந்தனிடம் ஏதோ பேசவேண்டும் என நினைக்க நா குழறுகிறது. காஃப்காவைப் பற்றி சுருக்கமாகக்கூறினேன். வந்திருந்த பிறரும், குறிப்பாக எனது சந்தோஷத்திற்கு எவ்வித குறையும் நேர்ந்துவிடக்குடாது என்பதுபோல வொரெயால் தமிழ்சங்க தலைவர் என்னுடன் வந்தார். ஐவருமாக நடக்கவில்லை ஓடினோம். என் ஊகம் சரி. அந்தக்கட்டிடத்திற்கும் காஃப்காவிற்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் உணவு விடுதி. ஓட்டல் சர்வர்களை விசாரிக்கிறேன்: காப்காவின் வீடா? ஆம் என்பதுபோல தலையாட்டுகிறார். சந்தோஷத்துடன் அவர் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன். உள்ளே போய் பார்க்கலாமா? தாராளமாக என்று பதில் வருகிறது. உள்ளே போனால் சுவர் முழுக்க காஃப்காவின் புகைப்படங்கள். 1883 ஜூலை 3ந்தேதி காஃப்கா இந்த இடத்தில்தான் பிறந்திருக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் மைஸ்லோவா (Maislova) வீதியும் கப்ரோவா (Kaprova) வீதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துர் அதிர்ஷ்ட்டமாக 1897 ம் வருடத்தில் தீ விபத்தொன்றில் அக்கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட 1906ல் இப்புதிய கட்டிடம் எழும்பி இருக்கிறது. கட்டிடத்தின் முகப்பில் உள்ள அரை உருவ காஃப்கா சிலையை வடித்தவர் செக் நாட்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் Hladik . இல்லத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். நண்பர் இலங்கைவேந்தனுக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த வீதியில் நடந்ததும், அவர் நினைவாக நடத்தப்படும் புத்த்கக்கடை, நூல்நிலையம் முன்பு கழித்த நொடிகளும் பிறவும் மறக்க முடியாதவை. பிராகுவும் பிராஹாவும் என்னுள் அடுத்த நாவலுக்கான உந்துதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அதனாற் சில தகவல்களில் முழுமையாக விவரிக்காமல் போனது. பொறுமையுடன் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
———————————-
- வாழ்க்கை ஒரு வானவில் – 6
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 7
- கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்
- ஜோதிஜியின் “ டாலர் நகரம் “
- திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு
- கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்
- இயக்கி
- தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்!
- கவிக்கு மரியாதை
- பாதுகாப்பு
- தந்தை சொல்
- காயா? பழமா?
- திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்
- பத்மா என்னும் பண்பின் சிகரம்
- என் பால்யநண்பன் சுந்தரராமன்
- தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு
- உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்
- கனவில் கிழிசலாகி….
- டைரியிலிருந்து
- நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.
- காஃப்காவின் பிராஹா -4
- Malaysian and Tamil Poets Meet and Interact!
- நீங்காத நினைவுகள் – 49