பத்மா என்னும் பண்பின் சிகரம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

(மலேசியப் பொருளாதார வல்லுநர் மறைந்த டத்தோ கு.பத்மநாபன் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயம்: நூலாசிரியர் பெ.இராஜேந்திரன். இந்த நூல் ஜூன் 10ஆம் தேதி மலேசியத் தலைநகரில் வெளியீடு காண்கிறது.)

Pathma bk cover 2

மலேசிய இந்தியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் டத்தோ கே. பத்மனாபன்.

மலேசியப் பொருளாதாரம் தனது காலனியக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு மிகத் தீவிரமாக வளர்ச்சியடைந்து வந்த ஆண்டுகள் 1970களில் தொடங்கின. துன் ரசாக், துன் ஹுசேன் ஓன், துன் மஹாதீர் பொன்ற தூர நோக்குக் கொண்ட மலாய்த் தலைவர்கள் மலேசியாவின் தலைவிதிக்குப் பொறுப்பேற்று அதனைத் தீவிரமாக மாற்றியமைத்த காலம். அடிப்படியாக ரப்பரையும் ஈயத்தையும் விவசாயத்தையுமே நம்பிக்கொண்டிருந்த பழைய பொருளாதாரத்தைப் புதுமைப்படுத்தி தன் மக்களை முன்னேற்ற இந்த மலாய்த் தலைவர்கள் வேகமாக இயங்கினார்கள்.

இந்தத் தருணத்தில் காலனித்துவத்தால் கொண்டுவரப்பட்டு, ஐரோப்பியர்களின் தேவைகளுக்காகப் பிழியப்பட்டு, அந்தத் தேவை முடிந்த பின் சக்கைகளாக ஒதுக்கப்பட்ட இந்திய சமுதாயம், புதிய பொருளாதார எழுச்சியின் பலனைப் பெற்றுப் பயன்பெறச்செய்ய வேண்டிய பொறுப்பு, அன்றைக்கு அவர்களை அரசியலில் பிரநிதித்த ஒரே அரசியல் கட்சியான மலேசியன் இந்தியன் காங்கிரசின் தோள்களில் இருந்தது.

மலேசிய அரசியலிலும் அரசாங்கத்திலும் இந்தியர்களுக்கு உள்ள பிரதிநிதித்துவத்தை துன் சம்பந்தனின் தலைமைத்துவம் உறுதிப்படுத்தியிருந்தது. ஆனாலும் பொருளாதாரத்தில் இந்தியர்களின் நிலை மோசமாகவே இருந்தது. 1969 இனக் கலவரம் இந்தியர்களை அச்சுறுத்தியிருந்தது. மேலும் பல தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளர்களாக இருந்த பல குடும்பங்கள் குடிமக்கள் ஆகாமல் இருந்ததால் அவர்களுக்கு சிவப்பு அடையாள கார்டும் வேலை பெர்மிட்டும் அறிமுகப்படுத்தி அன்றைய அரசு அவர்களை மேலும் அலைக்கழித்தது.

இதற்கிடையே ஐரோப்பியர்கள் தாங்கள் பெரிய அளவில் நடத்தி வந்த தோட்டங்களை விற்றுவிட்டு நாடு திரும்பத் தொடங்கியதில் இந்தத் தோட்டங்கள் தங்கள் பாரம்பரியத் தொழிலைக் கைவிட்டு, நிலங்கள் துண்டாடப்பட்டு தொழிற்சாலை நிலங்களாகவும் சிறுதோட்டங்களாகவும் வீட்டுமனைகளாகவும் விற்கப்பட்டன. இதனால் தங்கள் வேலைகளை இழந்த தொழிலாளர்கள் தெருவுக்கு வந்தனர். இந்தியர்களின் சமூக, பொருளாதார வாழ்வின் படுபள்ளத்தாக்காக 70ஆம் ஆண்டுகள் இருந்தன.

இந்த நிலையில்தான் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் ம.இ.கா.வுக்குத் தலைமைப் பொறுப்பேற்க வந்தார். அவரின் முதல் நோக்கம் இந்திய சமுதாயத்தின் பொருளாதார அடிப்படையை உயர்த்துவதாக இருந்தது. மலாய்க்காரர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு அசுர அரசியல் பலத்துடன் திட்டமிடுவதை அவர் கண்டார். அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களும் இருபது ஆண்டுத் திட்டங்களும் பிற தூரநோக்குத் திட்டங்களும் மலாய்க்காரர்களைப் பொருளாதாரத்தில் கைதூக்கிவிடும் திட்டங்களாகவே இருந்தன. மலாய்க்காரர் அல்லாதவர்களுக்குப் பெயரளவில் சிறு அளவிலான திட்டங்களே இருந்தன. சீனர்கள் தங்கள் சொந்தமுயற்சியில் பொருளாதாரத்தில் மிக பலமாக இருந்தார்கள். அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளின் மலேசியப் பொருளாதாரத்தை அந்நிய முதலீட்டாளர்களைத் தவிர்த்து உள்நாட்டில் சீனர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் இந்திய சமுதாயமோ ஆதரிப்பார் இல்லாமல் பலவீனமான அரசியல் கட்சியான ம.இ.கா.வின் முகத்தைப் பார்த்தவாறு ஏங்கிக் கிடந்தது.

தான் ஸ்ரீ மாணிக்கா இதனை நன்கு புரிந்திருந்தார். ஆகவே இந்திய சமுதாயத்தைப் பொருளாதாரத்தில் முன்னேற்றுவதே அவருடைய முதல் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட திட்டங்களை வரைவதற்குப் போதிய கல்வியும் பொருளாதார அறிவும் கொண்ட உறுப்பினர்கள் அப்போது இல்லை. ஆகவே ம.இ.கா.வுக்கு படித்தவர்களாகவும் தொழில்திறம் கொண்டவர்களுமான இளைஞர்களைக் கொண்டுவர வேண்டிய தேவை மிக அவசரமானது என அவர் உணர்ந்திருந்தார்.

இந்தத் தருணத்தில்தான் கே.பத்மநாபன் என்னும் இளம் பட்டதாரி அவர் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டார்.

பத்மா தோட்டத் தொழிலாளர் குடும்பத்திலிருந்து வறுமையென்னும் அக்கினியில் புடம்போடப்பட்டு எழுந்து வந்த இளைஞர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள லிங்கி, பெர்த்தாம் தோட்டத்தில் குஞ்சம்பு – ரோகிணி தம்பதியினருக்கு பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவராக 1937ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார்.
வறுமைத் தீயில் இந்த இளங்கொழுந்து கருகி விடாமல் பொத்திக்காத்து வளர்த்தெடுத்தவர் அவருடைய தந்தை. தந்தையின் ஆதரவு, தாயின் குடும்பக் கண்காணிப்பு, இயற்கையாக வாய்த்த மூளைத்திறன், நல்லவர்களின் ஆதரவு ஆகியவை அவரை ஆரம்பக் கல்வி, இடை நிலைக் கல்வி ஆகியவற்றைக் கடந்து பல்கலைக் கழகம் வரை கொண்டு சென்றன.

பொருளாதாரத் துறையிலும், இந்திய ஆய்வியல் துறையிலும் முதல் வகுப்புப் பட்டம் பெற்று வேலைக்குக் காத்திருந்த அவரை தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அமைச்சராக இருந்த தொழிலாளர் துறையில் கொண்டு சேர்த்தது இந்திய சமுகத்தின் நல்லூழ் என்றுதான் சொல்ல வேண்டும்.

பத்மா அரசியல் கட்சிகளில் சேர என்றும் ஆசைப்பட்டவர் அல்ல. அதனால் வருகின்ற ஆடம்பரப் பதவிகள் அவரைக் கவரவில்லை. ஆனால் தொழில் முறையில் எடுத்த காரியம் எதுவானாலும் அதற்காகக் கடுமையாக உழைத்து 100 விழுக்காட்டு வெற்றியை அடைவது அவருக்கு இயற்கையாக வாய்த்த உந்துதலாகும்.

எனினும் இந்திய சமுதாயத்துக்கு உழைக்க ம.இ.கா.வில் வந்து சேரும்படி தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் விடுத்த அழைப்பை அவர் ஏற்றார். ஏற்ற நாளிலிருந்து கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தார். பத்மா சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகள் பலவாக இருந்தாலும் அவற்றிலெல்லாம் ஒரு மணியாக ஒளிர்வது அந்த சமுதாயப் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர் வரைந்து கொடுத்த 20 ஆண்டுகள் பொருளாதாரத் திட்ட நீலப் புத்தகம்தான். இன்றளவும் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக வரையப்பட்ட திட்டங்களில் இத்தனை முழுமையான திட்டத்தை யாரும் வரையவில்லை. அது மட்டுமன்றி பல ஆண்டுகளுக்கு முன்பே மலேசிய இந்தியர்களின் தேவைகளை ஒரு தூரநோக்கோடு அவர் அறிந்து முன் வைத்த திட்டங்கள் அப்போதே தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தியர்கள் இன்று எதிர் நோக்கும் பல சிக்கல்கள் அப்போதே தீர்ந்திருக்கும்.

இனி வரும் அத்தியாயங்களில் பத்மாவின் வாழ்வும் சாதனைகளும் அவருடைய சொற்களிலேயே விரிவடைவதை வாசகர்கள் காணலாம். ஆனால் பத்மா போன்ற ஒரு கண்ணியமான மனிதர் தன் சாதனைகளைக் கொஞ்சம் குறைத்துத்தான் உரைப்பார் என்பது தெளிவு. அவருடைய சாதனைகள் இமயம் போன்றவை. அதை மலேசிய அரசியல் வரலாறு பதிவு செய்துள்ளது. அவற்றுள் பொறுக்கி எடுத்த சிலவற்றை இந்தச் சாதனைப் பட்டியலில் காணலாம்:

1974ஆம் ஆண்டு தெலுக் கெமாங் நாடாளுமன்றத்
தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக
போட்டியிட்டபோது ஜனநாயகச் செயல்கட்சி
வேட்பாளர் பாங் காய் தோங் என்பவரை 7,878
வாக்கு பெரும்பான்மையில் தோற்கடித்து அதுவரை
எதிர்க்கட்சிகளின் கோட்டையாக விளங்கிய
தொகுதியை தன் வசமாக்கினார்.
தொடர்ந்து 1978, 1982, 1986 ஆகிய பொது
தேர்தல்களிலும் அத்தொகுதி மக்களின் அன்பைப்
பெற்று 1990 வரை தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினராக சேவையாற்றினார்.

1984ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டுவரை
ம.இ.கா.வின் தேசிய உதவித் தலைவராக பதவி
வகித்தார்.

மனிதவள அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக,
அத்துறையின் துணை அமைச்சராக பின்னர் சுகாதார
அமைச்சராக அரசாங்கப் பதவிகளை வகித்துள்ளார்.

1991ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்காளதேச
தேர்தலை கண்காணிக்கச் சென்ற காமன்வெல்த்
குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்று
சென்றுள்ளார்.
1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற
முதலாவது தேர்தலைப் பார்வையிடச் சென்ற
காமன்வெல்த் குழுவின் உறுப்பினராகவும் 1995ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் டான்சானியாவில்
நடைபெற்ற முதலாவது தேர்தலையும் பார்வையிடச்
சென்ற காமன்வெல்த் குழுவில் டத்தோ பத்மா இடம்
பெற்றிருந்தார்.

1976ஆம் ஆண்டு நேப்பாள் தேசியத் திட்டக்
கமிஷனை வலுப்படுத்தும் திட்டப் பணியை
மேற்கொண்டு ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட
ஆலோசனைக் குழுத்தலைவராக அங்கு சென்றார்.
அனைத்துலகத் தொழிற்சங்க நிறுவனத்தின்
ஆலோசகராக நியமிக்கப்பட்டு பல்வேறு ஆய்வுகளை
நடத்தி பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் 1976ஆம் ஆண்டு ஆசியாவில் வளரும்
நாடுகளுக்கிடையிலான தொழிலாளர் விவகாரம்
தொடர்பான சட்டம் ஒத்துழைப்பு பரிந்துரைகளைத்
தயாரித்தளித்தார்.
நேப்பாளத்தின் ஆரம்பக் கல்வி மீதான ஐக்கிய நாட்டு
மேம்பாட்டுத் திட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டு
சேவையாற்றியுள்ளார்.
1997ஆம் ஆண்டு கசக்ஸ்தானில் தேசியப்
பொருளாதாரத் திட்டத்திற்கு உதவச் சென்ற ஐ.நா.
மேம்பாட்டுத்திட்ட ஹார்வார்ட் பல்கலைக் கழகக்
குழுவின் பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

1967ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டுவரை
அனைத்துலக தொழிற்சங்கத்தின் நிறுவனத்தின்
உறுப்பினராக பொறுப்பேற்று சேவையாற்றியுள்ளார்.
காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் நிர்வாகக்
காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் நிர்வாக
உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் டத்தோ பத்மா.

ஜெனிவாவில் நடைபெற்ற உலக தொழிற்சங்க
நிறுவனம், உலகச் சுகாதார நிறுவனம் ஆகிய
மாநாடுகளில் மலேசிய பேராளர் குழுவின் தலைவராக
சென்று மலேசியாவின் பெருமையை உயரச்
செய்தவர்.
1990ஆம் ஆண்டு ஆசியான் நாடாளுமன்றத்திற்கு
இடையிலான நிறுவனத்தின் பேராளர் குழுவின்
தலைவராக விளங்கினார். அவரது நிர்வாக ஆற்றலையும் நாவன்மையையும்
ஆங்கிலப் புலமையையும் கண்டு அசந்த
அந்நிறுவனம் 1990ஆம் ஆண்டு ‘MR. AIPO’ என்று
புகழாரம் சூட்டப்பட்டு கௌரவித்தது.

1987ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடாளுமன்ற
மாநாட்டுக்கான பேராளர் குழுத் தலைவராக
பொறுப்பேற்றிருந்தார்.
ஆசியான், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக முதலீடு,
அரசியல் ஒத்துழைப்பு மீதான AIPO ஐரோப்பிய
நாடாளுமன்ற கலந்துரையாடல் குழுவின் உயர்நிலை
உறுப்பினராக இருந்துள்ளார்.

1991ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டுவரை
மலேசியன் ரயில்வே வாரியத் தலைவர்,
புக்கிட் கட்டில் ரிசோர்ட் சென்ரிடியான் பெர்ஹாட்
தலைவர், மலேசியத் தொழில் மேம்பாட்டு நிறுவன இயக்குநர்,
டன்லப் மலேசியா இயக்குநர், மலாக்கா மணிப்பால்
மருத்துவக் கல்லூரி தலைவர் என எண்ணற்ற
பொறுப்புகளை ஏற்று சேவையாற்றியிருக்கிறார்.

கோலாலம்பூர் தாதிமை சேவை சங்கத்தின் தலைவர்,
தேசிய சிறுநீரக அறநிறுவன வாரியத் தலைவர்,
மலாயாப் பல்கலைக்கழக ஆணைய உறுப்பினர்,
துன் ஹூசேன் ஓன் கண் மருத்துவமனை உறுப்பினர்.
இராமகிருஷ்ணா- சாரதா சங்கத் தலைவர்,
மலேசிய இந்திய விளையாட்டு மன்றத் தலைவர்,
மலேசிய காற்பந்து சங்கத்தலைவர், டாக்டர்
இராமசுப்பையா உபகாரச் சம்பள அமைப்பு உதவித்
தலைவர் என பல்வேறு சமூக அமைப்புகளின்
வழியாகவும் டத்தோ பத்மா தமது பங்களிப்பை
வழங்கி வந்துள்ளார்.

தனது வாழ்நாளின் உச்சக் கட்ட சேவையாக
மலாக்காவின் மணிப்பால் மருத்துவக் கல்லூரி உருவாகக்
காரணகர்த்தாவாக அமைந்தார்.

இனி பத்மாவின் வாழ்வும் சாதனைகளும் பெரும்பாலும் அவருடைய
சொற்களிலேயே உங்களை வந்தடைகின்றன. இந்த நூலாசிரியரின்
சிறு அறிமுகம் மட்டுமே ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கப்படுகிறது.

Series Navigation
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *