தொடுவானம்
டாக்டர் ஜி. ஜான்சன்
24. கண்ணீர்த்துளிகள்
உயர் நிலைப் பள்ளியின் இறுதித் தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்ததால், இரவு பகலாக பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்து படங்களில் கவனம் செலுத்தினேன். சிதம்பரம் சித்தப்பா இருந்ததால் அங்கேயே இரவு படுத்து விடுவேன். அப்பா அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
அதிகாலையிலேயே எழும்பி படிப்பேன். பள்ளியிலேயே குளித்துவிட்டு, ஆச்சா கடையில் பசியாறிவிட்டு, இருப்பிடம் சென்று சீருடை அணிந்து பள்ளிக்குப் புறப்படுவேன்.
மாலையில் திடலில் ஓடுவதை நிறுத்தவில்லை. உடல் நலத்தை அது பேணிக் காத்து சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தந்தது. கதைக் கட்டுரைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன். நல்ல கரு கிடைத்தால் அதை நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்வேன். பின்பு ஓய்வு கிடைக்கும்போது முழுதாக எழுதி அனுப்புவேன்.
லதாவைப் பார்ப்பதையும் குறைத்துக் கொண்டேன். அவளுக்கும் என்னைப் போன்றே இறுதித் தேர்வுகள்.அதனால் அவளும் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்று தேற வேண்டும். அவ்வாறு நாங்கள் இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால்தான் அப்பாவிடமும் மற்றவர்களிடமும் காதலால் படிப்பு கெடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டலாம். நாங்கள் காதலிப்பது அவ் வட்டாரத்து தமிழ் மக்கள் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒரு கதையாகி விட்டது. அப்பா செய்துள்ள விளம்பரம் அப்படி!
நான் கூடுதல் கணிதப் பாடத்தை தவறாக எடுத்து விட்டது போல் தோன்றியது. கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டுள்ள எனக்கு ஏனோ கணிதம் மீது ஆர்வம் இல்லாமல் போனது. மிகவும் சிரமப்பட்டு அப் பாடத்தை நான் கற்க முயன்றாலும் அதை என்னால் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.
அனைத்துப் பாடங்களை விட எனக்கு தமிழ்ப் பாடத்தின் மீதுதான் அலாதிப் பிரியம். ஆனால் நான் பயின்றது ஆங்கிலப் பள்ளி. அங்கு மற்ற பாடங்களுடன் தமிழ் ஒரு பாடம். துவக்கத்திலிருந்தே தமிழில் நான் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றுள்ளேன். நிச்சயமாக இறுதித் தேர்வில் தமிழில் எனக்கு முதன்மையான மதிப்பெண்கள் கிடைக்கும் என்று நம்பினேன்.
அப்போதெல்லாம் நான் கடவுள் பக்தி இல்லாதவனாகவே வளர்ந்துள்ளேன். ஆகவே தேர்வில் எனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும் என்று நான் எந்தக் கடவுளிடமும் வேண்டிக் கொள்ளவில்லை. என்னுடைய சுய உழைப்பையே நம்பி திடன் கொண்ட மன உறுதி கொண்டவனாக தேர்வுகளுக்குத் தயாரானேன்.
எப்போதாவது பண்டிகை நாட்களில் டியூக் ரோட்டிலுள்ள லுத்தரன் திருச்சபை கிறிஸ்துவ ஆலயத்திற்கு அப்பா அழைத்துச் செல்வார். அங்கு நடைபெறும் ஆராதனையின்போது ஏதும் அறியாமல் இருந்துவிட்டு வீடு திரும்புவேன். ஞானப்பட்டுகள், கீர்த்தனைகள் ஒன்று கூட பாடத் தெரியாது. வீட்டில் தமிழ் விவிலிய நூல் ஒன்று இருந்தது. ஆனால் நான் அதைப் படித்ததில்லை. திருக்குறளையே நான் வேத நூலாகப் படித்த காலம் அது!
இரவு பகலாக படங்களைத் தயார் செய்ததின் விளைவாக நம்பிக்கையுடன், கொஞ்சமும் பயமில்லாமல், மிடுக்காகவே தேர்வுகளுக்குச் சென்றேன். கூடுதல் கணிதம் தவிர மற்ற எல்லா பாடங்களையும் நன்றாக எழுதினேன்.
அந்தத் தேர்வுகளில் ஆங்கிலப பாடம் எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாதது எனலாம். அதில் ஆங்கிலக் கட்டுரை எழுதவேண்டும் கட்டுரையின் தலைப்பு , ” The Character I like most ” என்பது. ” எனக்கு மிகவும் பிடித்தவர் ” என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.
அப்போதெல்லாம் தமிழ் மீது இருந்த பிரியம் போல் ஆங்கிலக் கட்டுரைகளின் மீதும் அலாதிப் பிரியம் இருந்தது.அதற்காக ” ரீடர்ஸ் டைஜஸ்ட் ” பழைய மாத இதழ்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கி படித்து வந்தேன். அதன் மூலமாக என்னுடைய ஆங்கில சொல் வளத்தை வளர்த்துக் கொண்டேன்.
நன் விரும்பிப் போற்றும் தலைவர் அறிஞர் அண்ணா. அவர் அப்போது தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர். கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததுமே எனக்கு அண்ணாதான் நினைவுக்கு வந்தார். அவரைப் பற்றி நான் படித்து அறிந்தவை ஏராளம். எழுத வேண்டுமெனில் அவரைப் பற்றி என்னால் பக்கம் பக்கமாக எழுத முடியும். இனி புதிதாக யோசித்துப பார்க்க வேண்டியதில்லை. எல்லாமே மனதில் பசு மரத்து ஆணி போன்றே பதிந்திருந்தன.
அதோடு எனக்கு மற்றொரு ஆசை. நான் எழுதப் போகும் கட்டுரை இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் சென்று திருத்தப்படும். அறிஞர் அண்ணாவைப் பற்றி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகமும் தெரிந்து கொள்ளட்டும் என்ற ஆசை அது!
அப்போது அங்கு தெரியாத ஒரு மனிதரை என்னுடைய கட்டுரை மூலமாக அறிமுகம் செய்து வைக்க முடிவு செய்தேன். ஆகவே, அந்த ஆங்கிலத் தேர்வுக் கட்டுரையை நான் மிகவும் இரசித்து அழுகுபட எழுதினேன். அவர் மீது நான் கொண்டிருந்த எண்ண அலைகளை தேர்வுத் தாட்களில் கொட்டி அலங்கரித்தேன்.
பெரியார், பகுத்தறிவு இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அறிஞர் அண்ணாவின் இலக்கியச் சேவையும் அரசியல் பிரவேசமும் பற்றியெல்லாம் குறித்த நேரத்தில் எழுதி முடித்தேன். கடைசி வரிகளில், ” அறிஞர் அண்ணா விரைவில் எல்லாரும் வியக்கும் வண்ணமாக தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்று, உலகை வியக்க வைப்பார். ” என்று எழுதினேன்!
தேர்வுகள் முடிந்தன! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை! இத்தனை வருடங்கள் அப்பாவிடம் பட்ட பாடுகளுக்கு ஒரு முடிவு வந்து விட்டதாகக் கருதி உள்ளம் பூரித்தேன்!
இனிமேல் என்ன? சீனியர் கேம்ப்ரிட்ஜ் தேர்ச்சி பெற்றுவிடுவேன். நான் சிங்கப்பூரின் மிகச் சிறந்த பள்ளி மாணவன். வேலைகள் தானாகவே என்னைத் தேடி வரும். வேலை கிடைத்ததும் லதாவும் நானும் ஒன்றாகி விடலாம் என்று துள்ளிக் குதித்தேன்!
ஒரு ஆயுள் சிறைக் கைதிக்கு விடுதலை கிடைத்து விட்டது போன்ற மன நிலை அப்போது! படிப்புக்குதானே அத்தனை இன்னல், அடி. உதை, வீட்டை விட்டு ஓடுவது , போலீஸ் பாதுகாப்பு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது? படிப்புக்குதானே காதலிக்கக் கூடாது என்ற தடை?
மனதில் குடி கொண்டு விட்டவளைக் காதலித்து அன்பு செலுத்தினால் படிப்பு கெடுமாம்! யார் சொன்னது? தீவிரமாகக் காதலித்துக் கொண்டே படிப்பிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சியுற்றுக் காட்டவே போகிறேன். அப்போது அப்பா என்ன சொல்வார்?
தேர்வு முடிவுகளுக்காக மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.அந்த மூன்று மாதங்களையும் பயனுள்ள வழியில் செலவழிக்க எண்ணினேன்.
தைத் திங்கள் முதல் நாளில் எங்கள் வட்டாரத்தில் தமிழர் திருநாள் வெகு சிறப்பாக நடைபெறுவதுண்டு. அதை தமிழ் இளைஞர் மன்றத்தினர் ஏற்பாடு செய்வார்கள். அதன் தலைவராக மாணிக்கம் என்பவரும் செயலராக சு.சேகரும் இருந்தனர். ( தற்போது சு. சேகர் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் தமிழ் சங்கத்தின் தலைவராக உள்ளார் )
அப்போது கதை, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டியுடன் விளையாட் டுப் போட்டிகளும் நடைபெறும். அத்துடன் உடற் கட்டழகர் போட்டியும்கூட நடைபெறும். அதில் எஸ்.கே.ஆர்.சந்திரன் என்பவர்தான் வெற்றி பெறுவார். ( அவர் திருவாளர் சிங்கப்பூர் ஆகவும் வென்று தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
பரிசளிப்பு விழாவில் சிறப்புச் சொற்பொழிவும் நாடகமும் நடைபெறும்.
விழா ஏற்பாட்டு அமைப்புக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அந்த வருட நாடகத்தை நான் எழுதி தயார் செய்ய அனுமதி கேட்டேன். என்னுடைய எழுத்தாற்றலை அறிந்திருந்த அவர்கள் சம்மதம் தெரிவித்து அதற்கான செலவுத் தொகையைத் தருவதாக உறுதியளித்தனர்.அந்த அமைப்புக் கூட்டத்தில் அப்பாவும் இருந்தார். அவர் அது பற்றி ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நான் அதுவரை மேடை நாடகம் எழுதியதில்லை. கவிஞர் ஐ. உலகநாதன் அவ்வப்போது கலைஞரின் சாக்க்ரட்டீஸ், சேரன் செங்குட்டுவன், சாம்ராட் அசோகன், அனார்க்கலி, மணிமகுடம் நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றம் செய்வார். அவற்றைக் கண்டு நான் இரசித்துள்ளேன்.அதுபோன்று நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி சிங்கப்பூரில் மனோகரா நாடகம் அரங்கேற்றியபோது நான் அப்பாவுடன் சென்று பார்த்து வியந்துள்ளேன். அதோடு டீ. கே .எஸ். நாடகக் குழுவினர் அரங்கேற்றிய இராஜ இராஜ சோழன் நாடகமும் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்.
நான் எழுதப்போவது ஒரு சமூக நாடகம். எத்தகைய கருவை வைத்து அதை எழுதலாம் என்று யோசித்தேன்.
அப்போதுதான் மலாயாவும் சிங்கப்பூரும் ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றிருந்தது.
மலாயா முழுதும் ரப்பர் தோட்டங்களால் நிறைந்திருந்தன. தமிழர்களில் பெரும்பாலோர் அந்த ரப்பர் தோட்டங்களில்தான் குடியிருந்தனர். தோட்டங்களை நம்பிதான் வாழ்க்கை நடத்தினர். ரப்பர் தான் மலாயாவுக்கு உலகச் சந்தையில் பெரும் பொருளாதாரம் ஈட்டித் தந்தது.
அந்த வருடத்தில் அமெரிக்காவில் செயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சி தீவிரமாக நடந்து வந்தது. அந்தச் செய்தி என்னுடைய மனதில் பொறி தட்டியது போல் நாடகத்திற்கான கருவைத் தந்தது! அந்த செயற்கை ரப்பர் பரவலாக புழக்கத்தில் வந்துவிட்டால் மலாயாவின் இயற்கை ரப்பரின் மவுசு குறைந்து அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படலாம்.
இயற்கை ரப்பருக்கும், செயற்கை ரப்பருக்கும் நடந்து வரும் போட்டியை வைத்தே என்னுடைய நாடகத்தை உருவாக்க முடிவு செய்தேன்.கதை ஓரளவு கற்பனையில் திரைப்படம் போல் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.கதாபாத்திரங்களை படைத்தாக வேண்டும்.
தோட்டச் சூழலில் கதையை அமைத்ததால், தோட்ட நிர்வாகியாக சேகர் என்பவரைப் படைத்தேன். அவர் காதலித்து மணந்துகொண்ட மீனாவை உருவாக்கினேன். ரப்பர் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானி சுந்தர் என்ற இளைஞனையும் படைத்தேன். கதையின் முக்கிய பாத்திரங்கள் அந்த மூவர்தான்.
துணைப் பத்திரங்களாக ஒரு டாக்டர், லதாவின் தந்தை, இரு தோட்டத் தொழிலாளர்கள், வேறு சிலரையும் சேர்த்து மொத்தம் பத்து பேர்கள் பங்கெடுக்கும் நாடகமாக எழுதினேன்.கதாநாயகியின் பெயரை முதலில் லதா என்று எழுதி பின்பு எதற்கு வீண் வம்பு என்று மீனாவாக மாற்றினேன்.மீனாட்சியை அப்போது ஜெயப்பிரகாசம் காதலித்ததால் அதை மீனா என்று சுருக்கினேன்.( அந்த மீனாட்சிதான் இன்று ஜெயப்பிரகாசத்தின் மனைவி )
கதாபாத்திரங்கள் சரியாக அமைந்துவிட்டபின் வசனம் எழுதினேன். அது மறக்க முடியாத இனிமையான அனுபவம்.என்னுடைய மனதில் குடிகொண்டிருந்த இலக்கிய ஆர்வத்தையெல்லாம் தாள்களில் கொட்டி நிரப்பினேன் என்றே கூறலாம்.
சுந்தர் செயற்கை ரப்பர் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்ததால் அது பற்றிய அறிவியல் பூர்வமான கருத்துகளை தேசிய நூலகத்தில் தேடி குறித்துக்கொண்டேன்.
தோட்ட நிர்வாகி ஒரு பகுத்தறிவாளர். சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு பார்க்காதவர். மீனா அவருடைய பங்களாவில் வீட்டு வேலைகள் செய்பவள். தோட்டத் தொழிலாளியின் மகள். வேலை நிமித்தமாக ஏற்றத் தாழ்வு பார்க்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணமாக சேகர் மீனாவையே காதலித்து புரட்சிகரமாக அவளையே மணந்து கொள்வதாக எழுதினேன்.
ஆனால் மீனாவால் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடு பட முடியவில்லை.சேகரை தன்னுடைய கணவராக எண்ணாமல் தன்னுடைய எஜமானாகவே பார்க்கிறாள். அவனுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க அவளால் முடியவில்லை. கூடுமானவரை அவனுடன் சொகுசாக வெளியில் செல்வதைத் தவிர்க்கிறாள்.
சுந்தர் சேகரின் பால்ய நண்பன்.அவனுடைய ஆராய்ச்சிக்கு பங்களாவின் அருகிலேயே ஆராய்ச்சிக்கூடம் அமைத்துத் தருகிறார் சேகர்.அவனை மீனா அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறாள். அவனுடைய ஆராய்ச்சியின் முடிவில் நாட்டுக்கும் தோட்டப் பாட்டாளி மக்களுக்கும் நன்மை கிட்டும் என்பது அவளுடைய நம்பிக்கை. ஆனால் சேகருக்கு அவளுடைய ஆர்வம் வேறு .விதமாகத் தெரிகிறது.
இறுதியில், இரவு பகலாக ஓய்வின்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டதின் விளைவாக அதில் வெற்றி காண்கிறான் சுந்தர்.அந்த வெற்றிக் களிப்பில் உணர்ச்சிவசப்பட்டு உரக்கக் கத்தியபோது மயங்கி விழுந்து விடுகிறான். அவனுடைய சத்தம் கேட்டு ஓடி வந்த மீனா அவனைக் கைகளில் தாங்கிக் கொள்கிறாள்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த சேகர், அக் காட்சியைக் கண்டு ஆவேசப்பட்டு அங்கிருந்த ஆராய்ச்சி சாதனங்களை அடித்து நொறுக்குகிறார்.
அப்போது அவருடைய கண்களில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டு இரு கண்களும் பார்வை இழந்து போகின்றன. சேகரும் சுந்தரும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
ஆராய்ச்சியின்போது கார்பன் மோனொக்சைடு எனும் நச்சு வாயு வெளிப்படுவதால், அது சுந்தரின் இரத்தத்தில் கலந்து விட்டதால் அவன் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். அது பற்றி தெரிந்த சுந்தர் கவலை கொள்ளவில்லை.தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை நாட்டின் மூத்த விஞ்ஞானிகளிடம் அறிவித்து விடவேண்டும் என்பதிலேயே தீவிரம் காட்டுகிறான்.
செயற்கை ரப்பரை விட இயற்கை ரப்பரே எல்லா வகையிலும் சிறந்தது என்பதை அவன் நிரூபித்து விட்டான். மலாயா அரசும் அதை அங்கீகரித்து செய்திகள் வெளியிடுகின்றன.அதனால் மலாயாவின் ரப்பரின் மதிப்பு உலகச் சந்தையில் உயர்கின்றது.
சுந்தரின் உடல்நிலை நாளுக்கு நாள் கெடுகிறது. அதற்கு தகுந்த மருந்துகள் கிடையாது. இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில் அவன் தன்னுடைய விழிகளை சேகருக்கு தானமாகத் தந்துவிட்டு உயிர் விடுகிறான்.
மீண்டும் பார்வை பெற்றுவிட்ட சேகர் நண்பனின் தியாக உள்ளத்தை உணர்ந்தவனாக அவனுக்கு தோட்டத்தில் சிலை வைத்து சிறப்பு செய்கிறார்.தன்னுடைய தவறை உணர்ந்து மீனாவிடமும் மன்னிப்பு கேட்கிறார்.
பத்து நாட்களில் எழுதி முடித்த இந்த நாடகத்திற்கு ” கண்ணீர்த்துளிகள் ” என்று தலைப்பிட்டேன். இனி நடிகர்கள் தேடும் படலம் ஆரம்பமானது!
நான் அதுவரை நாடகத்தில் நடித்துப் பழக்கம் இல்லை. நான் எழுதிய வசனத்தைப் பேசி நானே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தேன். ஆகவே சேகர் பாத்திரத்தை நான் எடுத்துக் கொண்டேன்.
கதாநாயகி மீனவாக சித்ராதேவியைத் தேர்ந்தெடுத்தேன்.அவள் மிகவும் சிவப்பாக இருப்பாள்.அவளுடைய தாயார் சீன இனத்தவர். தந்தை பஞ்சாபி. ஆனால் அவள் என் அளவுக்கு உயரம் இல்லை. அவள் லதாவின் ..தோழிதான் .லதாவும் சரியென்று சம்மதம் தெரிவித்தாள்.( பின்னாளில் இந்த சித்ராதேவிதான் சிங்கப்பூர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பிரபல நாடக நடிகையாகி அரசின் வாழ்நாள் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவளை முதன்முதலில் நாடகத்தில் அறிமுகம் செய்தது என்னுடைய நாடகத்தில்தான் – என்னுடைய கதாநாயகியாக! )
சுந்தராக பன்னீர்செல்வனையும், டாக்டராக கோவிந்தசாமியையும் தேர்ந்தெடுத்தேன். மீனாவின் அப்பாவாக சந்திரசேகரனை தேர்ந்தெடுத்தேன். அவன் அப்போது குண்டர் கும்பலில் இருந்து கைதாகி போலீஸ் கண்காணிப்பில் இருந்தான். மாலை ஆறு மணிக்குமேல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிபந்தனையில் இருந்தான். நான் காவல் நிலையம் சென்று நாடகம் முடியும் வரை அதிலிருந்து விதிவிலக்கு வாங்கினேன்., நகைச்சுவைக்கு கோவிந்தராஜுவைத் தேர்ந்தெடுத் தேன். தோட்டத் தொழிலாளர்களாக ஒரு சிலரையும் சேர்த்துக் கொண்டேன்.
நடிகர்கள் அனைவரையும் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளிக்கு வரச் சொல்லி நாடகம் பற்றி கூறி ” பாரதி நாடகக் குழு ” என்று பெயர் சூட்டினேன்!
( தொடுவானம் தொடரும் )
- பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.
- நெப்போலியன் நாடக நூல் வெளியீடு
- நினைவுகளின் சுவட்டில் (84)
- கொலைக்களன்களின் மறு உருவாக்கம்
- சிறை பட்ட மேகங்கள்
- உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை
- எங்கே செல்கிறது இயல்விருது?
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 12
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11
- தினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை
- மொழிவது சுகம் ஜூலை 10 2014
- வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]
- (84) – நினைவுகளின் சுவட்டில்
- பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்
- முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11
- வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.
- நான் தான் பாலா ( திரை விமர்சனம்)
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1
- வேலையத்தவங்க
- சாகசக்காரி ஒரு பார்வை
- பாவண்ணன் கவிதைகள்
- புதுவிலங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83
- தொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்