வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11

This entry is part 9 of 26 in the series 13 ஜூலை 2014

11.
இலேசான கைநடுக்கத்தைச் சமாளிக்க முயன்றவாறு ராமரத்தினம் அந்த உறையை வாங்கிப் பார்த்தான். அதன் மீது ரமணியின அலுவலக முகவரி முத்துமுத்தான கையெழுத்தில் காணப்பட்டது. அவனுள் குப்பென்று ஒரு சூடு பரவி முகம் வியர்க்கலாயிற்று.
‘மாலாவின் கையெழுத்து!’ – பாதிக்கு மேல் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.
“என்னப்பா பிரமிச்சுப் போய் உக்காந்துண்டிருக்கே? உன் தங்கை அந்த மாலாவோட கையெழுத்துதானே அது?”
“ஆமா, சார்.”
“அதுக்குள்ள இருக்கிற லெட்டரை எடுத்துப் படிச்சுப் பாரு.”
அவன் அப்படியே செய்துவிட்டு நான்காக மடிக்கப்பட்டிருந்த கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானான்.
‘அன்புள்ள ரமணி அவர்களுக்கு.
வணக்கம். உங்கள் நண்பர் ராமரத்தினத்தின் தங்கை மாலாதான் இக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதாவது தவறாக எழுதியிருந்தால், என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அன்று நீஙகள் என் வீட்டுக்கு வந்ததிலிருந்து நான் உங்கள் ஞாபகமாகவே இருக்கிறேன். இதற்கு முன்னால் நான் யாரைப் பற்றியும் இப்படி நினைத்ததில்லை. இதற்கு மேல் ஒரு பெண் என்ன எழுதுவாள்? என்ன எழுத முடியும்? என் மனம் உங்களுக்குப் புரிகிறதென்று நினைக்கிறேன். நாங்கள் பரம ஏழைகள் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி இருந்தும் இப்படி எழுதுகிறாளே என்று என் மேல் ஆயாசப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் இந்தக் கடிதத்தை எழுதியது உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால் கிழித்துப் போட்டுவிடுங்கள். நீங்கள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். உங்களை நினைத்துப் பார்ப்பதற்குக் கூட எனக்குத் தகுதியோ அந்தஸ்தோ சிறிதும் கிடையாது. உங்களுக்குச் சம்மதம் இல்லையானால், என் கடிதம் பற்றிய விஷயத்தை விட்டுவிடுங்கள். தயவு செய்து என் அண்ணாவுக்குத் தெரிவித்து அவன் மனசைக் கஷ்டப்படுத்தி விடாதீர்கள்…. ஆனால், நீங்கள் சம்மதித்தால் நான் மிகவும் பாக்கியசாலி.
பதில் எழுத வேண்டாம். எனக்குக் கடிதம் எழுதக் கூடியவர்கள் யாரும் இல்லை. எனவே, எழுதினால் நான் வம்பில் மாட்டிக்கொள்ளும்படி ஆகும். சம்மதமானால் எங்கள் வீட்டுக்கு வந்து என் அண்ணா, அம்மா ஆகியோருடன் பேசுங்கள். எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்புள்ள,
மாலா’
படித்து முடிதத ராமரத்தினம் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். மாலா இப்படி எழுதி யிருந்ததை அவனால் செரித்துக்கொள்ளவே முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.
அவன் கண்கள் கணப்பொழுதுள் கலங்கிவிட்டன. ‘தான் காண்பது கனவா, நினைவா என்று ஒருவருக்கு ஐயம் வந்து விட்டதால் அந்த நபர் தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டதாக’ எழுத்தாளர்கள் எழுதுவது அப்போது அவனது நினைவுக்கு வந்தது. அந்நிலையில்தான் தானும் அப்போது இருந்ததாக அவனுக்குத் தோன்றியது. ‘மாலாவா இப்படி யெல்லாம் ரமணிக்கு எழுதியிருக்கிறாள்!’ எனும் எண்ணத்தில் அவன் தவித்துப் போனான்.
“என்னப்பா அப்படியே உக்காந்து போயிட்டே? ஒண்ணுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?”
“என் தங்கை இப்படி ஒரு லெட்டர் எழுதியிருக்கிறதை என்னால நம்பவே முடியல்லே, சார். அவளை மன்னிச்சுடுங்க. ரமணி டூர்லேர்ந்து வந்ததும் அவன் கிட்டயும் நான் மன்னிப்புக் கேக்கறேன்.”
“இத பாருப்பா! ரமணிக்கு இது தெரியாது. அவன் அதைப் படிக்கவே இல்லே… அதை இப்படி எங்கிட்ட கொடு..”
ரமணி கைத்தவறுதலாய்த் தலையணைக்கு அடியிலோ அல்லது வேறு எங்கேயாவதோ அதை வைத்துச் சென்றிருந்திருக்க வேண்டும் என்றும், அது அவர் கண்ணில் பட்டு விட்டதாகவும் அதுகாறும் நினைத்திருந்த ராமரத்தினம் அதை அவரிடம் திருப்பி நீட்டியபடி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.
“என்னப்பா அப்படிப் பார்க்கிறே? நிஜமாத்தான் சொல்றேன். அவன் டூர்ல கிளம்பிப் போனதுக்கு அப்புறம் இது வந்தது. ஒரு லைப்ரரி புக்கை மறந்து போய் ரமணி ஆஃபீஸ்ல விட்டுட்டு டூர் போயிட்டான். அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நாள் மத்தா நாளா யிருந்ததைப் படிக்கத் தெரிஞ்ச பியூன் பார்த்துட்டு அதைக் கொண்டுவந்து கொடுக்கிறதுக்காக வந்தப்ப ஆஃபீஸ் அட்ரெசுக்கு வந்திருந்த இதையும் எடுத்துட்டு வந்து கொடுத்தான். ஒரு நெரடலில் நான் அதைப் பிரிச்சுப் படிச்சேன். …” என்றவாறு வெற்றிப் புன்சிரிப்புடன் அவ்வுறையை அவர் பத்திரப்படுத்திக்கொண்டார்.
“என்ன அப்படிப் பார்க்கிறே? பிறத்தியார்க்கு வந்த லெட்டரை இந்த மனுஷன் பிரிச்சுப் படிச்சிருக்கானேன்னா? அவன் என் பிள்ளைப்பா. நாளைக்கு ஏதானும் சிக்கல்லே அவன் மாட்டிண்டா நான் தானே கஷ்டப்படணும்? வீட்டு அட்ரெசுக்கு எழுதாம ஆஃபீஸ் அட்ரெசுக்கு எழுதி யிருந்ததுதான் என்னோட அந்த நெருடலுக்குக் காரணம்….” – இவ்வாறு சொல்லிவிட்டு அவர் மீண்டும் ஒரு வெற்றிப் புன்னகை புரிந்தார்.
‘உண்மைதான். இவர் மேல நான் கசந்துக்க முடியாது. ஆனா, இதுவே ஒரு பணக்காரப் பொண்ணு கிட்டேர்ந்து வந்திருந்தா, இவரோட எதிரொலியே வேற மாதிரி இருந்திருக்கும்!…’
“பொண்ணுகளுக்கு அடக்கம் வேணும்ப்பா! இப்படியா ஒரு ஆம்பளைக்குத் தானே முந்திக்கிட்டு லவ் லெட்டர் எழுதுவா ஒரு பொண்ணு!” என்று அவர் மேற்கொண்டு பேசியதும் அவனுள் ஆத்திர நெருப்பு மூண்டு அவன் உடம்பு முழுவதையும் தகித்தது. ஆனால், அவருடைய விமரிசனம் அவனைச் சிறுமையுறச் செய்துவிட்டதால் அவனுக்கு வாய் அடைத்துப் போனது. அதையும் மீறித் திமிறிப் புறப்பட்ட சொற்களை விழுங்கியதில் தொண்டை வலித்தது. அவன் தலையைக் கவிழ்த்துக்கொண்டு கால் கட்டைவிரல்களைப் பார்த்தபடி இருந்தான்.
“இவ்வளவு அழகா லெட்டர் எழுதியிருக்காளே, உன் தங்கை, எது வரைக்கும் படிச்சிருக்கா அவ?”
“ஒம்பதாம் வகுப்பு வரைக்கும் தான், சார்.” – குனிந்தபடியே அவன் பதிலிறுத்தான்.
“ஓ! ஒம்பதாம் வகுப்பு வரைக்கும் படிச்சதுக்கே இவ்வளவு வக்கணையா ஒரு லவ் லெட்டரா! நிறையப் படிச்சிருந்தா சுத்தி இருக்கிற ஆம்பளைப் பசங்க என்ன கதியாறது?”
அவருடைய கிண்டல் சொற்கள் அவனது நெஞ்சில் சுருக்கென்று குத்தின.
“உன் மனசைப் புண்படுத்தணும்கிறது என்னோட நோக்கமில்லேப்பா….இந்தக் காலத்துப் பொண்ணுங்க எப்படிக் கெட்டுக் குட்டிசுவராயிட்டாங்கன்னு பாரு. சினிமாவும், டி.வி.யும், பத்திரிகைகளும் பண்ற வேலை. தானா முந்திண்டு லவ் லெட்டர் எழுதற அளவுக்கு ஆயிப்போச்சு!”
அவனால் பதில் பேச முடியவில்லை.
“… என்னப்பா கம்னு இருக்கே? உன் தங்கை இப்படி எழுதினது உனக்குச் சம்மதமானதுதானா?”
ராமரத்தினம் வாயைத் திறந்தான்: “இல்லே சார். இல்லவே இல்லே. அவ பண்ணின காரியம் எனக்கும்தான் பிடிக்கல்லே. ஆனா, ஆம்பளை எழுதினா சரி, அதையே ஒரு பொண்ணு எழுதினா மட்டும் தப்புன்றது என்ன நியாயம், சார்? ஆண் முந்திண்டா தப்பில்லைன்னா, பொண்ணு முந்திண்டாலும் ஒண்ணும் தப்பில்லே, சார்!”
“வக்கணையாப் பேசுறியேப்பா. கேக்குறதுக்கு நியாயம் போலத்தான் படுது. ஆனா ஆம்பளையும் பொம்பளையும் ஒண்ணாப்பா? என்ன இருந்தாலும் பொண்ணுங்களுக்குக் கொஞ்சமாவது அடக்க ஒடுக்கம் இருக்கணும்ப்பா.”
ராமரத்தினம் ஆத்திரமாகவும், பதற்றத்துடனும் எழுந்து நெட்டுக்குத்தாக நின்றான்.
“என் தங்ககையை நேர்ல பார்த்துட்டுச் சொல்லுங்க, சார். குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு. புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திண்டுதான் வெளியே போவா.”
கணேசன் பக்கென்று வெடிச் சிரிப்பொன்றை உதிர்த்தார். அந்தச் சிரிப்பின் உட்கிடையான கேலி புரிந்து போனதில், அவன் அப்படியே குன்றிப் போனான்.
“அது மாதிரி பொண்ணுங்களைத்தாம்ப்பா நம்பவே கூடாதுன்னு சொல்லுவாங்க.. அது எவ்வளவு நிஜம்கிறதை இப்பதாம்ப்பா புரிஞ்சுண்டேன்.”
“சார். வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க. என் தங்கை தங்கமான நடத்தையுள்ள பொண்ணு. காலாகாலத்துல எங்க வறுமையால அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாம போச்சு. உங்கள மாதிரிப் பணக்காரங்கதான், சார், இதுக்கெல்லாம் காரணம்! ரமணியை அவளுக்குப் பிடிச்சிருந்தது. ஏதோ எழுதிட்டா. அதுக்காகக் கண்டமேனிக்கு வார்த்தையை விடாதீங்க, சார்.”
“ரொம்பவும்தான் துள்ளாதேப்பா! உன் தங்கைக்குப் புத்திமதி சொல்லுவியா, அதை விட்டுட்டு என்னமோ பெரிசா பிரசங்கம் பண்றியே! … அவ லெட்டரைப் பத்தி ரமணிக்குத் தெரியாதுன்னு அவகிட்ட சொல்லிவை. தெரியக் கூடாதுன்னும் சொல்லு. உனக்கும் சேர்த்துததான் சொல்றேன். இது நடக்காதுன்னும் சொல்லிடு. என்ன, தெரிஞ்சுதா?”
‘ரமணியோட ஆஃபீஸ் பியூன் உங்களுக்கு வந்த ஒரு கவரை உங்கப்பா கிட்ட குடுத்தேன் சார்னு ரமணிகிட்டவே அவன் திரும்பி வந்ததும் சொன்னா உங்க சாயம் வெளுத்துடுமே!’ என்று தனக்குள் எண்ணமிட்டபடி அவன் ஒன்றும் சொல்லாதிருந்தான்.
“வாயில என்னப்பா கொழுக்கட்டையா?”
“அப்படியே ஆகட்டும், சார்.”
“வீட்டுக்குப் போனதும் மொத வேலையா உன் தங்கையைக் கண்டிச்சு வை. … அடக்கியும் வை. இல்லேன்னா அவ பாட்டுக்கு எவனையாவது இழுத்துண்டு ஓடிப் போயிடப் போறா.”
ராமரத்தினத்தின் கைவிரல்கள் முட்டிகளாய் மடங்கின. நாவும் துடித்தது. வெகு பாடு பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ‘ஒருவேளை இவரே மாலாவின் மாமனாராக நாளைக்கு வரக்கூடும். எதுக்கு வம்பு?’ என்றும் அவனது சிந்தனை ஓடியது.
“அப்ப நான் வர்றேன், சார்.”
“செய்.”
அவன் விடுவிடுவென்று நடந்தான்.
…. அவன் தன் வீட்டை நெருங்கிய போது அவன் அம்மா வாசற்படியில் அவனுக்காகக் காத்திருந்த தோரணையுடன் நின்று கொண்டிருந்தாள்.
பதற்றத்துடன், “கோவிலுக்குப் போன பொண்ணு இன்னும் வரல்லேடா. கவலையா யிருக்கு. அதான் வாசல்லேயே நின்னுண்டிருக்கேன்”
“யாரைம்மா சொல்றே? மாலாவா?”
“மாலா வீட்டிலதான் இருக்கா. கோமதிதான் கோவிலுக்குப் போயிருக்கா. போய் ரொம்ப நேரம் ஆச்சுடா. ஏழுக்குள்ள திரும்புற பொண்ணை இன்னும் காணோம்… அதான் கவலையாயிருக்கு… நீ போய்க் கொஞ்சும் பார்த்துட்டு வாயேன். வீட்டுக்குள்ளே நுழையறதுக்கு முந்தியே உன்னை விரட்றேன். எனக்கு ஒரே முட்டி வலி. நடக்கவே முடியல்லே. அதான்… ”
“பரவால்லேம்மா. … எந்தக் கோவிலுக்குப் போயிருக்கா?”
“நாதமுனி தெருவிலே இருக்கிற அய்யப்பன் கோவிலுக்குத்தான். …”
“சரிம்மா…” என்ற ராமரத்தினம், “பாத் ரூமுக்கு மட்டும் போயிட்டுக் கிளம்பறேம்மா,” என்றவாறு உள்ளே சென்றான்.
அடுக்களை வாசற்படியருகே உட்கார்ந்திருச்த மாலா முணுமுப்பாய்க் கந்தர் சஷ்டிக் கவசம் படித்துக் கொண்டிருந்தாள்.
அவன் அவளைத் தாண்டிக்கொண்டு கொல்லைப்புறம் போனான். ரமணியின் அப்பாவுக்கு முன்னால் தன்னைத் தலை குனிய வைத்து விட்ட அவள் மேல் அவனுக்குக் கோபமே வரவில்லை. இறுகிய முகத்துடன் தோத்திரம் சொல்லிக்கொண்டிருந்த அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பாவமாகத்தான் இருந்தது.
தன்னிடம் அவள் அது பற்றி முன்கூட்டி ஒரு வார்த்தை சொல்லி யிருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் தானாகவே எப்படிச் சொல்லுவாள் என்றும் தோன்றியது. ‘காதல் கடிதம் எழுதுவது வேறு, காதலை உடன்பிறந்த அண்ணனிடமே சொல்லுவது வேறு’ என்று நினைத்தபடி அவன் கால்களைக் கழுவிக்கொண்டு கூடத்துக்கு வந்தான்.
மாலா தலை உயர்த்திப் பார்த்தாள். ராமரத்தினத்தின் முகத்தில் தென்பட்ட ஏதோ ஒன்று அவள் பார்வையைத் தாழ்த்தியது. அவள் அரையாய்ப் புன்னகை செய்தபின் கையில் இருந்த தோத்திரப் புத்தகத்தில் விழிகளைப் பதித்தாள்.
அவன் அம்மாவிடம் சொல்லிகொண்டு படியிறங்கிக் கால்களை எட்டிப் போட்டான். கோமதி இன்னும் வீடு திரும்பாதது ஏனோ அவன் மனத்தைக் கலக்கியது

Series Navigationமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12தினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *