கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

 

பாவண்ணன்

jaya’பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள். ஒளவையார் சுட்டிக்காட்டிய பத்து குணங்களில் பாதிக்கும் மேலான குணங்கள் அவர்களிடமிருந்தே பறந்துபோயின. முரண்களின் தொகையான அச்சம்பவம் நமது தமிழக வரலாற்றில் ஒரு பெரிய கறை. நமது மூதாதையர்களின் சமூகம் மனசாட்சியில்லாமலும் நீதியுணர்ச்சியில்லாமலும் நடந்துகொண்ட விதம் நம்மைத் தலைகுனிய வைக்கிறது. கண்ணுக்குமுன்னால் செத்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரை, காப்பாற்ற இயலாத கையறு நிலையில் பார்க்க நேர்வதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், காப்பாற்றுவதற்கான எல்லா வழிகளும் இருந்தும்கூட, காப்பாற்ற மனமில்லாமலும் கைதூக்கிவிட விருப்பமில்லாமலும் இருந்ததை ஒரு கொலைக்குற்றத்துக்குச் சமமானதாகவே புரிந்துகொள்ளமுடிகிறது. நம் முன்னோர்களின் சமூகம் ஒரு கொலைகாரச்சமூகமாகவே வாழ்ந்திருக்கிறது. சாதி என்னும் குறுவாளோடு வாழ்ந்த அச்சமூகத்தின் முகத்தை வெள்ளை யானை நாவலில் ஜெயமோகன் அடையாளப்படுத்தியிருக்கிறார். வரலாற்றில் மறைந்துபோன அல்லது மறைக்கப்பட்ட ஒரு கொடுமையான சம்பவத்தை ஜெயமோகனின் எழுதுகோல் வெள்ளை யானையாகத் தீட்டிக் காட்டியிருக்கிறது.

பிரான்சிஸ் டே என்பவரால் தெலுங்கு மன்னரிடமிருந்து விலைக்கு  வாங்கப்பட்டு, கிழக்கிந்தியக்கம்பெனியின் நிர்வாக மையமாக உருவாக்கப்பட்ட மதராஸபட்டினம் மெல்லமெல்ல வேலை வாய்ப்புகளுக்கான இடமாகவும் இருந்தது. நிலங்களோடு கட்டிப் பிணைக்கப்பட்டிருந்த மேல்சாதி மக்களைவிட, எல்லாச் சாதியினர்களாலும் ஒடுக்கப்பட்டு, இழப்பதற்கு எதுவுமில்லாத தலித் மக்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்காக  புதிய பட்டினத்தில் குடியேறத் தொடங்கினார்கள். நேர்மையில்லாத ஆட்சியாளர்களும் மனசாட்சியில்லாத மேல்சாதிக்காரர்களும் சுயலாபத்துக்காக, தலித்துகளின் உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இவ்விரண்டு கூட்டங்களின் கூட்டணியால் உருவான செயற்கைப்பஞ்சத்தில் உண்ண உணவில்லாமல் அவர்கள் கும்பல்கும்பலாகச் செத்து மட்கி  மண்ணோடு மண்ணானார்கள். எஞ்சிய ஒருசிலர் ஒருவாய் உணவுக்காக, முப்பது டன் எடையுள்ள பனிப்பாளத்தை அறுத்துத் துண்டுகளாக்கும் வேலையில் ஈடுபட்டு, உயிரோடு நடைப்பிணமானார்கள். எல்லா விளிம்புகளிலும் மரணத்தையே சந்தித்தது தலித் சமூகம். மனசாட்சியே இல்லாதவர்களுக்கு நடுவே நிகழ்ந்த அக்கரிய தருணத்தை மனசாட்சியுள்ள எய்டன் என்னும் கற்பனைப்பாத்திரத்தின் வழியாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஜெயமோகன்.

ஐஸ் ஹவுஸ் என்பது மதராஸபட்டினத்தில் ஃபிரடெரிக் டியுடர் அண்ட் கம்பெனி இயங்கிய இடம். வெள்ளை ஆட்சியாளர்களின் விருந்தறைகளில், அவர்கள் அருந்தும் மதுவோடு கலப்பதற்காக லண்டன் நகரத்திலிருந்தே பனிப்பாளங்கள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டது. ஆறுமாத பயணத்திலும் கரைந்துவிடாதபடி, உயர் குளிர்நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட அந்தப் பாளங்கள் ஐஸ் ஹவுஸில்தான் இருட்டறைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்தன. மாபெரும் அவ்வெள்ளைப் பாறைகளை உடைத்துத் துண்டுகளாக்கி மரப்பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் வேலையைச் செய்ய, பஞ்சத்துக்காக ஊரைவிட்டு வந்த தலித் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். எந்த விதமான பாதுகாப்புக்கருவிகளும் அவர்களிடம் இல்லை. சாதாரண கடப்பாறைகளாலும் மண்வெட்டியாலும் வெட்டியெடுத்துத் துண்டுகளாக்கினார்கள். மரணத்துக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த அத்தருணத்தில் அவர்களிடயே அசாதாரணமான ஓர் எழுச்சி உருவானது. முதல் உரிமைக்குரல் அந்தத் தொழிலாளர்களிடையே எழுந்தது. தமக்குக் கிடைத்த சிறு தகவலை ஆதாரமாகக் கொண்டு 1878 ஆம் ஆண்டையே மறு உருவாக்கம் செய்து காட்டியிருக்கிறார் ஜெயமோகன். ஒருபக்கம் மக்களெல்லாம் வெளியேறுவதற்குக் காரணமான தாதுவருஷப் பஞ்சத்தையும் இன்னொரு பக்கம் ஐஸ் ஹவுஸ் சம்பவத்தையும் இணைத்து நெய்து, ஒரு வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார்.

தமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது.

ஒரு காலத்தில் உலகத்தையே கொள்ளையடித்துக் கொழுத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு. தன் அருகிலிருந்த அயர்லாந்து  மண்ணையும் அது விட்டுவைத்ததில்லை. எய்டன் அங்கே பிறந்தவன். மாபெரும் உணர்ச்சிக்கவிஞனான ஷெல்லியின் வரிகளை மனத்தில் ஏந்தி வளர்ந்தவன் அவன். தன்னைச் சுற்றியும் மலர்ந்துவிட்ட புரட்சிகரச் சமூகங்களைப்பற்றித் தெரிந்துகொண்டவன். எல்லாவற்றுக்கும் மேலாக மனசாட்சி உள்ளவன். அப்படிப்பட்டவனுக்கு பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆளாக இந்தியமண்ணில் காலடி எடுத்துவைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவன் பொறுப்பேற்றுக்கொண்ட காலகட்டத்தில் ஐஸ் ஹவுஸ் சம்பவம் நிகழ்வதுபோல, புனைந்து செல்கிறார் ஜெயமோகன். ரட்சிக்கும் கடமை அதிகாரத்துக்கு உள்ள தலையாய கடமை என நம்பிச் செயலாற்றும் அவனை, நிர்வாகமும் நிர்வாகத்தின் அச்சுகளாக உள்ள சுயநல மனிதர்களும் செயல்படவிடாமல் தடுப்பதில் வெற்றி காண்கிறார்கள். நிர்வாகத்தின் மனசாட்சியைத் தூண்டி, ஆபத்தில் உள்ள மனிதர்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, பஞ்சத்தை நேருக்குநேராகக் கண்டு இரவெல்லாம் கண்விழித்து அவன் எழுதிக் கொடுத்த குறிப்புகள், அவன் எதிர்பார்த்த ஒரு பயனையும் அளிக்கவில்லை. மாறாக, தந்திர மனம் கொண்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக நகரைச் சுற்றி கால்வாய்களையும் கட்டடங்களையும் உருவாக்கத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கு அக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அந்தத் திட்டத்தில் கைமாறப் போகிற தொகையைப் பற்றிய கனவுகளில் திளைக்கத் தொடங்கிவிடுகிறது.

பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக புறநகரில் உள்ள சேரிக்கும், பஞ்சத்தைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக செங்கல்பட்டுக்கும் எய்டன் பயணம் செய்யும் காட்சிகள் முக்கியமானவை. மோசமான நிலையில் உள்ள குடிசைகளையும் அவர்களுடைய வறுமையான சூழலையும் சாலையோரங்களில் விலங்குகள்போலச் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் கோரமான குரல்களையும் எய்டனின் கண்கள் வழியாக நம்மைப் பார்க்கவும் உணரவும் செய்கிறார். உயிர்ப்புத்தன்மை மிகுந்த ஜெயமோகனின் சித்தரிப்புமொழி அக்காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டியிருக்கின்றன. தொர தொர என்று குரலெழுப்பியபடி கைநீட்டும் கரிய உருவம். உட்குழிந்த கண்களால் வெறித்துப் பார்த்தபடி இறுதிமூச்சை விடும் எலும்பும் தோலுமான உருவம். குழந்தையின் பிணத்தை இழுத்துக் குதறித் தின்னும் நாய்களின் கூட்டம். வீசப்படும் ஒரு ரொட்டித்துண்டை எடுக்க கூட்டம்கூட்டமாக முட்டிமோதி ஒருவரையொருவர் கடித்துக்கொள்ளும் மனிதர்கள். ஒவ்வொரு காட்சியும் ஓர் ஓவியமாக  எழுத்தில் உறைந்துவிடுகிறது.

எய்டன் இரண்டு முக்கியமான பாத்திரங்களோடு இந்த நாவலில் உரையாடும் சூழல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று காத்தவராயனின் பாத்திரம். இன்னொன்று முரஹரி ஐயங்காரின் பாத்திரம். ஒன்று தாழ்த்தப்பட்ட சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். இன்னொன்று, சாதியமைப்பில் மட்டுமன்றி, ஆட்சியமைப்பிலும் முக்கியமான எல்லா லாபங்களையும் ஈட்டிக்கொண்ட உயர்சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். காத்தவராயனின் குரல் மனசாட்சி உள்ள எய்டனிடம் மட்டுமே எடுபடுகிறது. முரஹரி ஐயங்காரின் குரல் ஐஸ் ஹவுஸ் நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் என எல்லா இடங்களிலும் எடுபடுகிறது. பஞ்சங்களால் கூட்டம்கூட்டமாக செத்துவிழும் மனிதர்களைப்பற்றிச் சொல்லும்போது, அவர்களுடைய முற்பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு கடவுள் வழங்கிய தண்டனையே அந்த மரணம் என கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் அவரால் சொல்லமுடிகிறது. குதிரைவீரர்கள் தலித் தொழிலாளர்களிடையே எதிர்பாராத கணத்தில் புகுந்து தாக்கி விரட்டி வீழ்த்தும் காட்சியை, சிறிதளவும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒரு கூட்டுப்புணர்ச்சிக் காட்சியைக் காணும் உவகையோடு கண்டு களிக்கிறார். அவருடைய பாவபுண்ணிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு யோசித்துப் பார்த்தால், அவர் கண்குளிரக் கண்டு ஆனந்தப்படும் அக்காட்சி, அவர் தன் முற்பிறவியில் செய்த புண்ணியத்துக்கு கடவுள் அருளிய விருது என அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. தலித் மக்கள் சகமனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள். கடவுளாலும் கைவிடப்பட்டவர்கள்.

ஐஸ் ஹவுஸ்  போராட்டக் காலத்தின் அசல்தன்மையை, மனம் ஒப்பும் விதத்தில் எழுத்தில் வடித்துள்ள ஜெயமோகன் பாராட்டுக்குரியவர். அவர் புனைந்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் முக்கியமானதாக உள்ளது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே அமைந்திருக்கிறது. ஆதம் ஆண்ட்ரூ மனத்தைத் தொட்டுவிடும் முக்கியமான ஒரு பாத்திரம். உயர்ந்த வேலையில் அமர்வதற்காக கல்கத்தாவுக்குச் செல்லவேண்டியவன் விதிவசத்தால் செங்கல்பட்டுக்கு வந்து சேர்கிறான். தான் ஊழியம் செய்யவேண்டிய இடம், மரணங்கள் மண்டிய அந்த இடம்தான் என உறுதியோடு சொல்லி இறங்கிச் செல்கிறான். வேலையமர்த்தலாணைக் கடிதத்தை அவன் கைகள் காற்றில் வீசி எறிகின்றன. அவன் கால்கள் கதறியழும் அந்த மக்களை நோக்கி நடக்கின்றன. மக்களின் மரணங்களை ஒரு புள்ளிவிவரமாக மாற்றி பதிவேட்டில் குறித்துக்கொண்டு அறிக்கை தயாரித்து அளிக்கும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குள் இயங்கும் மனசாட்சி, அவனை இறைநிலைக்கு உயர்த்திவிடுகிறது. மனத்தைவிட்டு நீங்காத மற்றொரு பாத்திரம் மரிஸா. ஆங்கில இந்திய இளம்பெண். பாதிரியாரின் ஆதரவால் ஆங்கிலம் கற்றவள். சொந்த ஆர்வத்தின் காரணமாக இலக்கியமும் கற்றவள். அதிகாரிகளின் களைப்பை நீக்கி இரவுத்துணையாக வாழ்ந்து பிழைப்பவள் என்றாலும் அவளுக்குள் பொங்கிப் பீறிடும் தன்மான உணர்ச்சி அவளை மிக உயர்ந்த அன்னையாக மாற்றிவிடுகிறது.  ஆண்ட்ரூ, மரிஸா போன்ற கற்பனைப்பாத்திரங்களூடே, உண்மைப்பாத்திரத்தின் சாயலுடைய காத்தவராயனும் இடம்பெற்றிருக்கிறான். மாபெரும் தலித் சிந்தனையாளராக பிற்காலத்தில் மலர்ந்த அயோத்திதாசரின் இளமைப்பருவத் தோற்றத்தோடு அவன் காணப்படுகிறான். எதார்த்தத்தை அவன் விளங்கிக்கொள்ளும் விதத்திலும் எய்டனுக்கு விளக்கிச் சொல்லும் விதத்திலும் பக்குவமும் மேதைமையும் ஒருங்கே தென்படுகிறது. தன் குலச்சின்னத்தை அவன் துறப்பதற்கான மனநிலையை, ஐஸ் ஹவுஸ் மரணங்கள் உருவாக்கியதாகப் புனைந்துள்ள தருணம் பொருத்தமாக உள்ளது.  வரலாற்றில் மனமாற்றத்துக்கான தருணங்கள் எப்போதும் இப்படிப்பட்ட மரணத்தருணமாகவே உள்ளது. பிணங்கள் புரண்டுகிடக்கும் போர்க்களத்தைக் கண்டு மனம் மாறும் அசோக சக்கரவர்த்தி பெளத்த தர்மத்தைப் பின்பற்றத் தொடங்கியதை யாராலும் மறக்கமுடியாது. காத்தவராயனும் ஐஸ் ஹவுஸ் மரணங்களை அடுத்து, பெளத்த தர்மத்தை ஏற்றுக்கொள்பவனாக மாறுகிறான். ஆனால், அது அசோகன் நினைத்ததுபோல அஹிம்சையையும் அமைதியையும் வேண்டியதாக அல்லாமல், சாதிநிலைகளின் இரக்கமற்ற தன்மையைச் சகித்துக்கொள்ளமுடியாமல், சாதிகள் அல்லாத ஓர் உலகத்தின் பிரஜையாக தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிற ஆவலின் காரணமாக மாறுகிறான். குதிரைவண்டியோட்டி, காவல்காரன், ஐஸ் ஹவுஸ் மேற்பார்வையாளன் எல்லோருமே அரசு நிர்வாகத்தை அண்டிப் பிழைப்பவர்கள். அவர்களுக்குள் இயங்கும் சாதியுணர்வு மூச்சுக்காற்றுபோல இயங்கிக்கொண்டே  இருக்கிறது. 1878 காலகட்டத்துச் சூழலை கண்முன்னால் நிகழ்த்திக்காட்ட, பரிவேதுமில்லாத இரும்புமனம் கொண்ட அத்தகு பாத்திரங்கள் பலர் நாவலில் இடம்பெற்றுள்ளார்கள்.

கைவிடப்பட்ட கூட்டதினரிடையே பரிவோடு நடந்துசெல்ல ஆண்ட்ரூ போல எய்டனால் இயலவில்லை. தன் முயற்சிகள் தோல்வியுற்றதைத் தாங்கிக்கொள்ள இயலாமலும் தன் மனசாட்சிப்படி நடக்க இயலாத சுயவெறுப்பிலும் அவன் தற்கொலையை நாடுகிறான். உயிர்பிழைத்து எழுந்த பிறகு, நிர்வாக வசதிக்காக அவன் இடமாற்ற ஆணையை ஏற்று தென்காசிக்குச் செல்லவேண்டியிருக்கிறது. அங்கு நடைபெறும் இரவுவிருந்து நிகழ்ச்சி ஒரு முக்கியமான காட்சி. ஆளும் வர்க்கத்தாரின் மனநிலைகளையும் சுயநலப் போக்குகளையும் நேர்த்தியான உரையாடல் காட்சிவழியாக உணர்ந்துகொள்ளும்படி செய்திருக்கிறார் ஜெயமோகன். அங்கு நடைபெறும் மதுவிருந்தில் கோப்பைகளில் நிரப்பப்படுகிற மதுவில் பனிக்கட்டித் துண்டுகள்  கலக்கப்படுகின்றன. தன்னைநோக்கி நீளும் கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் அருந்தும் நிலைக்கு ஆளாகிறான் எய்டன்.

மனசாட்சியில்லாத சொந்த சமூகம் தமக்காக உழைக்கும் மக்களை மனிதர்களாகவே கருதாமல் சாதி என்னும் பெயரால் ஒதுக்கி நசுக்கி வீழ்த்துகிறது. ஆட்சி செய்யவந்த அயல் இன அதிகார வர்க்கமோ, சுயநலத்துக்காக அவர்களை சுத்தமாக கைவிட்டுவிடுகிறது. நாவலைப் பிரித்துப் படிக்கும் ஒவ்வொருமுறையும் அவமான உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் பொங்கியெழுவதைத் தடுக்கமுடியவில்லை.

 

(வெள்ளையானை. நாவல். ஜெயமோகன். எழுத்து வெளியீடு. மதுரை. விலை. ரூ.400)

Series Navigation
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    உஷாதீபன் says:

    வெள்ளையானை நாவலைப் பாவண்ணனைப் போல் நானும் உள்வாங்கித்தான் படித்திருக்கிறேன் என்பதை பாவண்ணனின் பகுதி பகுதியான தெளிவான விமர்சனத்தின் மூலம் புரிந்து கொண்டு, நாவலைப் பற்றிய புரிதல் இன்னும் மனதுக்குள் தெளிவானதில் மிகுந்த திருப்தி அடைந்தேன். எப்படிச் சொன்னால் சரியாயிருக்கும் என்ற எண்ணச் சுழலில் சிக்கியிருந்த எனக்கு, பாவண்ணனின் விமர்சனம் அந்த நிறைவைத் தந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *