தொடுவானம் 25. அரங்கேற்றம்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

டாக்டர் ஜி. ஜான்சன்

25. அரங்கேற்றம்

பாரதி நாடக் குழுவின் முதல் கூட்டம் வெகு விமரிசையாக நடந்தேறியது.பதினைந்து பேர்கள் ஒன்றுகூடிய அக் கூட்டத்தில் முறைப்படி செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.
நான் அப்போது என்னுடைய பள்ளியின் ராபிள்ஸ் தமிழ் மாணவர் கழகத்தின் தலைவராக இருந்த அனுபவத்தால் கூட்டத்தை சிறப்பாக வழி நடத்தினேன். பாரதி நாடகக் குழு அமைத்ததின் நோக்கத்தை எடுத்துரைத்தேன். உடனடியாக முதல் நாடகத்தை வருகிற தமிழர் திருநாள் விழாவில் அரங்கேற்றம் செய்யப்போவது குறித்து விளக்கினேன். நாடகத்தின் பெயர் ” கண்ணீர்த்துளிகள் “. அதன் கதைச் சுருக்கத்தைச் சொன்னேன். அவரகள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டது எனக்கு மன நிறைவைத் தந்தது. அவர்கள் அனைவருக்கும் கதை மிகவும் பிடித்துவிட்டது. கதாபாத்திரங்கள் தேர்வு செய்துள்ளதையும் அவர்கள் யார் யார் என்பதையும் வெளியிட்டேன்.அனைவரும் மிகவும் உற்சாகமானார்கள்.
நாடகம் குறித்த நேரத்தில் அரங்கேற்றம் காணவேண்டுமெனில் அதற்கு ஒத்திகை தினமும் நடக்கும் என்றும் அதில் நடிகர்கள் அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என்றும் கண்டிப்பாகச் சொன்னேன். ஒத்திகை முடிந்ததும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் உற்சாக மூட்டினேன். அப்படி யாராவது மூன்று முறைக்குமேல் ஒத்திகைக்கு வரத் தவறினால் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும், அந்த பாத்திரம் வேறு ஒருவருக்கு தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தேன்.
என்னுடைய அறிமுகவுரைக்குப்பின் முறைப்படி பாரதி நாடகக் குழுவின் செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. நான் தலைவர், ஜெயப்பிரகாசம் செயலர், கோவிந்தசாமி பொருளர், மற்றும் அறுவர் செயற்க்குழு உறுப்பினர்கள் என்று தேர்ந்தெடுத்தோம். உண்மையில் அதை தேர்தல் என்று சொல்ல முடியாது. நான் முன்மொழிந்ததை அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.
கூட்ட முடிவில் பரோட்டா ரொட்டியும் தேநீரும் இரவு உணவாக வழங்கினோம். ஆச்சா கடையிலிருந்து சுடச் சுட வந்திருந்தது. கூட்டம் நடந்ததை செய்தியாக எழுதி தமிழ் முரசுக்கு அனுப்பி வைத்தேன். அது பிரசுரமானது கண்டு அனைவரும் மகிழ்ந்தோம்.
தமிழர் திருநாளில் எங்களுடைய ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் சிறப்பாக அரங்கேற்றம் காண வேண்டும் என்று நாங்கள் அனைவரும் மும்முரமாக உழைத்தோம்.
வசனங்கள் எழுதி முடித்தபின் அவற்றை நடிகர்களுக்குத் தரவேண்டும்.அதற்காக அனைத்து நடிகர்களையும் வரச் சொன்னேன். அவர்களிடம் தாள்கள் தந்தேன். நான் ஒவ்வொரு காட்சியாக வசனங்களை நிறுத்தி படித்தபோது அவரவர் தங்களுக்கான வசனத்தை எழுதிக்கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் தமிழில் டைப் அடிக்கும் வசதி மிகவும் குறைவு. அதனால் சொந்த கையெழுத்தில் அவர்களே வசனத்தை எழுதிக்கொண்டால் மனப்பாடம் செய்வது சுலபமாகும். அவ்வாறு அனைத்துக் காட்சிகளையும் எழுதி முடிக்க மூன்று நாட்கள் ஆயின.
நான் அவ்வாறு திரும்ப திரும்ப வசனங்களைப் படித்ததால் எனக்கு எல்லா கதாபாத்திரங்களின் வசனமும் மனப்பாடம் ஆகிவிட்டது!
அனைவரும் எழுதி முடித்ததும் ஒத்திகையை தினமும் இரவில் பள்ளியில் நடத்தினோம். நான் கதாநாயகன் சேகராக நடித்துக்கொண்டே இயக்குநராகவும் செயல்பட்டேன். நான் கற்பனை செய்தமாதிரி அவர்களை இயக்கினேன். உண்மையில் அது எனக்கு முதல் அனுபவம். அடுத்தவர் பாத்திரத்தையும் நான் நடித்துக் காட்ட வேண்டியிருந்தது.
முதலில் அனைவருமே கையில் வசனங்களை வைத்துக்கொண்டுதான் நடித்தனர். மனப்பாடம் செய்தவர்கள் வசனங்களை பாராமல் பேசி நடித்தனர்.
சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் இரவில் பிரகாசம் என்பவர் தானாக வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் வேறொரு நாடகக் குழுவில் நடிகர் என்றும் , நாடகம் இயக்கும் அனுபவம் உள்ளது என்றும் கூறினார். எங்களின் நாடகம் பற்றி கேள்விப்பட்டதாகவும், அதை சிறப்பாக் இயக்கித் தரவும் முன்வந்தார். அவருக்கு உதவியாக சித்தூல் உசேன் என்ற மற்றொரு நடிகரையும் அழைத்து வந்தார். நான் உடன் அவரையே நாடகத்தை இயக்கித் தரும்படி சம்மதம் தெரிவித்தேன். ஒரு அனுபவம் வாய்ந்தவர் இயக்கினால் நாடகம் தரமானதாக உயரும் என்று நம்பினேன்.
அதன்பின்பு அவரும் சித்தூல் உசேனும் நாடகத்தை தினமும் இயக்கினர்.நாங்கள் அனைவரும் அவரை அன்பாக மிஸ்டர் பிரைட் என்று அழைப்போம்.
அதுபோன்ற கூட்டு முயற்சியின்போது சில சமயங்களில் மன வருத்தங்கள் உண்டாவது இயல்புதான். அது எங்கள் குழுவில் சீக்கிரமே உண்டானது. கோவிந்தசாமிக்கு டாக்டர் பார்த்திரம் தந்திருந்தேன். அவனும் வசனங்களை மனப்பாடம் செய்து விட்டு நடித்து .வந்தான் . ஆனால் அவனுடைய உடலமைப்பு பாத்திரத்துக்கு ஏற்புடையதாக இல்லை.அது எனக்கு குறைபாடாகத் தெரிந்தது. அவன் நடிப்பதோ டாக்டர் பாத்திரம். அவன் அப்போதெல்லாம் நோஞ்சானாக, வயிறு உள்ளே தள்ளி, கூன் விழுந்தவனாகக் காணப்படுவான்.பாத்திரத் தேர்வில் நன் தவறு செய்துவிட்டதை அப்போது நான் உணர்ந்தேன்.
சில நாட்கள் தயங்கியபின் நேரிடையாக அவனிடமே சொல்லிவிட்டேன்.அவன் முகம் வாடிப்போனது. அவன் பாவம்தான். டாக்டர் வேடத்தை அவனுக்குத் தந்து விட்டு ஓரிரு நாட்களில் பிடுங்கியிருக்கக் கூடாதுதான். ஆனால் என்ன செய்வது.? அவனுடைய உருவம் டாக்டருக்கு ஏற்ற வகையில் இல்லையே என மனம் உறுத்தியதால் அதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.
டாக்டர் பாத்திரத்துக்கு பொருத்தமான ஆளைத் தேடியபோது சார்லஸ் ஞாபகம் வந்தது. அவன் என் உறவினன். அவனுடைய உதவியை நாடினேன். அவனும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டான். ( அந்த சார்லஸ் பின்னாட்களில் ஏ. எம். ராஜா மாதிரி வானொலியிலும் தொலைகாட்சியிலும் பாடி சிங்கப்பூர் ஏ. எம். ராஜா என்று புகழ் பெற்றவன். அவன் தற்போது உயிருடன் இல்லை.)
கோவிந்தசாமிக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு பெருத்த அவமானம் உண்டானதுபோல் கருதி விட்டான். அதிலிருந்து விடுபட அவனுக்கு பல காலங்கள் ஆனது.
நாடகம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவனை மாற்றினேன். அவனோ அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டான்.
சார்லஸ் என் சொந்தக்காரன் என்பதால் அவனுக்கு டாக்டர் வேடம் தந்துவிட்டதாக எண்ணிவிட்டான். ஒருசிலரிடமும் அவ்வாறு கூறிவிட்டான்
( அதோடு அவன் அதை மறக்கவில்லை. நாற்பது ஆண்டுகள் கழிந்தும்கூட அதை மறக்காமல் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளான். பன்னீர்செல்வம் சென்ற வாரம்கூட என்னிடம் அதைக் கூறினான்.இப்போது ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன! )
நாடகம் தரமான வகையில் உருவாகிக் கொண்டிருந்தது. கால தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் அந்தந்த காட்சிகளை ஒத்திகைப் பார்ப்போம்.
நாடகத்தில் ஒரு காதல் காட்சி உள்ளது. அது ஒரு பூங்காவில் நடப்பதாகவும். சேகரும் மீனாவும் அப்போது காதல் வசனம் பேசுவார்கள். அதில் ஒரு பகுதி என்னால் இன்றும் மறக்காமல் மனதில் பதிந்துள்ளது. அது இவ்வாறு அமைந்திருந்தது.
பூங்காவில் சேகர் ஒரு மலரைப் பறித்து முகர்ந்தவண்ணம் தலை குனிந்து நிற்கும் மீனாவை நெருங்கி அந்த மலரை அவளிடம் தருகிறான். அவள் அதை வாங்கிக்கொள்கிறாள். அப்போது அவளைப் பார்த்து கூறும் வசனம்
சேகர் : மீனா, இந்த மலர் உனக்குப் பிடித்துள்ளதா?
மீனா : ஆம் பிடித்துள்ளது. பெண்களுக்கு மலர் என்றால் பிடிக்கும்தானே?
சேகர் : அப்படியா? இந்த மலர் அழகாக உள்ளதா?
மீனா : ஆம் .
சேகர்: அழகாக உள்ளதா? எனக்கு அழக்காக இல்லையே?
மீனா : அழகாக இல்லையா? ஏன்?
சேகர் : மீனா, இந்த மலர் இன்று மலரும். நாளை வாடிவிடும். அதோடு இதன் அழகு போய்விடும்.
மீனா: அதனால்?
சேகர் ; நீயோ ஒரு புது மலர். நீ ஒரு முறை மலர்ந்துவிட்டால் என்றுமே மலர்ந்திருப்பாய்.
( இவ்வாறு கூறி சேகர் மீனாவை அணைத்துக்கொள்கிறான். )
கதாநாயனாக அதிலும் காதல் காட்சியில் நடிக்க எனக்கு கூச்சமாகவும் பயமாகவும்தான் இருந்தது. இருந்தாலும் அதை ஒரு சாதனையாக செய்து முடிக்க வேண்டும் என்று திட மனதுடன் நடித்தேன். என்னுடைய வசனம்தானே, அதனால் எளிதில் பேசி சமாளித்துவிடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் மிஸ்டர் பிரைட் காதல் காட்சியை மிகவும் தத்ரூபமாக அமைக்க வேண்டும் என்றார். அதுதான் நாடகத்துக்கு அழகு சேர்க்கும் என்றார். ஆகவே வெறும் வசனத்தை மட்டும் பேசாமல் இருவரும் நெருக்கமாக் இணைந்து நடிக்கணும் என்றார். அவரே நடித்தும் காட்டினார். எனக்கு அப்படி நெருங்கி நடிக்க கூச்சமாகவே இருந்தது. கூடுமானவை அவர் சொன்னபடி நெருங்கி நடித்தேன். ஆனால் அவரோ அது போதாது என்றார்.
காதல் காட்சி என்றால் ஒரு பாடலும் நடனமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்றார். அது கேட்டு நான் உண்மையில் வெலவெலத்துப்போனேன்! நான் ஆடணுமா? அது எப்படி என்று வாதிட்டேன். அனால் அவரோ விட்டபாடில்லை. வேறு வழியின்றி பாடல் தேர்வு செய்தோம். அது எம்.ஜ.ஆர்.பாடல்தான்.அதை ஒலிக்கவைத்து சித்திராதேவியும் நானும் ஆடி பயிற்சி பெற்றோம்.
சித்திராதேவிக்கு நடிப்பு இயல்பாக வந்தது. காதல் காட்சியில் கூச்சம் இல்லாமல் என்னுடன் நெருங்கி நடித்தாள். எனக்கு உள்ளுக்குள் கூச்சம் என்றாலும் இருவரும் அணைத்தும் கட்டிப்ப்பிடித்தும் நடித்தோம்.
ஆனால் இளம் விஞ்ஞானிக்கு ஏற்ற மிடுக்குடனும் துடிப்புடனும் பன்னீர்செல்வம் நடித்து அனைவரையும் அசர வைத்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கேயுரிய கணீர்க் குரலில் நான் எழுதிய வசனங்களை அவன் பேசி நடித்தது எனக்குப் பெருமை தந்தது.என்னுடைய வசனங்களை நான்கூட அவ்வாறு பேசி நடித்திருக்க முடியாது.
நகைச்சுவைக் காட்சிகளை சித்தூல் உசேன் அருமையாகச் சொல்லிக் கொடுத்தார்.
நாங்கள் அனைவருமே வாழ்க்கையில் முதல் முறையாக நாடக அரங்கேற்றம் காணப் போவதால் எல்லாருமே மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டோம்.
தமிழர் திருநாள் விழா அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. அதில் என்னுடைய கதை வசனத்தில் ” கண்ணீர்த்துளிகள் ” நாடக அரங்கேற்றம், நடிகர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது கண்டு அகமகிழ்ந்தோம்.
விழா மேடை பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியின் பின்புறமுள்ள காற்பந்து விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டது. அதில் நாடகக் காட்சிக்கான வீடு, வீதி, ஆராய்ச்சிக்கூடம், பூங்கா போன்றவற்றின் படுதாக்கள் தொங்க விடப்பட்டன.
நாங்கள் மாலையிலேயே பள்ளியில் கூடிவிட்டோம். ஒவ்வொருவருக்காக ஒப்பனை செய்யப்பட்டது. அவர்கள் நாடக ஒப்பனை செய்பவர்கள்.காட்சிகளின் படுதாக்களையும் அவர்கள்தான் கொண்டு வந்தனர்.
முகத்தில் ஒரு திரவம் தடவி, பவுடர் பூசி, உதடுக்கு சிவப்பு சாயம் போடப்பட்டது. பாத்திரங்களுக்கு ஏற்ற உடைகளை அணிந்து கொண்டோம்.
நான் ” டை ” அணிந்து கொண்டேன். ஒப்பனையில் சித்திராதேவி சினிமா நடிகைபோல் கவர்ச்சியாகத் தோன்றினாள்.அந்த ஒப்பனையின்போதே நாங்கள் அனைவரும் எங்களை மறந்து அப்படியே அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டோம்!
விழா தொடங்கியது. வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை போன்றவை முடிந்ததும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின சிலர் பாடல்கள் பாடினர். சிலர் நடனம் ஆடினர . அப்பா முன்வரிசையில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
எங்கள் வட்டாரத்தில் :” தென்றல் இசைக் குழ ” பிரபலமானது.அவர்கள் பின்னனி இசை வழங்க ” மாட்டுக்கார வேலா … உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா . ” என்ற பாடலை சிதம்பரம் சித்தப்பா சிறப்பாகப் படி கைத்தட்டு பெற்றார்.
திருவாளர் சிங்கப்பூர் எஸ்.கே. ஆர். சந்திரன் தன்னுடைய உடற் கட்டழகைக் காட்டி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.
இயல், இசை நாடகம் என முத்தமிழ் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழர் திருநாள் விழாவில் கடைசி சிறப்பு நிகழ்ச்சியாக என்னுடைய ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் அரங்கேற்றம் கண்டது.
நாடகம் முழுதும் நாங்கள் வசனங்கள் பேசும் போதும்,, காட்சிகள் மாறும்போதும் இசைக்குழவினர் இசை வழங்கி அதை திரைப்படம் போலவே மாற்றிவிட்டனர்!
காட்சிக்குக் காட்சி பலத்த கைத்தட்டல் பெற்று அனைவரும் சிறப்பாக நடித்தோம். அனைவருமே வசனங்களை இயல்பாக சரளமாகப் பேசி திறம்பட நடித்து முடித்தோம்.
விழாக்குழுவினர் வியந்து போயினர். பொதுமக்கள் மெய்மறந்து கதையோடு ஒன்றித்துப் போயினர்!
எங்களுடைய முதல் நாடகமே பெரும் வெற்றி அடைந்ததில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தத்தளித்தோம்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *