ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

raymond-carver001[2]ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர்.
ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார்.
சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.
தொகுப்பின் முதல் கதை அடுத்த வீட்டுக்காரர்கள் என்னை கார்வரிடமிருந்து அன்னியப்படுத்தும் ஒன்றாகவே இருந்தது. எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்டோன்ஸ் தம்பதிகள், உறவினர்களைப் பார்க்க வெளியூர் செல்வதாகவம் தாம் இல்லாத போது தம் வீட்டையும், பூணையையும், தாவரங்களையும் மில்லர் தம்பதிகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிச் செல்கிறார்கள். அவர்கள் சென்றதும், மில்லர் தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்து ஏதோ தம் வீடு போல, படுக்கை குளியல் அறை, குளிர்சாதனப் பெட்டி, உணவு, மதுபானங்கள் உடைகள் எல்லாவற்றையும் ஏதோ திறந்த வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் போலத் தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள் இடையில் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள், பூனைக்கும் உணவு தருகிறார்கள் தான்., சாதாரண மனிதர்கள் தான். ஆனால், பொறுப்பும், நட்புணர்வும் கொண்ட அண்டை வீட்டுக்காரர்களாக இல்லை.
இரணடாவது கதை அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை.
கணவன் ஏர்ல் ஓபர் அவ்வப்போது நிலையில்லாது மாறும் சிறு நிறுவனங்களில் விற்பனையாளன். மனைவி டோரின் ஒரு உணவகத்தில் இரவு நேர பணியாளர். ஏதாவது தன் மனைவி தயவில் தின்னக் கிடைக்குமா என்று போகிறான் எர்ல். அங்கு உணவகத்தில் தன் மனைவியின் அங்கங்களைப் பற்றி வாடிக்கையாளர்களிடையே கொச்சையான வர்ணனைகள். வீட்டுக்கு வந்து மனைவியிடம் அவள் எடையைக் குறைக்க வேண்டும், கண்ணாடி முன் நிறுத்தி தினம் எவ்வளவு எடை குறைந்திருக்கிறது என்று குறிப்பெடுத்தாகிறது. உணவைக் குறை, உடற்பயிற்சி செய் என்று கட்டளைகள். பிறகு உணவகம் சென்று பக்கத்து மேஜையில் இருப்பவரிடம் தன் மனைவியைச் சுட்டிக் காட்டி, “அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று பதிதேவர் எர்ல் கேட்கிறார். பதில் வராமல் போகவே, “அவள் பிருஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறான். இப்படி போகிறது கதை. இவ்வளவுக்கும் எர்ல் தன் மனைவி டோரினிடம் கதை ஆரமபத்திலேயே சொல்கிறான், “நான் தான் உனக்குக் கணவன், அந்த வாடிக்கையாளர்கள் இல்லை” என்று. அவன் தான் தன் மனைவியின் ”பிருஷ்டம் எப்படி இருக்கிறது?” என்று கேட்கிறான் எவனோ ஒரு அன்னியனை. சாதாரண மனிதர்களாகத் தான் கதையில் நுழைகிறார்கள். ஆனால் பின்னால்
அவர்களுக்கு என்ன நேரிட்டு விடுகிறது?
மூன்றாவது கதை, தொகுப்பின் தலைப்புக் கதை, இதுவும் என்னை அன்னியப் படுத்தியது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு விரிசல். அது எரிச்சல் கொண்ட சம்வாதமாக நீள்கிறது. மணி அடித்து தொலை பேசியை எடுக்கப் போனால், “எடுக்காதே என்று கணவன் தடுக்கிறான். “அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள்” என்று காரணம் சொல்கிறான். மனைவிக்கு அது கொலையோ, கற்பழிப்போ, என்னவோ, அதில் தன் கணவன் சம்பந்தப்பட்டிருப்பானோ என்று சந்தேகம். நடந்த விஷயம் கணவன் சொன்னபடி, ஸ்டூவர்ட்டும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் மீன் பிடிக்கச் சென்றார்கள். வெகுதூரம். காரை எடுத்துக்கொண்டு. இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்று காரை ஒரு இடத்தில் நிறுத்தி ஐந்து மைல் தூரம் பின்னும் நடந்து நாச்சஸ் ஆற்றின் கரையோரம் தங்க முடிவு செய்தார்கள். சகாக்களில் ஒருவன் சொல்ல, ஒரு பெண்ணின் சடலம் ஆற்றின் கரையோரம் கிடப்பதைப் பார்த்தார்கள். சடலம் ஆற்றில் மிதந்து செல்லாத வாறு ஒரு மரத்தின் அடிவேறோடு நைலான் கயிற்றால் கட்டினார்கள். பின்னர் அந்த இடத்திலேயே முகாமிட்டு, மீன் பிடித்து வறுத்து உருளைக் கிழங்கு சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பின்னர் கிளம்பும் வேளை வந்ததும் மறுபடியும் நெடுஞ்சாலைக்கு நடந்து வந்து, சாலையோரம் இருக்கும் தொலைபேசியில் இந்த இடத்தில் ஒரு சிறு பெண்ணின் சடலம் இருப்பதாகச் சொல்லி அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பதாகவும் சொல்லிக் காத்திருக்கிறார்கள்.
இந்த இடம் வந்ததும் கதையைத் தொடர்ந்து படிக்கத் தோணவில்லை. ஒன்று அந்த இடத்தை விட்டுவந்த சுவடு தெரியாமல் ஓடியிருக்கவேண்டும். இல்லை, உடனே நெடுஞ்சாலைக்கு வந்து போலீசுக்குத் தகவல் தெரியப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தை மரத்தின் அடிவேரோடு கட்டிப் போட்டு மூன்று நாள் அங்கே உட்கார்ந்து கொண்டு உல்லாசப் பயணம் வந்தவர் போல மீன் பிடிக்கவும் சீட்டு விளையாடவும் உணவு சமைக்கவும் இடையிடையே சடலமாக ஆற்றில் மிதக்கும் பெண்ணைப் பற்றிப் பேச்சு வேறு ஏதோ கதை பேசுவது போல….….. இது என்ன, எந்தக் கதையைத் தொட்டாலும் சாதாரண மனிதர்கள் என்னவோ பிறழ்ந்த மனமும் மூளையும் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு வித கசப்பு உணர்வு மனதில்.
புத்தகத்தை மேற்கொண்டு படிக்கவில்லை. ஆனால் செங்கதிரும் அவர் நண்பர்களும், அவர்களில் சிலர் எனக்குப் பரிச்சயமானவர்கள், இவ்வளவு சிரமம் எடுத்து கூடிப் பேசி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து….அவர்கள் தீவிரத்துக்கு ஒரு மரியாதை நான் தர வேண்டும். நான் எங்கோ தவறு செய்யக் கூடும். மறுபடியும் படித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. டால்ஸ்டாய்க்கு ஷேக்ஸ்பியரையே குறை சொல்லத் தோன்றியிருக்கு. இவர்களில் யார் குறைந்தவர்கள்?. பார்வைகளும் ரசனையும் வேறுபடுகிறது தானே. ஒரு வாசிப்பில் எதையும் தள்ளிவிடக் கூடாது என்று தோன்றிற்று.
இடைவெளி என்ற கதையில் ;பதினெட்டு வயதில் கணவன். மனைவிக்கு வயது பதினேழு. கார்வர் மாதிரியே. கார்வருக்கு நிகழ்ந்தமாதிரியே அந்தச் சிறு வயது தம்பதியருக்கு ஒரு குழந்தை. கார்வர் மாதிரி, அவர் கதைகளில் வரும் அனேகரைப் போல இவனுக்கும் வேட்டையாடுவதில் பிரியம். மதுபானமும் எப்போதும் கையில். தன் அப்பாவின் சினேகிதர் கார்லுக்கு டெலிபோன் செய்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு வாத்து வேட்டைக்குப் போவதென்று தீர்மானிக்கிறார்கள். அவள் ”போகவேண்டாம், குழந்தைக்கு உடம்பு சரியில்லை” என்கிறாள். அவன், ”கார்ல் காத்திருப்பார் போயே ஆகவேண்டும்” என்று பிடிவாதம் பிடிக்கிறான். தகராறு வலுக்கிறது. அவன் காரை எடுத்துக் கிளம்பி விடுகிறான். கார்ல் வீட்டுக்குப் போனால் அவர் இவன் வரவில்லையே என்று காத்திருந்ததாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் சொல்லியிருக்கலாமே, இன்னொரு நாள் போனால் போகிறது என்று சொல்கிறார். இவன் மனம் சமாதானமாகி வீட்டுக்குத் திரும்பிப் போகிறான். பூசலில் பிரிந்த தம்பதியரிடையே திரும்பவும் இணக்கம்.
கார்வரின் எழுத்து மிக நுணுக்கமானது. விவரங்கள் நிறைந்தது. அவரது வாழ்வனுபவம் சார்ந்தே சித்தரிப்பு பெறும் மனிதர்களும் சம்பவங்களும் அனேக கதைகளுக்கு உயிர் தருகின்றனர். சில சமயங்களில் அது விசித்திரமாகவும் சில சமயங்களில் மிக நெகிழ்ச்சி தரும் தருணங்களாகவும் இருக்கின்றன. தன் மனைவிக்கு வாத்து வேட்டை பற்றிச் சொல்லும் போது வாத்துகள் சுபாவத்தில் ஒரு ஜோடியாகவே வாழ்கின்றன. அவை ஜோடி பிரிந்து வேறு வாத்துக்களோடு வாழ்வதில்லை. ஜோடியை இழந்த ஒரு வாத்து கூட்டத்தோடு வாழ்ந்தாலும் தனித்தே செல்லும் என்றெல்லாம் விவரிக்கிறான். “நீ சுட்டும் வாத்து தன் ஜோடியை இழக்கும் இல்லையா? என்று கேட்கிறாள். ஆமாம் என்கிறான். தனித்து விடப்பட்ட வாத்தையும் சுடுவாயா? என்று கேட்கிறாள். ஆமாம் வேட்டையில் இதெல்லாம் நேரும் தான் என்று பதில் சொல்கிறான். அந்த சகஜ பாவம் ஒரு கணம் நம்மை அதிர வைக்கும். அவளும் அதைக் கேட்டு துணுக்கிடுகிறாள் தான்.
இம்மாதிரியான சாதாரண சம்பவ விவரிப்புகள் சில சமயம் பெறும் எழுச்சி அசாதாரண கணங்களையும் நெகிழ்ச்சிகளையும் தந்து விடுகிறது. கதீட்ரல் என்ற கதை அசாதாரண சந்திப்புகளையும் மனிதர்களையும், கொண்டது.
மனைவி சொல்கிறாள், தான் முன்னர் சியாட்டிலில் இருந்த போது, பணத் தேவைக்காக தொலைபேசியில் கிடைத்த ஒரு உதவியாளாக வேலையில் சேர்ந்தாள். அவள் உதவி வேண்டியது ஒரு பார்வையற்ற ஆய்வாளனுக்கு. படித்துக் காட்ட வேண்டும். அப்போது அவளுக்கு ஒரு காதலனும் இருந்தான் பின்னர் மணமும் ஆயிற்று அவன் ஏதோ ஒரு ராணுவ அதிகாரி. பல இடங்களுக்கு மாறிச்செல்பவன். அவ்வப்போது அந்த குருடனுக்கும் இவளுக்கும் தொலைபேசித் தொடர்பு இருந்தது. இப்போது குருடனின் மனைவி இறந்த பிறகு, ஒரேகானிலிருந்து வருகிறான். தன் இப்போதைய கணவனுக்கு அவள் சொன்னாள். ”ராபர்ட் (அந்தக் குருடன்) சில நாட்கள் இங்கு வந்து தங்குவான்” என்று. குருடனும் வருகிறான். மது அருந்துதல், பேச்சு, உணவு எல்லாம் இன்னொருவர் உதவி இல்லாமல் அவனால் எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.மனைவி ராபர்ட்டோடேயே அவனுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறாள். தன்னைப் பற்றியும் அவள் எப்போதாவது ராபர்ட்டிடம் சொல்வாளா என்று கணவன் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. ராபர்ட் டிவி பார்ப்பானா என்று கணவன் கேட்கிறான். மனைவிக்கு இது பிடிப்பதில்லை. இதெல்லாம் போகட்டும். அந்தக் குருடன் ராபர்ட் ப்யூலா என்ற பெண்ணை மணந்து கொள்கிறான். தான் விலகிய பிறகு ராபர்ட்டுக்கு உதவி செய்ய வந்த பெண் ப்யூலா என்று தெரிகிறது. ஒரு சர்ச்சில் அவர்களுக்கு மணம் எளிய முறையில் நடக்கிறது. ப்யூலா சமீபத்தில்தான் இறந்து விட்டாள். ராபர்ட் இப்போது தனித்து விடப்பட்டவன் என்றெல்லாம் அவனைப் பற்றிய விவரங்களை அவள்தன் கணவனுக்குச் சொல்கிறாள். அப்போது கணவன் மனதில் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி ஓடும் எண்ணங்களைக் கார்வர் எழுதுகிறார்.”
கற்பனை செய்து பாருங்கள். தனது பிரியமானவரிடமிருந்து தன் தோற்றம் பற்றி எந்த ஒரு பாராட்டுமின்றி தினம் தினம் வாழ்ந்திருக்கிறாள். அவளது முகத்தில் படரும் துயரம் அல்லது வேறு எந்த உணர்ச்சியையும் பற்றி எதுவுமே தெரிந்திராத கணவனின் மனைவி அவள். ஒருத்தி அழகு படுத்திக்கொள்ளலாம். கொள்ளாமலும் இருக்கலாம். அவருக்குஎந்த வித வித்தியாசமுமில்லை ………………..தான் எப்படி இருப்போம் என்று தன் கணவனுக்குத் இந்தப் பெண் எத்தனை கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். என்று எனக்குத் தோன்றியது. ஒரு பெண் தன் பிரியமானவரின் பார்வையில் தான் எப்படி இருப்போம் என்பதையே அறியமுடியாத பெண்ணாக இருப்பதைத் தெரியாமலே புதைகுழியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பது அவளது கடைசி எண்ணமாக இருந்திருக்கும்……….
என்று சலனிக்கிறது அவன் மனம்.
இப்படி மற்ற கதைகளும் மிக நுண்ணிய மனச் சலனங்களும் வெகு எளிய மொழியில் எவ்வித ஆரவாரமுமின்றி சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கையின் நிகழ்வுகளின் எழுச்சிகளைக் கொண்டவை.
எல்லாக் கதைகளிலும் விரவியிருப்பது, மிகச் சிறுவயதிலேயே மணம் செய்து கொண்ட தம்பதிகள், பின் பிரிந்து பல விவாகங்களும் விவாக ரத்துகளும் கொண்டு சேரும் தம்பதிகள். குடி, வீட்டுக்குள் தம்பதிகளின் பூசல்கள். மருத்துவ மனை சூழலின் அசாதாரண நுண்ணிய விவரிப்பு கள் வாழ்வின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அல்லது நடிகையுடன் விவாகம் சில வருட மணவாழ்க்கை இப்படி பல விவரங்கள் கார்வரின் வாழ்க்கை யிலிருந்து கதைகளுக்கு இடம் பெயர்பவை.
கார்வரின் கதைகள் ஒரு அனுபவம்தான்.
தொகுப்பின் கடைசியில் இருப்பது செகாவ் நோய்வாயுற்று பாதன்வெய்லரில் தங்கியிருந்த நாட்கள், டால்ஸ்டாயின் வருகை, மருத்துவமனையில் இறந்த கணங்கள் பற்றிய கார்வரின் சித்தரிப்பு கொண்ட “சின்னஞ்சிறு வேலை” இதைக் குறித்து தனித்துச் சொல்லத் தோன்றுகிறது.
வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு: ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு: தேர்வும் தொகுப்பும் – செங்கதிர். மொழிபெயர்ப்பாளர்கள்: செங்கதிர், க. மோகனரங்கன், எம் கோபால கிருஷ்ணன், விஜயராகவன்
காலச்சுவடு பதிப்பகம். பக்கங்கள் 223. ரூ 200

Series Navigation
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *