ரஜினிக்கு தைத்த சட்டையை, தனுஷுக்குப் போட்டு அழகு பார்த்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஃபார்முலாவுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பது தான், இந்தப் படத்தின் விசேஷம்.
படத்தின் நாயகன், சந்தேகமில்லாமல் அனிருத் தான். தனுஷின் அசத்தல் நடன அசைவுகளுடன், முதல் பாடலான “ வாட் எ கருவாட்” அரங்கேறுகிறது. அப்புறம் காரக் குழம்பு, பச்சடி, பாயசம் என்று வகை, வகையான இசையை பந்தியிடுகிறது படம். பின்னணி இசையில் சின்ன சப்தங்களை வைத்து சிம்ஃபனி வாசித்திருக்கிறார் ‘ ஹனி ’ ருத்!
“ ஏ இங்கே பாரு”, “ ஊதுங்கடா சங்கு”, “ அம்மா அம்மா நீ எங்கே அம்மா”, “ போ இன்று நீயாக”, என்று ஒரு பிரவாக நதியைப் போல், உள்ளங்களில் பாய்ந்து, மனதில் படருகிறது பாடல் இசை. சபாஷ்!
தேசிய விருது ஒன்றும் சும்மா வரவில்லை என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் தனுஷ். ஆனால் இன்னமும் எத்தனை நாட்களுக்கு, சைக்கிள் மோபெட் பாத்திரங்களில் நடிப்பார் என்கிற அலுப்பு வருவது உண்மை. எலும்புக் கூடு உடம்புக்கும் எக்கு தப்பு வசனங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்பது அவரது மிகப் பெரிய குறை. தனுஷ் கண்ணா! ஒண்ணு உடம்பை தேத்து. இல்லை ரூட்டை மாத்து!
நாயக ஆதிக்கப் படங்களில், நாயகி வெறும் குரோட்டன்ஸ் செடி. ஆனாலும் அமலா பாலை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ஒரு பாந்தம். இயக்குனர் விஜய் மீது பொறாமை வருகிறது. பேசாமல், வெறும் தலையாட்டலிலேயே ரசிகனைக் கவரும் சாமர்த்தியம் அமலாவுக்கு அம்சமாக வருகிறது. வாழ்த்துக்கள்!
மோவாயில் எப்போதும் மூன்று நாள் தாடி. பழுப்பேறிய கண்ணாடி. எண்ணை வடியும் ஒப்பனை இல்லாத முகம். நடுத்தர வர்க்கத்து தந்தையை கச்சிதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. எதிர்மறையாக, அம்மா சரண்யா, அமலாவுக்கு போட்டியாக சூப்பர் எக்ஸல் பளிச்! புதுமுகங்கள் ரிஷிகேஷும் அமிதாஷும் பூவோடு சேர்ந்த நார். கொஞ்சம் மணக்கிறது.
இயக்குனர் வேல்ராஜ், தப்பு செய்யாத கதையை எடுத்து, கொஞ்சம் நெகிழ்வு, கொஞ்சம் மிகைவு என வெற்றிகரமாக பயணித்திருக்கிறார். இயல்பான கோணங்களும், வசனங்களும் அவரைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டுகின்றன.
தனுஷ்! செல்வராகவன் போட்ட பாதையில் ஒரு பாதி. ரஜினி பாதையில் மீதி. பாதி கிணறு தாண்டிய கதைதான். அதுவும் முதல் பாதி. அம்மா, பிள்ளை காட்சிகளும், அமலா, தனுஷ் சீறல்களும் செம ஜோர். அப்புறம்? போர்! அதிகம் பேசாத விவேக் ( அழகுசுந்தரம்) மிகப் பெரிய ஆறுதல்!
தமிழ் வழிக் கல்வியில் படித்து, பொறியியலில் கட்டிடக் கலையை அரியர்ஸுடன் முடித்து, வேலையில்லாமல் இருக்கும் ரகுவரன் ( தனுஷ்), அப்பாவுக்கு ( சமுத்திரக்கனி ) தொக்கு! அம்மா புவனாவுக்கு ( சரண்யா பொன்வண்ணன்) கேக்கு! தம்பி கார்த்திக் (புதுமுகம் ரிஷிகேஷ்) ஆங்கிலப் பள்ளியில் படித்து, மென்பொருள் பட்டம் வாங்கி ஐந்து இலக்கச் சம்பளம் வாங்குவதும், அதுவே ரகுவின் மீதான விமர்சனமாக படிவதும் ஒரு பாதி கதை. மன இறுக்கத்தில், சரக்கடித்து, சாலையில் ஆடி விழும் ரகுவின் மேல், காதலாகிறாள் ஷாலினி (அமலா பால்) பொறுப்பற்ற காரணத்தால், அம்மாவின் மரணத்திற்கு காரணமாகும் ரகு, தானம் கொடுக்கப்பட்ட அம்மாவின் நுரையீரலால் பிழைக்கும் அனிதாவின் ( சுரபி) அப்பா மூலம் ( ஶ்ரீராம்), குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டும் 170 கோடி அரசு பணிக்கு சேர்க்கப்படுகிறான். டெண்டரை எடுத்து, தேட்டையைப் போட நினைக்கும் அருண் சுப்பிரமணியம் ( புதுமுகம் அமிதாஷ் ), ஏற்படுத்தும் தடைகளை மீறி, ரகு எப்படி ஜெயிக்கிறான் என்பது க்ளைமேக்ஸ்.
“ என் தம்பிக்கு கார்த்திக்னு ஹீரோ பேரை வச்சிட்டு, எனக்கு ரகுவரன்னு வில்லன் பேரை வச்சிருக்காங்க”
“ இந்தக் காலத்து பொண்ணுங்க மினிமம் செக்யூரிட்டி இல்லாம லவ் பண்ண மாட்டாங்க” இயல்பான வசனங்கள், புன்னகையை வரவழைக்கின்றன.
“ வேலை இல்லா பட்டதாரி” இயக்குனர் வேல்ராஜுக்கு ஒரு மயில் பீலி. ஆனால் தனுஷுக்கு வெறும் காக்கா ரெக்கை!
0
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் : வேல்ராஜ். இசை: அனிருத். பாடல்கள் : தனுஷ். நடிப்பு : தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, அமிதாஷ், ரிஷிகேஷ், சரண்யா பொன்வண்ணன், விவேக்.
0
- இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்
- சதுரங்க வேட்டை
- வேலை இல்லா பட்டதாரி
- சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?
- நாய்ப்பிழைப்பு
- முக்கோணக் கிளிகள் – 14
- காது கேளாமை, வாய் பேசாமையைக் குணப்படுத்தும் சிகிச்சை இரகசியங்கள் ( சீனா வெற்றிகரமான தேடல் அனுபவங்கள்)
- மனம் பிறழும் தருணம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 13
- மருதாணிப்பூக்கள்
- இப்படியும்……
- தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை
- என்றோ எழுதிய வரிகள்
- தினம் என் பயணங்கள் -27 Miracles and Angels !
- கவிதை
- கவிதாயினியின் காத்திருப்பு
- மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு
- தொடுவானம் 26. புது மனிதன் புது தெம்பு
- பரம வீரர்கள் – கார்கில் வெற்றி தினம்
- அருளிச்செயல்களில் அறிவுரைகளும் அரசளித்தலும்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84
- மன்மதனிடம் அம்புகள் தீர்ந்துவிட்டன
- ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’
- நாடக விமர்சனம் – தெனாலிராகவன்
- திரைவிமர்சனம் – பப்பாளி
- கவனங்களும் கவலைகளும்
- மொழிவது சுகம் ஜூலை 26 2014