ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக
காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர்
கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ
பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.
அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன்,
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே,
பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை,
ஜாதியும் இல்லை பேதமும் இல்லை.
எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர்
கற்பனைக்கெட்டாத அழகின் திருவுருவம் அவர்.,
இந்த உலகில் எல்லாமே அழிந்துவிடும் முடிவாக
வேண்டாம் இவர்கள் எவரும்.
என்றுமே இருக்கும் முடிவில்லாத என் நாயகன்
ஒரே ஒருவர் தான் – அவர்
என் மல்லிகார்ஜூனா
லிங்கமான சிவனே மணமகன்
நானே மணமகளானேன்
.
அக்கா மகாதேவி கன்னட இலக்கியத்தின் “வாச்சனா” வடிவத்தின்
முன்னோடி. ஒரு வகையில் பார்க்கப்போனால் இவர் தான்
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மீராவுக்கு ஒரு வகையில்
வழிகாட்டி..
” சென்னமல்லிகார்ஜூனா ” என்றால் மல்லிகைப்பூவைப் போல
அழகான என் தெய்வமே என் தலைவனே என்று இவர் எழுதியிருக்கும்
கவிதைகள் பக்தியும் காதலும் குழைந்து கொடுத்திருக்கும்
அற்புதமான கவிதைகள்.
என்னைத் தைத்த அம்பு
ஆழமாக எனக்குள்
அதன் இறகுகளும் தெரியாமல்
தைக்கட்டும்.
என் தலைவன் உடலை இறுக
கட்டி அணக்க வேண்டும்.
அவன் எலும்புகள் நொறுங்கும்படி
இறுக்கி அணைக்க வேண்டும் .
பார்வையிலிருந்து மறையும் வரை
அந்த –
தெய்வீகத்தை பிடித்து அணைக்க வேண்டும்.
இவர் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் முறையாக எழுதப்பட்டவை
நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்தவற்றிலிருந்து இவர்
வாழ்க்கையில் இவர் மெய்யியல் தேடலின் பயணத்திற்கான
காரணங்களை நாம் அறிய முடிகிறது.
கி.பி. 1146 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உடுதடி எனும் சிற்றூரில், சித்ராபௌர்ணமி நாளில் மகாதேவி பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. தாயார் சுமதி; தந்தை நிர்மலன். இருவரும் சிவபக்தர்கள் என்பதால், இளம் வயதிலேயே சிவன் வழியில் செல்ல மகாதேவிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசன் கௌசிகன் மகாதேவியை மணக்க விரும்பினான். பெற்றோரும் தங்கள் கடமையை முடிக்கவேண்டுமென அதனை ஆதரித்தனர்.
அக்கமகாதேவியோ சிறிதும் சஞ்சலமின்றி மூன்று நிபந்தனைகள் விதித்திருக்கிறார். அந்தக் காலத்தில் இந்த தீர்க்க சிந்தனை அவரின் மனதிடத்தை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது
. சிவபூஜை செய்வேன், சிவபக்தர் கூட்டத்தில் இருப்பேன், குரு சேவையில் இருப்பேன் என்ற நிபந்தனையோடு கௌசிகனை மணந்தாரென சொல்லப்படுகிறது.
கௌசிகன் நிபந்தனைகளில் தவறியதால் அக்கமகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறிச்சென்றார் எனசொல்லப்படுகிறது. அவருக்குத் திருMஅணம் ஆகவில்லை என்றொரு கதையும் சொல்லப்படுகிறது.
அவர் வாழ்ந்த சமூக பின்புலமும் அவரைக் கோபப்படுத்துகிற்து.தன் மீது மோகம் கொண்ட ஒர் மன்னன் தன்னை அழைத்து காம வார்த்தைகள் பேசி கவர நினைக்கிறான். அக்கா அசையாத பொழுது, அடையும் நோக்கத்தில் மன்னன் துணிந்து புடவையை இழுத்து மன்றாடுகிறான்.
நிர்வாணமான அக்கா கர்ஜிக்கிறார் ‘இந்த உடல் தானே நீ விரும்புவது, இதை சிவனுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்ன செய்ய முடியும் உன்னால்?’ என கேள்வி எழுப்பி நிர்வாணக் கோலத்திலேயே கடந்து செல்கிறாள். அதன் பின் அதே கோலத்தோடு ‘ஈசன்’ புகழ் பாடி சித்தர்கள் போல் அலைந்து திரிகிறாள். துகிலுரிய படும் பொழுது அவள் மேனி முழுதும் மயிர் முளைத்து ஈசன் தன் கருணையால் அவளை காத்தான் என்கிறது அக்காவின் வரலாறு.
நிர்வாண கோலத்தில் இருந்த காரணத்தால் சைவமடத்தில் இருந்த
பசவண்ணா, அல்லம்மா ஆகியோர் முதலி அக்காமகாதேவியை
ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.
வெட்கத்தால் உடலை மறைப்போரே!
நூலாடை சரிகையில்
ஆண் பெண் என வேற்றுமைகண்டு நாணுவோரே!
ப்ராணநாயகன் ஈசன்
உலகெங்கும் இடைவெளியின்றி சூழந்திருக்க
நாணத்திற்கிடமுண்டோ?
சென்ன மல்லிகார்ஜுனன் உலகெலாம்
கண்ணாய் பார்த்துக்கொண்டிருக்க
மூடிமறைகின்ற இடமெது சொல்லய்யா!
என்ற அக்காமகாதேவியின் பாடல் அவர்களுக்குப் பதிலாகிறது.
அக்கமகாதேவியின் வசனங்கள் உலகின் நிலையாமையையும் இறைவனின் பெருமையையும் விளக்குகின்றன.
அக்காமகாதேவிக்கு முன் மாயை என்பதைப் பெண்ணாக பார்த்தார்கள்.
பெண் உருவில் பார்த்தார்கள்.
இவரே முதல் முதலாக மாயையைப் பெண்ணாகப் பாராமல் ஆண் உருவில் பார்த்தவர். . முன்னூறுக்கும் மேற்பட்ட வசனங்கள் அளித்துள்ளார். மந்த்ர கோப்யா, யோகாங்க த்ரிவிதி எனும் மேலும் இரு படைப்புகள் அளித்துள்ளார்.
அக்காமகாதேவியின் முக்கியமான சிறப்பம்சமாக நாம் காணவேண்டியது
அவரின் உணர்வு மிக்க கவிதைகளுடன் சேர்ந்து அவர் எழுதியிருக்கும்
யோகாங்க திரிவிதி கள்.
எழுநாகத்தில் உறைந்த நியூரோ விஷம்
வறண்டிருந்த ஆன்ம விருத்தி
விஷத்துளியில் நனைந்த பாலை இதயம்
வழிந்தது போலும்
பொழிந்த ரேத மழையில்
பதுக்கிய அமிர்தம் தெளித்து புருவ
மையத்துளிர்ந்த சமித்துகள்
நாகப்புணர்ச்சியின் பரமானந்தம்
மிதக்கும் கால்கள் செய்யும் பிரபஞ்சப் பயணம்
ஜோதியொளி லிங்கம் சூடிய
வெண்பிறை மல்லிகே ஸ்வர
[விதூஷ்] – மொ.ஆ)
அக்காமகாதேவியின் இக்கவிதை வெளிப்படுத்தும் பொருள் ஞானயோகம்.
ஆண்டாளும் மீராவும் பக்தி யோகத்தின் மூலம் இறைவனுடன் கலந்தவர்கள்.
ஆனால் அக்காமகாதேவி மட்டும் ஆதிசங்கரர், ரமணமகரிஷி போன்றவர்கள்
சென்ற ஞானயோகத்திலும் பயணிக்கிறார். ஞான யோகம் என்பது அறிவின் துணைகொண்டு முக்தி நிலையை அடைந்து ஆனந்தப்பரவசமடைவது.
ENTERS SAMADHI WITH KNOWLEDGE AND COMES OUT WITH TEARS.
பக்தி யோகம் என்பது ஆனந்தப்பரவச நிலையில் முக்தியை அடைந்து
அறிவின் தெளிவைப் பெறுவது.
ENTERS SAMADHI WITH TEARS AND COMES PUT WITH KNOWLEDGE.
பக்தி யோகத்துடன் ஞானயோகமும் அக்காமகாதேவியிடம் இருந்தக் காரணத்தால் தான் அக்கா மகாதேவி தனிமனித ஆன்மவிடுதலையை
மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் ஆன்மவிடுதலைக்காகவும்
குரல் கொடுத்தார். அதற்கு எதிராக இருக்கும் ஜாதி பேதங்களை
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகளை ஒழிப்பதிலும்
கவனம் செலுத்தினார்.
அக்காமகாதேவி 100 வருடங்கள் வாழ்ந்தக் குகை இருக்கிறது. ஆனால்
வெளி உலகுக்குத் தெரிந்து அவர் 1150 முதல் 1175 வரை 25 வருடங்கள்தான்
வாழ்ந்திருக்கிறார்.
பனிபொழியும் காஷ்மீர் மண்ணில் வாழ்ந்த லல்லேஸ்வரி 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் . 1320 – 1392. காஷ்மீரி இலக்கியத்தில் இவர்
எழுதிய வாட்சுன் என்றழைக்கப்படும் உரைமொழி மிகவும் முக்கியமானது.
ஶ்ரீநகரிலிருந்து நாலரை மைல் தூரத்தில் பந்திரேதன் என்ற சிற்றூரில் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் திருமணமான லல்லாவுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை.
24 வயதில் திருமண வாழ்க்கையை உதறிவிட்டு சந்நியாசி ஆகி
வீட்டை விட்டு வெளியில் வருகிறார். லல்லாவும் தன் ஆடைகளைத்
துறந்து நிர்வாணமாகவே வெளியேறுகிறார்.
மக்களுடன் ஒன்றாக கலந்து உரைமொழி நிகழ்த்தும் போது
மாமனார் அவள் கோலம் கண்டு வெட்கி ஆடை அணியும்படி
வற்புறுத்தியதாகவும் அதற்கு அவள், இங்கே ஆண்மகன் யார்
இருக்கிறார்கள்? இருப்பவர்கள் அனைவரும் விலங்குகளே ” என்று
பதில் சொன்னதாகவும் தெரிகிறது. அப்போது கூட்டத்திலிருந்த
மனிதர்கள் அனைவரும் ஆடுகளாக மாமனாரின் கண்களுக்குத் தெரிந்தார்கள்
என்ற கதையும் வாய்மொழியாக சொல்லப்படுகிறது.
நீயே ஆகாயம் நீயே பூமி
நீயே காற்று நீயே பகலும் இரவும்
நீயே நாங்கள் படைக்கும் தானியம்
சந்தணம், தண்ணீர்
நீயே சகலமும்.
இறைவா.. எதைப் படைப்பேன் உனக்கு
எதைக் கொடுப்பேன் உனக்கு?
கடவுளை எனக்குள் கண்டடைந்தேன். என் ஆன்மாவுக்குள் கடவுள்
வாழ்கிறான்” என்ற கருத்தை முன்வைத்த லல்லேஸ்வரி
பக்தி இயக்கத்தின் பெண்கள் வரிசையில் இந்து -இசுலாம் என்ற
இரு மதங்களையும் இணைக்கும் சக்தியாகவும் செயல்பட்டிருக்கிறார்.
இசுலாமிய சூஃபி இயக்கத்தார் லல்லாவைக் கொண்டாடுகிறார்கள்.
என்பது தனிச்சிறப்பு. குர்நானக், கபீர், துக்காராம் என்று பிற்காலத்தில்
புகழ்பெற்ற அனைவருக்கும் இவள் தான் வழிகாட்டி. இறந்தகாலமும்
எதிர்காலமும் அறிந்த நிகழ்காலத்தின் அதிசயமாக வாழ்ந்தப் பெண்
லல்லா என்கிறார்கள். லால் டேட், லல்லா, லால் தீதி, லல்லீஶ்ரீ,
யோகேஸ்வரி என்று இந்துக்கள் இவரைக் கொண்டாட இசுலாமியர்களோ
இவரை லல்லா அரிஃபா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். .
- பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி
- ஒரு பரிணாமம்
- சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 15
- நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்
- சுருதி லயம்
- தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு
- மும்பைக்கு ஓட்டம்
- பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…
- சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்
- கவிதைகள்
- செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- தொடுவானம் 27. கலைந்த கனவுகள்
- நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்
- ஆங்கில Ramayana in Rhymes
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27
- மலேசியன் ஏர்லைன் 370
- பாவண்ணன் கவிதைகள்
- அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்
- A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan
- ஏற்புரை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85
- சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.