முனவைர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத் தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை.
திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்பதாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. இவ்விலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் சமுதாயச் சிந்தனைகளை உள்ளடக்கிய இலக்கியப் பெட்டகங்களாகவும் ஒளிர்கின்றன. இவ்விலக்கியங்கள் இயற்கையாக இறைவனைக் காண்பதோடு மட்டுமல்லாது இறைவனாக இயற்கையைக் காண்கின்றது என்பது நோக்கத்தக்கது. ஒன்பதாம் திருமுறையானது இறைவனைப் பாடுவதோடு மட்டுமல்லாது சூழலியல் சிந்தனைகளையும் வழங்குகின்றது.
ஒன்பதாம் திருமுறை
- திருமாளிகைத்தேவர். 2. சேந்தனார். 3. கருவூர்த்தேவர். 4. பூந்துருத்திநம்பிகாட நம்பி. 5. கண்டராதித்தர். 6. வேணாட்டடிகள். 7. திருவாலியமுதனார். 8. புருடோத்தம நம்பி. 9. சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் திருவிசைப்பாக்களைப் பாடியுள்ளனர். இத்திருவிசைப்பா இருபத்தெட்டுத் திருப்பதிகங்களைக் கொண்டது. சேந்தனார் பல்லாண்டிசையினைப் பாடியுள்ளார். இதனைத் திருப்பல்லாண்டு என்று வழங்குவர். இவற்றைத் திருமுறைகண்டபுராண ஆசிரியர் திருவிசைப்பாமாலை என வழங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வொன்பதாந் திருமுறையில் இருபத்தொன்பது திருப்பதிகங்கள் உள்ளன. இதனை,
“செம்பொன்மணி யம்பலத்து நிருத்த னார்க்குத்
திருவிசைப்பா உரைத்தவர்தந் திருப்பேர் சொல்லிற்
பம்பு புகழ் செறிமாளிகைமெய்த் தேவர்
பரிவுடைய சேந்தனார் கருவூர்த்தேவர்
நம்பிகாடவர் கோன் நற்கண்ட ராதித்தர்
நன்குயர் வேணாட்டடிகள் திருவாலியமுதர்
அம்புவியோர் புகழ் புருடோத்தமர் சேதிராயர்
ஆகஇவர் ஒன்பதின்மர் தாம் முறைகண்டடைவே”
(பன்னிருதிருமுறை வரலாறு, ப., 445)
என்ற பழம்பாடல் நன்கு தெளிவுறுத்துகிறது.
இவ்வொன்பதின்மர்களுள் திருமாளிகைத் தேவர் பாடிய பதிகங்கள் நான்கும், சேந்தனார் பதிகங்கள் நான்கும், கருவூர்த்தேவர் பதிகங்கள் பத்தும், நம்பிகாடநம்பி பாடிெய பதிகங்கள்இரண்டும், கண்டராதித்தர் பதிகம் ஒன்றும், வேணாட்டடிகள் பதிகம் ஒன்றும், திருவாலியமுதனார் பதிகங்கள் நான்கும், புருடோத்தமர் பதிகம் இரண்டும், சேதிராயர் பதிகம் ஒன்றும் ஆக இருபத்தொன்பது பதிகங்கள் இவ்வொன்பதாந் திருமுறையில் சேர்க்கப் பெற்றுள்ளன, இப்பதிகங்களுள்ள பாடல்கள் குறித்து,
“அடைவுறு மாளிகைத்தேவர் நான்கு,சேந்தர்
அன்புறுபல் லாண்டொன்றோடு இசைப்பா மூன்று
திடமுடைய கருவூரர் பத்து, வீறிற்
சிறந்த காடவர்இரண்டு, கண்டர் வேணாடர்
படி புகழொவ் வொன்று, திருவாலி நான்கு,
பன்னு புருடோத்தமனார் இரண்டு, சேதிராயர்
உடைய திருக்கடைக்காப்பு ஒன்றாக இருபத்தொன்பான்
ஓது செய்யுள் முந்நூற்று அறுபதினோடு ஐந்தே”
என்ற பழைய பாடல் திருவிசைப்பாத் திருப்பதிகத் திருப்பல்லாண்டு வகையினைக் குறிப்பிடுதல் நோக்கத்தக்கது.
இவ்வொன்பதாந் திருமுறையில் உள்ள பாடல்கள் 365 எனத் தொகை கூறப்படினும் இப்பொழுதுள்ளவை 301 பாடல்களே ஆகும். எஞ்சிய 64 பாடல்களும் ஏடுகளில் சிதைந்திருத்தல் வேண்டும். அல்லது இப்பாடலிற் குறித்த ‘முந்நூற்றறு பதிநோடைந்தே’ என்ற தொகை ஏடெழுதுவோரால் சிறிது மாறுபட்டிருத்தல் வேண்டும் என்பர். பூந்துருத்தி நம்பிகாடநம்பி படிெய திருவாரூர்த் திருவிசைப்பாப் பாதிகத்தில் இப்பொழுது இரண்டு பாடல்களே காப்படுகின்றன. இதனால் இத்திருமுறையில் சில பாடல்கள் நிதைந்து மறைந்து போயின என்பது புலனாகிறது.
திருவிசைப்பா – திருப்பல்லாண்டு – பெயர்க்காரணம்
தேவராத் திருப்பதிகங்களைப் போன்று இசைநலம் மிக்கனவாக இத்திருப்பதிகங்கள் விளங்குகின்றன. அதனால் இத்திருப்பதிகங்களை திருவிசைப்பா என்று வழங்குகின்றனர். இத்திருமுறையின் இறுதியிலுள்ள இருபத்தொன்பதாவது திருப்பதிகம் எங்கும் நீக்கமறக் கலந்து விளங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்குப் பல்லாண்டிசை கூறி வாழ்த்துவதால் திருப்பல்லாண்டு என்ற சிறப்புப் பெயரைப் பெற்று விளங்குகின்றது.
இத்திருமுறையிலுள்ள முந்நூற்றொரு பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் தில்லைத்தலம் பற்றி யெழுந்தனவாகும். இத்திருப்பதிகங்களைப் பாடிய ஆசிரியப் பெருமக்கள் வாழ்ந்த காலம் முதல் ஆதித்த சோழன் முதல் கங்கை கொண்ட சோழன் இறுதியாக உள்ள சோழமன்னர்களின் ஆட்சிகாலம் என்பது இவற்றின் பொருளமைதியாள் தெள்ளிதின் புலப்படும். பிற்காலச் சோழர்கள் பெறற்கரும் வெற்றியைப் பெற்றுச் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பொற்காலமே இத்ததிருவிசைப்பாத் திருமுறை தோன்றிய காலமாகும். இத்திருமுறையானது தெய்வக் கொள்கையாகிய சிவநெறியினால் தமிழ் மன்னர்கள் பெற்ற வெற்றியையும் அவ்வெற்றியின் விளைவாகத் தமிழகத்தார் பெற்ற அமைதிநிலையினையும் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தோங்கிய சைவ சமயத்தின் உயர்வை நன்கு விளக்கும் திருவருள் இலக்கியமாகத் திகழ்கின்றது.
இசைத்தமிழ்ப் பனுவல்கள்
ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு இரண்டும் இசைத்தமிழாய் உள்ளன. இவ்விசைகள் பிற்காலத்து வந்த வடமொழி இராகங்களாகச் சொல்லப்படாமல், தேவாரங்களைப் போலவே பண்டைத் தமிழ்ப் பண்களாகச் சொல்லப்பட்டிருத்தல் நினைவிற் கொள்ளவேண்டிய ஒன்றாகும். இதனால், ஒன்பதாம் திருமுறைப் பாடல்களுக்குப் பிற்காலத்தில் சிலர் இசை வகுத்து, அவற்றை இசைத் தமிழாகச் செய்தனர் என்பதற்கு இடன் இன்றி, அவை தோன்றிய காலத்தே இசைத்தமிழாகத் தோன்றின என்பது தெளிவாகும்.
இவ்வொன்பதாம் திருமுறை தேவாரத் திருமுறைகள்போல இசைத்தமிழால் அமைந்து, `திரு இசைப்பா’ எனப் பெயர் பெற்றதோடு, பல தலங்களிலும் சென்று பாடப்பட்ட வகையிலும் தேவாரத்தோடு ஒத்துநிற்கின்றது.
திலலைச் சிற்றம்பலம், திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தையாத்தேச்சுரம், திருக்கீழ்க்கோட்டூர், மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கியசுந்தரம், கங்கைகொண்டசோழேச்சுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் எனப் பதினான்கு தலங்களும் திருவிசைப்பா பெற்ற திருத்தலங்களாகும்.
இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதினாறு திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. ஏனையப் பதின்மூன்று திருத்தலங்களும் ஒவ்வொரு திருப்பதிகமே பெற்றுள்ளன. இங்ஙனம் ஒன்பதாந்திருமுறையில் பாதிக்கு மேலுள்ள பதிகங்கள் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றனவாகத் தெரிவதால் இவ்வொன்பதாந்திருமுறையைத் தில்லைத் திருமுறையென்றே கூறுவது மிகவும் பொருத்தமுடையதாகும். இவற்றுள் கோயில் பற்றிய திருவிசைப்பாக்களே பெரும் பாலன. திருப்பல்லாண்டும் கோயில்(தில்லை )பற்றியதே.
திருமாளிகைத் தேவர் பாடிய ‘இணங்கிலாவீசன்’ என்ற பதிகம காந்தாரத்திலும், கருவூர்த்தேவர் பாடிய ‘கணம்விரி’, ‘கலைகள் தம் பொருளும்’ எனவரும் இரண்டு பதிகங்களும் புறநீர்மையிலும், ‘நீரோங்க வளர்கமலம்’ என்பது காந்தாரத்திலும் நம்பிகாடநம்பி பாடிய ‘முத்து வயிரமணி’ என்பது சாளரபாணியிலும், வேணாட்டடடிகள் பாடிய ‘துச்சான’ என்ற முதற்குறிப்புடைய பதிகம் புறநீர்மையிலும், திருவாலியமுதனால் பாடிய’பவளமால் வரை’ என்பது நட்டராகத்திலும், ‘அல்லாய்ப்பகலாய்’ என்பது இந்தளத்திலும் ஏனைய இருபத்தொரு பதிகங்களும் பஞ்சமப் பண்ணிலும் இசையமைக்கப் பெற்றுள்ளன. `சாளரபாணி’ என்பது ஒன்றுமட்டும் இவ்வொன்பதாம் திருமுறையுள் புதியதாகக் காணப்படுகின்றது. இவ்விசையமைப்பினை,
‘ஐந்துடனால் வருமுரைத்த திருக்கடைக் காப்பிற் பண்
அறையின் மாளிகைத் தேவர் நான்கிலொன்று காந்தாரம்
முத்து கருவூரர் பத்தின் இரண்டு புறநீர்மை
மொழிந்திடு காந்தாராமொன்று, காடவர் கோனிரண்டின்,
நந்தலில் சாளரபாணியொன்று, வேணாட்டடிகள்
நவின்றதொன்று புறநீர்மை, திருவாலியமுதர்
பந்தமறச் சொன்னான்கின் ஒன்று நட்டராகம்,
பகர்ந்திடின் ஒன்று இந்தளம் மற்றெவையும் பஞ்சமமே”
(பன்,திரு,வர.,பக்.,446-447)
என்ற பழைய பாடலில் குறிக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.
முன்னைத் திருமுறைகள் போல இவ்வொன்பதாம் திருமுறையும் சிவபிரானது திருமேனிச் சிறப்பையும், அவன் தேவர் பொருட்டும், அடியவர் பொருட்டும் அவ்வப்பொழுது மேற்கொண்ட அருட் செயல்களையும் பல்காலும் எடுத்தோதிப் பரவுதலோடு, தத்துவக் கருத்துக்களை இலைமறை காய்போல, அரிதின் விளங்கும் முறையிலே கொண்டு, முன்னை அருளாசிரியர் பெருமைகளை எடுத்தோதுவது. முருகக் கடவுளைப் பற்றிய ஒரு திருப்பதிகம்(திருவிடைக்கழித் திருப்பதிகம்) இத் திருமுறையிற் காணப்படுவது இதன் தனித்தன்மை எனலாம். இதன் வழி நின்றே பதினொன்றாம் திருமுறையுள் சிவபிரானைப் பற்றிய பிரபந்தங்களோடு, விநாயகர், முருகக்கடவுள் இவர்களைப் பற்றிய பிரபந்தங்களும், சிவன் அடியார்களைப் பற்றிய பிரபந்தங்களும் உடன் தொகுக்கப்பட்டன.
திருவிசைப்பாவில் செந்தமிழ்
உலகமொழிகளில் பக்திமொழி என்று பாராட்டத்தக்க பாடல்கள் அமைந்த மொழி தமிழே என அறிஞர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். அருளிச் செயல்களில் அமைந்துள்ள தமிழ்த்திறம் முதன்மைக் காரணமாக அமைந்தது. இறைவனே தமிழ்ப் பாடலைக் கேட்டு இரங்கி அன்பர் வழிபாட்டினை ஏற்றருள் புரிகிறான் என்ற கருத்தினைத் திருமுறைப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமுறையாசிரியர்கள் இறையருள் பெற்றவர்கள் தமிழின் செம்மை நலமும், இசைப் பண்புகளும் உணர்ந்து தெளிந்தவர்கள். அதனால்தான் அருளாளர்கள் பலரும் தமிழை அடைகொடுத்துப் போற்றி் பாடியுள்ளனர். அத்திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அருளிய பக்தி நலங்கனிந்த பதிகங்களைத் தமிழின் மேல்வரம்பாகக் கொண்ட சுந்தரரைப் போலவே திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவராகிய சேந்தனாரும் கொண்டுள்ளார். பாசுரங்களையும் பழுத்த செந்தமிழ் மலர் என்று தாம் பாடிய திருவீழிமிழலைத் திருவிசைப்பாவில் இவர் போற்றியுள்ளார்.
`பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்தும்’ (4-2)
`ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை’ (5-1)
`அமுதவாலி சொன்ன தமிழ்மாலைப்
பால்நேர் பாடல்பத்தும்’ (7-3)
தமிழைப் போற்றும் பாங்கில் தேவார மரபினைத் திருவிசைப்பா அடியொற்றிச் சென்றுள்ள உண்மையினை மேற்கோள் பகுதிகள் உறுதிப்படுத்துகின்றன.
புது மத்தம் மிலைந்த புனிதன்
அந்திபோலும் உருவம் – பிள்ளை மதிக்கொழுந்தணிந்த பொன்சடை விரித்து, நினைக்க இனிக்கும் திருவடிதூக்கி, எரிதரு காட்டில் பிணத்தின் நிணமுண்டு ஏப்பமிடும் பேய்க்கணங்கள் எழுந்தாட, தூங்கிருள் நடுநல் யாமத்தே அருள்புரி முறுவல் முகிழ் நிலாவெறிப்ப அவன் ஆடுகின்ற ஆட்டத்தாலன்றோ உலகம் இயங்குகின்றது. அரவணிந்த பெருமானின் பெருமையைத்தான் அடியார்கள் எப்படியெல்லாம் பாடியுள்ளனர்!
“நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக் கண்ணுடைய தோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே!” (தி.9 ப.1 பா.6)
என விளிப்பார் திருமாளிகைத்தேவர்.
“அற்புதத் தெய்வமிதனின் மற்றுண்டோ?
அன்பொடு தன்னை யஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ள மள்ளூறும்
தொண்டர்” (தி.9 ப.13 பா.3)
தமக்கு அவன் கற்பகமே என்பார் கருவூர்த்தேவர். அரிவையோர் கூறுகந்தும் ஆசை வாழ்வு நடத்தவில்லை. கங்கையைத் தலையில் தாங்கியிருந்தும் காமக் கடலுள் மூழ்கவில்லை. புவன உயிர்களின் போகத்திற்காகப் பெண்ணோடிணைந்துள்ளான். பெண்ணைத் தன் பாதியில் வைத்திருந்தும் யோகியாக வாழ்பவன் அற்புதச் சித்தன் தானே. `மங்கை யோடிருந்தே யோகு செய்வானை’ என்று பின்னும் `அற்புத’த்திற்கு விளக்கம் தருகிறார் இவர்.
செம்மனத்தார் தொழு சோதி
“செம்மனக் கிழவோர் அன்புதா வென்றுன்
சேவடி பார்த்திருந் தலச
எம்மனங் குடிகொண் டிருப்பதற்கு யானார்
என்னுடைய அடிமைதான் யாதே?” (தி.9 ப.14 பா.6)
என்று கருவூர்த்தேவர் மட்டுமல்லர் – ஆணவ நெறிச்சென்று அடிமுடி தேடிய மாயோனும் மலரவனுமே ஏங்குகிறார்கள்.
“மறைகளும் அமரர்கூட்டமு மாட்டாது
அயன் திருமாலொடு மயங்கி
முறை முறை முறையிட்டோர் வரியாயை” -(தி.9 ப.1 பா.1)
என்கிறார் திருமாளிகைத்தேவர்.
“பண்டலரயன் மாற்கரிது மாயடியார்க்
கெளிய தோர் பவளமால் வரையை” -(தி.9 ப.5 பா.3)
என்பர் சேந்தனார்.
“கேழலும் புள்ளுமாகி நின்றிருவர்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்” -(தி.9 ப.10 பா.5) கருவூர்த்தேவர்.
“பரவிக்கிடந்து அயனும்மாலும் பணிந்தேத்த” -(தி.9 ப.19 பா.9)
பூந்துருத்திநம்பிகாடநம்பி.
“வாளா மாலயன் வீழ்ந்து காண்பரிய மாண்பு”
-(தி.9 ப.21 பா.9) வேணாட்டடிகள்.
“வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
மலரவன் முடிதேடி
யெய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
எழில் மறையவற் றாலே” -(தி.9 ப.23 பா.5) திருவாலியமுதனார்.
“அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரு மறிவுடையாரின் மிக்கா
ரேத்து கின்றா ரின்ன மெங்கள் கூத்தை” -(தி.9 ப.26 பா.10) புருடோத்தமநம்பி.
“புரந்தரன் மாலயன் பூசலிட் டோல மிட்டு
இன்னம் புகலரிதா
யிரந்திரந் தழைப்ப என்னுயிராண்ட கோ”
-(தி.9 ப.1 பா.6) சேந்தனார் பல்லாண்டு.
ஆணவம் அடையாத வெற்றியை இவ்வடியார்கள் அன்பால் அடைந்து இப்படிப் பெருமை பொங்கப் பேசுகிறார்கள்.
சிந்திப்பரிய தெய்வப் பதி
அளக்கலாகா அருளுடையான் எழுந்தருளிய திருத்தலங்கள் பலவானாலும் சிந்திப்பரிய தெய்வப்பதி என்று திருவாலியமுதனார் திருவாக்கால் சிறப்பிக்கப்படும் பதி, சபாபதி ஆடும் சிதம்பரப் பதிதான். அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதாய் கல்லால் நிழலாய் கயிலை மலையாய்க் காண அருள் என்று பல்லா யிரம் பேர் பரவித்தொழும் பெருமையுடையது இப் புலியூர்.
“கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை” (தி.1 ப.80 பா.1)
என்ற ஞானசம்பந்தப் பெருமானின் வாக்கைத் திருவிசைப்பாவும் உறுதிசெய்கிறது.
“ஓமதூமப் படலத்தின்
பெயர்நெடு மாடத் தகிற் புகைப்படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்” (தி.9 ப.2 பா.1)
“ஓமப்புகையும் அகிலின்புகையும் உயர்ந்து முகிறோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலம்”
என்று திருமாளிகைத் தேவரும், திருவாலியமுதனாரும் தில்லைப் பதியின் பெருமையைப் பறைசாற்றுகிறார்கள்.
ஒலியாலும் ஓங்கியது
காஞ்சிபுரமும் கடலும் இணைத்தெண்ணும் நிலைக்கு வந்தால் கச்சியே பெருமையில் விஞ்சும் என்றொரு பாடல் உண்டு.
“மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்முள்
ஒலியும் பெருமையு மொக்கும் – மலிதேரான்
கச்சிபடுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும்.
தண்டியலங்காரம் மேற்கோள் கூறும் புகழ் இதோ தில்லைக்கும் உண்டு என்கிறது திருமுறை.
“தேர்மலி விழவிற்குழ லொலி தெருவிற்
கூத் தொலியேத் தொலி யோத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரும் பெரும்பற்றப் புலியூர்” (தி.9 ப.2 பா.4)
“தேரார் விழ வோவாத் தில்லைச் சிற்றம்பலவர்” (தி.9 ப.27 பா.4)
சிற்றம்பலத்துள் நட்டம் ஆடும் நாயகன் அந்தணர்களால் தொழப்படும் அந்தண்மையாளன்.
“பூவேந்தி மூவாயிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற”
(தி.9 ப.3 பா.8)
கோவாக – ஞானக் கொழுந்தாக – குணக் குன்றாக, சேவேந்து கொடியானைத் தரிசிக்கின்றோம். திருநாவுக்கரசர் ஓர் திருக்குறிப்பை உணர்ந்தார். `அடியவற்காகக் கன்றிய காலனைக் காலால் கடிந் தவனைச் சென்று தொழுது ஒன்றியிருந்து நினைமின்கள், அச்சிற்றம்பலத்து நட்டம் என்றுவந்தாய் என்ற திருக்குறிப்பை யருளும்’ (தி.4 ப.81 பா.2) என்று அனுபவப்பொருள் பேசுவார் அப்பர். திருமாளிகைத்தேவர் `கோயில்’-பற்றிப்பாடிய `இணங்கிலா வீசன்’ என்னும் பதிகத்துள் இத் திருக்குறிப்பைப் புலப்படுத்துவார்.
“உருக்கியென் னுள்ளத்துள்ளே யூறலந் தேறன்மாறாத்
திருக்குறிப் பருளும் தில்லைச் செல்வன்” (தி.9 ப.4 பா.7)
என்பது அப்பதிகமாகும்.
பாதகத்துக்குப் பரிசு வைத்தான்
நற்செயல்கள்தாம் உலகில் பாராட்டுப்பெறும்; இஃது இயற்கை. பித்தன் என்று பெயர்படைத்த பெருமான் பொல்லாங் கிற்கும் பரிசு தருகிறானே! இதனை என்னென்று சொல்வது? அன்னையையும் தந்தையையும் முன்னறி தெய்வமாக வணங்குவது போக – சண்டேசுரர் தந்தையின் காலைத் தடிந்து ஈறிலாப் பதம் பெற்றார்; பாதகத்திற்கு இவனையன்றிப் பரிசு தருவோர் யார்?
“தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்” (தி.8 ப.15 பா.7)
தண்டியலங்காரத்தில் இச் செயல்,
“தலையிழந்தா னெவ்வுயிரும் தந்தான் பிதாவைக்
கொலைபுரிந்தான் குற்றங் கடிந்தான் – உலகில்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேற் றப்பாம்
வினையும் விபரீத மாம்” -தண்டியலங்கார மேற்கோள்
என்று குறிக்கப்படுகிறது. சேந்தனாரோ,
“தாதையைத் தாளற வீசிய சண்டிக்கவ்
அண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும்
போனகமும் அருளிச்
சோதிமணி முடித்தாமமு நாமமுந்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. (தி.9 ப.29 பா.10)
என்று அல்லாண்ட கண்டனுக்குப் பல்லாண்டு பாடுகிறார்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையாகி இன்மையாகி இலங்கும் இறைவனை,
“அம்பரா! அனலா! அனிலமே! புவிநீ
அம்புவே! யிந்துவே! யிரவி
உம்பரால் ஒன்றும் அறியொணா அணுவாய்
ஒழிவற நிறைந்த வொண் சுடரே!” (தி.9 ப.11 பா.9)
எனத் திருமுறையுள் பாராட்டுவார் கருவூர்த் தேவர்.
ஈறிலான் எங்கள் இறை
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடிநா ராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறிலாதவ னீச னொருவனே. (தி.5 ப.100 பா.13)
செத்துப் பிறக்கின்ற தெய்வங்களின் தலைவனாகச் செம் மாந்து நிற்பவன் தான் செஞ்சடை விரித்த செம்மல்.
சேவிக்க வந்த அயனும் இந்திரனும் செங்கண்மாலும் எங்கும் நெருங்கிக் குழாங் குழாமாய் நின்று கூத்தாடும் தில்லையின் பெருமையைச் சேந்தனார் பல்லாண்டில் பகருகிறார். ஆதியும் அந்தமுமில்லாச் சோதி எனச் சொல்லாமல் சொல்கிறார். என்னை இறைவன் ஆட்கொண்ட விதம் எப்படித் தெரியுமா! அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்தினில் கோயில் கொண்டான். அந்தத் `தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனினம் பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கொடியேன் என்று கூடுவது’ (தி.9 ப.20 பா.4) என்று ஏங்கும் கண்டராதித்தரின் எண்ணங்கள்.
“இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று நீ ஆண்டாய்”(தி.8 ப.20 பா.4)
என்றும்,
“தேனைப் பாலைக் கன்னலின்
தெளியை யொளியைத் தெளிந்தார்தம்
ஊனையுருக்கு முடையானை
உம்பரானை வம்பனேன்
நானின் அடியேன் நீயென்னை
யாண்டா யென்றால் அதுசிரிப்பதற்கிடமாகுமே” (தி.8 ப.திருச்சதகம் பா.62)
என்னும் உள்ளொளி, வாக்கில் தெரிய வார்த்தை பேசும் வாதவூரரை யன்றோ பிரதி பலிக்கின்றன.
கருதுவார் கருதும் உருவமுடையான்
சுருதிவானவனாக – திருநெடுமாலாக – சுந்தர விசும்பின் இந்திரனாக, பரிதிவானவனாக, படர்சடை முக்கட் பகவனாக எருது வாகனனாக, எயில்கள் மூன்றெரித்த ஏறு சேவகனாகப் பின்னும் கருதுவார் கருதும் உருவங்கொள்வான் கங்கைகொண்ட சோளேச்சரத் தான் என்கிறது திருவிசைப்பா. இக் கருத்து கம்பரின் பாடலில் எழிலுருக் கொள்ளுகிறது.
ஒன்றே என்னில் ஒன்றே யாம்
பலவென் றுரைக்கிற் பலவே யாம்
அன்றே என்னில் அன்றே யாம்
ஆம்என் றுரைக்கில் ஆமே யாம்
உண்டே என்னில் உண்டே யாம்
இலதென் றுரைக்கில் இலதே யாம்
நன்றே நம்பி குடிவாழ்க் கை
நமக்கிங் கென்னோ பிழைப்பம் மா! -கம்பராமா. யுத்த. கடவுள் வாழ்.
உலகில் பல நோய்களால் மனிதர்களாகிய நாம் துன்புறுகிறோம். அதில் ஒரு நோய் காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மல ரும் இந்நோய்க்கு மருந்து எதிர்பாலரே. பிணிக்கு மருந்து பிற ஆகலாம்.
அணியிழை தன்னோய்க்குத் தானேதான் மருந்து என்பார் வள்ளுவர். இந்நோய்க்கு மருந்து தேடி மாயையில் சுழலும் உலகமே! பிறவி நோய்க்கு நீ என்ன மருந்து கண்டாய்! சிறிதே எண்ணிப்பார்! வைதாலும் வாழ்த்தினாலும் ஒன்றே என்று மடிதற்கு முந்துகின்ற பரம் பொருளின் அருளைப் பெற என்ன வழி கண்டாய்! தண்ணிலவு முடித்த தூயவன் எத்துணை எளிவந்த கருணையாளனாக விளங்குகிறான்?
“தத்தையங் கனையார் தங்கண் மேல்வைத்த
தயாவை நூறாயிரங் கூறிட்டு
அத்திலங்கொரு கூறுன்கண் வைத்தவருக்கு
அமருல களிக்கு நின் பெருமை
பித்தனென் றொருகாற் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தல மடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே. (தி.9 ப.13 பா.8)
இறைவனது அருட்பார்வை பட்டவுடன் பாவம் பறைந்தோடும்.அது `பாலொடு கலந்த நீர் தழல் பட்டவுடன் மறைந்துவிடுவது போல’ என்ற உவமை எண்ணுதற்கு இனியது.
“பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போல்
பாவமுன் பறைந்து பாலனைய
புண்ணியம் பின்சென்று” -(தி.9 ப.29 பா.10) கருவூர்த்தேவர்.
நின்றதென்பார்.
பாதாதிகேசமாகப் பார்க்குமழகு
திருவாலியமுதனார் நெஞ்சங்கொண்ட நம்பியைப் பாதாதி கேசமாகப் பார்த்து பாடும் அழகே அழகு. `தில்லையம்பலத்தானின் செய்யபாதமும், சிலம்பு கிண்கிணியும், மணிபுரைதரு திரண்ட வான்குறங்கும், தாழ்ந்த கச்சும், திரு வயிறும், வயிற்றினு ளுந்தி வான் சுழியும், திகழுதர பந்தமும், தடக்கை நான்கும் தோள்களும், தடமார்பின் பூண்களும், விடங்கொள் கண்டமும், செய்ய வாயின் முறுவலும், செவியி லிலங்கு தோடும், நெற்றி நாட்டத்தொடு பொலியும் பிறை கொள் சென்னியும், மற்றை நாட்ட மிரண்டொடு மலரும் திருமுகமும் என்னெஞ்சம் பிரியாது நின்றனவே’ என்று சிந்திப்பரிய சிவனை வந்திக்கிறார்.
`பேயொடாடும் இந்தப் பெருந்தகை புலித்தோல் பூண்டு, நல்லரவே பூணாகக் கொண்டு – விடையில் ஊர்ந்து – கொடுமலையில் வாழ்ந்தாலும் – என் நெஞ்சம் அவனையே நினைக்கின்றதே; இது என்ன விந்தை’ என்று ஒரு தலைவி ஏக்கப் பெருமூச்சு விடுகிறாள்.
“உடையும்பாய் புலித்தோலு நல்லரவமும்
உண்பதும் பலி தேர்ந்து
விடையதூர்வது மேவிடம் கொடுவரை
யாகிலு மென்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றி மற்றாரையு
முள்ளுவ தறியேனே” (தி.9 ப.23 பா.7)
திருநுதல்விழியும் – பவளவாயிதழும் – திலகமு முடையவன் சடை மேல் புரிதரு மலரின் தாது நின்றூதப் போய்வரும் தும்பிகளே! நீங்கள் கீழ்க்கோட்டூர் மணியம்பலப் பெருமானின் திருமார்பிடை மலர்ந்த பூவில் தேன்நக்கி வருவீரானால் – வரும்போது அவனுடைய திருவடி களைத் தழுவிக் கொண்டிருக்கின்ற என் மனத்தையும் கொண்டு வாருங்கள் என்கிறாள் அன்புவயப்பட்ட ஓர் அணங்கு. (தி.9 ப.10 பா.3) மேலும்,
“மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் வீங்கு வெண்பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டு கொண்டேனே.” (தி.9 ப.5 பா.4)
என என்னுள்ளே புகுந்தவனை இனிப் போக விடுவேனோ! என் நெஞ்சக் கோயிலின் கதவைத் திறந்தால் தானே அவன் புறப்படுவான். அவனைச் சிக்கெனப்பிடித்து சிறைப்படுத்திவிட்டேன் என்று ஒரு பேதை மங்கை பேசுகிறாள்.
நாட்டின் வளம்
ஒரு நாடானது எல்லா வளமும் உடையதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது அனைவராலும் நாடப்படும் நாடாக இருக்கும். வள்ளுவரும்,
“நாடல்ல நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு”
என்று நாட்டின் வளத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நீரிடை சங்கமும், நிழலிடை மேதியும், போரிடை அன்னமும், பொழிலிடைத் தோகையும், தூரிடை ஆமையும், துறையிடை இப்பியும், தாரிடை வண்டும், தாமரையில் செய்யவளும் உறங்குகிறாள் என்று நாட்டு வளங் காட்டுவார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
நன்றாக மேய்ந்த மேதி நிழலில் உறங்குவதனால் நீரில் சங்கமும், போரில் அன்னமும் உறங்க முடிந்தது, தாமரையை விட்டு வண்டு தோளில் கிடக்கும் தாரில் உறங்குவதனால் தாமரையில் செய்யவள் துயில முடிந்தது. இப்படி ஒன்றுள் ஒன்றாக – அனைத்துமே நாட்டின் செல்வக் கொழிப்பைக் காட்டுவதாகக் கூறுவார். இதனைத் திருவிசைப்பாவானது,
“கங்கை நீ ரரிசிற் கரை யிருமருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கணேர் தீண்ட நீண்ட மாளிகைசூழ்
மாட நீடுயர் திருவீழி” (தி.9 ப.5 பா.7)
எனக் கழனியும் பொழிலும் தழுவிய எழிலை நாட்டு வளமாகவும் திங்களைத் தீண்டும்படி உயர்ந்த மாட மாளிகைகளை நகர் வளமாகவும் காட்டுகின்றது. இயற்கை வளங்கள் மக்களால் சுரண்டப்படாத நிலையில் அந்நாடு மென்மேலும் வளமுடையதாக இருக்கும் என்ற உயர்சிந்தனையையும் இப்பாடல் நமக்குத் தருகின்றது.
அச்சமில்லா அறவாழ்க்கை
வளமிருந்தாலும் பலவகையிலும் அச்சம் நிறைந்த நாட்டில் அமைதியான வாழ்க்கை இராது. அமைதியின்றேல் அந்நாட்டு மக்கள் துன்புறுவர். யாரால் அச்சம் ஏற்படும்?அணங்காலும், விலங்காலும், கள்வராலும், மன்னனாலும் அச்சம் வரும் என்பார் தொல்காப்பியர். இதனைத்
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.” – தொல் – மெய்ப்பாட்டியல் நூற்பா 8.
என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடுகிறார்.
அறந்தழைக்கும் நாட்டில் வேலொடு நின்றான் இடுவென்றது போலக் கோலொடு நின்றான் இரக்கமாட்டான். அங்கே பொய்யும் திருட்டும் புரட்டுமிருக்கா. ஆனால், கருவூர்த் தேவர் கீழ்க்கோட்டூரிலே அச்சம் குடி கொண்டுள்ள பான்மையை,
“கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவு கீழ்க் கோட்டூர். ” (தி.9 ப.10 பா.9)
என்று பாடுகிறார். இங்கே நிற்பது கொக்கல்லவோ என்று தாழையின் நிழலைக் கண்டு பயந்த மீனினங்கள் பாய்ந்தோடினவாம். இத்தகைய அச்சத்தைத் தவிர வேறு அச்சம் என்பது நாட்டில் இல்லை என்று குறிப்பிடுகின்றார். நீர்நிலைகள் மாசுறாது தெளிவானதாக இருந்தன என்பது இக்காட்சி நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. இதே காட்சியினை,
“வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சி முதுமந்தி – பழகி
எழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.(தி.11 ப.11 பா.70)
என்று பதினொன்றாம் திருமுறை காட்டும்.
இதேபோன்று கொக்கின் நிழல்கண்டு நடுங்கும் மீன் கூட்டக் காட்சியானது,
“ஏலும் நீர் நிழல் இடையிடை எறித்தலின் படிகம்
போலும் வார்புனல் புகுந்துளவாம் எனப் பொல்கி
ஆலும் மீன் கணம் அஞ்சின அலமர வஞ்சிக்
கூல மா மரத்து இருஞ்சிறை புலர்த்துவ குண்டம்”
– கம்ப. கிட்கிந்தா. பம்பைப் படலம் -19
எனக் கிட்கிந்தா காண்டத்தில் பம்பைக் கரையில் நடப்பதாகக் கம்பர் காட்டுகிறார்.
படிகம் போன்ற நீரில் கரையில் வஞ்சிமரத்திலிருந்து இறகு களைப் புலர்த்திக் கொண்டிருக்கிற கொக்குகளின் நிழல் தெரிய அவற்றை – உண்மையென்று நம்பி அஞ்சிப் பதுங்கின மீன்கள். நீர் மாசடையவில்லை. தூய்மையாக இருந்தது. இயற்கையை எந்தவிதத்திலும் அந்தக்காலத்தில் வாழ்ந்த மக்கள் மாசுறச் செய்யவில்லை. நீர்நிலைகளை மக்கள் மாசடையாமல் பாதுகாத்தனர். அதேபோன்று இன்றும் நீர்நிலைகளை மக்கள் மாசுறாது பாதுகாத்தல் வேண்டும் என்ற சுற்றுச்சூழல் சிந்தனையையும் இவ்வொன்பதாம் திருமுறையானது நமக்கு வழங்குகின்றது.
தொண்டர்களைப் போற்றும் தொன்மை நெறி
கடியார் கணம்புல்லர் கண்ணப்பரென்று வரும் அடியார்களை அமரருலகம் ஆளச் செய்தாய் (பா.186) அல்லியம் பழனத் தாமூர் நாவுக் கரசைச் செல்ல நெறி வகுத்த சேவகன் (பா.187) எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் (பா.188) களையாவுடலோடு சேரமானாரூரன், விளையா மதமாறா வெள்ளானைமேல் கொள்ள உதவினாய் (பா.189). சிலந்தியை அரசாள்க என்று அருள் செய்தவனே(பா.228) உலந்த மார்க்கண்டேயருக்காகக் காலனை யுயிர்செக உதைத்தவனே (பா.228) என்றெல்லாம் அடியார்களைப் போற்றும் திறத்தைத் திருவிசைப்பாவில் காண்கிறோம்.
பக்தியமுதை இலக்கியச் சுவையோடு தரும் அரிய திருமுறையாக இவ்வொன்பதாம் திருமுறை விளங்குகின்றது. இயற்கையை அழிக்காது இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மனிதகுலம் வாழ்தல் வேண்டும். அப்போதுததான் இச்சமுதாயம் உயிர்ப்போடு இன்புற்று வாழும். சுற்றுச்சூழல் பாதிப்பிற்குள்ளாகாது ஒவ்வொருவரும் வாழ்தல் வேண்டும் என்ற காலத்திற்கேற்ற சமுதாயச் சிந்தனையை இவ்வொன்பதாம் திருமுறை வழங்க இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
- தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மாநாடு
- மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014
- தொடுவானம் 28. திருப்புமுனை
- வாய்ப்பினால் ஆனது
- தினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 87
- வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)
- அணுகுண்டு வீச்சு எனும் காலத்தின் கட்டாயம்
- “ஒன்பதாம்திருமுறைகாட்டும்சமுதாயச்சிந்தனைகள்”
- நாளையும் புதிதாய் பிறப்போம் : கரையே( ற்)றுங் கருத்துக்கள் : பேரா. கி. நாச்சிமுத்து
- பொருள் = குழந்தைகள் ..?
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்பு
- பாவண்ணன் கவிதைகள்
- தடங்கள்
- ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்
- திரும்பிவந்தவள்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 16
- தொடுவானம் 28. திருப்புமுனை
- தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?
- ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 15
- மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு
- ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4