தொடுவானம் 28. திருப்புமுனை

This entry is part 3 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

 

          விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி தரையிறங்க ஆயத்தமானது. உயரம் குறைவது தெரிந்தது. அப்போது இந்திய நேரப்படி காலை ஒன்று முப்பது.
           சென்னை நகரத்தை வானிலிருந்து பார்த்து அதிர்ச்சியுற்றேன்!
           சிங்கப்பூரை வானிலிருந்து இரவில் பார்த்த போது அது தகதகவென்று கண்களைப் பறிக்கும தங்கத் தகடுபோல் ஜொலித்தது. ஆனால் சென்னையோ ஒளியிழந்து மஞ்சள் நிறத்தில் மங்கிய நிலையில் தெரிந்தது. இந்தியாவின் ஏழ்மை நிலையை வானிலிருந்தே கண்டு மனம் வெதும்பினேன்.
          இனி எத்தனை வருடங்கள் இங்கே என்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடரப் போகிறதோ என்ற கவலை நெஞ்சை அடைத்தது.
          விமானம் தரை இறங்கியபோதும் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடு  தளமும் அப்படிதான் இருந்தது. மாட்டு வண்டி சக்கரம் போன்றுதான் தடதடவென்று ஓடி நின்றது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான்  தரை இறங்கினோம்.
          அப்போதைய மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சீர்கேடுகள் கண்டு வியந்தேன்!
          உள்ளே நுழைந்ததும் மக்கிப் போன தரை விரிப்பின் ( கார்ப்பெட் ) நாற்றம் மூக்கைத் துளைத்தது! பயணிகளில் பலர் புகைக்கத் தொடங்கினர்.
புகைத்து முடித்த சிகரெட் துண்டை தரையில் போட்டு மிதித்தனர்!
          சுங்கத் துறை அதிகாரிகள் பிரயாணிகளின் பெட்டிகளை தலைகீழாக திருப்பி அதனுள் இருந்த சாமான்களை அப்படியே கொட்டி ஒவ்வொன்றாக பரிசோதனை செய்தனர்! அவற்றில் பிடித்தமான ஓரிரு பொருட்களை பிரயாணிகளிடம் கேட்காமலேயே எடுத்துக் கொண்டனர்.
          அண்ணனின் திருமணப் படத்தை பெரிய அளவில் வண்ணத்தில் வரைந்து தங்க நிறத்தில் சட்டமிட்டு தந்திருந்தார் அப்பா. அதை நான் பத்திரமாக நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றேன். அதைப் பார்த்த சுங்கத்துறையினருக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது. ( பிரயாணப் பெட்டிகளிலும், தொப்பியிலும், காலனிகளிலும் தங்கம் கடத்திய காலம் அது. )
          அதனுள் தங்கம் இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம். அதை வாங்கி இப்படியும் அப்படியுமாகத் தட்டிப் பார்த்தனர். அப்போதெல்லாம் ” ஸ்கேன் ” வசதி கிடையாது. இரண்டு மூன்று அதிகாரிகளிடம் அது கை மாறியது.
          நான் மேல் படிப்பிற்காக தமிழகம் வந்துள்ள மாணவன் என்று ஆங்கிலத்தில் கூறிய பிறகுதான் என்னை  விட்டனர். ( அப்போதும் இப்போதும் இனி எப்போதும் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசினால் தனி மதிப்புதான்! )
        அண்ணன் எப்படி இருப்பார் என்பதை அந்த படத்தின் மூலமாகத்தான் தெரிந்து வைத்திருந்தேன். அவரை நான் சிறு வயதில் பார்த்ததுதான். சரியாக பத்து வருடங்கள் ஆகிவிட்டன. எங்கள் இருவருக்கும் ஏழு வயது வித்தியாசம். அவருக்கு வயது இருபத்து மூன்று. எனக்கு பதினாறு. அப்பாவை எப்படி நான் ” அப்பா ” என்று அழைத்ததில்லையோ அது போன்றே அண்ணனையும் நான் ” அண்ணன் ” என்று அழைத்ததில்லை. காரணம் சிறு வயதில் நாங்கள் ஒன்றாக வளர்ந்ததில்லை.
          அண்ணி வந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு பிரசவம் ஆகி சில மாதங்களே ஆகியிருந்தன. குறை மாதத்தில் பிறந்த குழந்தை சில்வியாவை பராமரிக்க வேண்டியிருந்தது. திருச்சியில் அவருடைய தாய் வீட்டில் தங்கியுள்ளார்.
          வரவேற்புக் கூடத்தில் பெரும் கூட்டம் இருந்தது. அவர்களில் அண்ணன் ஆர்வத்துடன் எட்டி எட்டிப்  பார்ப்பது தெரிந்தது. அவருக்கு நிச்சயமாக என்னை அடையாளம்  தெரிய வாய்ப்பில்லை. என்னை அடையாளம் தெரியாமல் தேடியது தெரிந்தது. ஏழு வயதில் பார்த்த தம்பியை பதினாறு வயதில் மீண்டும் பார்த்தால் அடையாளம் தெரியுமா? நான் அவரைப் பார்த்து கையசைத்தேன். அவர் சிரித்து கையசைத்தார்.
          நான்  பிரயாணப் பெட்டியைத் தள்ளிக்கொண்டு அவரிடம் சென்று கைக் குலுக்கினேன். அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்து மேலும் கீழுமாகப் பார்த்தார். அவருடைய முகத்தில் பெரும் பூரிப்பு!
          அவரைக் கண்டதில் எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதைவிட கூச்சமே மேலிட்டது. இவர்தான் என் உடன் பிறந்த ஒரே அண்ணன்!
          ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலையால் சிறு வயதில் ஒன்றாக வளர முடியாத பரிதாபம்! இனிமேல் நாங்கள் அண்ணன் தம்பியாக எவ்வளவு நெருக்கமாகப் பழகப் போகிறோம் என்பது தெரியவில்லை.
          அண்ணனுடன் அவருடைய நண்பர் ஜோனாஸ் வந்திருந்தார். அவர் ஜோகூரைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை திரு. ஐசெக் ஜோகூர் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக பணியாற்றி வந்தார். அவர் அண்ணனுடன் மெஸ்டன் கல்லூரியில் பி. டி. பட்டப் படிப்பில் உள்ளார்.
         வாடகை ஊர்தியில் சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்.
         மெட்ராஸ் நகரத்து வீதிகளைப் பார்த்து மனம் நொந்துபோனேன் – காண சகிக்க முடியாத பரிதாப நிலையில் இருந்தன. வீதிகள் குறுகலாகவும், அவற்றின் இரு புறமும்  ,  குப்பை மேடுகளும் , சாக்கடைகளும் , குடிசைகளும் காணப்பட்டன! பலர் வீதியோரங்களில் படுத்தி உறங்கினர். சில குடும்பங்கள் வீதியின்  வராந்தாவிலேயே பிள்ளைகளுடன் படுத்திருந்தனர்!
          வீதி விளக்குகள் மங்கலான மஞ்சள் ஒளி  தந்தன. செல்லும் வழியில் அழகூட்டும் செடி கொடிகள் இல்லை.விடியற்காலை மூன்று  மணி போல் அன்றைய மெட்ராஸ் வீதிகளில் நான் கண்ட சோகக் காட்சிகள் இவை.
          சுமார் அரை மணி நேரம் கழிந்து அந்த வாகனம் ஒரு வளாகத்தினுள் நுழைந்தது. அதுதான் மெஸ்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி. அங்குதான் அண்ணன் பி, டி. பட்டம் பயில்கிறார். அவர் முன்பே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பி. ஏ. பட்டம் பெற்றவர்.இந்தப் பட்டம் பெற்றபின் பட்டதாரி ஆசிரியராக  உயர்நிலைப் பள்ளியில் பணி புரிந்து தலைமை ஆசிரியர் ஆகலாம்.
          அண்ணன் தங்கியிருந்த விடுதி அறையில் கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கினேன்.
          காலையில் உணவு விடுதியில் என்னை அவருடன் படிக்கும் நண்பர்களிடம், ” இவன் என் தம்பி. சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வந்தான். ” என்று பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் சிலர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினார்.
          ” என்ன படித்துள்ளீர்கள்? ” சிலர் கேட்டனர்.
         ” சீனியர் கேம்பிரிஜ். ”  என்றேன்.
          ” என்ன படிக்க வந்துள்ளீர்கள்? ” எனனர்.
           ” பிரி யுனிவர்சிட்டி ” என்றேன்.
          ” எந்தக் கல்லூரி? “
          ” மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ். ” என்று பதில் கூறினார் அண்ணன்.
          காலைச் சிற்றுண்டியாக தோசை, வடை,  சாம்பார், சட்டினி கிடைத்தது. மிகவும் சுவையாக இருந்தால் விரும்பி சாப்பிட்டேன். பசும்பாலில் கலந்த தேநீர் கூட தனிச்சுவையுடன் இருந்தது!
          வாடகை ஊர்தி மூலம் எழும்பூர் மின்சார இரயில் நிலையம் அடைந்தோம். தாம்பரம் வரை பயணச் சீட்டு எடுத்தார் அண்ணன். அங்கு தான் சென்னை .கிறிஸ்துவக் கல்லூரி உள்ளது. அங்குதான் என் அத்தை வீடும் இருந்தது.
           அத்தை அப்பாவின் ஒரே தங்கை. பெயர் ரூத் குணமணி. தரங்கம்பாடியில் ஆசிரியை பயிற்சி பெற்றவர்., தாம்பரத்தில் காண்வெண்ட் பள்ளியில் பணி  புரிகிறார். பால் மாமா  கிறிஸ்தவக் கல்லூரியில் இயற்பியல் துறையில் ஆய்வக உதவியாளராகப் பணி புரிபவர்.
          மின்சார இரயில் பயணம் புதுமையாக இருந்தது. வெகு விரைவாக ஒவ்வொரு நிலையத்திலும் நின்று சுமார் முக்கால் மணி நேரத்தில் தாம்பரம் சென்றடைந்தது. இருக்கைகள் நிறைந்து அநேகர் நின்று கொண்டு பயணம் செய்தனர். நாங்களும் நின்று கொண்டுதான் பயணம் செய்தோம்.
          இரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் வழியில் பயணச் சீட்டுகளை வசூலிக்க ஒருவர் நின்றார். பலர் பயணச் சீட்டை காட்டாமலேயே வேகமாக வெளியேறினர். ( அவர்களின் அவசாம் அப்படி. பயணச் சீட்டு இல்லாமலும் பலர் அவ்வாறு செய்வதுண்டு ) அங்கு மேம்பாலம் வழியாகத்தான் பிரதான வீதிக்குச் செல்ல முடியும். அந்த மேம்பாலத்தில் வரிசையாக  பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களில் பலர்  தொழு நோயாளிகள்! சில பெண் கைக் குழந்தையுடன் இருந்து பிச்சைக்  கேட்டனர். இத்தகைய காட்சியை நான் சிங்கப்பூரில் கண்டதில்லை!  தமிழ் மக்கள் நிலையா இப்படி என்று எண்ணிக்கொண்டேன்.
          மீண்டும் வாடகை வண்டி மூலம் அத்தை வீடு சென்றோம அது சென்னை கிறித்துவக் கல்லூரியின் ஊழியர்களின் குடியிருப்பு. வரிசை வரிசையான கல் கட்டிடங்கள்.முன்புறம் திறந்த மைதானமும், பின்புறம் காற்பந்து திடலும் இருந்தது. வீட்டினுள் ஒரு கூடம், ஒரு படுக்கை அறை, சமையல் அறை, தோட்டத்தில் குளியல் கழிப்பறை என அமைந்திருந்தன.
          எனக்காக அத்தை வீட்டில் அனைவரும் காத்திருந்தனர். அனைவருக்கும் என்னைக் கண்டதில் அளவற்ற மகிழ்ச்சி.அத்தைக்கு நான் அண்ணன் மகன். அவரின் பிள்ளைகளுக்கு நான் மாமன் மகன – அத்தான்.
          சிங்கப்பூரில் நான் கண்டிராத பாச மழையில் நனைந்தேன்! அத்தையின் பிள்ளைகள் ஐவரும் என்னை அத்தான் அத்தான் என்று அழைத்து என்மேல் உயிரை விட்டனர்.
          பாஸ்கரன், ஸ்டீபன், வில்சன், அகஸ்டீன், எனும் நான்கு பையன்கள்.மூத்தவள் பெண்.என் அத்தை மகளின் பெயர் நேசமணி. வயதுக்கு வந்தவள்!
        ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014வாய்ப்பினால் ஆனது
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் தலை கீழான மாற்றம் வந்திருந்தாலும்,
    இன்னும் மேம்பாலத்தில் பிச்சைக்காரர்களும், குறுகலான சந்தும், குப்பைக்கூளமும் ,
    கூவத்தின் நாற்றமும், வாகன நெரிசலும் மாறாமல் அதிகமாகி இருக்கிறது.
    பல இடங்களில் பிரம்மாண்டங்கள் ஆச்சரியப் படவைக்கிறது.
    இந்தப் பகுதி சரியான இடத்தில் திரும்பியிருக்கிறது.

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    ஷாலி says:

    டாக்டர் ஸார்! //மூத்தவள் பெண்.என் அத்தை மகளின் பெயர் நேசமணி. வயதுக்கு வந்தவள்!//
    என்று எழுதி சஸ்பென்ஸ் கொக்கியை போட்டு விட்டீர்கள். ம்…ம்..இந்த ‘நேச”ம் எவ்வளவு தூரத்திற்கு போகுதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.இங்கேயும் நாடகம் உண்டா?

  3. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர், அப்போது நான் கண்ட விமான நிலையத்தை அப்படியே எழுதினேன். இப்போது சென்னை விமான நிலையம் பிரம்மாண்டமான வகையில் அமைத்துள்ளது. சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. நீங்கள் கூறியுள்ளதுபோல் மற்ற பகுதிகளில் உள்ள சுற்றுச் சூழல் சுகாதார சீர்கேடுகள் இன்னும் குறைந்தபாடில்லைதான். இதற்கு மக்கள் மனதில் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இன்றியமையாதது. ஆனால் வீதிகளில் நிகழும் குழப்பமான வாகன நெரிசல் குறையுமா என்பது பெரும் கேள்விக்குறியே. அதுபோன்றுதான் வீதிகளிலும் மேம்பாலங்களிலும் பெருகிவரும் பிச்சைக்காரர்களின் அவலமும். தொடுவானம் தொடர்ந்து படித்து கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றி…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் ஷாலி அவர்களே, அத்தை மகள் வயதுக்கு வந்தவள் என்று எழுதியதை யாரும் கவனித்து பெரிது படுத்த மாட்டார்கள் என்றுதான் எண்ணினேன். ஆனால் அதுவும் உங்களின் கண்களுக்குத் தப்பவில்லை. சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள். ஆமாம். அதிலும் நாடகம் உள்ளதுதான். சிங்கப்பூர் அத்தான் என்றால் சும்மாவா? மனதில் ஆசை இருக்காதா? அதெல்லாம் பின்பு வரும். தொடுவானம் படித்து இரசிப்பது தெரிகிறது. நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *