வாழ்க்கை ஒரு வானவில் – 18

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

 

மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பிய ராமரத்தினம், “இன்னைக்கு ரெண்டு மணி நேரம் லேட்டாஆஃபீசுக்குக் கிளம்புவேன்மா….” என்று பருவதத்திடம் தெரிவித்தான்.

அவனிடம்காப்பியைக் கொடுத்துவிட்டு, “ரமணி டூர்லேருந்து வந்துட்டானா?” என்று பருவதம்விசாரித்தாள்.

“இன்னும்இல்லேம்மா. இன்னைக்கு விசாரிக்கிறேன் – எப்ப வருவான்னு. நேத்தே வந்திருக்கணும்.”

“அவன்கிட்டமாலாவைப் பத்திப் பேசப் போறேதானே?”

“ஆமா, ஆமா, ஆமா. அதான் சொன்னேனே அன்னைக்கே?”

“ஏண்டாப்பாஉனக்கு இவ்வளவு கோவம் வருது? உனக்கு வேலை ஜாஸ்தி… அதான்…”

அவன்ஒன்றும் சொல்லாமல் காப்பியைக் குடித்தான்.

…. அன்று தன் அலுவலக முகவரிக்கு வந்திருந்த ஊர்மிளாவின் கடிதத்தை சேதுரத்தினம் ஆவலுடன்பிரித்துப் படித்தான்.

`என்அன்புக் கணவரே!

எப்படிஇருக்கீங்க? வேளா வேளைக்கு ஒழுங்காச் சாப்பிடறீங்களா? சனிதோறும் எண்ணெய் தேய்ச்சுக்குளிக்கிறீங்களா? பிரசவ டைம் நெருங்கிட்டு இருக்கு. அந்த நேரத்துல நீங்க பக்கத்துலஇருந்தா எனக்குத் தெம்பா யிருக்கும். இதே கடிதத்தோட ஒரு காப்பியை வீட்டுவிலாசத்துக்கும் அனுப்பி வெச்சிருக்கேன். ஒருக்கா லீவ் போட்டிருந்தீங்கன்னா வீட்டுலபார்ப்பீங்க. ஆஃபீஸ்ல இருந்தீங்கன்னா மத்தியானத்துக்குள்ள என் லெட்டரைப்படிச்சுடுவீங்க. அதான் ரெண்டு விலாசத்துக்கும் எழுதறேன். உடனே கிளம்பி வாங்க.எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு.

உங்களையேநினைத்துக் கொண்டு இருக்கும்,

உங்கள்ஊர்மிளா.”

பின்குறிப்பு – அந்தப் புராண காலத்து ஊர்மிளா லட்சுமணனைப் பிரிந்து எப்படித்தான் அத்தனைஆண்டுகள் தனியாக இருந்தாளோ!

சேதுரத்தினத்துக்குச்சிரிப்பு வந்தது. அதை மடித்துத் தன் கைப்பையின் பின்னுறையுள் பத்திரப்படுத்தினான்.

பின்னர், ராமரத்தினத்தோடு தொலைபேசினான்: “ராமு! நாந்தான் சேது பேசுறேன். நான் இன்னைக்கேகோயமுத்தூர் போறேன்….”

“ஆல்தெ பெஸ்ட், சேது சார். குழந்தை பிறந்ததும் ஃபோன் பண்ணிச் சொல்லுங்க….”

“கண்டிப்பா.”

“சரி, சேது சார். போய்ட்டு வாங்க. நல்ல சேதியோட வாங்க.”

“சரிப்பா.வெச்சுடறேன். …”

அவன்சிரிப்புடன் ஒலிவாங்கியை வைத்ததைக் கவனித்த முதலாளி, “என்னப்பா? யாருக்குக் குழந்தைபிறக்கப் போகுது?” என்று விசாரித்தார்.

“எனக்குத்தெரிஞ்சவர், சார்.”

அதன்பின் அவன் தன் வேலையைக் கவனிக்கப் போனான்.

…… கடந்தசில நாள்களாக லலிதாவிடம் முன்பிருந்தது போன்ற சிடுசிடுப்பு இல்லை என்பதையும் அவளதுகுரல் அதன் இயல்பான தோரணையைப் பெரிய அளவுக்கு இழந்து சற்றே சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்ததையும் கவனித்து ரங்கன் வியப்படைந்திருந்தான். இருப்பினும் அவள்முழுவதுமாக மாறிவிடவில்லை என்பதையும் அவன் கவனித்தான். ஒருவேளை அவளுடைய ஊர்க்காரன்சேதுரத்தினம் அவளுக்கு நன்றாய்ப் பாடத் தெரியும் என்பதைத் தன்னிடம் தெரிவித்ததால்விளைந்துள்ள மகிழ்ச்சியோ என்று அவன் நினைத்தான். `இருக்கலாம். நானும் அவள்மறுபடியும் பாடத்தொடங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். சேது சொல்லுவது போல் நானும்நிறைய இறங்கி வந்தால் அவளுக்கும் மன மாற்றம் உண்டகும்’ என்று அவனுக்குத் தோன்றியது.

ஒருநாள், “லலிதா! நீ மறுபடியும் சாதகம் பண்ணிப் பாரு. போன தொண்டை திரும்பவும்வந்தாலும் வந்துடும். எனக்குப் பாட வராதுதான். ஆனா ரசிக்கத் தெரியும். உன்னோடஅசட்டுத்தனமான சபதத்தை விட்டுடு…” என்றான்.

“நிஜமாத்தான்சொல்றீங்களா?”

“இதிலேஎன்ன பொய் வேண்டிக்கிடக்கு? நீ அசட்டுத்தனமா இனிமே பாட மாட்டேன்னு சபதம்பண்ணினதுனால உன் தொண்டை கொஞ்சம் கெட்டுத்தான் போயிருக்கும். அதனால என்ன? மறுபடியும்விடாம பாடிண்டே இரு. கொஞ்ச நாள்லே சரியாயிடும். அப்புறம் பாரு. உன்னோட சுபாவமேமாறிடும்….”

“அப்படீன்றீங்க?”

“ஆமா, லலிதா. நீ வேணாப் பாரு. பாடுறதை நிறுத்தினதுனாலதான் உன் மனசில ஒரு அதிருப்தி, கோபம்இதெல்லாம் உண்டாயிடுத்து. திரும்பவும் பாடத் தொடங்கினேன்னு வையி, எல்லாமேசரியாயிடும்….”

“சரிங்க….அப்படியே பண்ணிப் பார்க்கிறேன். நீங்க சொல்றாப்போல, நான் பாடினதைநிறுத்தினதுனாலதான் என் சுபாவமே மாறிப் போயிடுத்துன்னு நினைக்கிறேன்.. உங்கஃப்ரண்ட் சேதுரத்தினம் இங்கே வந்துட்டுப் போனதுலே எனக்கு ஒரு நல்லதுஏற்பட்டிருக்குன்னு தோணுது…..” என்று சன்னமான குரலில் தன்னோடு ஒத்துப் போன அவளைஅவன் வியப்போடு பார்த்தான்.

…..ஓட்டல் முதலாளிஅன்று மாலை ராமரத்தினத்தை அழைத்தார். அவன் போய் அவருக்கு முன்னால்நின்றான்.

”ஆமா? நீ ப்ளஸ் டூ பாஸ் பண்ணியிருக்கேல்லே?”

“ஆமா, சார்.”

“அப்ப, வேற கம்பெனி வேலையோ, கவர்ன்மெண்ட் வேலையோ கிடைச்சா இந்த ஓட்டல் வேலையை விட்டுட்டுப்போயிடுவேல்லே?”

ராமரத்தினம்உஷாரானான்: “அதுக்கெல்லாம் சான்ஸே இல்லே, சார். அப்படி ஒரு வேலை இத்தனை நாளும்கிடைக்காததுனாலதானே, சார், இந்த வேலைக்கு வந்திருக்கேன்?”

”உனக்குரெண்டு தங்கைங்க இருக்காங்கல்லே?”

“ஆமா, சார்.”

“ஒருத்திக்குஇருபத்து மூனு வயசு, இன்னொருத்திக்கு இருபது வயசு ஆறதில்லே?”

“ஆமாசார்.”

“என்னஅப்படி ஆச்சரியமாப் பார்க்கிறே? என்கிட்ட வேலை செய்யிறவங்க ஜாதகத்தை யெல்லாம்சேகரிச்சுடுவேன் எப்படியாவது…”

“………”

ரெண்டுபொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணணுமில்லையா?”

“ஆமா, சார்.”

முதலாளியின்முகத்தில் சற்றே படர்ந்திருந்த செம்மை எதனால் என்பது விளங்காமல் அவன் திகைப்புடன்அவரைப் பார்த்தான்.

முதலாளியின்இரு கைவவிரல்களூம் மேசை மீது தாளம் போடத் தொடங்கின.

“ரமேஷ்அண்ட் கம்பெனின்னு ஒரு பெரிய இரும்புக் கம்பெனி இருக்கு, தெரியுமா?”

“தெரியும், சார்.”

“அதுலஉனக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தரட்டுமா? அதோட ஓனர் என் ஒண்ணுவிட்ட தம்பிதான்.ப்ளஸ் டூ பாஸ் பண்ணி யிருக்கேல்ல? நல்ல சம்பளம் போட்டுத் தரச் சொல்றேன்.. ஆனாஅதுக்குப் பிரதியா நீ ஒண்ணு செய்யணும்…”

பாதிக்குமேல் புரிந்துகொண்டுவிட்ட அவன். “சொல்லுங்க, சார். நான் என்ன செய்யணும்?” என்றுகேட்டான். அவனது இதயம் அதிக ஓசையுடன் துடிக்கலாயிற்று.

“அதுஇந்த இடத்திலே பேசக்கூடிய விஷயம் இல்லேப்பா. உங்க வீட்டுக்கு வந்துதான்உங்கம்மாவைப் பார்த்துப் பேசணும். என்ன புரியலையா?”

என்றுகேட்ட அவர் முகத்தில் ஓர் அசட்டுப் புன்னகை பரவியது.

ராமரத்தினத்துள்சினம் பொங்கியது. நாற்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்ட அவர் தம் மனைவியை இழந்து ஓர்ஆண்டுக்கு மேல் ஆகி யிருந்ததை அவன் அறிந்திருந்தான். தங்களுடையது ஏழைக்குடும்பந்தான் என்றாலும், மாலாவைப் போல் இரண்டு மடங்கு வயதினரான அவர் அவளைப் பெண்கேட்க நினைத்தது அநியாயம் என்று அவனுக்குத் தோன்றியது. அவனால் தாள முடியவில்லை.எனினும், தனக்கு வேறு நாதியில்லை என்கிற உண்மை அவனை வாய் மூடிய மவுனி யாக்கியது.

முகத்தில்தன் அருவருப்பைக் காட்டாமல் இருப்பதற்குப் பெரிதும் முயன்றான். உணர்ச்சிகள் அற்றுஅதனை வைத்துக்கொண்டு அவரை ஏறிட்டான்.

”என்னப்பா, ஒண்ணும் சொல்லாம இருக்கே?” என்று தொடர்ந்தவாறு அவர் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

“புரியாமஎன்ன சார்?”

“அப்புறம்என்ன யோசனை? ஏதோ யோசிக்கிற மாதிரி தெரிஞ்சியே? அதான் கேக்குறேன்…”

அவன்திடீரென்று தோன்றிய எண்ணத்தில், “வேற ஒண்ணுமில்லே, சார். நாளைக்கு அவளைப் பொண்ணுபார்க்க ஒருத்தர் வர்றதா இருக்கார். அதான்….” என்று இழுத்தான்.

“வரதட்சிணை, அது, இதுன்னெல்லாம் வரிசையா அடுக்குவாங்களே அவங்க்? எல்லாத்துக்கும் பணத்துக்குஎங்க போவே? வெச்சிருக்கியா?”

“அவங்கஎதுவும் கேக்கப் போறதில்லே. சொல்லிட்டாங்க. கோவில்ல வெச்சுத் தாலி கட்டினாப்போதும்னு சொல்லியிருக்காங்க. பொண்ணு பார்க்க வர்றதெல்லாம் ஒருசம்பிரதாயத்துக்குத்தான். பையன் ஏற்கெனவே பொண்ணைப் பார்த்திருக்கான். அவங்கஅம்மாவும் அக்காவும் பார்க்கிறதுக்காகப் பொண்ணு பார்க்கிற சாக்குல வர்றதாயிருக்காங்க.”

“நானும்பனம், நகை, லொட்டு, லொசுக்குன்னு எதுவும் கேக்க மாட்டேம்ப்பா. எல்லாச் செலவும்என்னோடது. சிம்பிளால்லாம் வேண்டாம். ஆடம்பரமாவே ஜாம்ஜாம்னு நடத்திடலாம்… நானேஎல்லாம் பார்த்துக்குவேன். அதனால, நீ என்ன பண்றே, வர்றவங்க வந்துட்டுப் போகட்டும்.ஆனா, பையனைப் பிடிக்கல்லேன்னு உன் தங்கையைச் சொல்லச் சொல்லிடு. என்ன?”

“சரி, சார். அப்படியே செய்யறேன்…” என்று ராமரத்தினம் வலுக்கட்டாயமாய்ப் புன்சிரிப்பைவரவழைத்துக்கொண்டு பதில் சொன்னான்.

“சரிப்பா.நாளைக்கு அவங்க வந்துட்டுப் போனதும், வந்து சொல்லு. அப்புறம் நீ சொல்ற ஒரு நல்லநாள்லே நான் வந்து உங்கம்மாவைப் பார்த்துப் பேசறேன். என்ன?”

“சரி, சார்.”

“அப்பநீ போய் உன் வேலையைப் பாரு. முதலாளி என்ன பேசினாருன்னு யாராவது விசாரிச்சா பொதுவாஎன் குடும்பம் பத்தி விசாரிச்சாருன்னு மட்டும் சொல்லு…”

“சரி, சார்,” என்ற ராமரத்தினம் சிந்தனையுடன் தன் பணியிடத்துக்குப் போனான்.

அவன்போன இரண்டாம் நிமிடம், “ராமு! உனக்கு ஃபோன்ப்பா!” என்று முதலாளி கல்லாவிலிருந்துகுரல் கொடுத்தார்.

`சேதுசாராயிருக்கும்’ என்று எண்ணியவாறு சென்ற அவன், ஒலிவாங்கியினுள், “ஹல்லோ? யாரு?” என்றான்.

“நான்ரமணி பேசறேன். இன்னைக்குத்தான் டூர்லேர்ந்து வந்தேன்…உன்னோட ஒரு பெர்சனல் விஷயம்பேசணும்…நாளைக்கு ஒரு ஏழுமணிக்கு பீச்ல காந்தி சிலைப் பக்கம் வருவியா?”

“சரி, ரமணி.”

“அப்பபார்க்கலாம்…. பை!’

“பை…”

அவன்ஒலிவாங்கியைக் கிடத்தியதும், “யாருப்பா? அந்தப் பையனா?” என்று முதலாளிவிசாரித்தார்.

“இல்லே, சார். இவன் வேற. என் ஃப்ரண்ட்…”

“ஃப்ரண்டுன்றே? சரி, பைன்னு ரெண்டே வார்த்தையில பேச்சை முடிச்சுட்டியே?”

“என்கிட்டஏதோ சொல்லணுமாம், சார். பீச்சுக்கு நாளைக்கு வரச்சொன்னான்…” என்று சொல்லிவிட்டுஅவன் விரைவாக நகர்ந்தான்…

(தொடரும்)

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *