புள்ளிகளை வளைவுக்கோடுகளால் ராஜி இணைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் அவள்தான் தினமும் கோலம் போடவேண்டும். வேலைப்பகிர்வு என்று எதுவுமில்லை என்றாலும் தினமும் கோலம் போடுவதை மட்டும் வேறு யாரிடமும் ராஜி கொடுத்ததில்லை. தினம் ஒரு கைவண்ணம். ஒவ்வொரு கோலமும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.பேப்பர் போடும் பையனும் சைக்கிள் பால்காரனும்ஒரு ஆர்க் அடித்து கோலத்தை மிதிக்காமல் சைக்கிளைக் கொண்டுபோவதை தினமும் கடமையாகச் செய்வார்கள்.
“ அற்புதமா இருக்குங்க “ அன்னியக்குரல். அதுவும் ஆண்குரல். சட்டென்று தூக்கிச் செருகியிருந்த சேலையை கீழே இறக்கிவிட்டு எழுந்தாள்.
“ இப்பெல்லாம் இவ்வளவு அழகா யாருங்க சுழிக்கோலமெல்லாம் போடறாங்? “ இவளுடைய அனுமதியைப்பெறாமலே பேசிக்கொண்டு போனவனுக்கு நாற்பது வயது கடந்திருக்கவேண்டும். ஒற்றைநாடி உடம்பு. கண்களில் கவர்ச்சியாய் அலையும் ஒரு மின்னல்.பட்டையாக மீசை. முன்நெற்றியில் விழுந்த சிகை ஓர் ஒழுங்கமைவில் திருத்தப்பட்டிருந்தது.
முன்னனுமதியின்றி அந்த அந்நிய ஆடவன் கொடுத்த சான்றிதழை ராஜி முகத்தின் ஒற்றைச்சுழிப்பில் நிராகரித்தாள்.
´சொர்ணம்மா வீடு இதுதானே? “ என்றான் தயங்கியபடி.
“ ஆமாம் நீங்க……..? “
“ குருநாதன் சார் சொல்லி அனுப்பினார் “
“ எந்த குருநாதன் ? “
“ கன்னங்குறிச்சியில் குருகிருபான்னு ஒரு திருமணத்தகவல் மையம் வச்சு ஜாதக பரிவர்த்தனை பண்றாரே அவரு. “
தனது அனுமானம் சரியென்று புரிந்தது. எல்லாம் இந்த அம்மாவால். அவளைச் சொல்லணும். இல்லை என்றால் இப்படி ஒருதடியன்…..இல்லை தடியர் வீடு தேடி வந்து கோலம் நல்லாயிருக்குன்னு சர்டிபிகேட் கொடுப்பானா?
“ வர்றதுக்கு முன்னாடி இன்பார்ம் பண்ணிட்டு வந்திருக்கலாமே ? “
“ ஜாதகத்தில் முகவரி மட்டும்தான் இருந்துச்சு. டெலிபோன் நம்பர் இல்லை “ அம்மாதான் இப்பொழுது அவளைக்கூட கேட்காமல் ஜாதகத்திற்கு நகல் எடுக்கிறாள். தொலைபேசி எண்ணை எழுத மறந்திருக்க வேண்டும். இவனை என்ன செய்வது?
“ என்ன வேண்டும் உங்களுக்கு? “
“ வீதில நின்னு பேச வேணாமே?”
“ உள்ள வாங்க “என்றாள் வேண்டா வெறுப்பாக.
அப்பா மறைந்து 15 வருடங்களுக்குப் பின்னர் அந்தவீட்டிற்குள் அன்னிய ஆடவர்கள் அவ்வளவு சட்டென்று உள்ளே நுழைந்ததில்லை. அக்கா கனகாவின் கணவன் விஜயராகவனுக்குப் பிறகு இதோ அடுத்து இவன்.
வீட்டின் முகப்பில் நான்கு இரும்புத்தூண்களின் மேல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை இறங்கியிருந்தது. கூரையின் இரும்புச்சட்டங்களில் வளையங்கள் மாட்டப்பட்டு அந்தவளையங்களில் விதவிதமான செடி கொடிகள் மண்சட்டிகளில் வழிந்துகொண்டிருந்தன. முல்லை,ஜாதிமல்லி,மணிபிளான்ட், குரோடன்ஸ் என்று அந்த இடமே பச்சைபசேலென்று இருந்தது. ‘ பசுமைச்செல்வி “ என்று ராஜியால் சிறப்புபெயர்கொண்டு விளிக்கப்படும் அவளுக்கு அடுத்தவள் சித்ராவின் கைவண்ணம் இந்தப்பசுமைப்புரட்சி. காடுபோல வழிந்து தொங்கும் நித்தியமல்லிக் கொடியிலிருந்து தினம் மூன்றுமுழம் பூ உறுதி.
வீட்டின் உள்ளே நுழைந்ததும் ஒரு நடையுடன் கூடிய ரேழி. அதையம் தாண்டி உள்ளே போனால் சற்று பெரிய கூடம். ஓடத்தில் ஒரு பெரிய சோபா. அப்பா இருந்தபொழுது ஈஸ்வரன்கோவில் அருகில் ஒரு மரத்தச்சனிடம் அவரே நேரில் ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்லி கொண்டுவந்த சோபா. தேக்குமரத்தில் செய்தது. அப்பா கடைசியாக அமர்ந்து ஒருகையில் ஆங்கிலதினசரியும் மற்றொருகையில் காபி டம்ளருடன் உயிரைவிட்ட சோபா. இன்னமும்கூட சிலநாட்கள் அந்த சோபாவை கடந்துபோகும்பொழுது அப்பாவின் வாசனையடிப்பதுபோல ராஜிக்குத் தோன்றும்.
“ சோபாவின் மேலுறையின் டிசைன் நல்லா இருக்கு.நீங்க போட்டதா? “ என்றான் வந்தவன்.
அவனை எரித்துவிடுவதைபோல ராஜி முறைத்தாள்.
“ மிஸ்டர் இது காலைவேளை. இங்கே யாருக்கும் நின்னு உங்க சான்றிதழ்களை வாங்கி பத்திரமா பெட்டியில் பூட்டி வச்சுக்க நேரமில்லை. நேரடியா விஷயத்துக்கு வாங்க. “
“ என்பெயர் சத்தியசீலன். சத்யான்னு கூப்பிடுவாங்க. “
“ எப்படி வேணுமின்னாலும் கூப்பிடட்டும். உங்களுக்கு என்ன வேணும்? “
“ பெரியவங்க யாருமில்லையா? “
“ எனக்கு வயசு இந்த ஆடி வந்தா முப்பத்தியாறு. நான் பெரியவதான். சொல்லுங்க. “
“ ஜாதகம் அனுப்பின சொர்ணம்மா இல்லீங்களா? “
கூடத்தில் குரல் கேட்டு சித்ரா எட்டி பார்த்தாள். குளித்து பவுடர் போட்டு, சிறுகீற்றாய் திருநீறு பூசிநின்ற அவனைப்பார்த்ததும் சித்ராவிற்கு குறும்பாக ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது.உள்ளே ஓடி அவளுக்கு அடுத்தவளான ராமாவை அழைத்துவந்து காட்டினாள். பற்றுப்பாத்திரங்களின் பிசுக்கைச் சேலைத்தலைப்பில் துடைத்தபடி ரமா சித்திராவின் அருகில்வந்து எட்டிப்பார்த்தாள்.
“ யாரு ? “
“ குருகிருபா “ என்று ராஜி ஒற்றைவார்த்தையில் பதில் சொன்னதும் சிரிப்பை அடக்கமுடியாமல் உள்ளே ஓடினாள்.
ரமா போனதும் சொர்ணம்மா வந்தார். அவருக்கு வயது அறுபதைத் தாண்டியிருக்கும். சின்னகீற்றாக திருநீறும், கருப்புபொட்டும்,கண்களில் முப்பத்தைந்து வயதான மகளை வீட்டில் வைத்துக்கொண்டிருக்கும் கவலையுமாக இருந்தாள்.
சத்யா எழுந்து “ வணக்கம்மா “ என்றான். அவனுடைய அந்தப்பணிவு ராஜியைக் கொஞ்சம் அசைத்தது.
“ உட்காருங்க “ என சொர்ணம்மா கைகூப்பினாள்.
இரண்டு பிளாஸ்டிக் நாற்காளிகை இழுத்து போட்டு தானும் உட்காந்துகொண்டு அம்மாவைப் பார்த்து “ அம்மா நீயும் உட்கார் “ என்றாள்.
சொர்ணம்மா அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு “ தம்பி நீங்க யாரு ? “ என்று வந்தவனிடம் கேட்டாள் நின்றபடி.
“ குருகிருபா குருநாதன் சார் மூலமா வரேம்மா. என் பேரு சத்தியசீலன். டிப்ளமா ஹோல்டர். ரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வளைகுடா நாடுகளுக்கு வேலைபார்க்க போயிடுவேன்.சொந்தமா வீடு இருக்கு. நான் வீட்டுக்கு மூத்தவன்.தம்பி தங்கச்சிங்களோட படிப்பு வேலை அவங்க திருமணம்ன்னு இருந்துட்டேன். எனவே நான் திருமணம் பண்ணிக்கல. எந்த கெட்டபழக்கமும் இல்லை. வீடு கொஞ்சம் நிமிர்ந்த உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு எண்ணம் வந்துச்சு. நாற்பது வயசுக்கு மேலே பொண்ணு தேடினா என்னவெல்லாம் அனுபவம் கிடைக்கும்னு என்கிட்டே கேளுங்க சொல்றேன். என் பெற்றோர்களுக்கு எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலயேங்கிற கவலை அரிச்சிகிட்டேயிருக்கு. போகாத திருமண தகவல் மையம் கிடையாது. இனிமே கலியாணம் பண்ணிக்கிட்டு என்ன சாதிக்கப்போறோம்னு தெரியல. ஒங்க பொண்ணு ஜாதகத்தை பார்த்தப்ப வித்தியாசமா ஒண்ணு பட்டுச்சு. அப்பா இல்லாத வீடு. நான்கு பெண்பிள்ளைகள். ரொம்ப சங்கடமாயிடிச்சு. ஜாதகம் பொருந்துதோ இல்லியோ வெளிப்படையா பேசிட்டு வந்திரலாமின்னு கிளம்பி வந்துட்டேன். வெள்ளன வந்ததுக்குக் காரணம் அப்பதான் மனசு தெளிவா இருக்கும்.””
சொர்ணம்மா முகத்தில் ஒரு நிம்மதி பிறந்தது. எப்பொழுதுமே தொங்கிக் கொண்டிருக்கும் சோகம் லேசாக விலகியது போலிருந்தது.
“ தம்பி எங்க குடியிருக்கீங்க ? “
“ சின்ன திருப்பதியில் பெருமாள் கோவிலுக்கு பக்கத்தில். “
“ ஜாதகம் கொண்டுவந்திருக்கீங்களா? “ என்றாள் சொர்ணம்மா.
“ ஒரு நிமிடம் “ ராஜி இடைமறித்தாள்.
“ என்ன ? “ என்றான் சத்யா .
“ என்கூட வாங்க ‘ என ராஜி அவனை தன்னுடன் அழைத்துச்சென்றாள்.
கூடத்தின் இடப்புறமிருந்த அறைக்குள் நுழைந்தனர். “ பாலி ரூம் “ என்று சித்ரா அதற்கு பெயர் வைத்திருந்தாள். கண்ணாடி பீரோ ஒன்றில் புத்தகங்கள் அடுக்கிவைத்திருப்பதால் அது புத்தக அறை. சுவரை ஒட்டி ஒரு கட்டிலும் மெத்தையும் இருப்பதால் அது படுக்கையறை. சித்திராவின் மேசையும் கணினியும் இருப்பதால்அது படிப்பறை. அப்பாவின் புகைப்படம் பிரேம் போடப்பட்டு சந்தனம் ஊதுபத்தியுடன் மனப்பாதால் அது கடவுளறையும் கூட.
“ இவருதா எங்கப்பா. சுந்தரமூர்த்தின்னு பேரு. டிரஷரியில் வேலை செஞ்சுகிட்டு இருந்தப்ப மாரடைப்பில் செத்து போயிட்டாரு. பதினஞ்சு வருஷமாச்சு. என் அக்கா ஒருத்தி இருக்கா. கனகான்னு பேரு சரியா படிக்கலை. சினிமா சீரியல்னு வசதியா இருந்துட்டா. அப்பா சாகறப்ப நான் பி காம் கடைசிவருஷம் படிச்சிகிட்டிருந்தேன். இழப்பீட்டின் அடிப்படையில் அப்பாவோட வேலையை அரசாங்கம் எனக்கு கொடுத்துச்சு. அப்பா சாகறப்போ கடைசி தங்கை ராமாவுக்கு பதினாலு வயசு. மொத்த குடும்ப பாரமும் என் தலையில் விழுந்தது. எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமா சுமப்பதுன்னு முடிவு பண்ணினேன். இழப்பீட்டின் பேரில் கிடைச்ச வேலை. அப்போ இந்த வீட்டிற்கு நான் அப்பா மாதிரிதானே? என் ரெண்டு தங்கைகளின் திருமணம் அம்மாவை காப்பாத்த வேண்டிய பொறுப்பு இதெல்லாம் இருக்கு. எனக்கு கலியாணம் செஞ்சுகிட்டு என் குடும்பத்தை நிர்கதியா விட்டுட்டு போகும் எண்ணமில்லை. என் முன் அனுமதியில்லாம என் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பிச்ச அம்மா சார்பில் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க கிளம்பலாம். “
சத்யா மலைத்துப் போய்நின்றான்.
“ நன்றி “ எழுந்தான்.
கூடத்தில் சொர்ணம்மா வழி மறித்து “ ஜாதகமிருந்தா குடுத்திட்டுப் போங்க தம்பி “ என்றார்.
“ வேண்டாம்மா ப்ளீஸ் “ என்றாள் ராஜி.
“ அவ அப்படித்தாம்பா. முகத்துக்கு நேர பேசிடுவா. “
“ அது தப்பில்லைம்மா “
“ பெத்த வயிறு கொதிக்குது தம்பி. எவர்சில்வர் சம்படங்கள் மாதிரி மூணு வயசு வித்தியாசத்தில் முப்பத்தியாறு வயசில் ஆரம்பிச்சு மூணு பொண்ணுங்க கலியானமாகாம இந்த வீட்டில் இருக்கு. ஒரு காட்சி கோலம் எதுவும் கிடையாது.வருசா வருஷம் வீட்டுக்காரரோட தெவசம்தான் விசேஷம். தனக்கு எந்த சுகமும் வேனாமின்னுட்டு அப்பா பார்த்த உத்தியோகம்னு சொல்லியே என் வாயை அடைக்கிறா தம்பி. இழப்பீட்டின் பெயரில் வேலை கிடைச்சு வேலைக்குப் போகும் பெண்கள் கலியாணமே கட்டிக்கக் கூடாதுன்னு சட்டமிருக்கா தம்பி ? “என்றார் சொர்ணம்மா.
சத்தியசீலன் பதில் சொல்லாமல்கையிலிருந்த தோல்பையிலிருந்து ஒரு உறையை எடுத்து சொர்ணம்மாவிடம் நீட்டினான். வாசலில் சென்று செருப்பு அணியப்போகும்பொழுது சித்ரா ஓடிவந்தாள்.
“ சார் ! சத்தியாங்கிற பேரில் பத்திரிகையில் கதையெல்லாம் எழுதுபவர் நீங்களா சார்? ஜாதகத்தில் குறிப்பிட்டிருக்கே ? ஐயோ ! பெண்கள் பிரச்சினைகளை ஆண்கள் பாயிண்ட் ஆப் வியூவிலிருந்து எழுதாம பெண்கள் பாயிண்ட் ஆப் வியூவிலிருந்து எழுதும் உங்க சின்சியாரிடி எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும் சார். ஒரு நிமிஷம் உள்ள வந்திட்டு போகலாம். face-book id இருக்கா சார் ? “ என்று ஒப்பிப்பது மாதிரி பேசினாள்.
“ இல்லை சித்ரா. அம்மாகிட்ட என் ஜாதகத்தை கொடுத்திருக்கேன். எங்க இரண்டுபேர் ஜாதகமும் பொருந்தியிருந்தா உங்கம்மா கூப்பிடட்டும். அப்பா நான் மறுபடியும் வருவேன். face-book id வச்சுக்கற அளவுக்கு நான் வெட்டியா இல்லை. வரேன். “
“ அம்மா கூப்பிடலேன்னா?………… “
ஒருசின்ன இடைவெளியிட்ட சத்தியசீலன் “ கண்டிப்பா கூப்பிடுவாங்க “ என்று கூறிவிட்டு தன் மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
**************************************************
- யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு
- நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்
- ஒரு புதிய மனிதனின் கதை
- வாழ்க்கை ஒரு வானவில் – 21
- ஈரத்தில் ஒரு நடைபயணம்
- எக்ஸ்ட்ராக்களின் கதை
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22
- பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது
- தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6
- அமர காவியம்!
- சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.
- உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு
- தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை
- இந்த நிலை மாறுமோ ?
- அப்பா
- அழகுக்கு அழகு (ஒப்பனை)
- பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு
- பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
- வாக்குமூலம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1
- அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்
- சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93
- என் சுவாசமான சுல்தான் பள்ளி
- தந்தையானவள் – அத்தியாயம்-1