மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். மனம் ஒரு குரங்காகத் தாவுகிறது என்கிறோம். மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். மனம் நெருப்பாக எரிகிறது என்றும் மனம் பாலைவனமாக வறண்டுபோய்விட்டதாக என்றும் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும் சொல்கிறோம். பல சமயங்களில் மனம் எரிமலையாக வெடித்துவிட்டது என்றுகூட குறிப்பிடுகிறோம். மனத்தின் இயக்கத்தைக் குறிப்பிட இப்படி ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அது நிலையற்றது என்பதாலேயே, அதன் இயக்கத்தைக் குறிப்பிட இத்தனை சொற்கள் உருவாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காதல் குடிகொண்ட மனம் பாகாக உருகி, உற்றார் உறவினர்களிடம் ஆதரவை எதிர்ப்பார்ப்பதையுயும் அந்தக் காதலை சாதிப்பற்று குடிகொண்ட மனம் பாறையாக இறுகி கொலைவெறிகொண்டு எதிர்ப்பதையும் களமாகக் கொண்டுள்ளது பெருமாள்முருகனின் புதிய நாவல்.
குமரேசன் ஒரு சாதி. சரோஜா வேறொரு சாதி. சோடாக்கடையில் வேலை கற்றுக்கொள்வதற்காக கிராமத்தைவிட்டு வெளியேறி வந்தவன் குமரேசன். நல்ல உழைப்பாளி. படித்தவன். அவன் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே உள்ள வேறொரு வீட்டில் இருப்பவள் சரோஜா. தாயில்லாத பெண். தந்தையாலும் சகோதரனாலும் வளர்க்கப்படுபவள். அவன் தோற்றம் அவளையும் அவள் தோற்றம் அவனையும் வசீகரித்ததால் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். பார்வையில் தொடங்கிய காதல், வானொலியில் ஒளிபரப்பப்படும் பாடல்கள்வழியாகவும் சின்னச்சின்ன உரையாடல்கள் வழியாக வளர்ந்து செழிக்கிறது. இருவருடைய காதலுக்கும் சாதி தடையாகவே இல்லை. சோடா வெடித்து காயமடைந்து படுத்துக் கிடக்கும்போது, அந்தக் காதல் மேலும் தீவிரம் கொள்கிறது. தூக்குவாளி நிறைய கறிக்குழம்பு வைத்து அவனிடம் கொடுத்துவிட்டுச் செல்லும் தருணம் காதலின் உச்சமான தருணம். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறார்கள். தன் சொந்த வீட்டில் புதுவாழ்வைத் தொடங்க நினைக்கும் கனவோடு சரோஜாவை தன் கிராமத்துக்கு அழைத்து வருகிறான் குமரேசன். நாவல் அந்த இடத்தில் தொடங்கி, அவன் கனவு சிறுகச்சிறுக சிதைந்து மண்ணாவதை உணர்த்தி முற்றுப் பெறுகிறது. காதல் கருகிச் சாம்பலாகும் மண்ணில் எந்த உயர்வும் உயிர்ப்பும் நிறைந்த விஷயமும் முளைப்பதில்லை.
தாயின் அன்புமுகத்தையே கண்டு பழகிய மகன், அவளுடைய மற்றொரு முகத்தைக் கண்டு திகைத்துப் போகிறான். காதல் கைகூடியதுகூட பெரிய விஷயமல்ல, அந்தக் காதலை தக்கவைத்துக்கொள்வதுதான் பெரிய விஷயம் என்பது அவனுக்குப் புரிந்துவிடுகிறது. அவளுடைய கசப்பு இன்று தீரலாம், நாளை தீரலாம் என அவன் நம்பிக்கையோடு காத்திருக்க, அவளோ அந்தக் கசப்பை வெறுப்பாகவும் நெருப்பாகவும் மாற்றி, அந்தத் தீயை நெஞ்சில் சுமந்தவளாக இருக்கிறாள். படுத்து உறங்க ஒரு நல்ல குடிசை இல்லை. ஆடுகளை ஓட்டிச் சென்று மேயவைத்துத் திருப்பி அழைத்துவருவதைத் தவிர ஒரு வேலை இல்லை. கூழைத் தவிர உண்ணுவதற்கு வேறு உணவு இல்லை. ஆனால், அதையெல்லாம் கடந்து, அவள் நெஞ்சில் சாதிப்பெருமை நிரம்பியிருக்கிறது. காதலியின் சாதியைப் பற்றிய தகவலை வெளிப்படுத்தாமல் பூசி மெழுகிப் பதிலளித்து சமாளிக்கிறான் குமரேசன். அவனை அதட்டிக் கேட்க துணிச்சல் இல்லாத அவன் அம்மாவும் ஊர்க்காரர்களும், அதை அறிந்துகொள்ள உளவுவேலை பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னைவிட கீழே உள்ள சாதி என்று தெரிந்ததும் தக்க தருணத்துக்குக் காத்திருந்து அந்த ஊரே அவளைக் கொல்ல முனைகிறது. இரவு நேரத்தில் மலம் கழிக்க புதருக்குள் ஒதுங்கியிருக்கும் தருணத்தில், புதரோடு கொளுத்திவிடும் மூர்க்கத்தோடு தீப்பந்தங்களோடு வருகிறார்கள். கையில் தீப்பந்தத்தோடு அலைந்து தேடும் ஒருவன் குமரேசனை மயக்கிய சிவப்புத்தோல் உடம்பைத் தொட்டுச் சுகப்படத் துடிக்கும் வேட்கையை வெளிப்படையாகவே வெட்கமின்றி சொல்கிறான். “நம்ம கண்ணுக்குமட்டும் படட்டும், தொட்டுப் பார்த்துரலாம்” என்று ஒத்து ஊதுகிறான் இன்னொருவன். அவர்களை இயக்குவது சாதிப்பெருமை மட்டுமல்ல, தனக்குக் கிடைக்காத ஒன்றை, தன்னால் தேடிப் பெறமுடியாத ஒன்றை குமரேசன் அடைந்துவிட்டான் என்னும் பொறாமையுணர்வும் சேர்ந்தே இயக்குகிறது. ஆண்மிருகத்தின் வெறிக்கு சாதி ஒரு கவசமாக விளங்குகிறது.
சாதிப்பெருமை குமரேசனின் தாயுடைய நெஞ்சில்மட்டும் நிரம்பியிருக்கும் ஒன்றல்ல. தந்தையில்லாமல் வளர்ந்த பிள்ளை என்பதால் பாசம் காட்டி வளர்த்த தாத்தா பாட்டியிடமும் நிறைந்திருக்கிறது. தான் பெற்ற பெண்களைக் கொடுத்து திருமணம் செய்துவைப்பதை தந்திரமாகத் தவிர்த்துவிட்டு, ‘அவனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்துவைக்கிறேன்’ என்று வாக்களித்துவிட்டு தாமதப்படுத்திக்கொண்டே செல்லும் தாய்மாமனிடமும் நிறைந்திருக்கிறது. உறவுக்காரர் வீட்டில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவுக்கு மாமன் என்கிற முறையில் சீரெடுத்துச் சென்ற தருணத்தில் கேவலமான முறையில் பேசி அவமானப்படுத்திய உறவுக்காரர்களின் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறது. எட்டிஎட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும் அக்கம்பக்கத்தவர்களுடைய நெஞ்சில் நிறைந்திருக்கிறது. மெல்லமெல்லப் பரவிய அந்த நெருப்புதான் பிள்ளைத்தாய்ச்சி என்றும் பாராமல் இறுதியில் அவளைப் பொசுக்கிவிடுகிறது.
குமரேசனின் குடிசையைப்பற்றிய விவரணை இடம்பெறும்போதெல்லாம், அக்குடிசைக்கருகில் உயர்ந்திருக்கும் மொட்டைப்பாறையின் சித்திரமும் நாவலில் தவறாமல் குறிப்பிடப்படுகிறது. அதுவே, இந்த நாவலின் மையப்படிமம். அது குமரேசனின் தாய்மனத்துக்கான படிமம் மட்டுமல்ல, அந்தக் கிராமத்துக்காரர்களுக்கான படிமம். அந்தச் சமூகத்தின் படிமம். இரக்கமே இல்லாத மனம். காதல் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுக்கும் மனம். சாதியுணர்வுகளால் இறுகிப் போய்விட்ட மனம். இறுதியில் கொலைசெய்யவும் துணிந்து நிற்கிற மனம்.
காதலைத் தவிர வேறு எந்த உணர்வுக்கும் நெஞ்சில் இடமில்லாத சரோஜாவுக்கு அப்பாறையைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும் உணர்வுகள் வேறானவை. அவள் நெஞ்சில் காதல்மட்டுமே இருப்பதால், பார்க்கும் இடமெல்லாம் காதலாகவே தெரிகிறது. அந்தப் பாறைமீது அடியெடுத்து வைக்கும்போதெல்லாம், குமரேசனின் கைகளைப்போல மிருதுவான உணர்வும் முரட்டுத்தனமான தழுவலும் இயைந்து தீண்டுவதுபோன்ற உணர்வையே அவள் அடைகிறாள். அதில் அடங்கியிருக்கும் ஆபத்தை அவள் சிறிதுகூட உணரவே இல்லை. அவள் காதலே அவள் கண்களை மறைத்துவிடுகிறது.
தன் தாயுடைய சீற்றக்கனலிடமிருந்து சரோஜாவைக் காப்பாற்ற ஒவ்வொரு கணமும் குமரேசன் முயற்சி செய்தபடியே இருக்கிறான். குடிசைக்குள் நுழைந்ததுமே மயங்கி விழுந்துவிட்ட அவளுக்குப் பருகுவதற்கு தண்ணீர் எடுத்துக்கொடுத்து, ஆதரவாக நெஞ்சோடு தாங்கி, கட்டிலில் படுக்கவைக்கும் கணத்திலிருந்து, அவன் தன் அன்பையும் ஆதரவையும் காட்டியபடியே இருக்கிறான். அவள் குளிப்பதற்காக மறைவிடம் கட்டித் தருகிறான். அவள் அரிசிச் சோறு உண்பவள் என்பதால் அதற்கும் ஏற்பாடு செய்கிறான். எவ்வளவு ஆழ்ந்த துக்கமாக இருந்தாலும் சரி, அதிலிருந்து அவளை மீட்டுக் கொண்டுவரும் காதல் அவனிடம் இருக்கிறது. ‘வத்திச்சுப்பலு’ என என்றோ ஒருநாள் அவள் சொன்ன கொச்சைச்சொல் அவளைச் சிரிக்கவைத்து மீட்டெடுக்கும் மந்திரமாக உள்ளது. சாதி அடையாளத்தைத் தெரிந்துகொள்ள ஊர்க்காரர்கள் கேட்கும் தந்திரமான கேள்விகளிலிருந்து ஒவ்வொருமுறையும் அவனும் தந்திரமான பதில்களைச் சொல்லித் தப்பிக்கிறான். எந்த இடத்திலும் உரையாடலை வளர்த்தக்கூடாது என்பதில் அவளையும் கவனமாக இருக்கச் சொல்கிறான். புதுவாழ்வைத் தொடங்க, அருகிலிருக்கும் நகரத்தில் ஒரு சோடாக்கடை தொடங்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்குகிறான். வாடகைக்கு இடம் தேடிப் பிடித்து, கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிப் போட்டு, வாடிக்கையாளர்களைப் பிடிக்க அலைந்து, கடை தொடங்கத் தேவையான இறுதிக்கட்ட வேலைகளை இரவு தங்கி பார்த்துவிட்டுத் திரும்புவதாகச் சொல்லிச் சென்ற அன்றைய இரவின் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு குமரேசனின் அம்மாவும் ஊருக்காரர்களும் தன் காதல் மனைவியான சரோஜாவுடன் புது இடத்தில் புதுவாழ்க்கையைத் தொடங்க நினைத்தவனின் கனவுகள் அரும்பிலேயே கருகிவிடுகின்றன.
சாதிகளைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் அந்தந்தக் குடும்பத்தினரே கெளரவக்கொலை என்கிற பெயரில் இரக்கமே இல்லாமல் கொன்று மறைத்துவிடும் காலம் இது. சாதிகள் எப்படி உருவாகின, ஏன் உருவாகின, அதற்கான தேவையைத் தூண்டியது எது என்பதை ஒட்டிய விவாதங்கள் எதுவுமே பெரிய அளவில் நம் சமூகத்தில் நிகழாமல் போனது துரதிருஷ்டவசமானது. விவாதங்களை உருவாக்காமல் வெற்றுப் பெருமைகளை உருவாக்கி, அப்பெருமைகளை தலைமீது வைத்துக் கொண்டாடத் தொடங்கியது, அதைவிடவும் துரதிருஷ்டவசமானது. மீண்டும்மீண்டும் சமூகம் இருட்டுக்குள்ளேயே செல்கிறது. சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் நம் மூத்தோர் சொன்ன சொற்கள் ஏட்டளவிலேயே நிற்கின்றனவே தவிர நெஞ்சில் பதியவில்லை. விலகும் பாசி, கணநேரத்திலேயே மீண்டும் இணைந்து குளத்தின் பரப்பை மறைத்துக்கொள்வதுபோல, சாதியடையாளத்தின் பொருளின்மை பற்றிய பேச்சைக் கேட்கும்போதெல்லாம் அதன் தர்க்கஒழுங்கையும் நியாயத்தையும் புரிந்துகொண்டு, சாதிப்பெருமை பற்றிய எண்ணம் சற்றே விலகியிருந்துவிட்டு, கணநேரத்திலேயே மீண்டும் மனத்தில் கவிந்துவிடுகின்றன. காதலுக்குமட்டுமே அந்தப் பாசியை முற்றிலும் விலக்கிவிட்டு நடக்கும் சக்தியும் உறுதியும் உள்ளன. இதை நினைத்துத்தான் பாரதியும் காதலினால் மானுடர்க்கு உய்வுண்டாம் என்று பாடிவைத்தார் போலும். அதனாலேயே இச்சமூகத்தில் காதல் மீண்டும்மீண்டும் கண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் சாகடிக்கப்பட்டும் வருகிறது. நாடகத்திலும் திரைப்படங்களிலும் காதலை சுவைத்துப் பார்க்கும் இச்சமூகத்தில் தன் வீட்டுக்குள் காதல் நுழைவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பது முரண். பூக்குழி நாவலில் குமரேசன் வீட்டில் நுழைந்த காதல், சரோஜாவைப் பலியாக்கிவிடுகிறது. சில இடங்களில் குமரேசன் போன்றவர்களையும் பலி வாங்குகிறது. இன்னும் சில இடங்களில் குமரேசன்களையும் சரோஜாக்களையும் சேர்த்துப் பலிகொடுத்துவிடுகிறது. மனம் பாறையாகிப் போன மக்களின் வெறியைத் தணிக்க, இச்சமூகத்தில் இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகவேண்டுமோ தெரியவில்லை.
(பூக்குழி. நாவல். பெருமாள்முருகன். காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை. ரூ.130)
- யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு
- நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்
- ஒரு புதிய மனிதனின் கதை
- வாழ்க்கை ஒரு வானவில் – 21
- ஈரத்தில் ஒரு நடைபயணம்
- எக்ஸ்ட்ராக்களின் கதை
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22
- பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது
- தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6
- அமர காவியம்!
- சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.
- உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு
- தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை
- இந்த நிலை மாறுமோ ?
- அப்பா
- அழகுக்கு அழகு (ஒப்பனை)
- பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு
- பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
- வாக்குமூலம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1
- அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்
- சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93
- என் சுவாசமான சுல்தான் பள்ளி
- தந்தையானவள் – அத்தியாயம்-1