சில தினங்கள் வழக்கமானவை. சில தினங்கள் வழக்கத்திற்கு மாறானவை. காலம் மாறும்போது அதன் பயணம் மாறுகிறது. அப்படி நிகழ்ந்தது ஒன்று. நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக என் இனிய நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான திரு.வையவன் அவர்கள் ஹார்ட்பீட் டிரஸ்ட்டையும் என்னையும் பார்வையிட வரப் போவதாக முந்தின நாள் அறிவித்தார்கள். உலக புத்தகத் தினத்திற்காக மாநில கல்விக் கருவூலம் தமிழ்நாடு ஆளுநர் மேதகு .ரோசையா அவர்கள் ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர்கள் அந்தச் செய்தியைத் தெரிவித்தபோது கையும் ஓடவில்லை ; காலும் ஓடவில்லை என்று வழக்கமாகச் சொல்வது போல் தான் இருந்தது என் நிலை.
நான் மிகவும் நேசிக்கும், மிகவும் போற்றி மதிக்கும் அவர் என்னைப் பார்க்க வருவது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அன்று அலுவலகம் செல்லாமல் நான் விடுமுறை போட்டு விட்டு அவர் வருகையை எதிர்பார்த்துக் காலை 9 மணி முதல் காத்திருக்கத் தொடங்கினேன்.அவர் பயணம் செய்த பேருந்து சென்னையி லிருந்து ஒவ்வொரு ஊராகக் கடக்கக் கடக்க அவர் நலமாக வந்து சேர வேண்டு மென்ற எண்ணமே ஒரு பிரார்த்தனை யாகி அவரோடு சேர்ந்து பயணம் செய்யத் தொடங்கியது. ஒவ்வொரு கட்டத்திலும் என் தொலை பேசி அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரித்து உடன் துணையாயிற்று. அன்றைய என் தினப் பயணம் அப்படி அவரோடேயே தொடர்ந்தது .
என் கவலைக்கும் ஆர்வத்திற்கும் ஒரு காரணம் வயது முதிர்ந்த அவர் ஒரு விபத்தில் சிக்கி இடது தொடையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செயற்கை எலும்பு பொருத்தப் பெற்றிருந்த தமைதான். அந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் அன்று வரை துணையின்றித் தனியாகப் பயணம் செய்ததில்லை என்று அறிந்தேன். கார் தவிர வேறு வாகனங்களில் வந்ததும் இல்லையாம். என்னையும் டிரஸ்ட் டையும் காண வேண்டு மென்ற அவர் ஆர்வம் பஸ்ஸில் பயணம் செய்ய ஒரு துணிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும்.
சரியாக 1.30 மணி பிற்பகலுக்கு அவர் செங்கம் பஸ் நிலையம் வந்தார். இதுவரை நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த தில்லை. என் தம்பி அருள்ராஜ் அவரைப் பார்த்து ஆட்டோ வேண்டுமா என்று கேட்டபோது அவர் யாரோ என்று நினைத்து மறுத்துவிட்டார். ஒருவாறு என் மூன்று சக்கரச் சைக்கிள் என்னை அவர் காண வாய்ப்பளித்தது. அவர் கையாட்ட நான் கையாட்ட இருவரும் புன்னகை செய்துகொண்டோம்.
பிறகு என் இல்லத்திற்கு அழைத்துச் சென்றபோது தான் அவர் காலையிலிருந்து உணவு அருந்தாத விஷயம் தெரிந்து நான் மிகவும் வருந்தினேன்.
அவசர அவசரமாக என் தாய் தோசை வார்த்துத் தந்தார். இருவரும் பின்னர் என்னைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்காக இயங்கும் இதயத்துடிப்பு இதழ் பற்றியும் ஹார்ட்பீட் டிரஸ்ட் பற்றியும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். சில எதிர்காலத் திட்டங்களை அவர் வழிகாட்டிச் சொல்லச் சொல்ல நான் என் மனத்தில் பதிந்து கொண்டேன்.
உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்ற அவர் திடீர் முடிவை என் வற்புறுத்தலும் என் குடும்பத்தினர் வேண்டுகோளும் மாற்றின. அவர் இரவு எங்கள் இல்லத்தில் தங்கியிருந்து விட்டு மறுநாள் காலையில் புறப்பட ஒப்புக் கொண்டார்.
அன்றைய என் பயணம் எங்கள் இருவரின் பயணமாக என் தம்பி அருள்ராஜ் ஆட்டோ ஓட்ட இனிதே துவங்கியது. செங்கம் நகரைச் சுற்றிப் பார்க்க வேண்டு மென்ற அவர் விருப்பத்தை முதலில் ஹார்ட்பீட் டிரஸ்ட்டைப் பார்க்கவேண்டும் என்ற எங்கள் கோரிக்கை மாற்றியமைத்தது. 13 கி.மீ பயணத்திற்குப் பின் நாங்கள் சொர்ப்பனந்தல் என்ற என் சொந்த ஊரை அடைந்தோம்.
அந்த ஊரும் சாலையும் டிரஸ்ட் அமைந்திருந்த இடமும் அவர் மனசை ஈர்த்தன. மிகவும் அற்புதமான எதிர்காலம் அந்த இடத்திற்கும் டிரஸ்ட்டிற்கும் காத்திருப்ப தாக அவர் பாராட்டிக் கூறி னார். டிரஸ்ட் அமைந்திருந்த எல்லா பகுதியையும் சோர்வின்றி பார்த்ததோடு இல்லாமல் மாடியில் கூட்டம் நடக்கும் இடத்தையும் அவர் சென்று பார்த்தது, எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.
என் தந்தையார் காலத்தில் காவலுக்கு இருந்த ஒரு பெரியவர் எனக்குப் பன்னீர்ச் சோடா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். நானும் திரு. வையவன் அவர்களும் பகிர்ந்து குடித்தோம்.
பிறகு செங்கம் நகர் முழுவதும் ஆட்டோவில் சுற்றி ஒவ்வோர் இடங்களையும் ஆலயங்களையும் அவர் ஆர்வத்தோடு பார்க்க திரும்பும்போது மாலை 7:00 மணி. என் இளைய தம்பி இல்லத்திற்குச் சென்று அவன் வீட்டையும் அவன் மனைவி சூர்யாவையும் பார்த்தோம், அவருக்காக உப்புமா தயாரிக்கும் பொறுப்பை சூர்யா ஏற்றாள். என் வீட்டைத் தேடிக்கொண்டு அவள் தயாரித்த உப்புமா வந்தது. அதை ரசித்து சாப்பிட்ட திரு வையவன் அவர்கள் சூர்யாவிற்கு தொலைபேசியில் நன்றி கூறினார். என் அக்கா கலைச்செல்வி திருவண்ணாமலையில் இருந்து பேசிய போது போனை வாங்கித் தன் அன்பு வாழ்த்துக்களை அவளுக்குத் தெரிவித்தார்.
எவ்வளவு கூச்சத்தோடும் நாணத்தோடும் அக்கா பேசினாள் என்று மகிழ்ந்து ரசித்தார். அவ்வளவு பெரிய எழுத்தாளரின் எளிமையும் குடும்பத்தில் ஒருவர் போல பழகும் பண்பும், பணிவும் எங்கள் வீட்டில் அனைவர் நெஞ்சிலும் பதிந்தன.
எங்கள் குடும்பத்தில் ஒருவராக எங்களோடு இருந்துவிட்டு மறுநாள் காலை 7:00 மணிக்குத் தன் மகள் ஊரான திருப்பத்தூருக்குப் பஸ் ஏறினார்.
திரு. வையவன் அவர்கள் என்னையும், என் சிறு பணியையும் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்தது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.
[தொடரும்]
- யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு
- நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்
- ஒரு புதிய மனிதனின் கதை
- வாழ்க்கை ஒரு வானவில் – 21
- ஈரத்தில் ஒரு நடைபயணம்
- எக்ஸ்ட்ராக்களின் கதை
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22
- பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது
- தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6
- அமர காவியம்!
- சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.
- உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு
- தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை
- இந்த நிலை மாறுமோ ?
- அப்பா
- அழகுக்கு அழகு (ஒப்பனை)
- பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு
- பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
- வாக்குமூலம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1
- அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்
- சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93
- என் சுவாசமான சுல்தான் பள்ளி
- தந்தையானவள் – அத்தியாயம்-1