அண்ணன் வாங்கிய வீடு

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

rekaரெ.கார்த்திகேசு

 

ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு ஒரு அட்டையைப் பரப்பிக் கீழே படுத்திருந்தான். நட்டுத் துருப்பிடித்துக் கிடந்தது. ஆண்டுக் கணக்கில் கிரீசைக் காணாத நட்டு. காரை சர்வீஸ் பண்ணி எத்தனை வருஷமோ தெரியவில்லை. அப்படிக் கார்கள்தான் இந்தப் பட்டறைக்கு வருகின்றன. ஓலைக்குடிசையின் கீழ் ‘ஓ’வென்று கிடக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பட்டறைக்கு வேறு என்ன மாதிரி கார்கள் வரும்?

 

“சுலைமான், அந்த ‘டபில்யூ டி 40 ஸ்பிரேயை’ஐக் கொண்டா” என்று காருக்கு அடியிலிருந்து கத்தினான். டபில்யூ டி 40ஐப் பீச்சினால் துரு தளரும். நட்டு கழன்று வரும்.

 

சுலைமான் அப்போதுதான் வேலை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தான். நல்ல பையன். இந்திய முஸ்லிம். படிப்பு வரவில்லை. பூமிபுத்ரா தகுதி பெறமுடியவில்லை. அவன் அத்தாவின் ரொட்டிக்கடையில் வேலை பார்த்தான். அத்தா ஒரு நாள் அவன் சிகரெட் பிடிப்பதைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். அன்று அவர் அடித்த அடியில் அங்கிருந்து ஓடிவந்துவிட்டான். ஆகவே இப்படி வேலை கற்றுத்தான் பிழைக்க வேண்டும்.

 

சுலைமான் குனிந்து ஸ்பிரே டின்னை நீட்டினான். “அண்ணே, உங்களுக்குப் போன்வந்திருக்காம். போர்மேன் கூப்பிட்டாரு!” என்றான்.

 

“யார்டா?”

 

“தெரியாதண்ணே, சொல்லல!”

 

டின்னை அங்கேயே வைத்துவிட்டு உடம்பை நெளித்து வெளியே வந்தான். கையை முடிந்த வரை எண்ணெய்ப் பசை போக துணியால் துடைத்தான். ஆபீஸ் அறைய நோக்கி நடந்தான்.

 

போன் தொட்டிலிலிருந்து வெளியே எடுத்து வைக்கப் பட்டிருந்தது. எண்ணைய்க் கைகளினால் பிசிபிசுத்துப் போகாமல் இருக்க பிளாஸ்டிக் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

 

“ஹலோ” என்றான்.

 

“வேலு, அம்மா பேசிறம்பா!”

 

“என்ன அம்மா, இந்த நேரத்தில? வேலையா இருக்கேனே!”

 

“தெரியும்பா. ஆனா அண்ணன் வந்திருக்குது. அதான் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வரச்சொல்லத்தான் போன் பண்ணேன். நல்ல கறியாக்கி வச்சிருக்கேன். சாயங்காலம் வந்திட்டேனா அண்ணனோட உக்காந்து பேசிச் சாப்பிடலாம்!”என்றார் அம்மா.

 

“ஏம்மா திடீர்னு? சொல்லாம கொள்ளாம?”

 

“ஏதோ வந்திருக்கு. நீயே வந்து கேட்டுக்க. சாயந்தரம் வந்திர்ரியா?”

 

“சரிம்மா. ஆனா ஆறு மணியாவது ஆயிடும்!”

 

“சரிப்பா, வா. குளிச்சிட்டு சாப்பிட சரியா இருக்கும்!”

 

போனை வைத்துவிட்டு போர்மேனிடம் விஷயத்தைச் சொன்னான். 5 மணிக்கெல்லாம் வீடு திரும்ப வேண்டும் என்றான். சீன போர்மேன். பல காலமாகப் பழக்கம். சில சமயம் நல்லவன். சில சமயம் நாய்.

 

“அந்த வீரா காரை மாத்திரம் பாத்திடு. இன்னைக்கே வேணுங்கிறான்க. முடிச்சிட்டுப் போ” என்றான்.

 

முடித்துவிடலாம். கருப்பெண்ணெய் ஒழுகுகிறது. திறந்து வால்வ் மாற்றினால் சரியாகிவிடும்.

 

மீண்டும் காருக்கடியில் சென்று படுத்த போது அண்ணன் ஏன் திடீரென்று வந்திருக்கிறான் என்ற யோசனை வந்தது.

 

அண்ணன் அவ்வப்போது வருகிறவன்தான். குவாலா லும்பூருக்குப் படிக்கப் போன காலத்தில் வீட்டு நினைவு வந்து அடிக்கடி பஸ்ஸில் வந்துவிடுவான். ஆனால் படித்துப் பட்டம் பெற்று நல்ல கம்பெனி ஒன்றில் பெரிய வேலையும் பெற்ற பிறகு அவன் வருவது குறைந்து விட்டது. இரண்டு மூன்று பஸ் ஏறி வரும் காலத்தில் அடிக்கடி வந்தவன் சொகுசான கார் வாங்கிய பிறகு வருவது குறைந்து போனது வேடிக்கைதான்.

 

அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் வருவான். உறவினர் வீட்டில் விசேஷம் என்றால் ஏதாகிலும் காரணம் சொல்லித் தவிர்த்து விடுவான். அனேகமாக உறவினர் ஒருவரோடும் ஒட்டுவதில்லை. அம்மாவிடம் பாசம். தம்பி மேல் மரியாதை கலந்த அன்பு. தங்கை மேல் அக்கறை. அதோடு சரி. பெரியப்பா, மாமா, அத்தை என்பதெல்லாம் தொட்டுக்கத் துடைக்க என்றுதான் இருக்கும்.

 

அண்ணன் நல்லவன்தான். ஆனால் பட்டமும் பதவியும் பெற்ற பிறகு அவனுடைய நடத்தையில் கொஞ்சம் அந்நியத் தனம் தெரியத் தொடங்கியது. குடும்பத்தில் அம்மாவைத் தவிர யாரிடமும் அவன் மனம் விட்டுப் பேசுவதில்லை. தம்பியிடம் ஏதாகிலும் விஷயம் இருந்தால்தான் பேச்சு. படிக்கின்ற தங்கையிடம் படிப்பைப் பற்றி விசாரிப்பதோடு சரி.

 

வேலை ஆரம்பித்த காலத்தில் மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அப்புறம் என்ன தேவை என்று விசாரித்து விட்டுத் தேவையானால் மட்டும் அனுப்புவான். அம்மா உடம்புக்கு நோய் என்றால் பகுதிப் பணமாவது அம்மாவுக்கு அனுப்பிவிடுவான். ஆனால் உறவினர் வீட்டு விசேஷங்கள், பரிசம், கல்யாணம், காதுகுத்து என்று குடும்பத்தோடு கார் பிடித்துப் போவதும் பெரிய அளவில் மொய் எழுதுவதும் அம்மாவுக்கு மிக முக்கியமாகத் தெரிந்தாலும் அவனுக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. ‘இப்படியெல்லாம் வீண் செலவு செய்யாதீங்க’ என்று அம்மாவைக் கண்டித்தும் இருக்கிறான்.

 

எல்லாப் பிள்ளைகளும் இப்படித்தான் போல. படித்துப் பட்டம் வாங்கி டை கட்டி வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டால் பழைய ஏழைக் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் பிடிப்பதில்லை. உறவுகள் பிடிப்பதில்லை. குடும்ப வைபவங்கள் வீண் செலவு. ஆனால் வேலுவுக்கு இதெல்லாம் முக்கியம். இதெல்லாம் இல்லாமல் அப்புறம் சொந்தபந்தங்கள் எப்படி ஒட்டும்? அப்புறம் என்ன குடும்ப வாழ்க்கை?

 

வேலு மூக்கைப் பிடித்துக் கொண்டு ஸ்ப்ரேயை இரண்டு முறை அடித்து நட்டைக் கொஞ்சம் அதில் ஊறவிட்டான். ரெண்டு நிமிடம் கழித்து ஸ்பானரை வைத்துத் திருகினான். அசையவில்லை. இரண்டு முறை ஸ்பானரால் நட்டின் தலையில் தட்டினான். பிறகு ஸ்பானரை இணைத்து மூச்சைப் பிடித்துக் கொண்டு திருகினான். நட்டு கொஞ்சமாக அசைந்தது. அப்புறம் கடகடவென்று கழன்றது.

 

அண்ணனைப் போல அல்லாமல் தன் வாழ்க்கை இப்படியே நட்டும் ஸ்பானரும் எண்ணெய்க் கசடு தோய்ந்த துணியுமாகத்தான் இருக்கிறது. மாலையில் உடம்பில் ஒட்டிய எண்ணெயையும் கசடையும் கழுவிக் குளிக்க முக்கால் மணி நேரமாகிறது. செய்யும் வேலையிலும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. நல்ல மெக்கானிக் என்ற பெயர் இருக்கிறது. இளவயதிலிருந்தே கைவேலைக்காரன். மின்சாரம், நீர்க் குழாய், சிறிய வீட்டு உபகரணங்கள் எல்லாம் ரிப்பேர் செய்வான். ஆனால் வேலைக்குப் போனதிலிருந்து வருமானம்தான் தேங்கிக் கிடக்கிறது.

 

பட்டறை முதலாளி எப்பவாவது சம்பளத்தை ஏற்றுவார். அதற்குள் விலைவாசிகள் அதற்கு மேல் போயிருக்கும். பட்டறை விடுமுறை நாட்களில் வெளி வேலைகள் பார்த்துக் கொஞ்சம் சில்லறை பார்ப்பான். அதுவும் அண்ணன் அவ்வப்போது அனுப்பும் பணமும்தான் தங்கச்சியின் கல்விச் செலவுக்கும் குடும்பத்துக்கும் ஆகிறது.

 

ஒரு கம்பத்தில் பலகை வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள். நீண்ட காலமாக அங்கேயே இருப்பதால் வசதிதான். வீட்டுக்காரர் நல்லவர். ஆனால் போன ஒரு வருடமாகவே வீட்டை விற்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். புதிதாக வீட்டை வாங்குபவர் என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.

 

இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுப்பதென்றால் வாடகை அநேகமாக இரண்டு மடங்காகி விடும். எல்லாக் குடும்பச் செலவுகளும் அதிகமாகி விடும். வேலு வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் வயது எட்டு ஆகிறது. மனித ஆயுளில் 80 என்று சொல்லலாம். மெக்கானிக்காக இருப்பதால் பழைய பாகங்களை வாங்கித் தானாக ஒழுங்குபடுத்தி ஓட்டிக்கொண்டிருக்கிறான். எத்தனை நாளைக்கு?

 

மோட்டார் சைக்கிளையும் அதிக நாட்களுக்கு நம்ப முடியாது. அண்ணனையும் ரொம்ப நாட்களுக்கு நம்ப முடியாது. இனி அவன் காதலிப்பான்; கல்யாணம், விருந்து என்று ஆடம்பரமாக, அவன் அந்தஸ்துக்கு ஏற்ப செய்வான்; வீடு வாங்குவான். தலை நகர் செலவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அண்ணி என்று ஒருத்தி வந்துவிட்டால் அப்புறம் அவன் சிந்தனை எப்படி மாறுமோ சொல்ல முடியாது.

 

எப்படியோ அண்ணன் நல்லா இருந்தால் சரி. அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பித்தானே வேலு தன் வாழ்க்கையையும் படிப்பையும் விட்டுக் கொடுத்தான்!

 

வேலுவுக்கு 15 வயது இருக்கும்போது இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். 16 வயதில் அண்ணனும் இடைநிலைப்பள்ளியில்தான் இருந்தான். தங்கை ஆரம்பப்பள்ளியில். அப்பனின் சம்பளத்தில் அவர்கள் வாழ்க்கை நடந்தது. ஆனால் அக்கறையுள்ள அப்பனில்லை. ஒரு வீட்டுக் கண்டிராக்டரிடம் செங்கல் பதித்துச் சுவர் கட்டும் வேலையில் இருந்தான். கடினமாக வேலை செய்தால் பணம் வரத்தான் செய்தது. ஆனால் அவன் சம்பளத்தில் பாதி அவனுடைய குடிக்கும் அவன் கூட்டாளிகளின் குடிக்கும் போனது. அம்மா ஒரு சூப்பர் மார்கெட்டில் கேஷியராக வேலை பார்த்துக் கொஞ்சம் சம்பாதித்தார். அப்படிக் கிடைக்கும் பணத்தில்தான் இழுபறியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.

 

இந்த நிலையில்தான் ஒரு நாள் அப்பன் மாரடைப்பில் செத்துப் போனான். அவனைக் கொண்டு எரித்து விட்டுக் குடும்பம் ஆதரவற்றுத் தவித்தது. அண்ணன் தன் படிப்பு என்னாகுமோ என்று புலம்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் வேலு அந்த முடிவை எடுத்தான்.

 

“அம்மா, நான் படிச்சது போதும். வேலைக்குப் போறேம்மா!”

 

அம்மா அவனைக் கோபமாகப் பார்த்தார். “நீ ஏண்டா வேலைக்குப் போகணும்? நான் ஒருத்தி இல்ல? உங்களக் காப்பாத்த மாட்டேன்?”

 

“முடியாதம்மா. நீங்க ஒருத்தர் வேலை பார்த்து மூணு பிள்ளைகளைப் படிக்க வச்சிக் காப்பாத்த முடியாது. நானும் கொஞ்சம் பணம் கொண்டு வந்தாதான் குடும்பம் ஓடும்!”

 

வீராப்பாகப் பேசிவிட்டாலும் அம்மாவுக்கும் குடும்ப யதார்த்தம் புரிந்தது. ஆனால்… வேலைக்குப் போய்தான் ஆகவேண்டும் என்றால் மூத்தவன் அல்லவா போக வேண்டும்? அவன் உம்மென்று உட்கார்ந்திருக்க இவன் ஏன் முந்திக் கொள்ளுகிறான்?

 

“வேலு, ஒனக்கு ஏண்டா இந்த விதி? வேலைக்குப் போய்த்தான் ஆகணும்னா இதோ உன் அண்ணந்தான் போகணும். அவந்தான் குடும்பத்துக்கு மூத்தவன்!”

 

“அம்மா, அப்படிப் பேசாத!” வேலு அவளை இடை மறித்தான். “ஏன் அப்படி சொல்றேன்னா, அண்ணந்தான் பள்ளிக்கூடத்தில நல்லா படிச்சி ஏயும் பியும் எடுக்கிறான். எனக்கு சீக்கு மேல ஏற மாட்டெங்குது. எனக்கும் அவனுக்கும் ஒரு வயசுதான வித்தியாசம்? இதில என்னா சின்னவன், பெரியவன்? அவன் படிக்கட்டும். படிச்சி வந்து நாளக்கி நம்பளக் காப்பாத்தட்டும். அது வரைக்கும் நான் வேலைக்குப் போறேன். எனக்குக் கொஞ்சம் கைத்தொழில் வருது. எங்கியும் வேலைக்கு எடுத்துக்குவாங்க!”

 

அண்ணன் ஒன்றும் சொல்லாமல் திரு திருவென்று விழித்த படியிருக்க, வேலு கார் மெக்கானிக் பட்டறையில் அப்ரெண்டிசாகச் சேர்ந்தான். அப்போது பிடித்த ஸ்பானர்தான் இப்போதும் கையில். காலம் அப்படியே ஓடிவிட்டது. அண்ணன் நிமிர்ந்துவிட்டான். இவன் குனிந்தவன் இன்னும்….

 

****           ****         ****

 

வீட்டுக்கு முன்னால் நின்ற புதிய கார் அண்ணனுடையது என்று தெரிந்தது. ஹோண்டா சிவிக். பளபளக்கும் வெள்ளிக் கலரில் இருந்தது. ஆனால் அந்தப் பழைய வீட்டுக்கு முன்னால் அது பொருத்தமில்லாத அந்தஸ்தோடு நின்று கொண்டிருந்தது.

 

முகமன்கள் முடிந்த பின்னர் வேலு குளித்துவிட்டு வந்தான். எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

 

அம்மா ரொம்பச் சிறப்பாகச் சமைத்திருந்தார். வீட்டில் வளர்த்த கோழிகளில் ஒன்று துண்டுகளாகக் குழம்பில் மிதந்தது. ஏற்கனவே ப்ரிட்ஜில் வைத்திருந்த ஆட்டு ஈரல் எடுத்துப் பிரட்டியிருந்தாள். முட்டைக்கோஸ், பயிற்றங்காய், வெள்ளரி என மூன்று நான்கு மேங்கறிகள்.

 

“ரொம்ப நாளாச்சிம்மா இப்படி சாப்பிட்டு!” என்றான் அண்ணன்.

 

“அடிக்கடி வந்தா அடிக்கடி சாப்பிடலாம். ஆடிக்கொரு தரம், அமாவாசைகொரு தரம் வந்தா எப்படி?” என்று அம்மா செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.

 

“அடிக்கடி வந்தா இப்படி நீ வக்கணையா ஆக்கிப் போட மாட்டம்மா! அதோட வீண் செலவு!”

 

சாப்பிட்ட பின் அண்ணன் தான் வாங்கி வந்திருந்த சில பொருள்களைக் கொடுத்தான். அம்மாவுக்கு ஒரு சேலை, தம்பிக்கு ஒரு ஜீன்சும் டி ஷர்ட்டும். தங்கைக்கும் ஒரு ஜீன்ஸ், தகுந்த பிளவ்ஸ்.

 

“காடி புதுசா?” என்று வேலு கேட்டான்.

 

“ஆமா புதிசு. மிந்தி வச்சிருந்தேன்ல மைவி? ரொம்ப தொந்திரவு குடுத்திச்சி. ஒரு மூணு மாசத்துக்கு மிந்தி மாதிட்டேன்!” என்றான். கொடுத்து வைத்தவன். தன் ஹோண்டா மோட்டார் சைக்கிள் எட்டு வருஷமாக ஓடி நைந்து கிடக்கிறது. ஒட்டுப் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

“சரி கார் வாங்கியாச்சி! இனி எப்ப வீடு வாங்கப் போற?” என்று கேட்டான் வேலு. கேள்வியில் கொஞ்சம் நஞ்சும் இருந்தது.

 

“அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன் வேலு. டெப்போசிட் கட்டி லோன் ஏற்பாடு பண்ணிட்டேன். லோன் வந்தவொண்ண வீடு கைக்கு வரும். அப்புறம் மாசத் தவணைதான்!”

 

“கோலா லம்பூர்லியா? வெல எக்கச்சக்கமா இருக்குமே?”

 

“இல்ல. வெளிய. சுமாரான வெலைக்கு வந்திச்சி. வாங்கிப் போட்டேன்!” வேலு அதற்கு மேல் கேட்கவில்லை.

 

குடும்பச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அக்கம் பக்கத்து உறவினர்கள் செய்தியை யாராருக்குத் திருமணம், யார் வீட்டில் பிள்ளை பிறந்திருக்கிறது, யாரார் நோய் வாய்ப்பட்டார்கள் என்று அம்மா விளக்கமாக எடுத்துக் கூற அண்ணன் அக்கறை இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“உன்னோட வசந்தா பெரியம்மா மூணாவது மகளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்! குவாந்தான்ல. குடும்பத்தோட வரச் சொல்லியிருக்காங்க!”

 

அண்ணன் கொஞ்சம் முறைத்துப் பார்த்தான். “ஏம்மா? போன ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்கும் இங்கிருந்து குடும்பத்தோட காடி பிடிச்சிப் போய் வந்தீங்க. இப்ப மூணாவது கல்யாணத்துக்கும் அப்படியா? யாராவது ஒருத்தர் குடும்பத்து சார்பில போய் மொய்யெழுதினா போதாதா?”

 

அண்ணன் மாறவில்லை என்று தெரிந்தது. இவனுக்கு இவன் வாழ்க்கை ஒன்றுதான் முக்கியம். சுயநலத்தில் ஊறிவிட்டான். குடும்பமோ, உறவினர்களோ முக்கியமில்லை. அந்நியப் படுதல் எப்பவோ ஆரம்பமாகிவிட்டது. இனி ஒட்டாது.

 

“கோவிச்சுக்குவாங்கப்பா! அப்பா இறந்தபோது அவ்வளவு தூரத்திலிருந்து எல்லாரும் காடி பிடிச்சி வந்தாங்களா இல்லையா? நாளைக்கு நம்ம வீட்டில கல்யாணம் காட்சின்னா நமக்கு நாலு ஆளுங்க வேணாமா?”

 

அண்ணன் பதில் சொல்லவில்லை. அம்மா அதற்கு மேல் பேச மனமில்லாமல் பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு கழுவப் போனார். தங்கையும் உதவிக்குப் போனாள். அண்ணனும் அவனும் தனித்திருந்தார்கள்.

 

அண்ணன் சொன்னான்: “வேலு, இப்படியெல்லாம் அநாவசியமாச் செலவு பண்ண வேணாம். அம்மாவுக்குச் சொல்லு! குடும்பம் முன்னுக்கு வரணுமின்னா கொஞ்சம் சிக்கனமா இருக்கணும். சேமிப்பு வேணும்.”

 

வேண்டும்தான். தம்பியின் எதிர்காலத்தைப் பறித்துக் கொண்டு முன்னுக்கு வந்தவனுக்கும் கொஞ்சம் குடும்பப் பொறுப்பு வேண்டும். அக்கறை வேண்டும். இல்லாமல் எப்படி குடும்பம் முன்னுக்கு வரும்? வேலுவுக்கு உள்ளூற எரிந்தது.

 

மௌனம் நிலவியது. வேலு சாப்பிட்டு முடிந்ததும் எப்போதும் ஒரு சிகரட் பிடிப்பான். அது அண்ணனுக்கும் தெரியும். ஆனால் இப்போது பிடிப்பதற்கு மிகத் தயக்கமாக இருந்தது. என்ன சொல்வானோ தெரியாது. ‘இதெல்லாம் கெட்ட பழக்கம், வீண் செலவு!’ என்றால் என்ன செய்வதென்று தெரியாது. ஆசையை அடக்கிக்கொண்டு அண்ணனிடம் பேச விருப்பமில்லாமல் உட்கார்ந்திருந்தான்.

 

அண்ணன் மௌனத்தை உடைத்தான். “வேலு, என் கம்பெனியில எனக்கு ஒரு பிரமோஷன் குடுத்திருக்காங்க. அதோட வேலையையும் அவங்க தலைமையகத்துக்கு மாத்திட்டாங்க!”

 

“எங்க?”

 

“ஆம்ஸ்டர்டாம்”

 

தோதாகப் போய்விட்டது. இனி இந்தக் குடும்பத்து தொட்டுத் தொடுப்பு ஒன்றும் வேண்டாம். தூரமாகப் போய் ஏகாந்தமாக வாழலாம். காலத்தில் கல்யாணம் கட்டிக் கொள்ள ஒரு வெள்ளைக்காரிச்சிக் கிடைப்பாள். நினைத்தவாறு பேசாமல் இருந்தான்.

 

“என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கிற?”

 

“இல்ல, நீ ரொம்பக் குடுத்து வச்சவன். ஆனா எங்க வாழ்க்கைய நெனச்சேன்…!”

 

“ஆமா வேலு. நானும் உங்க வாழ்க்கையதான் நெனைக்கிறேன். இப்படியே இருந்தா முடியாது. மாத்தி அமைக்கணும்!”

 

“எப்படி மாத்திறது? உன்னப் போல எனக்கு படிப்பா உத்தியோகமா? என்ன நடந்திச்சின்னு மறந்திட்டியா?” வேலுவின் வார்த்தைகளில் கோபம் கொப்புளித்தது.

 

அண்ணன் அமைதியாகச் சொன்னான்: “எப்படி மறக்க முடியும் வேலு? என் வாழ்க்கை நீ கொடுத்த வரம். அத நான் மறப்பேனா?”

 

“சொன்னா சரியாப் போச்சா? உனக்கு கார், வீடுன்னு வாங்கிட்ட. எங்களுக்கு என்னா செஞ்ச?”

 

“நான் செய்றது இருக்கட்டும். நீ இத்தனை நாள் வேல செஞ்சி என்ன வச்சிருக்கே?” மாற்றுக் கேள்வி வேலுவின் கோபத் தீக்கு மேலும் எண்ணெய் ஊற்றியது.

 

“ஏன், நான் ஒண்ணுக்கும் உதவாத உதவாக்கரன்னு நெனச்சிட்டியா? அம்மா வெறுங் களுத்தோட வெளிய தெருவுக்குப் போக முடியாம கிடந்தாங்க. நான் உழைச்ச காசில அம்மாவுக்கு எட்டு பவுன்ல ஒரு சங்கிலியும் தங்கச்சிக்கு நாலு பவுன்ல ஒரு சங்கிலியும் செஞ்சிப் போட்டேன்! அம்மாவக் கூப்பிட்டுக் கேட்டுப் பார்!”

 

சொல்லி முடிப்பதற்கு முன் அம்மா சங்கிலியைக் கொண்டு வந்து அண்ணன் கையில் கொடுத்தார். “பாரு!” என்றார்.

 

“ஏன் வேலு, இதுதான் இப்ப ரொம்ப முக்கியமா?” என்று கேட்டான் அண்ணன். திமிர் இன்னும் அடங்கவில்லை.

 

அம்மா முந்திக் கொண்டு பேசினார்: “அப்புறம் இல்லியா? சொந்தக்காரங்க சடங்குக்குப் போகும் போது, இப்படி மூளியாப் போனா யாருக்கு வெக்கம்? இப்படி ரெண்டு ஆம்பிளப் பிள்ளைங்கள பெத்து ஆளாக்கி வச்சிருந்தும் பாரு மூளியா வர்ரான்னு பேசுனா யாருக்கு வெக்கம்?”

 

“அது கெடக்கட்டும் அம்மா! இப்படி வீராப்பா பேசிறானே, இவன் என்ன செஞ்சான்னு கேட்டுச் சொல்! படிக்க வச்சி ஆளாக்கினதுக்கு என்ன கைமாறு செஞ்சான் குடும்பத்துக்கு?” வேலு கொதித்துப் போயிருந்தான்.

 

அண்ணன் தலை குனிந்து இருந்தான். பின்னர் நிமிர்ந்தான். “சொல்றேன் கேளு வேலு. நானும் உங்களுக்கு மாசாமாசம் நிறையப் பணம் அனுப்பியிருக்க முடியும். ஆனா அனுப்பினா இப்படித்தான் சொந்தக்காரங்க, சடங்கு, சாங்கியம்னு ஊதாரித்தனமா செலவு பண்ணியிருப்பிங்க!”

 

“ஆமா, நாங்க ஊதாரிங்கிறதனால நீயா எல்லாத்தையும் சேத்து ஒன்ன மட்டும் பாத்துக்குவ, இல்ல? வீடும் காரும் ஒனக்காகவே வாங்கிக்குவ இல்ல? ரொம்ப கெட்டிக்காரண்டா நீ!” என்றார் அம்மா.

 

“அம்மா, இதோ கேட்டுக்குங்க! வீடு வாங்கினேன்னு சொன்னேனில்ல, அது எனக்காக வாங்கின வீடு இல்ல. இதோ நீங்க இருக்கிற இந்த வீடுதான். உங்களுக்குத்தான். அச்சாரம் கொடுத்து உறுதிப்படுத்தி பேங்கில லோனும் எடுத்திட்டேன். அதுக்கு வேண்டிய இன்ஸ்டால்மெண்ட் நானே கட்டிடுவேன். ஆனா எம் பேர்லதான் இருக்கும். அதுதான் சொத்துக்குப் பாதுகாப்பு!”

 

அம்மா வாய் பிளந்து நின்றார்.

 

“வேலு, இந்தக் காடியும் இனி உனக்குத்தான். இந்தா சாவி. வச்சிக்க. ஆனா காடி என் பேர்லதான் இருக்கும். அதுதான் பாதுகாப்பு!”

 

வேலுவும் வாய் பிளந்து நின்றான். பிறகு கேட்டான். “அப்ப உனக்கு?”

 

“நான் போற இடத்தில எனக்கு கம்பெனி கார் கொடுப்பாங்க. நாளைக்குக் காலைல என்ன கொண்டு போய் பஸ் ஸ்டாண்டில விட்டிரு. நான் எக்ஸ்பிரஸ்ல கே எல் போயிடுவேன்!”

 

“பஸ்ஸிலியா?”

 

“ஏன்? போக மாட்டேன்னு நெனச்சியா? வசதி இருக்கும்போது கார். இல்லைன்னா பஸ். எல்லாத்துக்கும் நான் தயார்!”

 

வேலுவின்தலை குனிந்தது.

 

“இன்னும் கேளு வேலு. உன் பேங்க் கணக்கில 25,000 ரிங்கிட் போட்டிருக்கேன். அது இந்த வீட்ட திருத்திக் கட்டிறதுக்காக. உனக்குத்தான் வீடு கட்டிற வேலை தெரியுமே! உன்னோட உழைப்பைப் போட்டுச் செஞ்சா கொறஞ்ச செலவில வீட்ட அழகா மாத்தலாம். அதில இருந்து மிச்சம் பிடிச்சா ஒரு கடய வாடகைக்கு எடுத்து சின்னதா வொர்க்‌ஷாப் ஆரம்பிக்கலாம்!”

 

“சொந்தமாவா?” வேலு நம்பிக்கையில்லாமல் கேட்டான்.

 

“செய்யலாம் வேலு. பணம் போதாதுன்னா இதோ…” அம்மா கொடுத்த எட்டுப் பவுன் சங்கிலிய அவன் கையில் போட்டான். “இதயும் வித்து செஞ்சிக்க. அம்மாவுக்கு ஒரு சின்ன செயின் போதும். சொந்தக்காரங்க உன் வாழ்க்கையைதான் மதிப்பாங்க, உன் ஆபரணத்தை இல்ல! இன்னக்கி அம்மா கழுத்தில எட்டுப் பவுன் சங்கிலியப் பாத்தாங்கண்ணா நாளைக்கு அவங்க பத்துப் பவுன் போட்டுக் காட்டுவாங்க! அப்ப என்ன பண்ணுவ?”

 

அதற்கு மேல் அவன் பேசவில்லை. அவன் சொன்னதெல்லாம் டபில்யூ டி 40 எண்ணெய் போலப் பெருகி தன் மூளையின் இறுகிய நட்டுக்களை தளர்த்திக் கொண்டிருப்பது போல வேலு எண்ணிப் பார்த்தான்.

 

அறைக்குள்ளிருந்து தங்கை வெளியே வந்தாள். அவள் கையில் அவளது நாலு பவுன் சங்கிலி இருந்தது. “இதையும் கொடுத்திடண்ணே!” என்று அண்ணன் கையில் கொடுத்தாள்.

 

(முடிந்தது)

Series Navigation
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *