ஓரமெல்லாம் மஞ்சள் பூசியிருந்த இரண்டு ஜாதகங்களை சொர்ணம்மாள் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
“ நான் போன் பண்ணி பேசட்டுமா? என்றார் ராஜியிடம். அவர் குரலில் ஒரு அதீத ஆவல் தெரிந்தது.
“ இது ஜாதகப் பொருத்தம் பார்த்து பண்ணிக்கும் சாதாரண கல்யாணம் இல்லைம்மா. நான் சத்யாவோட பேசணும். ரமாவோட கல்யாணம், சித்ராவோட வேலை உத்திரவாதம் இவ்வளவு இருக்கு. உன்னை என்ன பண்றது? உனக்கு ஒரு வழி பண்ண வேண்டாமா? நீ என்னடான்னா சின்ன பொண்ணு மாதிரி குதிக்கிற. பெரிப்பாக்கு தகவல் சொல்ல வேண்டாமா? “
அப்பாவின் உறவுக்காரர்கள் என்றால் அவருடன் பிறந்த விநாயகமூர்த்தி பெரியப்பா மாத்திரம்தான் இவர்கள் குடும்பத்தின் மேல் அக்கறை உள்ள உறவுக்காரர். மற்றவர்கள் எல்லாம் பொது விசேடங்களிலும் குலதெய்வ வழிபாடுகளின்போதும் மேலுக்கு விசாரித்துக் கொள்வதோடு சரி. பெரியம்மாவும் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து இங்கே ஒரு வரன் இருக்கு, அங்கே ஒரு ஜாதகம் இருக்கு என்று கூறுவார். ராஜி வழக்கம் போல ஒரு மழுப்பலான சிரிப்புடன் பதில் எதுவும் கூறாமல் நழுவி விடுவாள்.
“ என்னை என்னதான் செய்ய சொல்ற? அவன் கொடுத்த ஜாதகமும் உன்னோட ஜாதகமும் பத்துக்கு எட்டு பொருத்தம் சரியா இருக்குன்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டார். நீதான் இப்படி முரண்டு பிடிக்கிற. உன்னிஷ்டம்னு இனி விடறதா இல்லை. என்ன பண்ணட்டும் ? என்றார் சொர்ணம்மாள்.
“ அவன் நம்பருக்கு டயல் பண்ணி என்கிட்டே கொடு. நான் பேசிக்கிறேன். “
“ ரொம்ப ஓவரா தெரியலை உனக்கு ? “எனக் குறிக்கிட்ட சித்ரா அம்மாவிடமிருந்து ரிசீவரை வாங்கி சத்யசீலன் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு அனுப்பினாள்.
“ ஹலோ ! நான் ராஜேஸ்வரியோட தங்கை சித்ரா பேசறேன் “
“ பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்.சித்ரா “ என்றான் சத்யசெலன் மறுமுனையிலிருந்து.
சித்ரா முகம் சிவந்து “ நன்றி “ என்றாள்.
“ அக்காவோட ஜாதகத்தில் அக்காவோட பிறந்த தேதிதான் இருக்கும். தங்கைகளோட டேட் ஆப் பார்த்துமா போட்டிருக்கும்? “ என்று ஆவலை அடக்கமுடியாமல் சித்ரா கேட்டாள்.
“ அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்தப்ப மாச காலண்டரில் மே 13ந்தேதியை சுழிச்சு சித்ரா பிறந்த தினம்னு போட்டிருந்ததை பார்த்தேன். மத்தபடி எனக்கு மந்திரம் தந்திரம் தெரியாது மிஸ்.சித்ரா “ என்றான்
“ அக்கா உங்க கூட பேசணுமாம். “
“ வெல்கம்”
ரிசீவரின் வாயை மூடியபடி “ பலே கில்லாடிக்கா இந்த சத்யா “ என்று ரிசீவரை அக்காவின் கையில் கொடுத்தாள்.
“ ஹலோ “ என்றாள் ராஜி கனமான குரலில்.
“ கொஞ்சம் சிரிச்சுகிட்டே ஹலோ சொல்லக் கூடாதா? “ என்றான் சத்யசீலன்.
“ முன்பின் தெரியாதவங்க கிட்ட எப்படி சிரிக்க முடியும்? “
“ அதான் அன்னிக்கு வந்து உங்கவீட்டில் நின்னு அறிமுகமாகி வாங்கி கட்டிக்கிட்டு போய்ட்டேனே “
“ உங்ககிட்ட ஸாரி கேப்பேன்னு நினைக்காதீங்க.”
“ கேட்டாதான் ஆச்சரியப்படுவேன் “
“ உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் “
சத்தியசீலன் உடனே அமைதியானான். குரலில் தெரிந்த எள்ளலும் கிண்டலும் மாயமாக மறைந்து போயின. அவனது மௌனம் கூட சிறிது கண்ணியமாக இருந்தது.
“ வீட்டுக்கு வாங்களேன். நேத்துதான் என் தங்கச்சிக்கு வளைகாப்பு சடங்கு முடிஞ்சிச்சு. உறவுமுறை எல்லாம் அநேகமா கிளம்பிட்டாங்க.என் சகோதரிங்க மட்டும்தான் இருக்காங்க. தனியப் பேசணும்னாலும் மொட்டைமாடி இருக்கு. “
“ முகவரியை சொல்லுங்க “
“ நீங்க சின்னத்திருப்பதி பஸ்ஸ்டாப்பில் வந்து நில்லுங்க நான் வந்து கூட்டிகிட்டு போயிடுவேன் “ என்றான்.
இருசக்கர வாகனத்தில் ராஜி போய்நின்றபொழுது சத்யசீலன் ஒரு மோட்டார்பைக்கில் இருந்தபடி பேருந்துவரும் வழியை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
“ அன்னிக்கு ஒரே ஒருநாள் பார்த்தமுகத்தை நினைவில் வச்சுக்கிட்டு உங்களை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சு கூட்டிக்கிட்டுபோறதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன். நல்லவேளை நீங்களே டூவீலரில் வந்துட்டீங்க “ என்றான்
“ பஸ்ல வந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க ? என்ற கேள்வியை ராஜி முடிப்பதற்குள் அவனருகில் நின்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டியிடம் “ ராமன் ஆட்டோ வேணாம். அவங்களே வண்டியில் வந்திருக்காங்க. நன்றி “ என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான்.
மிகப்பெரிய மாளிகை இல்லை அவன் வீடு. நான்கு சென்ட் நிலத்தில் சின்ன சின்ன அறைகளுடன் கூடிய தனி வீடு.
“ வாம்மா “ என்று அழைத்த வயதான பெண்மணி அவனுடைய தாயாராக இருக்க வேண்டும். செயற்கையற்ற சிரிப்பு .உள்ளே கூடத்தில் தொலைகாட்சிமுன்பு அமர்ந்திருந்த மூன்று பெண்களும் அவனது சகோதரிகளாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் வயிறு மட்டும் பெரியதாக இருந்தது. அவள் கைகளில் நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள்.
“ தம்பி உன்னை பத்தி சொல்லிச்சு. “ என்றார் அந்த வயதான பெண்மணி.
“ எங்கம்மா” என்றான் சத்தியசீலன்.
“ வணக்கம்மா “
“ ஒக்காரும்மா “
ராஜேஸ்வரி கூடத்தில் காலியாக இருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.
மற்ற பெண்கள் இணைக்கப் புன்னகையை வெளிப்படுத்தினர். வளைகாப்பு பெண் மட்டும் எழுந்து ராஜேஸ்வரியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“ எத்தனாவது மாசம் ? ‘
“ ஏழு “
“ இருப்பியா? ஊருக்குப் போயிடுவியா ?”
“ ஆறுமாசம் இங்கதான் டேரா “
“ தலைச்ச்சனா ? “
“ கலியாணம் முடிஞ்சே ஒன்பது மாசம்தான் ஆகுது என்று சொல்லும்பொழுதே அந்தப்பெண்ணின் முகத்தில் நாணம் சேர்ந்துவிட்டது.
“ யாருக்கு குறை வச்சது எங்கண்ணன் ? அண்ணனுக்கு மேல ஒரு அக்கா. கீழ ரெண்டு தங்கச்சி. ஒரு தம்பி. அப்பாவுக்கு மில்லுல கணக்கு எழுதுறவேலை . நல்ல வரும்படி இல்லை. அண்ணன் டிப்ளமாதான் படிச்சிச்சு. எனக்கு ஏழுவயசுலருந்து எங்கண்ணன் வேலைக்குபோகுது. ரெண்டு மூணு மில்லில வேலை பார்த்துச்சு. சரிப்படலை. வைராக்கியமா வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போச்சு.ரியாத், தோஹா,கத்தார்னு சுத்திட்டு வரும். சேர்த்துட்டுவர்ற பணத்தை அக்கா தங்கச்சிங்க கலியாணத்திற்கு செலவு பண்ணிடும். தனக்குன்னு இதுவரை ஒத்தபைசா சேர்த்து வச்சுக்கலை. “ என எவ்வித அனுமதியின்றி அவள் பேசியது ராஜேஸ்வரிக்கு ஆச்சரியமளித்தது.
“ அடடா ! நான் என் கடைசி தங்கையை கூட்டிட்டு வராம போயிட்டேனே “ என்றாள் ராஜேஸ்வரி.
“ எதுக்கு ? “
“ நீ உன் அண்ணனின் பெருமைகளை அடுக்கினா மாதிரி அவள் என் பெருமைகளை அடுக்கியிருப்பா “
அதன்பிறகு அந்த வளைகாப்பு பெண் வாய் திறக்கவில்லை.
“ மீரா யாரு ? “ என்று மற்ற இரண்டு பெண்களைப் பார்த்து ராஜி கேட்டாள்.
“ நான்தான் “ என்றாள் ஒரு பெண்.
“ ரங்கம்மா டீச்சர் கிட்ட நீங்கதான் பாட்டு கத்துகிட்டதா? “
“ ஆமாம் நீங்களும் அவங்க ஸ்டூடென்ட்தானே ? “
“ ஆமாம். பாவம் ரங்கம்மா டீச்சர் இன்னும் கொஞ்சகாலம் கூட உசிரோட இருந்திருக்கலாம். “
“ நீங்களும் ரங்கம்மா டீச்சரோட ஸ்டூடன்ட்னு தெரிஞ்சுகிட்டப்பறம் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு “
“ டீச்சர்தான் உங்க அண்ணனைப் பத்தி சொன்னாங்க. டீச்சர் கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிடுவீங்க போல”
“ என் தங்கச்சி பானு சொன்னதைத்தான் நான் திருப்பியும் சொல்ல விரும்பறேன். எங்க நாலு பேருக்குமே எங்களுக்காக அண்ணன் கலியாணம் கட்டிக்காம இருக்கு என்பது ஒரு பெரிய கவலையா மனசை அரிச்சுகிட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. நீங்க சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னா போதும் ரொம்ப சந்தோஷப்படுவோம் “ என்றாள் ஆத்மார்த்தமாக.
“ டிபன் சப்பிடறியாம்மா? “ என்றார் சத்தியசீலனின் தாயார்.
“ ஒரு நாளைக்கு ரெண்டு வேளை டிபன் சாப்பிட மாட்டேன்மா “ என்று ராஜி சிரித்தபடி பதில் கூறினாள்.
சத்தியசீலனின் முகம் மாறியது.
“ பேசணும்னு சொன்னீங்களே “என்றான்.
“ மொட்டைமாடியில் போய் பேசலாம் “ என்றாள் ராஜேஸ்வரி.
மேலே வெறும் மொட்டை மாடி மட்டும்தான். மாடியிலிருந்து பார்த்தால் மன்னார்பாளயம், வீராணம் வரையிலான வயல்வெளிகளும் தோப்புகளும் பசுமையாக தெரிந்தன.
“ ரொம்ப ஜாக்கிரதையான பெண்ணா நீங்க ? “என்றான் சத்யா.
“ எங்கம்மா இதை வேற மாதிரி சொல்லுவாங்க “
“ எப்படி ? ‘
“ தடித்தனம் அப்படிம்பாங்க “
“ பயப்படறீங்களா? “
“ எதற்கு? “
“ அடுத்தவங்க உங்களை ஏமாத்திடுவாங்களோன்னு “
“ பயம் இல்லை. அனாவசியமா நாம ஏன் தாழ்ந்து போகணும் என்னும் காம்ப்ளக்ஸா கூட இருக்கலாம். “
“ ஈகோ ஜாஸ்தியா உங்களுக்கு ? “
“ ஈகோன்னு முழுசா சொல்ல முடியாது. ஆனாலும் அப்பாவின் உயிர் இழப்பீட்டால் கிடைச்ச உத்தியோகம் மூலமா வரும் வருமானம் முறையா என் வீட்டினரை போய்சேரவேண்டும் என்கிற பொறுப்பும் கவலையும் எனக்கு அதிகம். சுயநலம் இல்லாத ஈகோ நல்ல விஷயம்தானே?”
“ அதனாலதான் இவ்வளவுநாள் கலியாணம் வேண்டாம்னு இருந்தீங்களா? “
“ அப்படி இல்லை. அப்பாவின் சேமிப்பு முழுவதும் அக்காவின் கலியாணத்திற்கே சரியா போச்சு. பொண்ணு வீட்டு கல்யாணத்தில் எவ்வளவு செலவாகும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம் . “
அவன் சிரித்தான்.
“ அரசு உத்தியோகம் . ரெண்டு தங்கச்சிங்க. எவ்வளவுன்னு சேமிக்க முடியும்? ரெண்டு தங்கச்சிங்க கலியாணத்தை பத்தி யோசிச்சா போதும் அன்னிக்கு ராத்திரி தூக்கம் போயிடுது எனக்கு. நான் கலியாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா என்மாசச்சம்பளம் இல்லாம எப்படி குடித்தனம் பண்ணுவாங்க? எனக்குக் கீழ உள்ளவங்ளுக்கு சீக்கிரமா ஒரு கலியாணம், கடைசி தங்கைக்கு ஒரு கவர்ன்மென்ட் போஸ்டிங் வாங்கிக் கொடுத்துட்டு எங்கம்மாவோடயே இருக்கலாம்னு இருக்கேன். உங்களை கையெடுத்து கும்பிட்டு கேக்கிறேன். என் கல்யாண விஷயத்தில் மேலு முனைப்பு காட்டவேண்டும். ப்ளீஸ். “
ராஜேஸ்வரி முகத்தை திருப்பிக் கொண்டாள். இருந்தாலும் அன்னியமனிதன் முன்பு கண்ணீர் வராமல் இருக்க அவள் பிரயத்தனப் படுவது தெரிந்தது.
” ப்ளீஸ் அழாதீங்க” அவனால் ஆறுதல் மட்டும்தான் கூற முடிந்தது.
அவள் முகத்தை சேலை தலைப்பினால் துடைத்துக் கொண்டாள்.
“ நீங்க ஷார்ப்பா கேட்டதுமாதிரியே நானும் ஒண்ணு கேக்கறேன். உரியவரன் கிடைச்சும் கலியாணம் பண்ணிக்க முடியலேன்னு அழறீங்களா? கலியாணம் பண்ணிக்கிட்டா பாரேன் அவ காரியத்தைமட்டும் பார்த்துட்டு போயிட்டான்னு அடுத்தவங்க ஒரு சொல் சொல்லிடப் போறாங்களேன்னு அழறீங்களா? “
ராஜேஸ்வரி பதில் எதுவும் சொல்லாமல் அவனை முறைத்துப் பார்த்தாள்.
மேற்கொண்டு பேசுவதற்கு முன்பு அவன் தாயரிடமிருந்து அழைப்பு வந்தது.
“ சத்யா ! சமையல்காரர் பாக்கி பணத்துக்கு வந்திருக்காரு. கீழ வரியா?”
“ நேத்து பங்க்ஷனுக்கு பணபட்டுவாடா. இங்கியே இருங்க நான் பத்து நிமிஷத்தில் வந்துடறேன். “ என்று கீழே இறங்கிப் போனான்.
அவன்போன கையேடு அவன் தாயார் மேலே ஏறிவந்தார்.
“ ஒத்தைக்கு ஏம்மா நிக்கிற? “ என்றார்.
“ இல்ல உங்க பிள்ளை வந்திடறேன்னு சொன்னாரு. “
“ என் பிள்ளைன்னு பெருமைக்கு சொல்லவரலேம்மா. “ என்று பலமான பீடிகையுடன் அவர் ஆரம்பித்தார்.
“ சொல்லுங்க “
“ இப்படி ஒரு பொறுப்பான பிள்ளையை பார்க்கவே முடியாதும்மா. மூணு பொம்பளை பிள்ளைகளை கட்டி கொடுத்திருக்கோம். பொண்ணுங்க படிச்சா என்ன ? வேலைக்கு போனா என்ன? எந்த பொண்ணோட கல்யாணம்தான் பெற்றோர் கண்களில் ரத்த கண்ணீரை வரவழைக்காம இருந்திருக்கு? இதையெல்லாம் பார்த்து பார்த்து மனசு காய்ச்சுபோய்தான் அவன் கதை எழுத ஆரம்பிச்சான். உங்க வீட்டுக்கு போய்ட்டு வந்தப்பறம் பேயறஞ்சவன் மாதிரி ரெண்டு நா திரிஞ்சான். அப்புறம் உங்க வீட்டு கதையை சொன்னான், உங்க அப்பா செத்துபோனதுனால உனக்கு அவரு உத்தியோகம் கிடைச்சிச்சுன்னு சொன்னான். “
“ ஆமாம்மா “
“ ஒரே ஒரு கேள்வி கேட்டாம்மா “
´என்ன கேள்வி ? “
“ இழப்பீட்டின் பேரில் ஒரு ஆணுக்கு வேலை கிடைச்சா தன் வருமானத்தை என்ன செய்யிறதுன்னு அவன் யோசிக்கிறதே இல்லை. ஆனா அதே நிலையில் ஒரு பெண்ணுக்கு வேலை கிடைச்சா அவள் மட்டும் ஏம்மா குற்ற உணர்ச்சியோடயே இருக்கணும்னு கேட்டான். “
“ நீங்க என்ன சொன்னீங்க ? ‘
“ நானும் பதிலுக்கு கேட்டேன். அந்த பொன்னை அவளுடைய மாத வருமானம் இல்லாம உன்னால காப்பாத்த முடியுமான்னு கேட்டேன். முடியும்னான். அப்பா அவ மாச சம்பளம் முழுவதையும் அவங்க பறந்த வீட்டுக்கே கொடுக்கட்டும்னேன். நானும் மூணு பெண்களை பெத்து வளர்த்தவம்மா. நீ தையிரியமா இரு “
ராஜேஸ்வரி பிரமித்துபோய் நின்றாள்.
- நாம்
- காதல் கண்மணிக்குக் கல்யாணம்
- தாம்பத்யம்
- பிஞ்சு உலகம்
- தந்தையானவள் – அத்தியாயம் 4
- ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—
- கு.அழகர்சாமி கவிதைகள்
- வாழ்க்கை ஒரு வானவில் – 24
- முகப்புகழ்ச்சியா நம் முகவரி?
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 96
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3
- தொடுவானம் -37. அப்பா ஏக்கம்
- அவனும் அவளும் இடைவெளிகளும்
- தலைதூக்கும் தமிழ்ச்செல்வி
- ஆசை துறந்த செயல் ஒன்று
- மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்
- 2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு
- உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி
- அண்ணன் வாங்கிய வீடு
- தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8
- மரபுக்குப் புது வரவு
- கம்பன் விழா 18-10-2014, 19-10-2014