ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -11

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

இடம்: ரங்கையர் வீடு

நேரம்: காலை மணி எட்டு.

உறுப்பினர்: (ஜமுனா, ரங்கையர், கிலாஃபத் கிருஷ்ணய்யா)

(சூழ்நிலை: ரங்கையர் வீட்டினுள் அமர்ந்து கணீரென்ற குரலில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெளியே அமர்ந்து ஜமுனா பூக்கட்டிக் கொண்டிருக்கிறாள்)

ரங்கையர்: வேதாந்த கீதம் புருஷம் பஜேஹம்

ஆத்மானம் ஆனந்த கனம் ஹ்ருதிஸ்தம்

கஜானனம் யம்-மகசா ஜனனாம்

மாகந்தகாரோ விலயம் பிரயாதி

(ஸ்லோகம் சொல்வதைச் சற்று நிறுத்துகிறார்)

ஜமுனா: என்னப்பா?

ரங்கையர்: இது எதிலே வர்றது சொல்லு பார்ப்பம்!

ஜமுனா: சாரதா திலகத்திலே வர்ற கணேசர் ஸ்துதி தானேப்பா அது?

ரங்கையர்: கரெக்ட். இப்போ இன்னும் ஒரு ஸ்லோகம் சொல்றேன் கேளு.

ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்

யத் கிம்ச ஜகத்யாயம் ஜகத்

தென தியக்தௌன புஞ்சீதா

மா கிருதஹ் கஸ்ய ஸ்வித்-தனம்

(நிறுத்துகிறார்) இது எதிலே வர்றது?

ஜமுனா: தெரியுமே

ரங்கையர்: சொல்லு பார்ப்பம்

ஜமுனா: ஈசோப நிஷத்திலே மொதல் ஸ்லோகம்.

ரங்கையர்: பேஷ்! அர்த்தம் தெரியுமோ?

ஜமுனா: அசையும் ஜகத்திலுள்ள ஒவ்வோர் அசையும் பொருளிலும் ஈஸ்வரன் இருக்கிறார். இந்தப் பொருள்களின் மேலுள்ள பற்றை விடுவிதன் மூலம் தான் நீ சுகம் பெறுவது சாத்தியம். எவருடைய செல்வத்திலும் ஆசை வைக்காதே!

ரங்கையர்: ஆஹா! இந்த ஸ்லோகத்தின் மேலே காந்திஜிக்கு அபாரப் பிரேமை தெரியுமோ?

ஜமுனா: அப்படியாப்பா?

ரங்கையர்: ஆமாம்மா, திடீர்னு ஒரு வேளை எல்லா வேதங்களும் உபநிஷத்துக்களும் வெந்து சாம்பலாயிட்டாலும் ஈசோப நிஷத்தின் இந்த மொதல் ஸ்லோகம் மட்டும் மிஞ்சியிருந்தாக்கூட நம்ம மனசிலே அது நீங்காம நின்று மார்க்கம் அழியாம என்னிக்கும் வாழும்ணு சொல்றார்.

ஜமுனா: இந்த வருஷத்திலே நீங்க கார்த்தால பத்து மணிக்கு வீட்டிலே இருக்கறது இது ரெண்டாவது தடவைப்பா.

ரங்கையர்: மொதல் தடவை எப்போ?

ஜமுனா: ராகவன் ஊர்லருந்து வந்தப்போ! நீங்க காலையிலே ஓட்டலுக்குப் போகல்லே.

ரங்கையர்: இன்னிக்கு கடையடைப்பு செய்யணும்னு சர்வகட்சி ஏற்பாடு! ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடத்த விடாம மழையே ஆர்ப்பாட்டம் நடத்திடும் போலிருக்கு பாரு. நன்னா மேகம் கவிஞ்சுண்டு வர்றது.

ஜமுனா: பாவந்தாம்பா!

ரங்கையர்: அடடே மழை திடீர்னு வர ஆரம்பிச்சுடுத்தும்மா!

ஜமுனா: ஆமாம்பா (படபடவென்று வெளியே ஆலங்கட்டிகள் விழுகின்றன) ஆலங்கட்டிகள் விழறதுப்பா!

ரங்கையர்: விழட்டும்மா! கடையடைப்பு நடந்துட்டது. ஊர்வலம் நடக்காட்டாப் போகட்டும்! நன்னா மழை பெய்யட்டும். ஜனம் இந்த மழை இல்லாம என்ன அவஸ்தைப் படறது?

ஜமுனா: சமுத்திரத்திலே கப்பல்ல போறச்சே கூட கனமா மழை பெய்யும் இல்லேப்பா?

ரங்கையர்: ஏன் பெய்யாது? மழைக்கு இடமா… காலமா?

ஜமுனா: சமுத்திரம் அப்போ பெரிசா குமுறுமாமே!

ரங்கையர்: இருக்கலாம்!

ஜமுனா: பெரிய புயல் சூறாவளி கூட வருமோல்லியோ?

ரங்கையர்: வரலாம். எதுக்குக் கேக்கறே?

ஜமுனா: அண்ணா ராகவனை நெனச்சுண்டேன்!

ரங்கையர்: பகவான் இருக்காரும்மா!

(கதவைத் தட்டும் ஒலி)

ஜமுனா: யாரோ கதவைத் தட்டறாப்பிலே இருக்குப்பா!

ரங்கையர்: போய்ப் பாரும்மா!

(ஜமுனா கதவைத் திறக்கிறாள். தாழ்ப்பாள் விலகும் ஒலி)

கிலாஃபத் கிருஷ்ணையா: என்ன ஜம்னா… ஒங்க அப்பன் இருக்கானோ?

ஜமுனா: இருக்கார் மாமா… வாங்கோ

ரங்கையர்: யார் ஜமுனா?

ஜமுனா: கிலாஃபத் மாமா வந்திருக்கார்பா!

ரங்கையர்: யாரு கிருஷ்ணையாவா? (எழுந்து வருகிறார்) வாங்கோ… வாங்கோ… ஏது இந்த மழைலே

கிலாஃபத்: மழைல வந்தாத்தான் ஒன்னைப் பார்க்க முடியும்! (குடையை மடக்கி ஓரமாக வைக்கிறார்)

ரங்கையர்: அந்த நாற்காலிலே ஒக்காருங்கோ மழை வரும்னு தெரிஞ்சே குடை எடுத்துண்டு வந்தாப்ல இருக்கு! இன்னிக்கு சர்வ கட்சி ஹர்த்தால் ஊர்வலம்னாளே!

கிலாஃபத்: ஹர்த்தாலானத்னாலே தான் நீ வீட்டிலே இருக்கே! ஊர்வலத்தை மழைக் கலைச்சுடுத்து. மழை நின்னப்பறம் தான் தொடங்கலாம்னு இருக்கோம். அதுக்குள்ளற ஒன்னண்டே ஒரு முக்ய கார்யம்.

ரங்கையர்: சொல்லுங்கோ ஸ்வாமி!

கிலாஃபத்: இதப்பாரு (சட்டைப் பையிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து நீட்டுகிறார்)

ரங்கையர்: (வாங்கிப் பார்த்துக் கொண்டே) பையன் நன்னாயிருக்கானே!

ஜம்னா, மாமாக்கு காஃபி போடும்மா!

கிலாஃபத்: காஃபி இருக்கட்டும் ரங்கா, பையனை ஒனக்குப் பிடிச்சிருக்கா. பி.எஸ்.ஸி பாஸ் பண்ணிட்டு மெட்ராஸ்ல ஏஜி எஸ் ஆபீஸ்ல ஆடிட்டாரா இருக்கான். பிக்கல் பிடுங்கல் கெடயாது. நல்ல குடும்பத்திலேர்ந்து வர்ற லட்சணமான பொண்ணுதான் அவா நோக்கம். இவனோட அப்பன் யாரு தெரியுமோ?

ரங்கையர்: சொல்லுங்கோ.

கிலாஃபத்: என்னோட வேதாரண்யம் உப்பு சத்யாக்ரகத்துக்குக் கூட வந்தவன். ரெண்டு பேருக்கும், பாளையங்கோட்டை ஜெயில் தான் கெடச்சது. பழுத்த தேசீயவாதி. காந்தி பக்தன். பேரு ராம சுப்பிரமணியம்.

ரங்கையர்: ஒரு தடவை, ஒங்க நேஷனல் ஸ்கூல் பாரதி விழாவிலே விவேகானந்தரும் பாரதியும்ணு பேசினவர்தானே ஸ்வாமி?

கிலாஃபத்: சாட்சாத் அதே பேர்வழி.

ரங்கையர்: ரொம்ப நல்ல மனுஷர்.

கிலாஃபத்: நல்ல சம்பந்தியாவும் இருப்பன்! ஜம்னா ஜாதகத்தை போன வாரம் வாங்கிண்டு போனான். தசப் பொருத்தமும் திவ்யமாருக்குண்ணு சொன்னான். ஒன்னைப் பத்தி கேள்விப்பட்டிருக்கான். கடாம்பி நாராயணய்யரும், சோமலாபுரம் சுந்தர கனபாடிகளும் ஒன்னைப் பத்தி நெறயச் சொல்லியிருக்காளாம். இந்த சம்பந்தத்திலே சந்தோஷம்னான்.

ரங்கையர்: ஸ்வாமி… கொஞ்சம் பெரிய இடம்! நான் என்ன வெறும் ஹோட்டல் சர்வர், சரிப்பட்டு வருமோ?

கிலாஃபத்: அடபோடா, மடையா! நீயே உன்னை ஒடுக்கி ஒடுக்கித் தாழ்த்திக்கறே. ஒன்னோடஅருமை ஒனக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமுமில்லே. ஒனக்குப் பிரியமா? அதை மட்டும் சொல்லு.

ரங்கையர்: நான் மட்டும் சொல்லிட்டா போறுமா ஸ்வாமி? ஜம்னாவையும் ஒரு வார்த்தை கேட்கணுமே.

கிலாபத்: பின்னே? அவ அபிப்பிராயம்னா முக்கியம்? கேட்டுச் சொல்லு… மழை கொஞ்சம் தணிஞ்சாப்ல இருக்கு… நன்னா விசாரிச்சு, நாளைக்குக் காலமே சொல்லு… நான் இப்ப கௌம்பறேன்!

ரங்கையர்: இருங்கோ ஸ்வாமி… ஜம்னா… ஜம்னா… கிலாஃபத் மாமா கௌம்பறார்மா.

ஜமுனா: இதோ வந்துண்டே இருக்கேன்! மாமா இந்தாங்கோ காப்பி.

கிலாபத்: கொண்டாம்மா… நீ இவ்வளவு பிரியமாக் கொடுக்றச்சே, என்னால மறுக்க முடியலே (டம்ளரை வாங்கி வாயில் தூக்க ஊற்றிக் கொள்கிறார்) ஆஹா… காபின்னா இது காபி. நேக்குன்னு பதமா ஆத்திக் கொண்டு வந்திருக்கே! பேஷ்! பேஷ்! (காபியை குடித்து விட்டு டம்ளரை நீட்டுகிறார் ஜமுனா வாங்கிக் கொள்கிறாள்) அப்போ நான் நாளைக்குக் காலமே ஹோட்டலுக்கு வர்றேன் ரங்கா! ஜம்னாவோட கலந்து பேசி நாளைக்குச் சொல்லிடு (கிளம்புகிறார்) வரட்டுமா ஜம்னா?

ஜமுனா: மழை இன்னும் தூறிண்டிருக்கே மாமா! இருந்துட்டுப் போறது.

கிலாஃபத்: மழை நின்னவுடனே ஊர்வலத்தை ஆரம்பிச்சாலும் ஆரமிச் சுடுவா. குடைதான் இருக்கே! நான் வர்றேன் ரங்கா! ஜமுனா !

ஜமுனா: சரி மாமா.

(கிலாஃபத் போன பின்பு ரங்கையர் கையில் ஒரு போட்டோ இருப்பதைப் பார்க்கிறாள் ஜமுனா)

ஜமுனா: என்னப்பா சொல்லிட்டுப் போறார் கிலாஃபத் மாமா?

ரங்கையர்: (புகைப்படத்தை நீட்டுகிறார்) இந்த போட்டோவைக் கொடுத்துட்டுப் போறார்.

ஜமுனா: (வாங்கிப் பார்க்கிறாள்) யார் இது?

ரங்கையர்: பிடிச்சிருக்கா?

ஜமுனா: போட்டோவை நன்னா எடுத்திருக்கா. நல்ல போட்டோகிராபர்.

ரங்கையர்: போட்டோ இல்லேம்மா. வரன் பிடிச்சிருக்கா?

ஜமுனா: வரனா? என்னப்பாது, என்னன்னமோ சொல்றேள்!

ரங்கையர்: சொல்ற டயம் வந்திருக்கு (ஜமுனா தலை குனிகிறாள். ஒன்றும் பேசாமல் சில விநாடிகள் நகர்கின்றன) என்னம்மா பேசாம நிக்கறே பிடிக்கலியா?

ஜமுனா: நேக்கு இப்ப கல்யாணம் வேண்டாப்பா!

ரங்கையர்: இப்ப இல்லே அடுத்த மாசம் நிச்சயம் பண்ணிடுவோம்.

ராகவன் வந்தப்புறம்னா நடக்கப் போறது?

ஜமுனா: அப்பவும் வேண்டாம்!

ரங்கையர்: நீ என்ன சொல்றே?

ஜமுனா: (மௌனமாக நிற்கிறாள்)

ரங்கையர்: நோக்கு ஏதாவது அபிப்பிராயம் உண்டோ?

ஜமுனா: (மௌனம்)

ரங்கையர்: இருந்தா தைரியமா சொல்லும்மா!

ஜமுனா: (மெல்ல விசும்புகிறாள்)

ரங்கையர்: ஏம்மா… ஏம்மா… (பதறுகிறார்) ஏம்மா அழறே… பிடிக்கல்லேன்னா வாண்டாம்.

ஜமுனா: அதுக்கில்லேப்பா!

ரங்கையர்: என்னண்டே சத்யமா இரு! நோக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்கோ?

ஜமுனா: (விம்மிக் கொண்டே) ஆமாம்பா!

ரங்கையர்: யாரது?

ஜமுனா: மோகன்!

ரங்கையர்: எந்த மோகன்?

ஜமுனா: எதிர்த்தாத்துலே குடியிருக்காரே அவர்!

ரங்கையர்: அட ராமா, நோக்கென்ன பைத்தியமா? அவன் ஒரு நீசன்மா. எத்தனையோ கெட்ட சகவாசம். அவனைப் பத்தி நோக்குத் தெரியுமோ நன்னா?

ஜமுனா: எல்லாம் தெரியும்பா!

ரங்கையர்: தெரிஞ்சுமா இப்படிச் சொல்றே?

ஜமுனா: எந்த மனுஷனுக்கும் இன்னொரு பக்கம் உண்டோல்லியோப்பா?

ரங்கையர்: போதும் நிறுத்தும்மா ஜம்னா! இது நடக்கற கதையில்லே. இத்தோட அதை மறந்துடு. நோக்கு கல்யாணமே ஆகாமே நீ கன்னியாவே நின்னுட்டேன்னாலும் சரி! எந்தத் தகப்பனுக்கும் கண் தெரிஞ்சு தன் பொண்ணைக் கெணத்துலே தள்ள மாட்டான். மறுபடியும் என்கிட்டே இதைப் பத்திப் பேசாதே… மழை நின்னுட்டது. நான் வெளியிலே போய்ட்டு வர்றேன் (வெளியேறுகிறார்)

(திரை)

[தொடரும்]

Series Navigation
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *