காட்சி 22
காலம் மாலை களம் உள்ளே
சேட் கடையாளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்
சேட்: யோவ் அந்தாளு ஆர்மின்னானே.. சந்தேகமா இருக்கு
கடையாள்: ஜி அவன் போலீசா?
சேட்: வயசானவனா இருக்கானே.. கூடவே நாமக்கார அய்யர் ஒருத்தர்.. அமாவாசைக்கு திதி கொடுக்கவா வந்தான் எளவெடுத்தவன்?
கடையாள்: ஜி அந்த நகையை என்னத்துக்கு பெட்டியிலே வச்சீங்க? வளவி, சங்கிலின்னா தெரியாது.. இது கிராமத்து நகை.. சட்டுனு தெரியுதே. வக்காளி என்ன விசயம்னு பாயிண்டை பிடிச்சுட்டான்..
சேட்: பதில் சொல்லி சமாளிச்சாச்சு போ.. நாவிதன் கடையிலே ஏது நரச்ச முடின்னா, சொல்ல முடியுமா? அடகுக் கடையிலும் அதே மாதிரித்தான்..
கடையாள்: இருந்தாலும் மருதையன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கறது நல்லது. பத்து இட்டாந்தா ஒண்ணு ரெண்டு தேறுது..மிச்சம்?
சேட்: நமக்கெதுக்குடா அதெல்லாம்? பங்கரையில்லேன்னா படிஞ்சும் வந்தா மும்பைக்கும் ஆமதாபாத்துக்கும் சரக்கு அனுப்பு.. கமிஷன் தயார்..
கடையாள்: அதுக்காக அவன் கொடுக்கறது என்ன நகைன்னாலும் வாங்கிட்டு காசு கொடுத்து
சேட்: அவசரம்னான்.. அதான் கொடுத்தேன்பா .. யாரோடது அது?
கடையாள்: கண்ணாலத்துக்குக் காசு வேணாமா ஜி? பொண்ணு கிட்டேயே கறந்துட்டான்..
சேட்: வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அதுக்கே பிரசாதம் தர்ற மாதிரி
கடையாள்: ஜி எங்க ஊர் பழஞ்சொல்லு… எங்க ஊர் நகை.. ஜமாயுங்க.. எங்க ஊர் போலீசையும் கொஞ்சம் நினைச்சு ஜாக்கிரதை தேவை ஜி
காட்சி 23
காலம் இரவு களம் உள்ளே
(அடுத்த நாள்)
தடா சத்திரம்
மனைவி(வள்ளி): (கிணற்றடியில் குளித்துவிட்டு உள்ளே வரும்போது) துவட்டிக்க துண்டு கொடுங்களேன்
ஊமையன் மும்முரமாக எதையோ தட்டிக் கொண்டிருக்கிறான்.
அவள் உள்ளே வருகிறாள். ஊமையன் ஒரு தங்க வளையலை சின்ன விள்ளல்களாக உடைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள்.
அவள் தன் கையில் பார்க்கிறாள். அதே வளையலின் ஜதை.
அவள் முகம் உக்ரமடைகிறது. சத்தமாக விளித்தபடி உள்ளே போகிறாள். அவள் சத்தம் கேட்டதும் ஊமையன் வளையலை வேட்டிக்குள் போட்டுக் கொள்கிறான். உளி மட்டும் முன்னால் இருக்கிறது
வள்ளி: உண்மையைச் சொல்லுங்க.. நான் உங்க பொண்டாட்டி.. எங்கிட்டே எதையும் மறைக்க வேணாம்.. தனம் எங்கே?
ஊமையன்: (முகம் இறுக) என்னைக் கேட்டா? அவ ஊருக்குப் போய்ச் சேர்ந்திருப்பா? இல்லே பட்டணத்துலே முந்தானை விரிச்சு தெருப் பொறுக்கப் போயிருப்பா ஓடுகாலி முண்டை
வள்ளி: நானும் ஓடுகாலி தான்.. உங்களை நம்பி ஓடி வந்ததுக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்… எங்கே அது?
ஊமையன்: என்ன எழவைக் கூட்டறேடி தட்டுவாணிச்சி
வள்ளி: தட்டுவாணியாவே இருந்துட்டுப் போறேன்.. தனத்தோட வளைவி எங்கே?
ஊமையன்: அதான் போட்டிருக்கியே கையிலே. சொரணை இல்லை?
வள்ளி: அது இல்லே அதோட ஜதை
ஊமையன்: ஜதையை கதையை எல்லாம் நான் என்னத்தடீ கண்டேன்?
வள்ளி: (அவன் முன்னால் இருந்த உளியை எடுத்து) இது என்ன?
ஊமையன்: பார்த்தாத் தெரியலை குருட்டுச்சி?
வள்ளி: இதை வச்சு தட்டிக்கிட்டு இருந்தியே அந்த வளைவி எங்கேடா?
ஊமையன்: (முறைத்தபடி நெருங்கி) என்ன மரியாதை கொறையுது?
வள்ளி: உனக்கு என்ன மரியாதை? தனத்தை என்ன செஞ்சே, லட்சுமியை என்ன செஞ்சே சொல்லுடா.. உனக்கு எல்லாம் தெரியும்.. என்கிட்டே மறைக்க வேணாம்
ஊமையன் சிரிக்கிறான்
ஊமையன் அவள் கழுத்தை நெறிக்க முன்னால் வருகிறான்
வள்ளி: கொல்லுடா.. உன்னை நம்பி வந்தேனே அந்த முட்டாத் தனத்துக்கு கொல்லு.. கொன்னு போடு.. பொணம் தான் கிடைக்கும். நான் கிடைக்க மாட்டேன்
ஊமையன்: பொணம் தான் வேணும்.. நீ எதுக்கு? காசு உனக்கில்லே பொணத்துக்குத்தான்
(வள்ளி புரியாமல் பார்க்க)
வள்ளி: அடப்பாவி.. பொண்ணுன்னா பேயும் இரங்கும்பானுங்க.. நீ பேயை விட மோசமான காட்டேரி..
வள்ளி தப்பிக்கப் பார்க்கிறாள்
வள்ளி: தெய்வமே யாராச்சும் காப்பாத்த வாங்களேன்.. தெய்வமே
ஊமையன்: முட்டிக்கிட்டு விழுந்து வைக்காதே.. மூளிப் பொணமாக் கொடுத்தா நாளைப் பின்னே யாவாரம் நடக்காது.. அலுங்காம நலுங்காம செத்தா உனக்கும் நல்லது எனக்கும் லாபம்.. ஓடாதே .. ஒக்காளி..ஓடாதேடி
ஊமையன் ஓடி வந்து அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைகிறான்
ஊமையன்:
சொல்லச் சொல்ல கேக்காமே ஓடறே.. விளுந்து செத்தா எவண்டி வாங்குவான் உன்னை? உள்ளே வந்து படுடி. கொஞ்சம் வெளையாடிட்டு வேலையை ஆரம்பிச்சுடுவேன்.. நேரம் ஆகிட்டு இருக்கு.. வந்து தொலை சனியனே..
அவளை நெட்டி அந்த சத்திரத்து உள்ளறைக்குக் கொண்டு போய் அணைத்தபடி மெல்லிய தாம்புக் கயிற்றால் கழுத்தை வளைத்து அளக்கிறான்.
வள்ளி: அய்யோ அய்யோ யாருமே இல்லியா.. கொல்றானே படுபாவி
அவள் முகத்தில் ஓங்கி அறைய முற்படும்போது யாரோ உள்ளே புகுந்து அவனை சுவரோடு பலமாக மோத அதிர்ச்சியில் நிலைகுலைந்து விழுகிறான்.
அய்யங்காரும் பழவண்டிக் காரனும் லாந்தரோடு நிற்க, நாயுடு கைக் குடையால் அவனை வெளுத்து வாங்குகிறார்.
நாயுடு அவன் முகத்தில் பலமாகக் குத்த ரத்தம் வடிய துவண்டு விழுகிறான்,
அந்தப் பெண் நாயுடு பின்னால் ஒண்டிக் கொள்கிறாள்.
நாயுடு: நாயே புழுத்த நாய்க்குப் பொறந்த புழுத்த நாயே.. இப்படி செய்யறதுக்கு பிச்சை எடுக்கலாம்டா கௌரவமா.. வக்கீலே .. போன் பேசிட்டீரா?
அய்யங்கார் எல்லாரும் வந்திருப்பா.. வாரும் போகலாம்.. பசி உசிரு போறது
அந்தப் பெண் நாயுடு பின்னால் நடக்க அவளுக்குப் பின்னால் அய்யங்கார்.
காட்சி 24
காலம் பகல் களம் உள்ளே
ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன்
சாமியாரம்மா, சேட், அவர் கையாள், ஊமையன் ஆகியோர் கைகட்டி நிற்க நாயுடு இந்தப் பக்கம் நிற்கிறார். எதிரே இன்ஸ்பெக்டர் துரை குறிச்சி போட்டு பைப் புகைத்தபடி உட்கார்ந்திருக்கிறார். அடுத்து சப் இன்ஸ்பெக்டர் மரியாதையோடு நிற்கிறார். கொஞ்சம் தள்ளி ஸ்டெதாஸ்கோப்பும் தொளதொள வெள்ளை உடுப்புமாக டாக்டர் நாற்காலி நுனியில் உட்கார்ந்திருக்கிறார்.
நாயுடு: ஒவ்வொருத்தரா சொல்லணும்.. பொய்யினு தெரிஞ்சது, துரை முட்டியைப் பேத்துடுவார்.. சரியாப் பேரலைன்னா டாக்டர் ஒடிச்சு மொண்ணையாக்கிடுவாரு.. ஏய் சாமியார்க் கிழவி.. நீ சொல்லு முதல்லே
சாமியாரம்மா: ஐயா நான் சாமியார்ச்சி எல்லாம் இல்லே.. மத்தவங்க ஜீவனம் நல்லா இருக்க உழைக்கறவளும் இல்லை… பொணத்தை வித்து காசு வாங்கறவ.. அநாதை ஆசரமம்கிறதாலே
நாயுடு: அனாதை ஆசிரம்ங்கிறதாலே என்ன?
(சாமியாரம்மா டாக்டரைப் பார்க்க)
டாக்டர்: ஸ்டூடண்ட்ஸ் அறுத்துப் பார்த்து பழகிக்க டெட்பாடி வேண்டி இருந்தது. கார்ப்பரேஷன்லே பதிஞ்சா, அனாதைப் பொணம்னு கொண்டு வரும்போதே அழுகித்தான் வருது.. இவங்க ஆசிரமத்திலே வருஷக் கணக்கா இருந்து இறந்தவங்க அவங்க சாக முந்தி விருப்பப்படி மெடிக்கல் டெஸ்டுக்கு பாடியை யூஸ் பண்ணிக்க சம்மதிச்சு லெட்டர் கொடுப்பாங்க..
இன்ஸ்பெக்டர் துரை : Were they forged or real doctor?
டாக்டர்: My apologies.. I couldn’t verify.. மருதையன் மூலமா எங்களுக்கு சப்ளை கிடைக்கும்
நாயுடு: என்ன டாக்டர் சார், ரேஷன் அரிசி சப்ளை மாதிரி சர்வ சாதாரணமா சொல்றேள்.. அரிசி கூட கட்டுப்பாடு..வீட்டுலே கல்யாணம் காட்சின்னா இத்தனை பேர் வருவாங்கன்னு முன்கூட்டியே அனுமதி வாங்கணும்.. உங்க தொழில்லே இதெல்லாம் இல்லை போல இருக்கு
டாக்டர்: மிஸ்டர் ஆபிசர், என் தொழில் இது இல்லே.. மெடிசின்..ஹெல்த்
சப் இன்ஸ்பெக்டர்: சாரி சார்
டாக்டர்: நான் தான் அது… மாடபூசி அனந்தாசாரி ரங்காச்சாரி
நாயுடு: படிப்பு குறைஞ்ச பய நான்.. சாரி டாக்டர் எத்தையும் மனசுலே வச்சுக்காம.. ஆமா, இந்தப் பொம்பளை ஆசிரமமா நடத்தினா?
டாக்டர்: நம்பினது என் தப்பு தான்..
சப் இன்ஸ்பெக்டர்: ஐயா நீங்க? டாக்டர்னு சொன்னீங்க… மத்த விவரம்..
இன்ஸ்பெக்டர் துரை Dean, Medical College Am I right?
டாக்டர்: Also practicing at my nursing home.
சப் இன்ஸ்பெக்டர்: மெடிக்கல் காலேசு ஹெட்மாஸ்டரா இருந்துக்கிட்டு ஜி.எச்சிலே மருத்துவமும் பாத்துக்கிட்டு இப்படி உங்களை அறியாம தப்புக்கு தொணை போயிருக்கீங்களே டாக்டர்
டாக்டர்: தப்புதான்.. மன்னிச்சுக்கணும்.. இனிமே ஜாக்கிரதையா இருப்பேன்..என் ஸ்டாப், ஸ்டூடண்டஸ் கிட்டேயும் அப்படியே இருக்கச் சொல்லுவேன். காலேஜ்லே நாங்க வாங்காட்ட, ஸ்டூடண்ட்ஸே இந்த லேடியை தேடிப் போய் அதிக ரேட் கொடுத்து பொண்ணு சவம் கேட்டு வாங்கியிருக்காங்க..
நாயுடு: அதென்ன பொண்ணு பொணம்தான் வேணும்னு பிடிவாதம்
டாக்டர்: ரீப்ரொடக்ஷன் உறுப்புகள்.. கருப்பை, உடல் அமைப்பு.. பொண் உடம்பே விசித்திரம்.. கோவில் மாதிரி..பத்து மாசம் பிள்ளையை சுமந்து..
நாயுடு: (டாக்டரிடம் ஊமையனைக் காட்டி) இவனைத் தெரியுமா சார்?
டாக்டர்: தெரியும்.. காலேஜ் கெடாவர்லே சிப்பந்தியா இருந்தான்.. விட்டுட்டுப் போய் சப்ளையர் ஆகிட்டான்
நாயுடு: கெடாவர்னா
டாக்டர்: பொணத்தை சேத்து வச்சு அறுக்கக் கொடுக்கற இடம்..
சப் இன்ஸ்பெக்டர்: ஏன் வேலையை விட்டான்?
டாக்டர்: (யோசித்து) அங்கே சம்பளம் மாசம் இருபது ரூபா.. ஒரு பொணம் கொண்டு வந்து சப்ளை செஞ்சா முப்பது ரூபா.. மாசம் ரெண்டாவது கொடுத்திட்டு இருக்கான்
இன்ஸ்பெக்டர் துரை: Ask that dirty female how she knows the nitwit ..guess they’re queer bedfellows..
சப் இன்ஸ்பெக்டர்: (சாமியாரிணியிடம்) ஊமையனை எப்படிப் பழக்கம்னு தொரை கேக்கறார்
சாமியாரிணி: அவனா? நான் உள்ளபடிக்கே அனாதை ஆசிரமம் தான் அதுவும் பொண்ணுங்களுக்கு நடத்த வந்தேன்..
Intercut ஊடுறுவு காட்சி – 24 A தொடக்கம்
காலம் பகல் களம் உள்ளே
ஊமையன்: (சாமியாரம்மாவிடம்) இதை ஆசிரமம்னே கூப்பிட்டுக்கோ மங்கம்மா..முடிஞ்சா காந்தி, திலகர், அந்த இங்கிலீஷ் காரம்மா..அண்ணியோ மச்சினிச்சியோ
சாமியாரிணி: அன்னிபெசண்டு அம்மாவா
ஊமையன் அதே தான்.. எல்லா படமும் இங்கே முகப்புலே மாட்டிடு. தொழிலுக்கு உதவும்
சாமியாரிணி: என்னய்யா சொல்றே விளக்கமா விஷயத்தைப் புட்டுப் போடு
ஊமையன்: அனாதை ஆசிரமம், அதுவும் பொண்ணுங்களுக்குன்னு பேர் வந்துச்சுன்னா யாபாரம் சூடு பிடிக்கும்.. நான் இருக்கேன்.. நம்ம சகலை கரும்புத் தோட்டத்துக்கு ஆள் பிடிச்ச மாதிரி இங்கே வரவும் சகாயம் பண்ணுவாரு.. அவருடைய தோஸ்துங்க அங்கங்கே பத்து இருபது பேர்.. அனாதை கிடைக்காட்ட வெள்ளந்தியான பொண்ணு.. (பாடுகிறான்) மகா சுகிர்த ரூப சுந்தரி..சினிமா, பிளேட் கொடுக்கன்னு ஆசை காட்டினா என்னைப் பிடிச்சுப் போ என்னைப் பிடிச்சுப் போன்னு கூவிக்கிட்டு அங்கங்கே மூச்சு விட்டுட்டு கிடக்கு..
சாமியாரிணி: அதுனாலே என்ன இப்போ?
ஊமையன்: மாசம் நாலு ஆட்டுக்குட்டியாவது மாட்டும்.. வந்துச்சுன்னு தகவல் மட்டும் அனுப்பி வை.. நான் பாத்துக்கறேன்
சாமியாரிணி: நீ பாத்துப்பே.. நான் என்னத்தைப் பார்த்துக்க? ஈரத் துணியை இடுப்பிலே வச்சு இழுத்துக் கட்டிக்கிட்டு கிடக்கணும்
ஊமையன்: யார் சொன்னது? பளிச்சுனு இருந்தா பம்பாய்… ரொம்ப சுமார்னா காலேஜ்லே நிறுத்தி நிதானமா அறுக்கக் கொண்டு போய்க் கிடத்திடலாம்..ஒண்ணு ரெண்டை.. சரி விடு..
சாமியாரிணி: ஒன்ணு ரெண்டை?
ஊமையன்: பசுமாட்டைக் கன்னு ஈன வச்சா அதிகம் வருமானம் ஆச்சே
சாமியாரிணி: அட சே.. இதெல்லாம் ஒரு..
ஊமையன்: வியாபாரம் தான்.. பட்சி பம்பாய் போனா உனக்கு பதினஞ்சு ரூபா.. கெடாவருக்கு.. என்னன்னு கேக்காதே.. கிடங்கு.. அம்புட்டுதான்.. கெடாவர் போனா இருபது ரூபா.. செனை பிடிக்க வச்சு… சரி விடு.. பூர்ண கர்ப்பிணியா பொணமாப் போய்ப் படுத்தா இருபத்தஞ்சு ரூபா..கசக்குமா காசு.. சொல்லு
சாமியாரிணி விரலை மடக்கிக் கணக்குப் போட, முகமெல்லாம் சந்தோஷமாகச் சிரிக்கிறாள்.
ஊமையன்: நடக்கற பொண்ணை விட, கூடப் படுத்துக் கிடக்கற பொண்ணு, கிடக்கற பொண்ணை விட, கிடந்து மூச்சு விடாத பொண்ணு காசை அள்ளித் தரும்.
ஊடுறுவு காட்சி 24-A முடிவு
சாமியாரிணி: எல்லாம் சரியாப் போய்க்கிட்டு இருந்துச்சு.. ஆனா
intercut ஊடுறுவு காட்சி 24 – B தொடக்கம்
காலம் பகல் களம் உள்ளே
சாமியாரிணி: போன மாசம் ரெண்டு, அதுலே ஒன்ணு பம்பாய்.. அதுக்கு முந்தின மாசம் ஒண்ணு..செத்த காலேசு படிக்கப் போச்சு இல்லே?
ஊமையன்: சே சே லட்சணமான பொண்ணு.. சூரத் கேட்டிருக்கியா.. அங்கே இருந்து வந்தவனுங்க கொத்திக்கினு பூட்டானுவ..
சாமியாரிணி: அவன் போவான் மசுராண்டி.. என் கமிசன் எங்கேய்யா
ஊமையன்: ஓடியா போயிடும்.. .. இந்த மாசம் கடைசியிலே மொத்தமா பைசல் பண்ணிடறேன் போதுமா?
சாமியாரிணி: காசு வரல்லேன்னா ஊர்ப் பஞ்சாயத்துலே
ஊமையன்: போய்ச் சொல்லு பொணத்தை வித்தேன்.. மாமி வேலை பாத்தேன்னு.. உனுக்குத்தான் அவமானம். சேலையை உரிஞ்சி அம்மணமா ஊரைச் சுத்தச் சொல்லுவாங்க.. அரசல் பொரசலா பூசாரி தோலான் துருத்தி காதுலே போட்டுடலாமா?
சாமியாரிணி: சரி, நீ போகலாம்.. .
ஊமையன்: பொண்ணு?
சாமியாரிணி: சமையல் தாத்தனோட அனுப்பி வைக்கறேன்..மதுரை ஸ்டேஷன்லே கை மாத்திடுவார்.. கிழம் எமகாதகன்.. அதுங்கிட்டே பணம் கொடுத்திடாதே.. சாராயக் கடைக்குப்ப் போயிடும்..
ஊமையன்: உங்கிட்டேயே தரேன் போதுமா
intercut ஊடுறுவு காட்சி 24 B முடிவு
சாமியாரிணி: பணமும் தரலை மண்ணாங்கட்டியும் தரலே.. ஏமாத்திப்புட்டான் கெட்ட பய..
நாயுடு: அதான் எங்கிட்டே அவனைப் போட்டுக் கொடுத்திட்டியா? நல்லா இரு..கம்பிக்குப் பின்னாடி..நீ செத்தா எவ்வளவு பெறுவே? சும்மாவே கொடுத்திடலாமா? டாக்டரே இவளை அறுத்தா இருதயத்தைத் தவிர மத்ததெல்லாம் இருக்கும்.. பாருங்க சந்தேகம் இருந்தா..
நாயுடு: டேய் ஊமையா நீயா ஊமை.. எத்தினி பொண்ணைடா விஞ்ஞானம் மேம்பட தத்தம் பண்ணியிருக்கே? நூறு? இருநூறு?
ஊமையன்: (முகமெல்லாம் வீங்கி வீர்த்து) பத்து பனிரெண்டு இருக்கும் எசமானே
நாயுடு அவன் தலையில் அடிக்கக் கை ஓங்க இன்ஸ்பெக்டர் தடுக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டர்: கொன்னுடாதேயும்.. கேசுலே அவன் தான் முக்கியப் புள்ளி.. நீர் பாட்டுக்கு ரிடையர் ஆகி டுர்யோன்னு வண்டியை விட்டுடுவீர்.. நான் தானே கிடந்து கஷ்டப்படணும்
நாயுடு: அப்ப மகாராஜா கிட்டே பெட்டிஷன் போட்டு நாயுடுவுக்கு இன்னும் பத்து வருஷம் உத்தியோகம் கொடுங்க.. எல்லாம் சரியாப் போயிடும்
சப் இன்ஸ்பெக்டர்: அதுக்குள்ளே நானே ரிடையர் ஆகிடுவேன் ஓய் ..(ஊமையனிடம்) இந்தப் பொண்ணை.. எங்கேய்யா அவ?
நாயுடு: பத்திரமா இருக்கா.. துரை அனுமதி வாங்கிட்டு எங்க வீட்டுலே தான் தங்க வச்சிருக்கேன்.. நாளைக்கு ஊருக்குக் கொண்டு விட நானும் சம்சாரமும் போறோம்
சப் இன்ஸ்பெக்டர்: (ஊமையனிடம்) இந்தப் பொண்ணை எப்படிய்யா பிடிச்சே?
ஊமையன்: சொன்னேனே சார் .. சகலை யுத்த ப்ரோக்கர் .. கிராமத்து ஆளு… துப்பு கொடுத்தான்.. போய்ப் பார்த்தேன்.. கொஞ்சம் கொஞ்சமா மனசைக் கலைச்சேன்..
intercut ஊடுறுவு காட்சி 24 C தொடக்கம்
காலம் மாலை களம் வெளியே
ஊமையன்: உங்க அப்பாரு கிட்டே நான் கேக்கறேன்..
பெண்(வள்ளி): ஐயோ வேணாங்க.. அவர் எங்க அப்பா இல்லே.. சித்தப்பா.. எனக்கு கார்டியன்..
ஊமையன்: கார்டியனோ கடுதாசியனோ நமக்கு தெரியாது.. பொண்ணைக் கட்டிக் கொடுங்கய்யா.. ஒரு சல்லி ஒன் காசு வேணாம்.. மூணு தலைமுறை உக்காந்து திங்க என் கையிலே காசு இருக்கு..
வள்ளி: அதெல்லாம் நடக்காது.. நான் உங்க கூட வந்துடறேன்
ஊமையன்: அப்படீங்கறே.. வீடு ரெண்டு இருந்தும் ரெண்டுமே கோர்ட் கேசுலே கிடக்கு.. அடுத்த வாரம் அனுகூலமா தீர்ப்பு வந்துடும்.. வக்கீல் ஐயா சூடத்தை அணச்சு சொல்றார்.. அதுவரை
வள்ளி: சத்திரம் சாவடி ஏதாச்சும்
ஊமையன் எங்க பரம்பரை சத்திரமே இருக்கு.. பத்து நாள் அங்கே இருந்து கொத்தவால் சாவடியிலே காய்கறிக் கடை போடுவோம்.. நீதான் யாபாரத்தை கவனிச்சுக்கணும்.. நமக்கு கணக்கு வழக்கெல்லாம் தெரியாது.. வேணும்னா ஊமைன்னு சொல்லிடு..ஓரமா உக்காந்துடறேன்..
வள்ளி: நீங்க ஊமை? வாயைத் திறந்தா வளச்சுப் போட்டிடுவீங்களே.. என்னைய மாதிரி அறியாப் பொண்ணுங்க கிடச்சா
ஊமையன்: நீ? அறியாப் பொண்ணு.. வாயில் விரலை வெச்சா கடிக்கக் கூடத் தெரியாது.. பாவம்..
வள்ளி: நாங்க விரல் எல்லாம் சாப்பிடறதில்லீங்க.. விரால் தான் பழக்கம்..
(இருவரும் சிரிக்கிறார்கள்)
Intercut scene ஊடுறுவு காட்சி 24 C முடிவு
நாயுடு: பட்சியைப் பிடிச்சு கண்ணாலம் செஞ்சுக்கற வரை போயிடுவே. அதானே
சப் இன்ஸ்பெக்டர் இவன் அதிர்ஷ்டத்தைப் பாரும் நாயுடு .. விரல் மட்டும் எஷ்ட்ரா இல்லே..
Intercut ஊடுறுவு காட்சி 24 D தொடக்கம்
காலம் இரவு களம் உள்ளே
ஊருக்கு வெளியே குன்றின் அடிவாரத்தில் வள்ளி தனியாக நிற்கிறாள். அது சிதிலமடைந்து இருளில் மூழ்கிய கோவில் மண்டபம். ஏதோ சத்தம் கேட்கிறது. வள்ளி திடுக்கிடுகிறாள்.
வள்ளி: எ எ ஏய் ஆரு அது… போயிடு.. மரியாதையா போயிடு.. எட்மிஸ் கிட்டே சொல்லுவேன் ஆமா..
தனம்: அடி கோட்டிக்காரி.. நான் தான்’டி
(தோளில் ஒரு காந்தி, ராட்டினம் படம் போட்ட ஜோல்னாப் பையோடு நிற்கிறாள்)
வள்ளி: நீயும் ஓட.. நீயும் சாமி கும்பிட வந்திருக்கியாடி தனம்? சொல்லிருந்தா சேர்ந்தே வந்திருக்கலாம்லே..
தனம்: இப்போ என்ன போச்சு.. உன் கல்யாணத்துக்கு இருந்துட்டு பட்டணம் போயிடப் போறேன்.. ரெக்கார்ட் கம்பெனி விலாசம் எல்லாம் நோட்டுப் புத்தகத்திலே எழுதி வச்சிருக்கேன்.. ப்ளேட் போட்டு வித்து சம்பாதிச்சு இன்னும் அஞ்சே வருஷம்
வள்ளி: அடி கோட்டிக்காரி.. வீட்டுலே ஆயா என்ன செய்யும்? தாத்தன் உசிரையே விட்டுட மாட்டாரா?
தனம்: என்ன சொல்லு.. நாம மூணு பேரும் அநாதைதான்.. அம்மா அப்பா கிடையாது..
வள்ளி: யாருடி மூணாவது?
லட்சுமி: (படியேறி வந்தபடி) நான் தான்
வள்ளி: ஏண்டி ஓட்ட வாய்ச்சி, நீதான் இவ கிட்டே சொன்னியா?
லட்சுமி: ஆமா அதுக்கு என்ன இப்ப?
வள்ளி: இவ நானும் பட்டணம் வரேங்கறாடி
லட்சுமி: நமக்குப் பேச்சுத் தொணைதான்
வள்ளி: நமக்கா?
லட்சுமி: நானும் தான் வரேன் உங்க கூட.. (வள்ளி காதில் நகையைத் தொட்டுப் பார்த்து) டீ வள்ளி, உனக்கு தண்டட்டி அம்சமா இருக்குடி..உங்காள் கிட்டே பேசிட்டேன்.. திருத்தணியிலே உங்க கண்ணாலம் பாத்துட்டு.. பட்டணத்து பக்கம் அவங்களுக்கு வேண்டப்பட்ட சாமியாரம்மா மடம் இருக்காம் ..
தனம்: மடம் இல்லேடி மடச்சி ஆசிரமம்.. நீதானே சொன்னே..
லட்சுமி: ஆமா, மறந்து போச்சு.. யேய் உங்காளு வராண்டி
தனம்: வரார்னு மரியாதையா சொல்லுடி.. கோவிச்சுக்கப்போறா
ஊமையன் மூன்று பேரையும் பார்த்து திகைத்து நிற்கிறான்.
ஊமையன்: எல்லோருமா எங்கே கிளம்பிட்டீங்க?
தனம்: நீங்க சொல்லுங்க.. போயிடறோம்..வள்ளி சொல்றா.. அவ கண்ணாலத்துக்கு வாடின்னு.. அவ கூப்பிட்டா, வராம முடியுமா
ஊமையன் வள்ளியை முறைக்கிறான்.
வள்ளி: ஐயோ நான் இல்லீங்க.. இவங்களே
ஊமையன்: சரி கிளம்புங்க.. இப்படியே விரசா நடந்தா ரயிலைப் பிடிச்சுடலாம்
(போகிறார்கள்)
intercut ஊடுறுவு காட்சி 24 D முடிவு
சப் இன்ஸ்பெக்டர்: ஒரு பொண்ணைத் தேடிட்டு போனா மூணு வந்திருக்கு..மூணையுமே வளைச்சுட்டான் படுவா
intercut ஊடுறுவு காட்சி 24 E தொடக்கம்
காலம் பகல் களம் வெளியே
திருநின்றவூர். சைவப் பிள்ளைமார் சாப்பாட்டுக் கடை என்ற பலகை தொங்குகிற கட்டிடம். வாசலில் வள்ளி, கையில் பிடித்திருந்த துணிப்பையில் பூமாலை எட்டிப் பார்க்கிறது. தலை நிறையக் கல்யாணத்துக்காக வைத்த மல்லிகைப்பூ பாதி பூவும் மீதி நாருமாகத் தலையில். வியர்வையில் குளித்திருக்கிறாள். பக்கத்தில் ஊமையன், தனம், லட்சுமி.
தனம் : ஏய்யா எங்க வள்ளி இப்படி வேர்க்க விறுவிறுக்க வேலை செய்ய என்ன வெளயாடக்கூட அவங்க வீட்டுலே விடமாட்டாங்க. நீ சோத்துக்கடையிலே உரைப்புக் குழம்பை ஊத்த வச்சு இப்படி மேலெல்லாம் தொப்பலா நனைய வச்சுட்டியே.. ஒரு ஓரமாக் கூட்டிப் போய் துண்டு வச்சுத் தொடச்சு விடுய்யா.. இல்லே சொல்லு.. நாங்க இந்தாண்ட திரும்பிக்கறோம்..
ஊமையன் சோறு நல்லா இல்லைதான்… என்ன செய்ய.. வார் டைம்.. கடைக்காரன் பயந்து பயந்து போட்டு பேர், விலாசம் எல்லாம் வாங்கி வச்சிருக்கான்.. போட்டதைத் துண்ணுட்டுப் போக வேண்டிய கட்டாயம்
வள்ளி (மென்று முழுங்கியபடி) : ஒரு இனிப்பு போட்டிருக்கலாமுங்க..
ஊமையன் : மைசூருபாக்கு போடறேன்னான்.. போன மாசம் கிளறி வச்ச சரக்காம்.. அத்தைத் தின்னா ஆஸ்பத்திரி கட்டில்லே தான் போய் விழணும்..
லட்சுமி : வள்ளி, பொறு. பட்டணம் போனதும் நமக்கு உங்க ஆளு பாதாம் அலுவா வாங்கித் தருவாரு.. இவரை என்னன்னு உறவு சொல்லிக் கூப்பிடறதுடீ தனம்?
தனம்: மச்சான்னு மட்டும் கூப்பிட்டுடாதே.. வள்ளி சண்டைக்கு வந்துடுவா
ஊமையன்: தாத்தையன்னு வேணும்னாலும் கூப்பிடுங்கடீ.. ஆனா உங்க ரெண்டு பேரையும் பட்டணத்துக்குக் கூட்டிப் போய் அலுவா தர்ற உத்தேசம் இல்லே எனக்கு..
தனம் : பட்டணத்துக்குப் போகாம?
ஊமையன் : எனக்கு வேண்டப்பட்ட ஒரு சாமியாரம்மா பக்கத்துலே தான் ஆசிரமம் வச்சிருக்கு.. அம்மனே அவதாரம் எடுத்து வந்த மாதிரி முகத்துலே அப்படி ஒரு களை..
வள்ளி : கும்புட்டு பஸ் ஏறிடலாம்னு சொல்றீங்களா?
ஊமையன்: நாம பஸ் ஏறுவோம். இதுங்க ரெண்டும் சாமியாரம்மா கூட இருந்துட்டு இன்னிக்கோ நாளைக்கோ ஊரைப் பாக்க போய்ச் சேரும். அந்தம்மா பாத்து அனுப்பி வைக்கும்..
லட்சுமி ஏதோ சொல்ல முற்படுகிறாள். ஊமையன் கை காட்டி நிறுத்துக்கிறான்.
ஊமையன்: பிள்ளைங்களா, உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.. உடம்பிறந்தான் சொன்னதா வச்சுக்குங்க.. ஆம்பளைத் துணை இல்லாம அதுவும் உங்க மாதிரி குமருங்க வீட்டை விட்டுக் கிளம்பறது மகா ஆபத்து.. வள்ளிக்கு நான் கிடைச்ச மாதிரி ஒரு முட்டாப்பைய கிடைக்கணும்.. ஆயுசெல்லாம் வச்சுக் காப்பாத்தத் தெரிஞ்சா போதும்.. அப்போ மெட்ராஸ் வா.. எங்க வீட்டுலேயே இரு… வள்ளி வராதேன்னா சொல்லப் போறா?
வள்ளி ஏதோ சொல்ல, வந்து நின்ற பஸ் சத்தத்தில் கேட்கவில்லை. மூவரும் பஸ் ஏறுகிறார்கள்.
Intercut ஊடுறுவு காட்சி 24 E முடிவு
ஊமையன் தலை குனிந்து நிற்கிறான்.
நாயுடு: பொண்ணுங்களை இட்டுக்கினு சாமியார்ச்சி கிட்டே போனியாக்கும்.. ஆமா, அந்த ரெண்டு பொண்ணுங்களை எப்படிடா பிரிச்சு விட்டே?
Intercut ஊடுறுவு காட்சி 24 F தொடக்கம்
காலம் : இரவு களம் வெளியே (சாமியாரிணி ஆசிரம வாசலை ஒட்டி குறுக்குச் சந்து)
தனமும் ஊமையனும்
ஊமையன் : என்ன உறவு முறை சொல்லிக் கூப்பிடணும்னாலும் இப்பக் கூப்பிடு.. பக்கத்துலே யாரும் இல்லே.. மச்சான்னா மெச்சுவேண்டீ குட்டி..
தனம் (பயந்து ஆனால் நாணத்தோடு) : ஐயோ.. வேணாங்க.. வள்ளி
ஊமையன் : அது ஒரு ஜாதி புஷ்பம்.. நீ இன்னொரு ஜாதி.. அதை அணைச்சு மோந்து பார்க்கணும்.. உன் உடம்புக்கு உன்னை கசக்கி.. (வாசனை பிடிக்கிற ஜாடை காட்டியபடி தனத்தை அணைத்துக் கொள்ள வருகிறான். அவள் மெல்ல விலகுகிறாள். அவளை அறியாமல் கை அவன் கன்னத்தை வருடுகிறது.)
தனம் : வேணாம் மச்.. வேணாங்க.. என் சிநேகிதிக்கு நான் துரோகம் செய்யக் கூடாது.. ஊருக்கே போயிடறேன் லட்சுமியோடு..
ஊமையன் : பயித்தியக்காரி.. பட்டணத்துலே உன் குரலுக்கு சடசடன்னு ப்ளேட் கொடுத்து முன்னுக்கு வந்துடலாம்.. நான் பார்த்துக்கறேன்.. எதமாப் பதமா அப்புறம் வள்ளி கிட்டே எடுத்துச் சொல்லி.. வள்ளியே தெய்வயானைக்கு சக்காளத்தி. வள்ளிக்கு தனம் சக்காளத்தியா இருந்துட்டுப் போகட்டுமே..
தனம் : ஐயோ.. வேணாங்க
ஊமையன் : சரி வேணாம்.. நீ முதல்லே வந்து அவளை உனக்கு சக்காளத்தி ஆக்கிடு.. நான் ஒரு காரியம் பண்றேன்.. இன்னி ராத்திரி உன்னை தனியா பட்டணம் அனுப்பி வச்சுடறேன்.. நமக்கு வேண்டப்பட்ட சிநேகிதன் குடும்பம்..இந்திக்காரங்க ராமேசுவரம் வந்துட்டு ஊர் திரும்பிட்டு இருக்காங்க.. அவங்களோட போயிடு.. நான் பட்டணம் வந்து உனக்கு தனியா ஜாகை ஏற்பாடு செஞ்சுடறேன்..
தனம் : எதுக்குங்க.. உங்களுக்கு சிரமம்..
ஊமையன்: சிரமப் படாம சுகம் கிட்டுமாடி என் சிட்டே?
அவள் கன்னத்தைக் கிள்ள தயங்கியபடி தனம் ஊமையனை அணைத்துக் கொள்கிறாள்.
ஊமையன்: கண்ணு, இந்த விஷயம் வள்ளிக்கோ லட்சுமிக்கோ தெரிய வேணாம்..
தனம் : என் ராசா..
ஊமையன் (விலகி) : மூத்தரச் சந்துலே மிச்சத்தை வச்சுக்க முடியாது. பட்டணம் போற வரை பொறு.. தனம்.. பேரு சரியாத்தான் இருக்கு
(அவள் அவசரமாக முந்தானையைச் சரி செய்து கொள்ள சிரிக்கிறான்).
Inerlcut ஊடுறுவு காட்சி 24 F முடிவு
சப் இன்ஸ்பெக்டர் : பசப்பு வார்த்தை சொல்லி அவளை சேட்டு கிட்டே விட்டுட்டியாக்கும்.
சேட் : ஐயோ, நான் இல்லே… அது மும்பை.. மதன்லால் சேட்
நாயுடு : இதே தொழில்டா.. மதன்லால், கந்தர்வலால், காமாலால், னு பேரே வீரியமா வச்சுப்பீங்களே.. அத்தோட ஆல் அவுட்.. அம்புட்டுத்தானே.. ஐயங்கார் சாமிகளே சொல்லுமய்யா
(நாயுடு சத்தமாகச் சிரிக்கிறார்)
ஐயங்கார்: ஐய்யோ நாயுடு.. சர்க்கார் உத்யோக ஸ்தலம்.. இதெல்லாம் பேசற இடம் சயன க்ரஹம்.
நாயுடு : சமஸ்கிருதத்துலே சகலத்துக்கும் பதில் வச்சிருக்கீர் ஐயா.. பட்டமாரு இதெல்லாம் தொட்டுப் பட்டுத்தான் எழுதி வச்சிருப்பாங்க போலே..
சப் இன்ஸ்பெக்டர் : நாயுடு, கொஞ்சம் ராமராமான்னு சொல்லிட்டு அப்படியே இருக்கீரா? நல்ல பிள்ளை இல்லே?
சப் இன்ஸ்பெக்டர் சேட்டை முன்னால் கூப்பிடுகிறார்.
சப் இன்ஸ்பெக்டர்: ஏய் சேட்டு எங்க ஊருக்கு வந்து யாபாரம் பண்ணிட்டு எங்களுக்கே துரோகம் பண்றே பாத்தியா.. நாம எல்லாம் கருப்பன்.. நீ செவத்த கருப்பன், நான் கருத்த கருப்பன்.. இதான் வித்தியாசம்.. இப்படி ஒத்தனுக்கு ஒத்தன் துரோகம் பண்ணினா வெளியே இருந்து வந்து (துரையைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டு நிறுத்துகிறார்).
சேட்: சார் மன்னிக்கணும்.. சேட் அடகு பிடிச்சு, ஜவுளி வித்து நியாயமா வட்டி வாங்கத்தான் சஹரன்பூர்லே இருந்து ரெயில் ஏறி வந்தேன்.. சத்திரத்து பரம்பரை தர்மகர்த்தான்னு
Intercut ஊடுறுவு காட்சி 24 G தொடக்கம்
காலம் இரவு களம் உள்ளே
/தனத்தை, ஏற்கனவே அறிமுகமான சேட்ஜிக்கும் அவர் நண்பருக்கும் காட்டுகிறான் ஊமையன். மூன்றாவது சேட் – வயதானவன் – அவளை ஆதரவாகக் கூட்டிப் போகிறான். அவளுடைய ட்ரங்க் பெட்டியை அவன் தூக்கிப் போகிறான். முதல் இரண்டு சேட்களும் பணத்தை எண்ணுகிறார்கள். துண்டு துணுக்காக ஒலித் துணுக்குகள்
சேட் 3 – வாம்மா கொழந்தே… நான் உனக்கு தாத்தா போல… நல்லது நெனச்சுத்தான்… சாப்பிட்டியா செல்லம்…
intercut ஊடுறுவு காட்சி 24 G முடிவு
சேட்: இந்த ஊமையன் சகவாசம் கெடச்சது.. போதாக் குறைக்கு அவன் தோஸ்த் இந்த மனுஷன் (கையாளைக் காட்டி).. மனசைக் கெடுத்திட்டாங்க.. அடகு பிடிக்க வந்தவனை மாமா வேலை பாக்க வச்சுட்டாங்க
நாயுடு: ஆ பில்ல தனம் எக்கடய்யா? (அந்தப் பொண்ணு தனம் எங்கேய்யா?)
சேட்: தனமா? மும்பையிலே பைகுல்லா ஏரியாவிலே .. சார் வந்து
நாயுடு: என்னய்யா
சேட்: இந்தக் களேபரத்துலே அந்தப் பிள்ளை.. தனம்..
நாயுடு: செப்பவைய்யா.. தொல்லி கில்லி போயிந்தியா (சொல்லுய்யா செத்துக் கித்துப் போச்சா?)
சேட் இல்லீங்க.. சாமியார்ச்சி சொல்லிச்சு
(சாமியாரிணியை நாயுடு பார்க்க)
சாமியாரிணி: அதுக்கு தீண்டல் வந்துடுச்சு தொரை.. தூரத் துணி கொடுத்துத்தான் பம்பாய் சேட் கூட அனுப்பினேன்..
நாயுடு: நீயெல்லாம் ஒரு பொம்பளை.. ஒரு சின்ன நல்ல காரியமாவது செஞ்சியே.. அடுத்த பிறவியிலே குளக்கரையிலே நரகல் உருட்டற வண்டாத்தான் பிறப்பே நாறப் பொணமே..
இன்ஸ்பெக்டர் துரை: (சப்இன்ஸ்பெக்டரிடம்) Run to the post office and book a trunk call to Bombay, Speak to the damned Inspector at Byculla…some Burncock or Burnarse.. this damn girl should be here by next week..
(போஸ்ட் ஆபீஸ் போய் பம்பாய்க்கு டிரங்க் கால் போட்டு இன்ஸ்பெக்டர் கிட்டே பேசு..அந்தப் பொண்ணு ஒரு வாரத்திலே இங்கே இருக்கணும்..)
சப் இன்ஸ்பெக்டர்: எசமானே இங்கிலீசு தடுமாறுமே
இன்ஸ்பெக்டர் துரை: I shall call the bugger myself.. (நானே பேசறேன்)
(எழுந்து வெளியே போக மோட்டார் சைக்கிள் புறப்படும் சத்தம்).
நாயுடு: படுபாவி, உருப்படுவியாடா நீ? உடனே கொன்னா ஐநூறு.. கர்ப்பம் கொடுத்துட்டு கொன்னா அறுநூறு.. (டாக்டரிடம்) கர்ப்பிணி பொணம்னா கொஞ்சம் நல்ல மருவாதை இல்லீங்களா?
டாக்டர்: Dissection-க்கு அப்படி கிடைக்கறது அபூர்வம்.. பாடிக்கு அதிகமா விலை சொல்லுவாங்க இவங்க (சாமியாரம்மாவையும் ஊமையனையும் காட்டி)
நாயுடு: (ஊமையனிடம்) மிருகம்டா நீ கேடு கெட்ட மிருகம்..
(சப் இன்ஸ்பெக்டரிடம்) ஒண்ணை வித்துட்டான் சேட்டு மூலமா.. இன்னொண்ணை
intercut ஊடுறுவு காட்சி 24 H தொடக்கம்
காலம் இரவு களம் வெளியே
லட்சுமி: வள்ளி எங்கே?
ஊமையன்: வவுத்து வலி.. சுருண்டு கிடக்கா.. உனக்கு சொன்னா புரியாது..
லட்சுமி: தனம்?
ஊமையன்: உங்கிட்டே சொல்லலியா? அதுக்கு ஒரே கோபம்.. ஊருக்குப் போய் நல்லபடியா அப்பன் ஆயி கூட இருன்னது பிடிக்கலே.. விடிகாலையிலே சொல்லாமக் கொள்ளாம சவாரி விட்டுட்டா
லட்சுமி: என்கிட்டே கூட சொல்லாமலா?
ஊமையன்: ஏன் நீ என்ன கவர்னர் சம்சாரமா? எம்டன் குண்டு போடறதை எவனுக்கு சொன்னான்? அது மாதிரி இவ பெரிய குண்டா இல்லே போட்டுட்டுப் போனா
லட்சுமி: இப்ப நான் எங்கே போகணும்கிறீங்க?
ஊமையன்: ரயில்வே ஸ்டேஷன் போ.. இந்த வண்டிக்காரன் சாமியாரம்மா ஆசிரமத்து ஆளு தான்.. நம்பிக் கூட அனுப்பலாம்னு சொல்லிட்டாங்க.. டிக்கெட் வாங்க அவன் கையிலே காசு கொடுத்திருக்கேன்.. செங்கல்பட்டு போய் ஆத்தா சொல்ற பிள்ளையா கட்டிக்கிட்டு சேமமா இரு..
லட்சுமி: அது யார் வண்டிக்காரன் கூட? வடக்கத்தியான் மாதிரி குல்லா போட்டுக்கிட்டு?
ஊமையன்: அட, ஸ்டேஷனுக்குப் போற வண்டி..கூட ஒரு சவாரி கிடச்சா அவனுக்கு வருமானம்தானே..
சேட் அருகில் வந்து லட்சுமியின் தாடையை நிமிர்த்துகிறார்
சேட்: கூப்சூரத் லட்கி.. அந்தேரா மே..பந்த்ரா, பீஸ் ஹஸார் மிலேகா.. இஸ் கி ஜாதா, நை மாங்கோ
லட்சுமி மிரண்டு போய் ஓட ஆரம்பிக்கிறாள். அவிழ்ந்து கிடக்கும் மாட்டு வண்டிகள் உள்ள பூமி. ஊமையன் துரத்துகிறான். இரண்டு வண்டிகள் ஊடாக இன்னொரு வண்டியில் ஏறி ஒளிந்து கொள்கிறாள். எங்கே இருக்கிறாள் என்று சேட் ஊமையனுக்குக் கை காட்டுகிறான்.
ஊமையன் அதே வண்டியில். வண்டித் தட்டு மட்டும் திரையில் காட்டப் படுகிறது.
மேடையில் ஒளி மங்கி, வண்டித் தட்டும், ஊமையனும், லட்சுமியும்.
ஊமையன்: மரியாதையா சொன்னதைக் கேளு.. அவங்க கூட போ
லட்சுமி: மாட்டேன்.. யார் அவங்க
ஊமையன்: போனாத்தானே தெரியும்
லட்சுமி: தன் கைப்பையில் இருந்து பேனாக் கத்தியை எடுத்து அவன் கையில் ஆழக் கீற ரத்தம் பீறிடுகிறது. ஊமையன் மிருகமாகிறான்.
லட்சுமியின் முகத்தில் துண்டை வைத்து இறுக அழுத்துகிறான். அவள் உடல் அலைபாய்கிறது. கை வண்டித் தட்டுக்கு உள்ளே போய் அசைகிறது. அசைவு நிற்கிறது. அவசரமாக அவள் கையை எடுக்கப் பார்க்கிறான் ஊமையன். உள்ளே மாட்டிக் கொண்டு உள்ளது. யாரோ கூட்டமாகப் பேசியபடி வரும் சத்தம்.
ஏதோ தீர்மானித்து தனம் வலது கையில் பிடித்த பேனாக் கத்தியை உருவி எடுத்து லட்சுமியின் இடது கையை ஒரு விரல் மட்டும் உள்ளே இருக்க அறுத்து எடுத்து அவள் உடலைச் சுமந்து இருட்டில் ஓடுகிறான். சேட்டும் வண்டிக்காரனும் அதே திசையில் ஓட்டம்.. லாந்தர்களோடு வண்டிக்காரர்கள் வருகிறார்கள்.
இந்த வண்டியில் ஏறியவன் லாந்தர் அணைந்து போகிறது. இருட்டில் வண்டியைக் கிளப்புகிறான்.
வண்டிக்காரன்: பாருடா ராஜா.. வெளக்கு இல்லே.. அண்ணன் பாடுவேன்..கேட்டுக்கினே நல்ல பிள்ளையா சிங்காரத் தோட்டம் ஓடணும் சரியா?
மாடுகள் கழுத்து மணி அசையும் ஓசை. வண்டிக்காரன் பாட்டு..
Intercut ஊடுறுவு காட்சி 24 H முடிவு
நாயுடு: மாட்டு வண்டிக்குள்ளே வச்சு கொலை செய்யறபோது விரல் துண்டிச்சுடுச்சு.. பாக்காமா பொணத்தோட எறங்கிட்டான்.
சப் இன்ஸ்பெக்டர்: அதோட ஒரு வளவியை சேட் கிட்டே வித்திருக்கான்.. இருட்டிலே இன்னொண்ணு கிடைக்கலே.. அது அவன் சட்டைப் பையிலேயே விழுந்திருக்கு.. தூக்கிட்டுப் போறபோது நடந்த அசம்பாவிதம்..
Intercut ஊடுருவு காட்சி 24 I தொடக்கம்
காலம் இரவு களம் வெளியே
வண்டிக்காரன்: (ஊமையனின் நண்பன்) ஏம்’பா பட்டணத்துக்கு கறிகாய் எடுத்துப் போவணும்..
நீள மாட்டுவண்டிக்காரன்: ஐயோ அண்ணாத்தை ஆளை விடு.. லண்டனுக்கு வேணும்னாலும் ஓட்டிட்டு வரேன்.. பட்டணம் வேணாம்பா
வண்டிக்காரன்: ஒரு அட்டைக்கத்தி கப்பல், நாலு விளையாட்டு ஏரோபிளேன்.. தீபாவளிக்கு வெங்காய வெடி சுடற நாட்டுத் துப்பாக்கி… இது போதும்டா ஜெர்மன் காரன் நம்மள முட்டுக் குத்த வைக்க
நீள வண்டிக்காரன்: என்ன பண்ணச் சொல்றே.. உசிர் மேலே ஆசை இருந்தாகணும் இல்லியா? பொணமாயிட்டா என்னாத்துக்கு பிரயோஜனம்?
வண்டிக்காரன்: அப்படீங்கறே? சரி அப்படியே இருக்கட்டும்.. பாரு.. ரொம்ப எல்லாம் சுமை இல்லே.. நம்மாளு ஒருத்தரு.. வாய் பேச முடியாது.. கண்ணாலம் கட்டிக்கிட்டு பட்டணத்துக்கு பிழைக்க வந்திருக்காரு.. சிரிக்கிறியா.. சிரிடா லண்டன் துரை கணக்கா..
நீள வண்டிக்காரன்: அது அதுக்கு நேரம் காலமே இல்லியா அண்ணே.. போற இடத்திலே பொழைக்க என்ன இருக்கு? எம்டன் பயலா இருந்தாலும்..
வண்டிக்காரன்: ஏதோ இருக்கு.. உனக்கு என்ன போச்சு.. வெண்டிக்கா மட்டும் தான் கொள்முதல் கிடைச்சது.. வாங்கி நிரப்பி வச்சிருக்காரு.. அந்தாள், வெண்டிக்க்கா, சம்சாரம் எல்லாம் கொத்தவால் சாவடிக்கு விடியற முந்தி போகணும்
நீள வண்டிக்காரன் : (யோசித்து) அறுபது ரூபா தருவியா?
வண்டிக்காரன்: ஏதோ கணக்கு மனதில் போட்டு தரச் சொல்றேன்.. ஒரு ஐஞ்சு பத்து கூடக் கொறய இருந்தா கண்டுக்காதே.. எதுடே உன் வண்டி?
வண்டிக்காரன் ஏறிப் பார்க்கிறான். வண்டி மேட்டில் பரப்பிய துணியிலும், கீழே புல்லிலும் ரத்தம் உலர்ந்த வாடை.
வண்டிக்காரன்: என்னடா.. சந்தைக்கு ஆடு அறுத்து இட்டுக்கினு போனியா?
நீள வண்டிக்காரன்: அத்த ஏன் கேக்கறே.. பத்து நாள் முந்தி அல்லா பண்டிகைக்கு நாலு ஆடு எடுத்துப் போறக்குள்ளே ராவுத்தருக்கு நெஞ்சு வலி.. செங்கல்பட்டு ஆஸ்பத்திரி வாசல்லே இறக்கி விடவேண்டிப் போச்சு..
வண்டிக்காரன்: ஆடு?
நீள வண்டிக்காரன்: ஊத்திக்கக் காசு கொடு. போட்டுட்டு வந்து ஆடறேன்
வண்டிக்காரன்: அடிங்க.. ராவுத்தரோட ஆடு எல்லாம் என்னய்யா ஆச்சு?
நீள வண்டிக்காரன்: அல்லாவுக்கு நேர்ந்துக்கிட்ட ஆட்டை கூறு போடு நல்லா தின்னுங்கடான்னு நம்ம பசங்களுக்கு கொடுத்தேன்..
வண்டிக்காரன்: ராவுத்தர் சொர்க்கம் தான் நேரே போயிருப்பாரு…
நீள வண்டிக்காரன்: ஆடும் அநேகமா போயிருக்கும்
வண்டிக்காரன்: ஆடு எடுத்துப் போன வண்டி.. களுவி விட வேண்டாமா? இன்னும் வாடை தொரத்துது பாரு
நீள வண்டிக்காரன்: சொல்லிட்டே இல்லே.. சாவடி போய்ட்டு அதான் ஜோலி.. சரி ஏறிக் குந்து.. வெண்டிக்கா எங்கே போய் ஏத்தணும்? கரிசலான் தோட்டம் தானே?
வண்டிக்காரன்: வா போவலாம்.. பொளுது வெளுக்கறதுக்குள்ளே போய்ச் சேரணும்
வண்டி புறப்படுகிறது
intercut ஊடுருவு காட்சி 24 I முடிவு
நாயுடு: இவன் லட்சுமியைச் சாக அடிச்சானே, அதே வண்டியிலே தான் வெண்டிக்கா ஏத்தி கொத்தவால் சாவடிக்கு வரப் போவுதுன்னு தெரியாமப் போச்சு பாரு.. .. காய் வித்து நாலஞ்சு நாள் ஓட்டிட்டு இவளையும் கண்ணாலம் பண்ணி அனுபவிச்சுட்டு அப்புறம் மெடிக்கலுக்கு கொடுத்துட்டுப் போகணும்னு திட்டம்..
சப் இன்ஸ்பெக்டர்: ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்.. நீரும் உம்ம சிநேகிதர் வக்கீலய்யரும் காய் வாங்கப் போனீங்களே.. ஏய்யா வேறே எதுவும் வாங்கணும்னு தோணலியா?
நாயுடு: யுத்தம் வலுத்து எம்டன் இன்னொரு தபா குண்டு போட்டாக் கூட இவர் மீனு வாங்க மாட்டாரு, நான் பூசணிக்கா பத்தை வாங்க மாட்டேன்.
சப் இன்ஸ்பெக்டர்: யோவ் எல்லாத்துக்கும் எம்டனை என்னத்துக்கோசரம் இழுக்கறேங்கறேன்.. (ஞாபகம் வந்தவராக) கருப்புக் காகிதம் வாங்கச் சொன்னா.. மறந்துடுச்சு.. நீரு ஒட்டிட்டீரா. யுத்தம் வந்தாலும் வந்துச்சு.. அட சே.. வாயைத் தொறந்தா இதான் வருது..
(கான்ஸ்டபிள் வந்து சல்யூட் அடிக்கிறார்)
சப் இன்ஸ்பெக்டர்: யோவ்… இந்த மொல்லமாரிங்கள அடச்சு வை.. துரை வந்தப்புறம் ஏகப்பட்ட வேலை பாக்கி இருக்கு
(கான்ஸ்டபிள்கள் வந்து நெட்டித் தள்ளிப் போகிறார்கள்.)
காட்சி 25
காலம் காலை களம் வெளியே
கொத்தவால் சாவடி வாசல். நாயுடு காத்திருக்கிறார், அய்யங்கார் வருகிறார்.
நாயுடு: ஏய்யா வக்கீலு.. ஆடி அசஞ்சுகிட்டு வரீரூ.. கோர்ட்டு வெக்கேஷன்னா இப்படியா?
அய்யங்கார்: சும்மா கிடவும்.. கேசு ஏதும் இல்லே இப்போதைக்கு.. பேப்பர் படிச்சுட்டு கிளம்பினேன். வாரும் .. வெண்டைக்கா வாங்கிட்டுக் கிளம்பலாம்.. முடக்கத்தான் கீரையும் வாங்கணும்
நாயுடு: அது எதுக்கு? பெரிசுங்க பக்கவாதம் கீல்வாதம் வந்தா சமைச்சுத் துண்ணும்.. ..
அய்யங்கார் : (சங்கடமாகச் சிரித்து) இது பிடிவாதம் (கூலியிடம்) ஏம்பா, வெண்டைக்கா பச்சு பச்சுனு சுத்த சைவமாக் கிடைக்கறாப்பல கடை போட்டிருக்கா?
(திரை)
- கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.
- தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
- அம்பு பட்ட மான்
- கலவரக் கறைகள்
- பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
- வேழம்
- நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
- துணிந்து தோற்கலாம் வா
- எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
- ‘அந்த இரு கண்கள்’
- ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20
- சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
- கண்ணாடியில் தெரிவது யார் முகம்?
- ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
- பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
- ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- காலச்சுவடு வெளியீடுகள்
- இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி
- நூலறுந்த சுதந்திரம்
- சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது
- பீகே – திரைப்பட விமர்சனம்
- Muylla Nasrudin Episodes by jothirlatha Girija
- மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- தொடு நல் வாடை
- “2015” வெறும் நம்பர் அல்ல.
- ரவா தோசா கதா
- தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
- இளஞ்சிவப்பின் விளைவுகள்
- கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
- மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_
- சாவடி காட்சி 22 -23-24-25