டாக்டர் ஜி. ஜான்சன்
நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் பாதிப்பது இல்லை.அதுவரை நாம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால் உடல் முழுதும் பின்னிப் பிணைந்துள்ள வலைத்தளம் போன்ற நரம்புகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.இதனால் நரம்புகள் கொண்டு செல்லும் சமிக்ஞைகள் தடைபட்டு, தவறான தகவல்களும்,தடைபட்ட தகவல்களும் அனுப்பப்பட்டு தாறுமாறாகின்றன.
நீரிழிவு நோயால் நரம்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை என்பதே உண்மை.இருப்பினும் சில யூகங்கள் மூலமாக அதற்கு காரணம் கூறலாம்.
* அதிகமான இனிப்பு, நரம்புகள் செய்திகளை அனுப்ப தேவையான இரசாயன சமநிலையை கெடுக்கலாம்.
* அதிகமான இனிப்பு இரத்த ஓட்டத்தை தடை செய்து நரம்புகளுக்குத் தேவையான பிராண வாயுவைக் குறைக்கலாம்.
* அதிகமான இனிப்பு நரம்புகளைச் சுற்றியுள்ள ” மைலின் ” உறையை ( Myelin Sheath ) கெடுக்கலாம்.
நீரிழிவு நோயால் நரம்புகள் 3 விதங்களில் கெடுகின்றன. இவற்றை மொத்தமாக நீரிழிவு நரம்பு நோய் ( Diabetic Neuropathy ) என்று அழைக்கலாம். இவை உடலின் இதர பகுதிகளை வெவ்வேறு விதமாக பாதிக்கலாம். அதற்கேற்ப அறிகுறிகளும் மாறுபடும். அந்த 3 விதமான நரம்பு நோய்கள் வருமாறு.
* பல நரம்புகள் நோய் ( Polyneuropathy )
இதில் உடலின் பல நரம்புகள் தாக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கைகளிலும் கால்களிலும் உள்ள நீண்ட நரம்புகள் அதிகம் தாக்கப்படுகின்றன.பெரும்பாலும் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் ஒரே மாதிரி பாதிக்கலாம். இதனால் கை கால்களின் அசைவுகள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அப்பகுதியில் தொடு உணர்வு தடை படலாம். அது கூசுதல் போன்று துவங்கி, மதமதப்பில் முடியலாம்.இல்லையேல் வலி உண்டாகி தசை இறுக்கம் ( Cramps ) உண்டாகி கடுமையாக வலிக்கலாம்.
* ஒற்றை நரம்பு நோய் ( Mononeuropathy )
இது மிகவும் குறைவாக உண்டானாலும், ஒரு சிலருக்கு இது ஏற்படலாம். இதில் ஒரு நரம்பு மட்டும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.அல்லது உடலின் ஒரு பகுதியில் மட்டும் சில நரம்புகள் கூட்டாக பாதிப்புக்கு உள்ளாகலாம். இது திடீரென்று தாக்கவல்லது. இதனால் வலி, மதமதப்பு, தசையில் பலவீனம், போன்ற அறிகுறிகள் உண்டாகும். இதற்கு நல்ல உதாரணம் திடீரென்று முகத்தின் ஒரு பகுதி ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது அல்லது முகம் கோணலாகிப்போவது. இதை ” பெல்ஸ் பால்சி ” ( Bell’s Palsy ) என்பர். இதை முக வாதம் எனலாம். முகத்தின் ஒரு பக்க தசைகளை கட்டுப்படுத்தும் நரம்புகள் செயலிழந்துபோவதால் இப்படி உண்டாகிறது. இதுபோன்று ஒரு பக்க கண் பாதிக்கப்பட்டால் கண் அசைவு குறைவுபடும். அது மாறு கண் போன்று தோன்றும்.கை நரம்பு பாதிக்கப்பட்டால் கையில் பலவீனமும் வலியும் உண்டாகும்.
* சுய நரம்புகள் நோய் ( Autonomic Neuropathy )
சுய நரம்புகளின் செயல்பாடுகளை நாம் அறிவதில்லை. ஆனால் இவைதான் உடலின் முக்கியமான உறுப்புகளை தானாக இயங்கச் செய்பவை.இதயத் துடிப்பு, சுவாசம், ஜீரணம், வியர்ப்பது, சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய பணிகளைச் செய்ய வைக்கும் நரம்புகள்தான் இந்த சுய நரம்புகள். இந்த நரம்புகள் பாதிப்புக்கு உள்ளானால் பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்.
> இருதயம் – இதயத் துடிப்பில் மாற்றம் உண்டாவதால் நெஞ்சில் படபடப்பு, படுத்து எழுந்ததும் இரத்த அழுத்தம் குறைவு பட்டு உண்டாகும் மயக்கம்,தலை சுற்றுதல், மாரடைப்பின்போது வலி தெரியாமல் போவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
> வயிறும் குடலும் – இவற்றின் தசைகள் வலுவிழந்து செயல் குன்றி போவதால், ஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசியின்மை போன்றவை உண்டாகும். அதோடு உணவு ஜீரணக் கோளாறினால் இரத்தத்தின் இனிப்பின் அளவையும் சரியாக நிர்ணயம் செய்ய முடியாமல் போய்விடும்.
> சிறுநீரகப்பையில் கோளாறு – இங்கு நரம்புகள் பாதிக்கப்பட்டால் சிறுநீர் நிறைந்துள்ளது தெரியாது. எப்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்பதும் தெரியாது. அப்படியே கழித்தாலும் முழுதும் வெளியேறியதும் தெரியாது.இதனால் சிறுநீரகத் தொற்று ஏற்படும்.
> பாலியல் கோளாறு – ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாமலும், அப்படியே விறைத்தாலும் அது நில்லாமலும் போகலாம். பெண்களுக்கு உலர்ந்துபோன நிலையும், உடலுறவில் திருப்தியும் இல்லாமல் போகலாம்.
> வியர்வை சுரப்பிகள் – அதிகமான வியர்வையும், உடலின் வெப்ப அளவு சீராக இல்லாமலும் போகலாம்.
> இரத்தத்தில் இனிப்பின் அளவு மிகவும் குறைந்து விட்டால் அதை உடல் நடுக்கம், வியர்வை, படபடப்பு போன்ற சில அபாய அறிவிப்புகள் மூலமாக தெரிவித்து நம்மை எச்சரிக்கும்.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை இல்லாமல் போய் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.
நரம்புகளைப் பாதுகாப்பது எப்படி?
இனிப்பின் அளவை கட்டுப்படுத்துவது நரம்புகள் கெடுவதை 60 சதவிகிதம் தடுக்கிறது. நரம்பு நோய் உண்டான பின்பு அது உடலின் எந்த பாகத்தை பாதித்துள்ளது என்பதை வைத்து சிகிச்சை தரப்படும். நரம்புகள் மேற்கொண்டு பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கும் வழிமுறைகள் வருமாறு.
* நரம்பு தொடர்புடைய சில அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அவை வருமாறு:
கை கால்களில் மதமதப்பு,எரிச்சல், ஊசி குத்துவது போன்ற வலி,
இரவில் கால்களிகளில் தசை இறுக்கம் உண்டாகி கடுமையான வலி.
கால் இருக்கும் இடத்தை உணரமுடியாத நிலை.
கால் பாதங்களில் புண்
* உணவுக் கட்டுப்பாடு – இனிப்பின் அளவை குறைக்கும் வகையில் உணவுப் பழக்கம் இருக்கவேண்டும்.
* வைட்டமின் பி6, பி12 ஆகியவை குறைபாட்டினால் நரம்புகள் மேலும் கெடலாம். இவை நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.வைட்டமின் பி 6 வாழைப்பழம், உருளைக்கிழங்கு, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றில் அதிகம் உள்ளது. வைட்டமின் பி 12 கோழி இறைச்சி, கடல் மீன்,சார்டின் மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
* ஆஸ்பிரின் மாத்திரை – நரம்பு வலிக்கு ஆஸ்பிரின் மாத்திரை சாபிடுவது நல்லது.இது வலியைக் குறைப்பதோடு இருதயத்தையும் பாதுகாக்கிறது.
* இதர மருந்துகள் – நரம்பு வலியையும், நரம்புகள் பாதிப்பால் உண்டான இதர குறைபாடுகளுக்கு பல்வேறு மருந்துகள் உள்ளன.அவற்றை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உட்கொண்டு பயன் பெறலாம்.
அதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனிப்பின் அளவை சீராக வைத்துக்கொள்வதுடன், நரம்புகளையும் முறையாக பராமரிப்பது நல்லது.
( முடிந்தது
- கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.
- தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
- அம்பு பட்ட மான்
- கலவரக் கறைகள்
- பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
- வேழம்
- நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
- துணிந்து தோற்கலாம் வா
- எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
- ‘அந்த இரு கண்கள்’
- ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20
- சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
- கண்ணாடியில் தெரிவது யார் முகம்?
- ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
- பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
- ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- காலச்சுவடு வெளியீடுகள்
- இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி
- நூலறுந்த சுதந்திரம்
- சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது
- பீகே – திரைப்பட விமர்சனம்
- Muylla Nasrudin Episodes by jothirlatha Girija
- மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- தொடு நல் வாடை
- “2015” வெறும் நம்பர் அல்ல.
- ரவா தோசா கதா
- தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
- இளஞ்சிவப்பின் விளைவுகள்
- கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
- மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_
- சாவடி காட்சி 22 -23-24-25