தொடுவானம் 52. குளத்தங்கரையில் கோகிலம்

This entry is part 15 of 19 in the series 25 ஜனவரி 2015
கோகிலத்தின் கருவிழிகள் என்னையே வைத்தவிழி வாங்காமல் பார்த்தது என்னை சற்று தடுமாறச் செய்தது!

இது என்ன விந்தை! மணமேடையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் தாலியையும் ஏந்திய சில நிமிடங்களில் இந்த மணப்பெண் இப்படி என்னைப் பார்க்கிறாளே! கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவ்வளவு துணிச்சல் கொண்டவளாக இருக்கிறாளே!

ஒரு வேளை நான் அவளைப் பார்த்து புன்னகைத்துப் பேசியதை அவ்வாறு கூர்ந்து இரசிக்கிறாளா? மணமக்களை வாழ்த்திப் பேசும்போது அவர்களைப் பார்த்துதானே பேசவேண்டியுள்ளது?

நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவளும் என்னையே ஊடுறுவிதான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்த்த அந்த பார்வைக்கு ஈடு தர முடியாமல் நான்தான் அடிக்கடி என் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டேன்.

குனிந்த தலை நிமிராமல் இருக்கவேண்டும் என்று மணப்பெண்ணுக்கு இலக்கணம் கூறுவார்களே! இந்த கிராமத்துப் பைங்கிளி பாரதி பாடிய புதுமைப் பெண்ணோ?

” நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்.” என்றான் பாரதி. நாணமும் அச்சமும் நாய்களுக்கே உரியதாம்,  அவை பெண்ணுக்குத் தேவையில்லை என்பதே அவனின் கூற்று. இந்த புதுப் பெண்ணும் அத்தகைய புதுமைப் பெண்ணா?இவ்வளவுக்கும் இவள் அதிகம் படிப்பறிவு இல்லாத சாதாரண கிராமத்துப் பெண்ணாயிற்றே!

வாழ்த்துரைகள் முடிந்தபின்பு மணமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.வந்திருந்த பலர் பந்தல் முகப்பிலேயே மொய் எழுதினர்.

பந்தலிலேயே தரையில் நீண்ட கோரைப் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன.அங்கேயே வாழை இலைகள் விரிக்கப்பட்டு விருந்தும் பரிமாறப்பட்டது.சுவையான அறுசுவை உணவை வடை பாயாசத்துடன் நிறைவாக உண்டபின்பு இல்லம் திரும்பினேன்.

அண்ணி திண்ணையில் அமர்ந்திருந்தார்.

” என் வாழ்த்துரை எப்படி இருந்தது? ” அண்ணியிடம் கேட்டேன்.

” நன்றாகத்தான் இருந்தது. தமிழில் நன்றாகத்தான் சொற்பொழிவு ஆற்றுகிறாய். எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் நீ பேசும்போது அந்த பெண் ஏன் உன்னை அப்படிப் பார்த்தாள்? அது எனக்குப் பிடிக்கவில்லை. ” என்று அவர் சொன்னது கேட்டு திடுக்கிட்டேன்! அதை எப்படி அவர் கவனித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் அதை கவனிக்கவில்லை என்று கூறிவிட்டு திண்ணையில் பாயை விரித்து படுத்தேன்.வேப்ப மரத்து இலைகள் சலசலக்கும் குளிர் தென்றல் இதமாக வீசியது.மனதில் இனம்தெரியாத நிம்மதியுடன் கண்களை மூடினேன்.

மாலையில்தான் கண் விழித்தேன். திண்ணையில் பால்பிள்ளை உட்கார்ந்திருந்தான்.அவனுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கச் சென்றேன்.

இரவு உணவுக்குப் பின் இராஜகிளி அந்த புதுபெண்ணை அழைத்துக்கொண்டு வந்தார்.அவளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சந்தேகமில்லை. அவள் பாரதியின் புதுமைப் பெண்தான்! கொஞ்சமும் பயம், கூச்சம் இல்லாமல் திண்ணையில் அமர்ந்துகொண்டு கலகலவென்று பேசினாள். கட்டுக்கு அடங்காத சிரிப்பு அவளிடம்! பேசும்போதே விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவளுடைய சிரிப்பை அண்ணி அவ்வளவாக இரசிக்கவில்லை.கிராமத்தில் வளர்ந்தவள், அதிலும் புதுப்பெண் இப்படி அடக்க ஒடுக்கம் இல்லாமல் இருக்கிறாளே என்று நினைத்தாரோ என்னவோ!

கோகிலம் தான் வளர்ந்த பக்கத்துக்கு ஊரைப் பற்றி கூறினாள். அங்கு ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க வீட்டார் அனுப்பவில்லை என்றாள். வீட்டு  வேலையும் வயல் வெளி வேலையும் செய்ததாகச் சொன்னாள். அதற்குமேல் பெண் படிக்கத் தேவை இல்லை என்று வீட்டில் தடையாம். மாப்பிள்ளை பார்த்து மணம் முடிப்பதில்தான் மும்முரம் காட்டினார்களாம். பெற்றோர் காட்டும் மாப்பிள்ளையைதான் மணமுடிக்கணும் என்பது அந்த ஊரில் கட்டுப்பாடாம்.வரதட்சணை இல்லாமலேயே கல்யாணத்தை முடிக்க மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் பெற்றோர் உடனே சரியென்று சொல்லிவிட்டார்களாம். இவளுடைய சம்மதம் தேவையில்லையாம். பெண்ணாகப் பிறந்தவள் பெற்றோர் காட்டும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டியதுதானாம். மாப்பிள்ளையை பிடிக்கிறதோ அல்லது பிடிக்காமல் போகுமோ என்பதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதானாம்!

அவள் பேசிய விதத்திலிருந்து அவளைப் மேலும் படிக்க வைத்திருந்தாள் மிகவும் கெட்டிக்காரியாக இருப்பாள் என்பது தெரிந்தது.

அம்மாவுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது. அம்மாவை அவள் ” அக்கா ” என்று அழைத்தாள். இராஜகிளியும்  அம்மாவை அக்கா என்று அழைப்பதால் அவளும் அப்படியே அழைத்தாள்.

எதிர் வீட்டில் அவள் வாழ வந்திருப்பதால் தனக்கு உதவியாக இருப்பாள் என்று அம்மா எண்ணியிருக்கலாம்.ஒரு சில நாட்களில் அதுவே உண்மையானது.

அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி வீடு வருவாள்.

” இவள் ஏன் இப்படி எந்நேரமும் இங்கேயே வருகிறாள்? ” அண்ணி என்னிடம் கேட்டார். அதற்கு நான் என்ன பதில் கூறுவது?

” அவளுக்கு என் மீது ஒரு கண், இல்லை பல கண்கள். ” என்று நான் கூற முடியுமா?

அண்ணி அவளைக் கண்காணிப்பது அவளுக்கு எப்படியோ தெரிந்து விட்டது., ஆகவே அவர் முன் அவள் வெகுளித்தனமாக நடந்துகொள்ளவில்லை.

அண்ணி இல்லாத வேளைகளில் அவள் என்னிடம் பேச முற்படுவது எனக்கு நன்றாகவே தெரிந்தது.

தொடக்கத்தில் பட்டும் படாமலும் பேசினாள். ஆனால், கொஞ்ச நாட்களில் சரளமாகப் பேசத் தொடங்கினாள் – அண்ணி இல்லாத வேளைகளில்.

ஒருநாள் வெள்ளக்கிழமை மாலையில்  அண்ணி கோவிலுக்குச் சென்றிருந்தார். அம்மா வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அவள் எங்கள்  வீட்டு கொட்டகையில் உள்ள குடக் கல்லில் மாவு ஆட்ட வந்திருந்தாள்.

நான் திண்ணையில் படுத்துக்கொண்டு ஒரு நாவல் படித்துக்கொண்டிருந்தேன்.

மாவு ஆட்டி முடித்தபின், இடுப்பில் சிறு பானையுடன் திரும்பியவள், தன்னுடைய ஈரக் கையை என் மீது விசிறிவிட்டு புன்னகையுடன் விடை பெற்றாள்! அது கிராமத்துப் பெண்கள் விளையாட்டுக்கு செய்வதாக இருந்தாலும் என்னுடன் அவள் நெருக்கமாகிறாள் என்பதைக் குறிப்பதாகவே இருந்தது.

ஒரு நாள் மாலையில் நான் குளத்தில்  தூண்டில் போட்டு சில கெளுத்திகளையும் குறவைகளையும் பிடித்தபின்பு படித்துறையில் கைகளைக் கழுவிக்கொண்டிருந்தேன். மண்புழுக்களின் வாடை கைகளில் வீசியது.

அப்போது இடுப்பில் செப்புக் குடத்தை ஏந்தியபடி குளத்தங்கரையில் வளர்ந்திருந்த கோரைப்புல்கள் போன்று ஆடி அசைந்து வந்தாள் கோகிலம். படித்துறையில் வேறு யாரும் இல்லை. நான் இருப்பது தெரிந்துதான் வந்திருப்பாள்.

” நிறைய மீன்கள் அகப்பட்டதோ? ” சிரித்தபடியே கோரையில் மாட்டியிருந்த மீன்களைப் பார்த்தாள்.

” தண்ணீர் மொள்ள வந்தாயா? ” நானும் சிரித்தபடி கேட்டுவிட்டு கைகளைக் கழுவி விட்டு முகர்ந்து பார்த்தேன்.வாடை இன்னும் வீசியது.

” என்ன அது? மீன் வாசம் வீசுதா? ”

” இல்லை. இந்த புழுக்கள் ” என்றேன்.

அருகில் நெருங்கியவள் என்னுடைய கைகளைப் பற்றி முகர்ந்தாள்! நான் வியந்து நின்றேன். நல்ல துணிச்சல்காரிதான் இவள்!

” அய்ய! வாசம் வயிற்றைக் குமட்டுது. இதை இப்படி கழுவ வேண்டும். ” என்று சொன்னவள் அப்படியே என் கைகளை தண்ணீருக்குள் விட்டு அவற்றை நன்றாகத் தேய்த்துக் கழுவினாள். பின்பு தன்னுடைய சேலை முந்தானையால் நற்றாகத் துடைத்து உலர்த்தினாள்.

நான் செய்வதறியாது திகைத்தேன்!

” இன்னும் எத்தனை நாள் லீவு? ” என்னைப் பார்த்து கேட்டாள்.

” தெரியலை. ”

” அங்கு போனதும் என் ஞாபகம் வருமா இல்லை மறந்து விடுமா? அடுத்த லீவில் வரும்போது என்னை தெரியலை என்பீர்கள்தானே? ”

” அப்படி இல்லை. ..” என்னால் அதற்குமேல் பேச முடியவில்லை. தடுமாறினேன்.

” ஏனோ தெரியலை. உங்களைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. எப்போதும் பித்துப் பிடித்ததுபோல் உங்களைப் பற்றிய நினைப்புதான். இது என்னவாக இருக்கும்? ”

எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

” உங்களுடன் முன்பே பழகியுள்ளது போல இருக்கு. ஒருவேளை இது போன ஜென்ம பந்தமோ? ”

நான் அதுகேட்டு மேலும் திகைத்தேன்! பதில் கூறாமல் விழித்தேன்

” என்ன பெசமாட்டேன்கிரீர்? ஏதாவது பேசுங்கள். என்னை உங்களுக்கு பிடிக்குதா? ” சொல்லுங்கள். ‘ அவள் கொஞ்சுகிறாளா அல்லது கெஞ்சுகிறாளா என்பது எனக்குத் தெரியவில்லை.

வேறு வழி தெரியாமல் ” ஆமாம் ” என்பதுபோல் தலையாட்டினேன்.

அப்போது தொலைவில் யாரோ வருவது தெரிந்தது. உடன் அவள் குடத்தைக் கழுவிவிட்டு தண்ணீர் நிரப்பித் தூக்கி தன்னுடைய கொடியிடையில்  வைத்துக்கொண்டாள்.

” சரி. நான் வரேன் . ” என்று விடை பெற்றாள்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationதாய்த்தமிழ்ப் பள்ளிநாடற்றவளின் நாட்குறிப்புகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *