நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்

This entry is part 12 of 32 in the series 29 மார்ச் 2015

– சிறகு இரவிச்சந்திரன்

0

பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான திருமதி பாத்திமா பாபுவின் ஃபேப் தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகம் ‘சேது வந்திருக்கேன்’ நாடகத்தின் கதையை எழுதியவர் மறைந்த இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் அவர்கள். அதை நாடக வடிவில் தந்திருக்கிறார்கள் இரட்டையர்களான கோபு, பாபு. இயக்கியவர் திருமதி பாத்திமா பாபு.

தந்தை மேல் கோபம் கொண்டு பிரியும் மகள், ஒரு பாசமுள்ள பெரியவரை தந்தையாக தத்து எடுப்பதும், மகளைப் பிரிந்த தந்தை பாசத்திற்கு ஏங்கி ஒரு அனாதை இளைஞனை தத்தெடுப்பதும் தான் மையக்கரு.

தன் தாயை அடிமையாக வைத்து துன்புறுத்தி கடைசியில் சாகடித்த தந்தை அருணாச்சலத்தை வெறுத்து, வீட்டை விட்டு வெளியேறுகிறாள் மாதவி. இருக்க இடமில்லாமல் வீடு தேடும் அலையும் அவளுக்கு ஆபத்பாந்தவனாக உதவுகிறார் வயோதிகரான சேதுராமன். ஒண்டு குடித்தன வீட்டில் எல்லோருடைய ஏவல்களையும் செய்து வயது வளர்க்கும் சேது, அங்கிருக்கும் ஒரு காலியான வீட்டில் மாதவியை குடியேறச் செய்கிறார்.  நாளடைவில் சேதுவின் வெகுளித்தனம் மாதவியைக் கவர்கிறது. ஒரு கட்டத்தில் திருட்டுப் பழி சுமத்தி, அங்கு குடியிருப்பவர்கள் சேதுவை அவமதிக்கும்போது, அவருக்கு பரிந்து கொண்டு மாதவி வருகிறாள். அவரை தன் அப்பாவாக சுவீகாரம் எடுத்துக் கொண்டதாக  அறிவிக்கிறாள்.

முதுகலை ஆங்கில இலக்கியம் படித்து விட்டு, வாடகைக் கார் ஓட்டுனராக இருக்கிறான் வேணு. ஒரு விபத்தில் இருந்து அவனால் காப்பாற்றப்படும் அருணாச்சலம், அவன் பால் பாசம் கொள்கிறார். தன் மகனாக தன்னோடு இருக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை இடுகிறார்.

வேணு குடியிருந்த பழைய வீட்டில் தான் மாதவி குடியிருக்கிறாள். தனக்கு ஏதேனும் கடிதங்கள் வந்ததா என்று விசாரிக்க வரும் வேணு, மாதவியை கண்டதும் காதலாகிறான். திருமணத்தை எதிர்க்கும் மாதவிக்கும் வேணுவின் மேல் ‘இது’ வந்து விடுகிறது.

உண்மையில் சேதுராமன் மாதவியின் தந்தை இல்லை. தன்னை பிள்ளையாக ஏற்றிருக்கும் அருணாச்சலமே அவளது உண்மையான தந்தை என்று தெரியும் போது வேணு, மாதவி என்ன முடிவு எடுத்தார்கள் என்பதே க்ளைமேக்ஸ்.

அனைத்து பாத்திரங்களிலும் நடித்தவர்கள் பாந்தமாக நடித்தார்கள் என்றாலும், அசத்தியவர் பக்கத்து வீட்டு மாமியாக வந்த திருமதி பாத்திமா பாபுதான். அவருடைய அனுபவம், உடல் மொழியிலும், வசன  உச்சரிப்பிலும் பளிச் என்று தெரிகிறது.

அரங்க அமைப்பு சபாஷ் போட வைக்கிறது. ஒளி அதை இன்னமும் அழகாகக் காட்டுகிறது. காட்சிகளின் இடைவேளைகளில் இசையை வைத்து நிரப்பி இருந்தால் இன்னமும் நிறைவு ஏற்பட்டிருக்கும்.

சேது வந்திருக்கேன் ஒரு வரவேற்கத்தக்க நாடகம்.

0

Series Navigationமறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *