மூளைக் கட்டி

This entry is part 19 of 32 in the series 29 மார்ச் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய் இரத்தம் மூலமாக மூளைக்குப் பரவியது எனவும் கூறலாம். தனியாக மூளையில் தோன்றும் கட்டி மண்டை ஓடு அல்லது அதன் உள்ளே இருக்கும் மூளை மற்றும் இதர திசுக்களில் தோன்றலாம். இப்படி மூளையில் மட்டும் தோன்றும் புற்று நோய்க் கட்டி உடலின் வேறு பகுதிகளுக்கு பரவாது.
மூளையில் இவ்வாறு தோன்றும் கட்டிகள் பலவகையானவை. அவை வருமாறு:

* மூளையில் மட்டும் தோன்றும் புற்று நோய்க் கட்டிகள்
* மூளையில் தோன்றும் புற்று நோய் இல்லாத கட்டிகள்
* உடலின் இதர உறுப்புகளில் தோன்றிய புற்று நோய் மூளைக்கு பரவுதல் – உதாரணமாக, நுரையீரல், மார்பு, வயிறு, புரோஸ்ஸ்டேட் , தைராய்டு , சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் தோன்றிய புற்று நோய் இரத்தம் வழியாக மூளைக்குப பரவுதல்.

அறிகுறிகள்

மூன்று விதமான காரணங்களால் அறிகுறிகள் தோன்றுகின்றன. அவை வருமாறு:

* நரம்புகள் பாதிப்பால் உண்டாகும் அறிகுறிகள் – மூளைக் கட்டி மண்டை ஓட்டுக்குள் அழுத்தத்தையும் வீக்கத்தையும் உண்டுபண்ணுவதால், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு சில அறிகுறிகள் தோன்றுகின்றன. உதாரணமாக நம்முடைய குணாதியங்களுக்கும் அறிவாற்றலுக்கும் முக்கியமான பகுதி மூளையின் முன் பகுதியாகும் ( Frontal Lobe of the Brain ).இந்தப் பகுதியில் கட்டி தோன்றினால் இவை இரண்டுமே பாதிக்கப்பட்டு, குணத்தில் மாற்றமும், அறிவாற்றல் குறைவும் உண்டாகும்.அதுபோன்றே பேசும் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் ” பேசும் பகுதி ” ( Speech Area of the Brain ) பாதிக்கப்பட்டால் சரளமான பேச்சு தடைப்படும். கை கால்களை அசைக்கும் பகுதி ( Motor Area ) பாதிக்கப்பட்டால் பக்க வாதம் உண்டாகும்.

* மண்டை ஓட்டுக்குள் உண்டாகும் அழுத்தம் காரணாமாக சில அறிகுறிகள் தோன்றுகின்றன . அவை வருமாறு:
தலைவலி – இந்த தலைவலி உடலின் அசைவின்போதும், இருமல்,தும்மல், குனிதல் போன்றவற்றின்போதும் அதிகரிக்கும்.
வாந்தி
பார்வைக் குறைவு
மயக்கம்
மூச்சுத் திணறல்
இதயத் துடிப்புக் குறைவு
நினைவு இழத்தல்
மரணம்

* வலிப்பு நோய் – இத்தகைய வலிப்பு நோய் உடல் முழுதும் அல்லது உடலின் ஒரு பகுதியில் உண்டாகலாம்.

மேற்கூறியுள்ள அறிகுறிகள் மூளையில் உண்டாகக்கூடிய வேறு சில நோய்களை ஒத்திருப்பதால் அவற்றையும் மனதில் கொள்ளுதல் நல்லது. உதாரணமாக மூளை இரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு, இரத்தக் கசிவு, நீர்க் கட்டிகள், காசநோய்க் கட்டிகள் போன்றவையாகும். பரிசோதனைகளின் வழியாக இவற்றை வேறு படுத்தலாம்.

பரிசோதனைகள்
* சி. டி. ஸ்கேன் பரிசோதனை
* எம்.ஆர். ஐ . பரிசோதனை.
* பி . இ . டி . பரிசோதனை.
* எக்ஸ்ரே
* இரத்தப் பரிசோதனைகள்.

சிகிச்சை முறைகள்

புற்று நோய் சிகிச்சையில் எப்போதும் மூன்று விதமான முறைகள் பின்பற்றப்படுகின்றன.அவை வருமாறு:

* அறுவைச் சிகிச்சை – புற்று நோய்க் கட்டிகளும் இதர மூளைக் கட்டிகளும் அறுவைச் சிகிச்சை மூலமாக அப்புறப்படுத்தப்படுகின்றன.

* கதிர்வீச்சு சிகிச்சை முறை – கதிர்வீச்சால் அழிக்கப்படக்கூடிய கட்டிகளுக்கு இம்முறையில் சிகிச்சை தரப்படுகிறது.

* மருந்துகள் – வீக்கம், வலி,போன்ற அறிகுறிகளுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டீராய்டு மருந்துகள், வலிப்பு கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன் தருகின்றன. ஆனால் புற்று நோய்க்கான கீமோதெரப்பி மருந்துகள் பயன் அளிப்பதில்லை.

மூளையில் புற்று நோய்க் கட்டி உண்டானபின் 50 சதவிகித்ததினர்தான் 2 வருடங்கள் மேல் வாழ முடியும்.

( முடிந்தது )

Series Navigationடல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015உலகத்துக்காக அழுது கொள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *