ஜெயகாந்தன்!
தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். ஆனாலும் உண்மை. கவிதா பதிப்பகம் இவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியது உண்மையானாலும், முழுவதுமாய்ப் படிக்க முடியவில்லை. படைப்பு வேலைகள் குறுக்கிட்டன. எனினும் படித்தவரையில் இவருக்கு ஈடானவர் மிகச் சிலரே என்று தோன்றியது.
நல்ல வேளை! சூடாமணி அவர்களைப் புறக்கணித்தது போல் சாகித்திய அகாதெமி இவரைப் புறக்கணிக்கவில்லை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கு விருது அளித்தது. அதனை அவருடைய நெருங்கிய நண்பர் திரு கே. எஸ். சுப்பிரமணியன் “Men and moments” என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தினமணி கதிரில் தொடராக வந்தபோது அதைப் படிக்க வாய்க்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னால்தான் திரு கே.எஸ்.எஸ். அனுப்பி வைத்த அருமையான இந்த மொழிபெயர்ப்பைப் படித்து ரசித்தேன். (எனினும் இது திரைப்படமாக வந்த போது பார்த்து ரசித்துள்ளேன்.)
ஜெயகாந்தனின் சில கருத்துகளோடு நமக்கு ஒப்புதல் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர் உண்மையானவர். அவரது எழுத்தின் விரைவும் அதில் ஒலித்த சத்தியமும் அதனை உணர்த்தும். பிறரின் பாராட்டுகளைப் பெரும் பொருட்டு அவர் தமக்கு உடன்பாடில்லாத எதையும் பொய்யாக எழுதியதில்லை என்பதே அவரது சிறப்பாகும். தமது கருத்துகளில் மாற்றம் விளைந்த போது மற்றவர் அந்த முரணுக்காகத் தம்மைக் கேலி செய்வார்களே என்கிற தயக்கம் இன்றி அதனை வெளிப்படுத்திக்கொண்டவர். திறமை மட்டுமின்றி, வாய்ப்புகளும், சூழலும் பெரிதும் சாதகமாக இருந்த பெரும் பேறால் புகழின் உச்சியில் இருந்தவர்.
ஜெயகாந்தனை முதன் முதலில் 1969 இல் அவரது இல்லத்துக்கு என் தங்கையுடன் சென்று சந்தித்தேன். 1968 இல் ஆனந்த விகடனில் அறிமுகமான என்னைப் பற்றி அதன் தலைமை உதவி ஆசிரியர் அமரர் மணியன் அவரிடம் பேசியிருக்கிறார். ‘அந்தப் பெண்ணை நான் சந்திக்க வேண்டுமே!’ என்று அவர் சொல்லியுள்ளார். இந்தத் தகவல் என் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரி மூலம் எனக்குத் தெரியவந்தது. அவர் அப்படிச் சொன்னதன் பிறகு நானே சென்று அவரைப் பார்த்துப் பேசுவதுதான் முறை என்று தோன்றியது. மணியன் அவர்களிடமிருந்து ஜெயகாந்தனின் இல்லத்து முகவரியைப் பெற்றுக்கொண்டு ஒரு நாள் மாலையில் என் தங்கையுடன் சேத்துப்பட்டில் இருந்த அவரது வீட்டுக்குப் போனேன்.
பேச்சு வாக்கில் தாம் சமுதாயத்துக்கு நீதி போதனை எதுவும் தம் கதைகளில் சொல்லுவதில்லை என்று குறிப்பிட்டார். அப்போது பெரிதும் பேசப்பட்ட தமது “அக்கினிப் பிரவேசம்” கதைக்கு விளைந்த முரண்பட்ட கருத்துகள் பற்றிப் பேசினார். அதற்கு எதிர்ப்புகளே அதிகம் வந்ததைக் குறிப்பிட்டார். அப்போதுதான் தாம் தம் எழுத்தின் வாயிலாக நீதி போதனை எதையும் செய்வதில்லை என்று தெரிவித்தார்.
“அதில் நீதி போதனை இல்லை என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? பெண்களுக்கு அதில் மிகப் பெரிய எச்சரிக்கையும் படிப்பினையும் உள்ளனவே!” என்று நான் அவரை இடைமறித்தேன்.
“அதில் நான் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. போதனையும் செய்யவில்லை!” என்று ஜெயகாந்தன் வலுவாக மறுத்தார்.
“நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ‘முன் பின் அறிமுகம் இல்லாத ஆண்பிள்ளை எவனேனும் மழையில் சிக்கிய ஒருத்தியைக் காரில் ஏறுமாறு அழைத்தால் அவள் அதில் ஏறிக்கொள்ளுவது முட்டாள்தனம். எனவே, பெண்கள் அப்படி நம்பிச் செல்லக்கூடாது’ எனும் எச்சரிக்கை அதில் அடங்கியுள்ளது! அதன் விளைவு என்னவாகும் என்கிற படிப்பினையும் அதில் உள்ளது!” என்ற எனது கூற்றை அவர் ஏற்க மறுத்தார்.
நான் சொன்ன கருத்தை விவாதிக்காமல், “அப்படியானல் எந்த ஆண்மகனும் நம்பிக்கைக்கு உரியவன் அல்லன் என்றா சொல்லுகிறீர்கள்? இந்த உங்கள் கருத்து மிகவும் தவறானது!” என்றார்.
“எல்லா ஆண்களும் கெட்ட நோக்கம் கொண்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஒன்று எறும்புப் புற்றா, அல்லது பாம்புப் புற்றா என்று புற்றினுள் கையை விட்டுப் பார்ப்பது புத்திசாலித்தனமா? அதைத் தவிர்ப்பதுதானே புத்திசாலித்தனம்? நம்பி ஏமாறுவதை விடவும் நம்பாமல் தற்காத்துக்கொள்ளுவதுதானே ஒரு பெண்ணுக்கு நல்லது? நீங்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அந்தக் கதை பெண்களுக்கான எச்சரிக்கைதான்! படிப்பினைதான்!” என்றேன்.
ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். “ஆண்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் தவறானது!’ என்றே மறுபடியும் கூறினார்.
‘இது ஆண்கள் பற்றிய கண்ணோட்டம் இல்லை!’ என்று பிடிவாதமாக வாதிட நான் விரும்பவில்லை. அவரது வீட்டுக்குச் சென்று அவரை எதிர்த்து வாதாடுவதில் ஒரு சங்கடம் தோன்றியது. எனவே வாயை மூடிக்கொண்டேன்.
அதன் பின் பொதுவாகப் பேசியபின், எனக்குச் சில அறிவுரைகள் கூறினார். என்னை நிறையப் படிக்கச் சொன்னார். நான் விடைபெற்றுப் புறப்பட்டதும் தெரு முனை வரை எங்களோடு நடந்து வந்து விடை கொடுத்தார். பின் வேறு வழியில் சென்று நடந்தார். விடைபெறும் முன், “நிறைய எழுதுங்கள்!” என்றார். அவரது கம்பீரமான அந்தக் குரல் இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.
………
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- ஜெயகாந்தன்
- செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
- பொழுது விடிந்தது
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
- நதிக்கு அணையின் மீது கோபம்..
- நானும் நீயும் பொய் சொன்னோம்..
- முதல் பயணி
- அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
- சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
- கடைசிக் கனவு
- விதிவிலக்கு
- பயணங்கள் முடிவதில்லை
- அப்பா எங்க மாமா
- மூன்றாவது விழி
- தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
- பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
- செங்கண் விழியாவோ
- மரம் வளர்த்தது
- கூட்டல் கழித்தல்
- நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
- வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
- ஒரு பழங்கதை
- ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
- ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
- சிறுகதை உழவன்
- மிதிலாவிலாஸ்-9