மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )

This entry is part 1 of 28 in the series 12 ஏப்ரல் 2015

                                                            

ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத கட்டிகள். இவை கொஞ்சங்கொஞ்சமாக வளரும் கட்டிகள்.இவற்றைப் பிடித்து அழுத்தினாலும்கூட வலிக்காது.

          இதை ” நீயூரோபைரோமா ” என்று அழைப்பார்கள். இதை நாம் நரம்பு நார்க் கழலை என்று கூறலாம். இவை நரம்பு நார்களில் தோன்றும் கட்டிகள்.
நரம்பு நார்க் கழலைகள் பல வகையானவை.இவை தோலில் எழும் கட்டிகள். இவற்றை விரலால் அழுத்தினால் குழி போன்று உள்ளே செல்லும். இவை தனியாக ஒன்று மட்டும் தோன்றலாம். அல்லது உடலின் ஒரு பகுதியில் கும்பலாகத் தோன்றலாம். உடல் முழுதும் தோன்றுவதை ” வான் ரெக்லிங்காசன் நோய் ”  ( Von Recklinghausen Disease ) என்று அழைப்பார்கள்.
சாதரணமாக இந்த கட்டிகள் 2 முதல் 20 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. இவை மெதுமெதுவென்று, குழகுழவென்ற தன்மை கொண்டவை. தனிக் கட்டிகள் பெரும்பாலும் முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு, அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றலாம். இவற்றைச் சுற்றியுள்ள தோல் நிறம் மாறி சுரசுரப்பாக மாறலாம். இதனால் அழகு கெடுகிறது.
தனியாகத் தோன்றினாலும் அல்லது உடல் முழுதும் தோன்றினாலும் அனைத்து கட்டிகளும் ஒரே இயல்புடையவை. இவற்றை அகற்றி பரிசோதித்தால் இவற்றில் நரம்புகள், அதிக வளர்ச்சியுற்ற செல்கள், திசு அழிவினால் உண்டான மாற்றங்கள் தெரியவரும்.
சிலருக்கு  இவை உடல் முழுதும்  தோன்றினால்  உடலின் வேறு உறுப்புகள் ஒருவேளை பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. உடலிலுள்ள தைராய்டு சுரப்பி, வேறு சில சுரப்பிகளில் கோளாறு ஏற்படுவதுடன், எலும்புகளில்கூட வளர்ச்சிக் கோளாறு ஏற்படலாம். முதுகுத் தண்டு நரம்பில் இது உண்டானால் அழுத்தம் காரணமாக பக்க வாதம் உண்டாகலாம். மூளையில் கூட இக் கட்டிகள் தோன்றி ஆபத்தை உண்டுபண்ணலாம். இது போன்று பின்விளைவுகள் உள்ளதா என்பதை மருத்துவர்கள் சோதனை செய்யும் போது கவனிப்பார்கள். இது போன்று உண்டாவது மிகவும் குறைவே.
இந்த கட்டிகள் பரம்பரையில் வரக்கூடியது. இவை புற்று நோய்க் கட்டிகள் அல்ல.
                              
                                                                  சிகிச்சை முறைகள்நரம்பு நார்க் கட்டிகள் ஆபத்தை உண்டுபண்ணுவதில்லை. 2 முதல் 5 சதவிகித கட்டிகள்தான் புற்று நோயாக மாறலாம். அறுவை சிகிச்சையைத் தவிர இதற்கு வேறு சிகிச்சை இல்லை. அது கூட அழகுக்காகதான் செய்யப்படுகிறது. ஒரு சிலர் இதனால் உடல் அழகுக் கெடுகிறது என்பதால் இவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிக்கொள்கின்றனர்.அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்றாலும் பரவாயில்லை. பெரும்பாலும் இதனால் வேறு உறுப்புகள் அவ்வளவு எளிதில் பாதிக்கப்படுவதில்லை என்பதால் இது பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

( முடிந்தது )

Series Navigationஜெயகாந்தன்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *