இந்த கிளிக்கு கூண்டில்லை

This entry is part 18 of 25 in the series 3 மே 2015

 

மழை சாரல்கள் திண்ணையை நனைத்திருந்தன. வெகுமழை பெய்யும் போதோ மழைக்காலங்களிலோ திண்ணை இப்படிதான் நனைந்து விடுகிறது. இரண்டு நாட்களாக வன்மமாக.. மிதமாக.. இதமாக.. தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்த மழை தனது அடையாளத்தை சரிவர பதித்து விட்ட திருப்தியில் சற்று இடைவெளி கொடுத்திருந்தது. இருண்ட மேகங்கள் சற்றே நகர்ந்தில் பகல்; பளிச்சென்றிருந்தது. மரங்களின் இடையே புகுந்த காற்று சிலிர்ப்பான அசைவுகளாய் வெளியேறிக் கொண்டிருந்தது.

தோட்டத்துடன் கூடிய வீடு.  கதவை திறந்து வெளியே வந்தாள் வினயா. கனத்திருந்த அடிவயிறு நோகாமல் தோட்டத்தில் மெல்ல நடந்தாள். படுக்கையாக தனது கிளைகளை விரித்திருந்த மாமரம் களைத்து கிடந்த பெரிய யானையை போலிருந்தது. அடித்து பெய்த மழையோ இரண்டு நாட்களாக வினயாவை காணாத ஏக்கமோ அதன் மொத்தமான தண்டு பாகம் நீரை கசிய விட்டுக் கொண்டிருந்தது. சிறிதும் பெரிதுமாக மாம்பிஞ்சுகள்  உதிர்த்து விட்டது போல கீழே சிதறிக் கிடந்தன. சற்றே தள்ளியிருந்த பலாமரம் மழையினால் உள் வாங்கிய ஈரத்தை ‘பார்த்துக்கோ..’ என்பது போல பட்டையை உரித்துக் காட்டியது. அதன் தண்டுகளில் அடம்பலாக தொங்கிய பலாக்காய்கள் காற்றுக்கு வழி விட்டதில் நகர்ந்து போயிருந்தன. வெளிப்புற இலைகள் விலகியதில் உள்மரம் பசுமை காட்டியது. நனைந்து போன காகம் ஒன்று சிறகுகளை விரித்து படபடத்தது. குத்தாக இருந்த மல்லிகை செடிகளில் பூத்து உதிர்ந்து கிடந்த மலர்கள் காற்றினை நறுமணமாக்கிக் கொண்டிருந்தன.  சீராக விரிந்திருந்த அன்னாசி செடியின் விசிறி இலைகள் இறுமாப்பாய் நிமிர்ந்திருக்க அதன் நடுவில் சிறு பிஞ்சொன்று குழைவாய் அமர்ந்திருந்தது. காற்று இலைகளில் ஒட்டியிருந்த ஈரத்தை தூவலாக்கியதில் உடல் குளிர்ந்து போனது வினயாவுக்கு. பிரசவத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. சளிக்கோ வேறு தொந்தரவுகளுக்கோ மாத்திரை எடுத்துக் கொள்ள மருத்துவர் அனுமதிப்பதில்லை.

தோட்டத்து கதவை சாத்தி தாளிட்டாள் வினயா. முன்கூடத்தில் விளையாட்டு சாமான்கள் அப்படியே கிடந்தன. மகள் மதுமித்ரா ரொம்ப சுட்டி. எல்.கே.ஜி. படிக்கிறாள். பசேலென்ற பிளாஸ்டிக் புல்வெளி. அதையடுத்து பிளாஸ்டிக் மரங்கள் நின்றுக் கொண்டிருந்தன. மரங்களின் கிளைகளில் சிறுசிறு பறவைகள் நிஜப் பறவைகள் போன்ற தோற்றத்திலிருந்தன. சிறிய அளவிலான யானை.. சிங்கம்.. காட்டெருது.. மான்.. மாடு என அடுக்கியிருந்தாள். சிங்கத்தின் அருகே மான் சாவதானமாக நின்றுக் கொண்டிருக்க காட்டெருதும் மாடும் ஜோடியாக புல் மேய்ந்துக் கொண்டிருந்தன. எடுத்து வைக்க மனமில்லாமல் மாடிக்குச் செல்ல எத்தனித்தாள். கூடத்திலேயே படிக்கட்டுகள் வைத்து கட்டப்பட்ட வீட்டின் அமைப்பு பண அந்தஸ்தை காட்டியது. கால்களில் கிடந்த செருப்பை விலக்கி மார்பிள் ஒட்டிய படிக்கட்டுகளில் பாதத்தை பதித்துப் பார்த்தாள். பனிக்கட்டிகளாக சில்லிட்டிருந்தது படிக்கட்டுகள். மார்பிள் தரையின் குளிர்ச்சி வெற்றுக்காலோடு நடக்க அனுமதிப்பதில்லை.

மாடியின் விசாலமான முன்னறை உள்அலங்காரம் செய்யப்பட்டு நேர்த்தியுடன் இருந்தது. பெரிய அளவிலான சன்னல்கள் வெளிச்சத்தை உள் வாங்கி அறையை பளிச்சிட வைத்தது. ஜன்னல் கம்பியில் மேலொன்றும் கீழொன்றுமாக கைகளை பதித்துக் கொண்டு நின்றாள் வினயா. ஜன்னல் வழியே தெரியும் மேல்புறத் தோட்டம் கூட அழகு தான். மாமரத்து கிளைகள் ஜன்னலையொட்டி வளைந்திருந்தன. காற்றில் தவழ்ந்து நாசிக்குள் நுழைந்த மாம்பிஞ்சின் பால் மணம் உண்ணும் ஆவலைத் தூண்டியது. மழை நீர் கழுவி விட்டிருந்த மாமர இலைகள் சிலவற்றில் மச்சங்களை போல கரும்புள்ளிகள் விரவியிருந்தன. பின்னிக் கிடத்த கொய்யா மரத்தின் வெளிர் பச்சை நிற இலைகள் கிளியை ஞாபகப்படுத்தியது அவளுக்கு. சின்ன வயதில் ஒருமுறை கிளி ஜோசியம் பார்க்க வேண்டுமென்று அடம் பிடித்தாள். கிளி சோசியம்.. கிளி சோசியம்.. தெருவில் கூவல் எழும் போதெல்லாம் ஏற்படும் ஆசை அன்று கைக்கூடியிருந்தது. அவளுக்கு தேவை கிளியை பார்க்க வேண்டுமென்பது. அம்மாவுக்கு ஜோதிடம். கூண்டுடன் வீட்டுக்குள் நுழைந்த ஜோதிடர் கூண்டை கீழே வைத்து விட்டு அம்மா கொடுத்த சொம்பு நீரை இடைவெளியின்றி பருகினார். மரத்தினாலான இரண்டடுக்கு செவ்வக வடிவக் கூண்டு. கீழடுக்கில் முக்கால் பங்கு கிளிக்கு. சிறிய மரத்தடுப்புக்கு அப்பால் கால் பங்கு இடத்தை சாமி படங்கள் நிரப்பியிருந்தன. உயரம் குறைவான மேலடுக்கில் ஜோதிடத்திற்கான அட்டைகள் சரித்து வைக்கப்பட்டிருந்தது.

பசேலென்ற நிறம் தாங்கிய கிளியை பாடப்புத்தகத்தில் பார்க்கும் போதே ஆசையாக இருக்கும் சின்ன வினயாவுக்கு. ஓரிரு சினிமாவிலும் பார்த்திருக்கிறாள். கிளி பேசும். மிளகாய்ப்பழம் சாப்பிடும் என்பதெல்லாம் அவளை ஆச்சர்யப்படுத்தியிருந்தது.  அதைத் தாண்டி கூண்டுக் கிளி தூரத்து பார்வைக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருந்தது. சிவந்த அலகும் பச்சையான பட்டு போன்ற உடலுமாக கண் முன்னே இருந்த அந்த பறவையை விநோதமாக பார்த்தாள் சின்ன வினயா. இதே நிறத்தில் பாட்டி பட்டுப்புடவை வைத்திருக்கிறாள். அவளின் புடவையை விட மிருதுவாக தெரிந்தது கிளியின் உடல். அவள் முகத்தில் தெரிந்த பரவசத்தை கூண்டுக்குள்ளிருந்த அந்தக் கிளி உணரவில்லை. சுற்றும்முற்றுமாக திரிந்த அதன் பார்வை கழுத்தோடு ஒட்ட வைத்தது போலிருந்தது அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.

முருகன் படமொன்றை எடுத்து வெளியே வைத்து வணங்கி விட்டு பிறகு அட்டைகளை வெளியே எடுத்து அடுக்கினார் அந்த ஜோதிடர். வெற்றிலை பெட்டியின் ஓரத்தில் மடித்து வைத்திருந்த நெல்மணிகள் நாலைந்தை தூவி விநோத சப்தமெழுப்ப கிளி கூண்டுக்குள்ளிருந்து வெளியே வந்தது. தலையை அங்குமிங்கும் திருப்பியது. கூர் தீட்டுவது போல சிவந்த தனது அலகை தரையில் தேய்த்தது. புதிய இடம்.. புதிய ஆட்கள் என எதன் மீதும் அதன் கவனம் செல்லவில்லை. பார்க்க பார்க்க பரவசப்படுத்திய கிளி கையருகே வரும் போது சற்று நகர்ந்துக் கொண்டாள் சின்ன வினயா. ஜோதிடக்காரர்; தலையை உயர்த்தி கைகளை கூப்பி “பாப்பா பேருக்கு நல்ல அட்டைய எடுத்து போடும்மா..” என்றார். தலையை சாய்த்து சாய்த்து ஒவ்வொரு அட்டையாக உருவியது கிளி. தலையை தரையோடு சாய்த்து குனிந்து பார்த்தாள் சின்ன வினயா. சற்று தைரியம் வர ஒற்றை விரலை அதனருகில் மெல்ல  நகர்த்தினாள். அம்மா உஷ் என்று வாயில் கை வைத்து அதட்ட விரலை இழுத்துக் கொண்டாள். ஆறேழு அட்டைகளுக்கு பிறகு சற்று நிதானித்து ஒரு அட்டையை எடுத்து தனியே போட்டு விட்டு நெல்மணிகளை கொத்தி கொண்டு; கூண்டுக்குள் சென்றது அந்தக் கிளி.

அட்டையை திருப்பி பார்த்தார் கிளி ஜோதிடர். ‘பாப்பா டவுசர் சட்டை போட்டுருக்கவும் ஆம்பளை புள்ளைன்னு நினைச்சு இத எடுத்து குடுத்துடுச்சு..’ தனக்கு தானே சொல்லிக் கொண்டு மீண்டும் நாலைந்து நெல்மணிகளை சிதற விட “அந்த மாமா கொஞ்சம் தானே நெல்லு கொடுக்கிறாங்க.. கிளிக்கு பசிக்காதா..?” என்றாள் சின்ன வினயா. “கிளி சோறு போடுதுங்குறதுக்காக அதுக்கே எல்லாத்தையும் குடுத்துட முடியுமா..?” என்றாள் அம்மா கிளி சரியான அட்டை எடுத்துக் கொடுக்காத எரிச்சலில்;. ‘கிளியா சாப்பாடு போடுது.. அந்த மாமா தானே கிளிக்கு சாப்பாடு போடுறாரு.. அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியில..’ என்று எண்ணிக் கொண்டாள் சின்ன வினயா.

மீண்டும் கிளி வெளியே வந்தது. இம்முறை இடையிலிருந்த அட்டை ஒன்றைக் கவ்வி இழுத்ததில் மற்ற அட்டைகள் சரிய முதலில் எடுத்த அதே அட்டையே மீண்டும் வந்தது. அனிச்சையாக சிதறிக்கிடந்த நெல்மணிகளை அலகால் கொத்தி விட்டு  கூண்டுக்குள் சென்றது. கூண்டு திறந்துதானிருந்தது. கிளியை நோக்கி கையசைத்தாள் சின்ன வினயா. கிளி அவளை கவனிக்கவேயில்லை. அந்த சிறியக் கூண்டுக்குள் ஒய்யாரமாக நடந்தது. அதன் முகத்தில் பரந்த வானத்தில் பறக்கும் பாவனை இருந்தது. பிறகு பெரிய தளத்தில் சாவாதானமாக விரிப்பது போல சிறகுகளை விரித்து படபடத்துக் கொண்டது. “உனக்கு பறக்க தெரியாதா..?” என்றாள் குனிந்து கிசுகிசுப்பாக. படபடத்த சிறகிலிருந்த எழுப்பிய காற்று அவளின் தலைமுடியை கலைக்க சிலிர்ப்பாக சிரித்தாள் சின்ன வினயா.

‘மறுபடியும் ஆஞ்சநேயர் அட்டைய தான் எடுத்து போட்டுருக்கு..’ அம்மாவின் முகம் சுருங்குவதை கண்ட அந்த ஆள்; அவளுக்கும் ஆஞ்சநேயர் அட்டைக்குமான பொது சமாதானத் தளத்தில் பேசினார். ‘நம்ம பாப்பா பெரிய ஆளா வருவாம்மா.. அவளோட திறமை அவளுக்கே தெரியாது.. ஆனா ஊரே பாப்பாவ மெச்சிக் கெடக்கும்.. பேரும் புகழுமா இருப்பா..”  அம்மாவின் சேலையை இழுத்தாள் சின்ன வினயா. “அம்மா கிளிய கொஞ்சம் நேரம் குடுக்க சொல்லேன்..” கிசுகிசுப்பாக ஆசையை வெளிப்படுத்தினாள். பதில் சொல்லாமல் மகளின் கையிலிருந்து சேலையை உருவிக் கொண்டாள் அம்மா.  “எத்தனை வயசுல கல்யாண பிராப்தம் போட்டுருக்கு அவளுக்கு..?” ஆஞ்சநேயர் அட்டையை பார்த்ததிலிருந்தே அரண்டு போய் விடாமல் இதையே கேட்டுக் கொண்டிருந்தாள் அம்மா. “ஆயிடும்.. ஆயிடும்.. படிச்சு முடிக்கறதுக்குள்ள கல்யாணம் ஆயிடும்.. பாப்பாவ பத்தி கவலையேபடாதீங்க..” இந்த காசுக்கு இது போதும் என்பது போல சீட்டுகளை அடுக்கினார். கொடுத்த காசை வேட்டியை தூக்கி அன்டிராயர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.; கூண்டை சாத்தி கையில் தூக்கிக் கொண்டு நடந்தார். கூண்டின் வீச்சுக்கேற்ப உடலை அனுசரித்துக் கொண்டது கிளி. அப்பா ஆசையாக அவளை உயர தூக்கும் போது பயம் வந்து விடும் அவளுக்கு. வேகமாக ஊஞ்சலை ஆட்டி விட்டால் பயந்து கண்களை மூடிக் கொள்வாள். கிளியும் பயந்திருக்குமோ.. குனிந்துக் கிளியை உற்றுப் பார்த்தாள். அதன் கண்கள் ஊஞ்சலாடும் உல்லாசத்தில் ஜொலித்ததை பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

அடைமழைக் காலமென்பதால் கருமேகங்கள் கையிலெடுத்திருந்த பொழுதை மெல்லியதான பயத்துடன் பம்மிக் கொண்டே எட்டிப் பார்த்தது சூரியன். வயிற்றுச் சுமையோடு நின்றது கால்களில் வலியை உண்டாக்க அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள் வினயா. சன்னல் நோக்கி வளைந்திருந்த மாமரத்தின் சன்னமான கிளையொன்றின்; மேல்;பட்டை உரிந்து தொடுத்துக் கொண்டு நின்றது. அதனுள்;ளிருந்து செவ்வெரும்பு கூட்டம் ஒன்று நீளமான பொன்னிறக் குச்சிப் போல சீராக நகர்ந்துக் கொண்டிருந்தது. குச்சியிலிருந்து விலகி எதையோ மோப்பம் பிடித்து விட்டு நொடிக்குள் வரிசைக்குள் கலந்துக் கொண்ட எறும்புகளால் பொன்னிற குச்சியில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட மதியம் கடந்து விட்ட போதிலும் பசிக்கவில்லை அவளுக்கு.

ஈர வாசம் பேசும் மழை நேரத்து சன்னல்கள் முதலில் மதுவிடம் தான் கதைகள் பேசியது. வினயாவிடம்; மது பேச துவங்கியதிலிருந்து அவளிடம் பேசுவதற்கும் அதற்கு கதைகள் இருந்தது. தூசிகளை களைந்து தூய்மைப்படுத்திய இறுமாப்புடன் சன்னல் கட்டைகளில் மழை தேங்கி நிற்கும்.  மரக்கதவுகள் ஈரத்தை உள் வாங்கிய பெருமையில் ஒரு சுற்று பெருத்து போயிருக்கும். முளை அரும்பிய வேப்பங்கொட்டைகள் காலுன்ற நிலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறு இலைகள் காட்டி எழும்பியிருக்கும். முதல் தளத்தில் அவர்களது வகுப்பறை. பழமையான அந்த கல்லூரியில் பல்லாண்டு கழிந்த மரங்கள் அனுபவங்களை பூங்காற்றாக பேசின. பாசமுடன் கைகளை விரித்து சந்ததியினரை அணைத்துக் கொள்ளும் சன்னல் வழி ஞானமும் அவைகளுக்;குண்டு. கலைக்கல்லூரி அது. சென்ற ஆண்டு வரை இயற்பியல் பிரிவு வகுப்புகள் இங்கு நடைப்பெற்றது. இப்போது வணிகவியல் பிரிவுக்கு ஒதுக்கியிருந்தார்கள். அறிவியலோ கலையோ அனைத்தையும் இயல்புகளாக்கி கொண்டிருந்தன அம்மரங்கள். மஞ்சள் ப+ பாய் விரித்து மகரத்தை காற்றிலேற்றி பூங்காற்றால் நீவுகையில் யாருக்குமே தாயின் நினைவு தாமதிக்காது எழும். இலைகளற்று போதல்.. துளிர்த்து திமிறி எழுதல்.. பூக்களால் நிறைதல் என காலத்தின் குறியீடுகளாக பரவசத்தை வசப்படுத்தி நிற்கும் அம்மரங்கள்.

சற்றே தாமதமாக தான் பி;.காம். வகுப்பில் சேர்ந்திருந்தாள் வினயா. கடைசி பெஞ்சின் ஜன்னலோர இருக்கை தான் மிஞ்சியது அவளுக்கு. மதிய உணவு நேரத்திற்கு பிறகு நெடுநாள் பழகியவன் போல அவளின் இருக்கையருகே இயல்பாக வந்தான் மது. ‘எக்ஸ்க்யூஸ் மீ..’ உட்கார இடம் கேட்டதில் பெஞ்சின் மறுபகுதிக்கு நகர்ந்துக் கொண்டாள் வினயா. சன்னலுக்கு முகம் காட்டி பெஞ்சில் அமர்ந்தான். கையிலிருந்த கனிந்த கொய்யாப்பழத்தை ஜன்னலின் வெளிப்புறத் திட்டில் அவன் பிய்த்துப் போட எழுதி வைத்த ஒப்பந்தம் போல நாலைந்து அணில்கள் அவசரமாக ஓடி வந்தன. நல்ல அகலமான சன்னல் திட்டு அது. ‘பூஸ்.. பூஸ்..’ என்று விநோதமாக சத்தமெழுப்பினான். ஒதுங்கி நின்ற சின்;னச் சின்ன குருவிகள் தத்தி தத்தி முன்னே வந்தன. விதவிதமான சன்ன ஒலிகள். கொரிக்கும் ஓசைகள். மதுவுக்கும் பட்சிகளுக்குமான அந்தரங்க நேரம். அடுத்தப் பத்து நிமிடம் ஓடியதே தெரியவில்லை. இத்தனை அருகில் அணிலை பார்த்ததில்லை அவள். சிறுவயது கிளியைப் போலவே பருவ வயது அணிலும் அவளை பரவசப்படுத்தியது. “சாரி.. டிஸ்டர்பா இருந்துச்சா..?” அப்போது தான் அவளை கவனித்ததுப் போல வெகு இயல்பாக கேட்டான் மது.

“அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல..” என்றாள் சம்பிரதாயமாக.

“டிஸ்டர்பா இருந்தாலும் நான் செய்யறதுக்கு ஒண்ணுமி;ல்ல.. நானும் அதுங்களும் சரியா ஒண்ணேகாலுக்கு இங்க ஆஜர் ஆயிடுவோம்.. யாருக்கும் தொந்தரவில்லாம ஓரமா ஒரு பெஞ்ச செலக்ட் பண்ணி வச்சிருந்தன்.. நீங்க வந்து கெடுத்துட்டீங்க..” என்றான் சிரிப்புடன்.

அவனின் சகஜமான சுபாவம் அவளுக்கு பிடித்திருந்தது. ஏனோ ஆண்.. பெண்.. என்ற எல்லைகளில் வினயா அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. மதுவுக்கும்; பெண் என்பவள் ஈர்ப்புக்குரிய முதன்மை வஸ்துவாக தோன்றவில்லை. இருவருக்குமே மற்றவரை ஈர்ப்பதில் இருக்கும் கவனமின்மை சில நாட்களிலேயே இருவருக்குமான தோழமையைக் கூட்டியது. மாநிறத்திற்கும் சற்று கீழான நிறம். எண்ணங்களை போலவே தோற்றமும் உயரம் தான். நீண்ட மூக்கில் தொற்றிக் கிடக்கும் கருப்பு பிரேமிட்ட கண்ணாடி அவனின் உள்ளார்ந்த அறிவை எடுத்து சொல்வது போல தோன்ற அந்த எண்ணத்தில்; அவனிடம் பாடத்தில் எழுந்த சந்தேகத்தை கேட்டாள் வினயா. “அய்யய்யே.. கேக்கக் கூடாத கேள்விய கேக்கக் கூடாத ஆளுக்கிட்ட கேட்டுட்ட.. நான் ஆவ்ரேஜ் ஸ்டுடண்ட்டுப்பா.. என்ன ஆள வுடு..” என்றான் சிரிப்புடன். அவனது வார்த்தைகள் பொதுவாக சிரிப்பில் தோய்ந்தே இருக்கும்.

மகளின் நினைப்பு அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. கழுத்தைக் கட்டிக் கொண்ட மகளை அணைத்துக் கொண்டாள். மழை சாரலிட தொடங்கியிருந்தது. சாரல்மழை வறுத்த அரிசியின் சுவையை கூட்டியது. வாட்டர் கலரும் சார்ட் பேப்பருமாக அம்மாவும் மகளும் படம் வரைய உட்கார்ந்தனர். ஊசி போல இருந்தது மழையின் துளிகள். சின்ன சின்னதாக செடிகளை வரைந்தாள் மதுமித்ரா. வண்ணத்தூரிகையின் உதவியால் பூக்கள் குலுங்கின. அருகே வீடு வரைந்தாள் வினயா. மழையில் நனைந்த வீடு குளிர்ந்திருந்தது. அதில் கோழிக்குஞ்சுகளாய் ஒண்டிக் கொண்டனர் இருவரும்.

மகளின் குணாதிசயம் கூட மதுவின் சாயலையொட்டியே இருப்பதால் ரசனையோடு வளர்ப்பது சுலபமாகவே கைக்கூடியது வினயாவுக்கு. சின்ன சின்ன சந்தோஷங்களால் வாழ்வை நிறைக்க பழகிக் கொண்டதில் வாழ்க்கையின் பொதுவான உராய்வுகள் பெரிதாக வலிப்பதில்லை. தாயும் மகளும் சந்தோஷத்தின் அளவுக்கோலை சுதந்திர வெளியில் பொருத்திக் கொண்டார்கள். பிஸ்கெட்டை பகிர்ந்துக் கொண்ட நாய் தெருவில் போகும் போது வாலாட்டி அங்கீகரிப்பதற்குள் சந்தோஷத்தின் துளி ஒளிந்திருப்பதை புரிந்துக் கொண்டார்கள். பால் பாக்கெட்டிலிருந்து கசிந்த பாலை நக்கிய பூனைக்குட்டியை பெருங்குரலெடுத்து விரட்டாமல் அன்பு காட்ட முடிந்தது அவர்களால்.  சுள்ளென்ற வெயிலில் கண்களை இடுக்கியபடி தெருவோர மோர் பந்தலில் தாக சாந்தி செய்ய பிடித்து போனது. மார்கழிப் பனியில் அடுத்தத் தெருவிலிருக்கும் பெருமாள் கோவிலின் வெண் பொங்கலை சிறுவர்களோடு வரிசையில் நின்று வாங்கி உண்டு பரவசப்பட முடிந்தது. காற்றின் வீச்சுக்கேற்ப ஆடும் தோட்டத்து மாங்காயின் ஊசலாட்டம் உல்லாசப்படுத்தியது. அவரைக் கொடிக்கு பந்தல் போட ஆசையாசையாய் குச்சிகள் சேகரிக்க முடிந்தது. முதல் பூ மலர்ந்ததும் முகம் மலர முடிந்தது. நார்களுக்கு நடுவே பலாவின் சுளையை மனங்கோனாது எடுத்து ருசிக்க பிடித்தது.

சில சமயங்களில் இவை எல்லை மீறி போவதுமுண்டு. சன்னலோர அணில்களை வீட்டில் வளர்க்க பிரியப்பட்டதில் மதுவின் கோபத்தை சமாளிக்க முடியவில்லை அவளால். தண்டனையாக கோலமிடக்கூட தெரு வாசலை மிதிக்காமல் இரண்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே தன்னை அடைத்துக் கொண்டாள் வினயா. ஆனால் அது குறித்தும் மது பதறிதான் போனான். “ஏய்.. தெரியாம தானே செஞ்சே..?” அணைத்து நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவன் அப்படிதான். இரவுகளில் கூட கனவு போல ஆட் கொள்வான். புகை போல படர்ந்து பனி போல விலகி அவளை இலகுவாக கையாள்வான். இரவின் நினைவுகள் பகலை இனிமையாக்க வாழ்வே சொர்க்கமாகி போனது அவளுக்கு. கர்ப்பக்காலங்களில் நடைப்பயிற்சியை தோட்டத்தை சுற்றி வர அமைத்துக் கொண்டதில் பட்டாம்பூச்சிகளும் பழக்கமாகி போயின.

மது பனிக்காலத்து இலைகள் பருவ வயதையொத்தது என்பான். மழை நேரத்து இலைகள் பால்ய பருவத்துக்கானது என்பான். வெயில் நேரத்து இலைகள் அவனை சோபைக்குள் ஆழ்த்தும். “நடுத்தர வயசுக்காரங்க குடும்ப பிரச்சனைக்குள்ள சிக்கிக்கிட்டு கிடக்கற மாதிரி வெயில்ல சுருண்டு கெடக்குது பாரு இலையெல்லாம்..” என்பான். இரவு நேரத்து மரங்கள் மனிதர்களை உறங்க வைத்து காவல் காத்து நிற்கும் கருப்பண்ணசாமிகள் என்பான். கல்லூரிக் காலத்தில் ஒருமுறை மதுவின் அம்மாவிடம் கேட்டாள் வினயா “ஆன்ட்டி.. பேசாம மதுவ பி.எஸ்ஸி. பாட்டனி படிக்க வச்சுருக்கலாம்.. இவனெல்லாம் பி.காம் படிச்சுட்டு பேங்க் வேலைக்கு போனான்னா நட்டம் பேங்குக்கு தான்.. மழைகிழை பேஞ்சுச்சுன்னா பணத்தை அப்டியே போட்டுட்டு மழைய ரசிக்க போயிடுவான்..” என்றாள். “ம்க்கும்.. நீதான் அவன் ரசனய மெச்சிக்குணும்.. சரியான கோவக்காரப் பய..” செல்லமாக நொடிப்பாள் மதுவின் அம்மா.

அவன் கோபப்படும் தருணங்களும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அலைபேசிகளின் நடமாட்டத்தால் சிட்டுக்குருவிகள் செத்து போகின்றன என சிட்டுக்குருவிகள் தினத்தன்று வினயா மகளின் பள்ளியில் பேசியது அவனுக்கு கோபமுண்டாக்கியது. “வினு.. அதுவும் ஒரு காரணம் தான்.. அதுவே காரணமில்ல.. முன்ன மாதிரி வயல்வெளிகள் இப்ப இல்ல.. கிராமம் குறைஞ்சு போச்சு.. வீட்டோட அமைப்பு மாறிப் போச்சு.. கிராமத்துல பாத்திரம் கழுவும்போது மிஞ்சுற உணவுப் பண்டத்த வெளிய தூக்கி போடுவாங்க.. அந்த வேஸ்ட்டெல்லாம் இப்ப ஸிங்க்குள்ள போயிடுது.. சிறுதானியத்தோட விளைச்சல் குறைஞ்சு போச்சு.. எல்லாமே மாறிப் போச்சு.. ஆனா குருவி மட்டும் பறக்குணும்னா மந்திரத்தில மாங்கா காய்ச்சா தான் சாத்தியம்..” என்றான் மது கோபமாக. அவன் சொன்னதையும் சேர்த்து கட்டுரையாக்கிக் கொடுத்ததில் பள்ளியில் நல்ல வரவேற்பு. நன்றியுடன் ஏறிட்டவளை பார்த்து மது மென்மையாக சிரித்தான். பூப்பந்து போன்ற அவனின் ஆக்கிரமிப்பு மனதின் ரம்யத்தை கூட்டி மௌன தாழ்ப்பாள்களை திறக்க பூரித்துப் போகும் மனமும் உடலும். காதலைக் கூட நோகாமல் தான் சொன்னான்.

அறிமுகமாகி சில நாட்களிலிலேயே வினயாவின் கலகலப்பு மதுவின் அம்மாவுக்கு பிடித்து போனதில் மனதில் உள்ளவற்றை எல்லாம் அவளிடம் பேச தொடங்கினாள். இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு நடுவில் பிறந்த மது அவர்களை போல படிப்பில் சுட்டியாக இல்லாதது.. எதையும் விளையாட்டாகவே அணுகும் அவனின் எத்தனப் போக்கு.. தகப்பனிடம் இடைவெளியின்றி சகஜமாக பழகுவதால் பிற்காலத்தில் ஏற்பட போகும் அசட்டைத்தனம்..  மாத வருமானத்தை தவிர வேறேதும் சொத்துகள் இல்லாத நிலை.. என மனதின் பயங்களை வினயாவிடம் சொல்ல துவங்கினாள்.  “இதுல கவலப்படறதுக்கொண்ணுமில்ல ஆன்ட்டீ.. பிரமாதமா வருவான் பாருங்க..” என்பாள் வினயா. வினயாவின் கணிப்பு மதுவுக்கும் தெரியும். அதனால்தான், வேதியியல் பிரிவில் படிக்கும் மீனாவிடம் தான் காதல் வயப்பட்டதை அவளிடம் முதலில் தெரிவித்தான். “எப்போலிருந்து உனக்கு மனுஷங்களல்லாம் பிடிக்க ஆரம்பிச்சுது..?” என்று அவனை விளையாட்டாக விரட்டினாள். அவனுக்கு ஒட்டை வாய். மனதில் ரகசியங்கள் தங்காது. இவளிடம் சொன்ன அதே நாளே தாயிடம் போய் சொல்ல அதிர்ந்து போனவள் வினயாவை தகவல் அனுப்பி வரச் சொன்னாள்.

“படிக்கற காலத்துல ஏன் இவன் புத்தி இப்டி போவுது.. அண்ணங்காரன் படிச்சு முடிச்சிட்டு வேல தேடிக்கிட்டிருக்கான்.. ஒக்கார சொந்தமா வீடில்ல.. புள்ளங்க சம்பாதிச்சு குடும்பம் தலயெடுக்கும்ன்னு நெனச்சா இவன் என்னடான்னா எவளையோ லவ் பண்றேன்னு மூஞ்சியில அடிச்சாப்புல வந்து சொல்றான்.. ஆடி அடங்கிடுச்சு உசிரு.. எந்த சாதியோ… என்னா குடும்பமோ.. யாரு வினு அந்த பொண்ணு..” மதுவின் அம்மா கேட்டத் தொனியே வினயாவை பயப்படுத்தியது. இத்தனை நாள் பழகிய மதுவின் தாய்க்கும் இன்றைய தாய்க்கும் நிறைய வித்யாசமிருந்தது. அதனாலேயே மீனாவை பற்றி சொல்ல தயக்கமாக இருந்தது. “நான் விசாரிச்சு சொல்றேன் ஆன்ட்டீ..” என்றபடி கிளம்பினாள் வினயா. “அப்றம் எப்படீ வருவ..?” வழக்கமாக வழியனுப்பும் போது பேசும் அன்பான வார்த்தைகள் இம்முறை பேசப்படாதது துறுத்தலாக இருந்தது அவளுக்கு.

ஆனால் எந்த உறுத்தலுமின்றி அடுத்து வந்த மாலையில் “வினு.. எனக்கு மீனா மேல இருக்கறது லவ் கிடையாது..” என்றான் மது. அதிர்ந்து நிமிர்ந்தவளை பொருட்படுத்தாது பேசினான். “மீனாவ ஒரு நாள் லைப்ரரில பார்த்தேன். நல்லா சிவப்பா அழகா இருந்தா.. திரும்ப திரும்ப பார்க்கணும் போல இருந்துச்சு.. பார்த்தேன்.. அவ வராத நாளெல்லாம் வெறுமையா இருந்துச்சு.. அவளை பார்க்கறதுக்காகவே அவ ப்ளாக்குக்கு போக ஆரம்பிச்சேன்.. அவக்கூட நாலஞ்சு தடவை பேசி இருக்கேன்.. ஆனா அதுக்குள்ள ஏனோ திகட்டிப் போச்சு.. அவக்கிட்டே ஏதோ நிறைஞ்சிருக்குன்னு நினைச்சேன்.. ஆனா பழகும் போது அது குறைஞ்சுக்கிட்டே வந்தது மாதிரி தோணுச்சு.. ஸோ.. அவ மேல ஏற்பட்டது லவ் இல்லேன்னு புரிஞ்சுடுச்சு..”

“லூசா நீ.. அவ வருத்தப்பட மாட்டாளா..?”

“ம்ஹ{ம்.. வருத்தமே பட மாட்டா.. ஏன்னா.. அவக்கிட்ட இன்னும் நான் சொல்லவே இல்லையே..” விளையாட்டாகவே தொடர்ந்தான். “ஆனா இன்னொன்னும் தோணுச்சு.. நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்..” என்றான் வெகு சாதாரணமாக. அப்போது தான் அவளுக்கும் தன்னை புரியத் தொடங்கியது. மதுவின் தியரிப்படி அவனிடம் பழக பழக மனம் நிறைந்துக் கொண்டே போனதை உணர்ந்ததில் அவளுக்கும் காதல் துளிர்க்க ஆரம்பித்தது.

திருமணத்திற்கு தேதி குறித்த பிறகு குடும்பத்தாரின்; கவலைகள் தன்னைத் தொற்றிக் கொள்ள அனுமதிக்கவேயில்லை வினயா. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு பிறந்த ஒரே மகள். தனித்துவமும் ரசனையுமானவள். இவைகளெல்லாம்  மகளாக இருக்கும்போது மட்டுமே பெருமைப்படுத்துபவை. மனைவி என்ற நிலையிலோ மருமகளாகவோ இவைகள்; ஒவ்வாத விஷயமாகி விடும் என்ற வீட்டாரின் கவலைகளை பெரிதுப்படுத்த தோன்றவில்லை அவளுக்கு. ‘கடுகுக்கும் மிளகுக்கும் வித்யாசம் தெரியாம வளத்துட்டேன்..’ தாயின் சமையலறை புலம்பல்கள் கூட அவளிடம் அர்த்தப்படவில்லை. செல்லத்திற்கு பஞ்சமில்லை என்றாலும் பெரிய முடிவுகளிலும் முக்கியமான விஷயங்களிலும் அப்பாவின் முடிவே தீர்ப்பாகி விடுவதால் சாமான்கள் வாங்க.. ஜவுளி எடுக்க.. என லௌகீக அலைச்சலில் பறந்தலைந்த குடும்பத்தாரோடு ஒட்ட முடியவில்லை அவளால். அணில்கள் வசப்பட்ட அளவுக்கு அண்ணன்களும் வசப்படுவதில்லை.

திருமணத்திற்கு பிறகும்; இலைகள்; துளிர்ப்பதும் மொட்டுகள் விரிவதும் அணில்கள் வருவதும் பின்பு பெருகுவதுமாக வினயாவின் உலகம் ரம்யமாகவே கழிந்தது. பிறந்த வீட்டாருக்கும் சிகரெட்.. மது பழக்கங்களற்ற மருமகனை மிகவும் பிடித்துப் போனது. பிடித்த உடை.. விருப்ப உணவு.. என ‘கெத்து’ காட்டாமல் இருப்பதை உண்டு.. கொடுத்ததை அணிந்துக் கொள்ளும் இவனால் மட்டுமே வீட்டு வேலைகளுக்கு அவ்வளவாக பக்குவப்படாத வினயாவால் ஒத்திருக்க முடியும் என உணர்ந்ததில் மருமகன் மீது தனி பாசமே வந்து விட்டது அவர்களுக்கு. தனிக்குடித்தனம் என்பதால் விருந்தாளிகள் தொந்தரவுமற்று போனது. பணத்தேவை உட்பட எல்லா வகையிலும் மகளின் சந்தோஷ வாழ்வுக்கு உத்திரவாதம் அளித்து விட்ட திருப்தி மிஞ்சினாலும் மகள் தொலைதூரமாக பெங்களுரில் செட்டிலாகியது மட்டும் சற்று வருத்தமாகிப் போனது.

கடமை தவறாத அதிகாரியாகவும் மீதி நேரங்களில் கண்ணியமான கணவனாகவும் இருந்ததில் முடுக்கி விட்டாற் போல வாழ்வு நகர்ந்தது. நாட்கள் தொலைந்ததில் நாலைந்து வருடங்கள் கடந்திருந்தாலும்; குழந்தையற்று நகர்ந்ததில் சோகம் அப்பி போனது வீட்டாருக்கு. அவர்களின்; வேண்டுதல்களுக்காக வேண்டியோ என்னவோ திருமணம் முடிந்த ஐந்தாவது வருடத்தில் வினயா கர்ப்பம் தரிக்க வீடே பூரித்துப் போனது. பிரசவத்துக்காக மகள் வரும் நாளை எதிர்ப்பார்த்துக் காத்துக் கிடந்தது.

பிரசவ நேரத்தில் தொப்புள்கொடி சுற்றிப் போனதில் உள்ளிருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட சிசேரியன் தேவைப்பட்டது வினயாவுக்கு. மயக்கம் தெளியாத நிலையில் அவள் வாயில் எழுந்த ஓசை காற்றில் மது.. மது.. என பரவ வினயாவின் பிறந்த வீட்டார் திகைத்துப் போயினர். ‘இன்னுமா மறக்கல..’ திருமணத்திற்கு முன்பு சுயநினைவோடு இப்படி தான் மதுவை அறிமுகப்படுத்தியிருந்தாள் குடும்பத்தாரிடம். காதல் எதிர்ப்பிற்கான அத்தனை காரணங்களும் நடுக்கூடத்தில் கொட்டி ஆராயப்பட்டது. மருமகனாவதற்கான மதுவின் தகுதியின்மையை அடி கோடிட்டு அலசிய நேரத்தில் மது வீட்டாரின் தீவிர எதிர்ப்பும் வீடு தேடி வர வினயாவின்; திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. மாமன் மகன் ஆதியுடன் திருமணம்.

நினைவுகள் முழுவதும் தெளியாத நிலையிலும் வினயாவின் மதிமுகம் பிரகாசமாகவே இருந்தது.

—————

Series Navigationமஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4
author

கலைச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *