நல்ல காலம்

This entry is part 11 of 25 in the series 3 மே 2015

 

ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்திலேயே புதிய ஆண்டில் பயிலவிருக்கும் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய நேரம் அது.

“என் பிள்ளைங்க இரண்டு பேரையும் இந்தப் பாலர் பள்ளியில சேர்க்கனும், இடம் கிடைக்குமா ஐயா?”

“முன்கூட்டியே நீங்க வந்ததால உங்க இரண்டு பிள்ளைங்களுக்கும்   படிக்க இடம்  இருக்கு. எந்தப் பிரச்னையும் இல்லாம அவர்கள் இருவரும் இங்கே படிக்கலாம்….”

“நன்றிங்கையா.என் பெயர் தமிழரசி. பிள்ளைங்க இரண்டு பேரும் இரட்டையர்களா பிறந்தவங்க.அவுங்களுக்கு வயசு நான்காவுது. மூன்றாண்டு பாலர் பள்ளி முடிந்ததும் அவர்கள் இருவரும் அருகிலுள்ள தமிழ்ப்பள்ளியில படிக்கப் போறாங்க.  இதோ….. பிள்ளைங்களோடப் பிறப்புப் பத்திரங்க….பதிவு பண்ணிக்கங்கையா”

பிறப்புப் பத்திரங்களைக் கூர்ந்து பார்க்கிறேன்.தழிழகன், தமிழகி நல்ல தமிழ்ப்பெயர்களாகக் குழந்தைகளுக்கு  வைத்திருக்கிறார்களே……! வியப்பாக இருக்கிறதே! மூக்கும் விழியுமா குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள்.செக்கச் சிவந்த மேனியும் வயசுக்கு ஏற்றார் போல் உயரமாகவும் அளவான உடல் வாகுடன் காணப்படுகின்றனர்.என் முகம் மலர்கிறது.அழகிய ரோஜா மலர்கள் அல்லவா அவர்கள்! அவர்களை எண்ணி மனதுக்குள் மகிழ்கிறேன். இறைவனின் அற்புதப் படைப்பை எண்ணி வியக்கிறேன். எதிரில் அமர்ந்துள்ள குழந்தைகளின் தமிழரசியை ஏறிட்டுப் பார்க்கிறேன். அவர் என் முகத்தை  ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

“அம்மா…..நீங்க இந்த ஊருக்குப் புதுசா? உங்கள இந்த வட்டாரத்தில இதற்கு முன்னே பார்த்ததில்லையே……?”

“நீங்க சொல்றது உண்மைதாங்கையா. நாங்கள் சிரம்பான்ல இருந்து இங்கு வந்திருக்கோம்……..வந்து ஐந்து வருடங்கள் ஆவுது……….ஏன் கேட்கிறிங்கையா?”

“உங்களப் பார்த்தா வசதியான குடும்பமா தெரியுது.வசதியானவங்க பெரும்பாலும் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைங்கள அனுப்பத் தயங்குவாங்க. ஆனா…………..நீங்க தெளிவான முடிவோடப் பிள்ளைகளச் சேர்க்க எங்க பாலர் பள்ளிக்கு வந்திருக்கிறீங்க, ஆச்சரியமா இருக்கு……! இந்த பாலர் பள்ளியப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? ”

“தமிழ் தினசரியில் உங்கள் பாலர் பள்ளியின் நடவடிக்கைகளைப்பற்றி பல முறை வாசித்திருக்கேன், ‘ஆஸ்ட்ரோ’ வானவில்லில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி மற்றும் ‘பேஸ் புக்கிலும்’ பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன்”

“தினசரி நாளிதழ் வாசிக்கும் வழக்கத்தை நீங்க கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சியா இருக்கு. ‘ஆஸ்ரோவில்’ ஒளியேறிய பேட்டியைக் கண்டு களித்ததற்கும் நன்றி”

நம்மில் பலர் தமிழ் தினசரிகளை வாங்கி வாசிப்பதில்லை. ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்படும் நல்ல நிகழ்ச்சிகளைக் கண்டு பயனடையாமல்,சீரியல்களைப் பார்த்து சீரழியும் குடும்பங்களுக்கிடையில் பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்க்கும் இவர்களைப் போன்றவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

“அம்மா……உங்கள் கணவரை அழைத்துவரலியே?அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?”

“ஓ….தாராளமா! என் கணவரும் நானும் தமிழ்ப்பள்ளியிலதான் படிச்சோம். இருவரும்  பட்டதாரிகள். உணவு தயாரிக்கும் தொழில் பற்றி  பல்கலைக்கழகத்தில படித்துப் பட்டம் பெற்று, இப்போ சொந்தமா தொழில் பண்றோம். நூற்றுக்கும் மேற்பட்டவங்க எங்கள் நிறுவனத்தில வேலை செய்யிறாங்க. வேலை செய்யும் அனைவரும் நம்மவர்கள்தாம். அவர்களோட முழு ஒத்துழைப்பால வியாபாரம் நல்லா போய்க்கிட்டு இருக்கு. மிக விரைவில் இங்கு மேலுமொரு கிளை நிறுவனம் ஒன்றைத்திறக்கவிருக்கிறோம்!”

“கேட்க மகிழ்ச்சியாக இருக்கு.பெரும்பாலும் நம்மவர்கள் சொந்த தொழிலில் ஈடுபடுவதைக் காண முடிவதில்லை. ஆனா….நீங்க துணிவுடன் சொந்த தொழில் செய்வது உண்மையில் போற்றப்பட வேண்டிய ஒன்று. நீங்க சொந்த தொழில் செய்ய முனைந்த காரணத்தத் தெரிஞ்சிக்கலாமா?!”

“திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு…..நம்ம முன்னோர்கள் சொன்னது மட்டுமல்லாம துணிவுடன் உலகின் பல நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்து,வணிகத்துறையிலே கொடிகட்டி பறந்த பரம்பரையில வந்த நாம அடிமையா மற்றவங்களிடத்திலே வேலை செய்யிறது கேவலம் இல்லைகளா ஐயா?  துணிச்சலுடன் தொழில் தொடங்கினோம். இன்று வசதியா வாழ்றோம். அதோடு நம் இனத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள ஏற்படுத்தித் தர்ரோம்!”

“உங்கள நினைக்கும் போது பெருமைப்படாம  இருக்க முடியாது. நம்ம சமுதாயத்துல உங்களப் போல பலர் சிந்திச்சாங்கன்னா……2020 ஆம் ஆண்டுக்குள்ள நிச்சயமா நம்ம இனம் இந்த நாட்டுல தலைநிமிர்ந்து வாழும். நம்ம சமுதாயத்துக்கு முன்னுதாரணம விளங்கும் உங்களப் பாராட்டாம இருக்க முடியாது.”

அவரைப்பார்த்து நான் புன்னகைக்கிறேன்,பதிலுக்கு அவரும் புன்னகை பூக்கிறார்.

குழந்தைகளின் பிறப்புப் பத்திரங்களை மீண்டுமொருமுறை சரி பார்க்கிறேன். தேவைப்பட்ட அனைத்துப் பத்திரங்களும் சரியாக இருந்தன. உதவியாளர் மாணவர்களின்  விவரங்களைக் கணினியில் பதிவு செய்கிறார். சில நிமிடங்களில் அவர் தம் வேலைகளை நிறைவு செய்கிறார்.

மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அந்த அம்மா முழுமையாச் செலுத்தியப் பின் இருக்கையை விட்டு எழுகிறார்.பணிவுடன் அவர் இருகரங்களையும் கூப்புகிறார்.அருகிலிருந்த அவரது இரு குழந்தைகளும் அம்மாவைப்போன்று  கரங்களைக் கூப்பி வணக்கம் கூறிய பின் விடை பெறுகின்றனர்.

இனிய முகத்துடன் அவர்களுக்கு விடையளிக்கிறேன்.அவர்கள் செல்வதை அமைதியுடன் பார்க்கின்றேன்.என் முகத்தில் புன்னகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவரைப் போன்ற பெற்றோர்களால் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கண்டிப்பாகக் கூடும் என்ற நம்பிக்கை மனதில் ஆலமரமாய்த் தழைத்து நின்ற போது மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப்பள்ளிகளின் மீது தனியாத அன்பு கொண்டு,பாலர் பள்ளியிலே தங்களின் குழந்தைகள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பெற்றோர்களின் எண்ணிக்கை அண்மைய காலமாகக் சற்று கூடியிருந்தாலும், பல பெற்றோர்கள் இன்னும் மனமாற்றம் அடையவில்லை என்றே தெரிகிறது.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்கை ஆண்டுதோறும் சரிவு நிலையில் இருப்பதைக் கொண்டு அறியமுடிகிறது. நாம் எப்படி எடுத்துச் சொன்னாலும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிறமொழிகள் மீது மோகம் கொண்டு,ஆரம்பக் கல்வியைப் பெற வேற்று மொழிப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பிவிடுகின்றனர். பாலர்பள்ளியை நடத்தும் வேற்று மொழியினரும் தாய்மொழியான தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நாடு சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும் முன்பே,1936 ஆம் ஆண்டிலே கோலாலம்பூர் அப்பர் தமிழ்ப்பள்ளியில்  இடைநிலைப் பள்ளி இயங்கியுள்ளது.அப்பள்ளியின் புதிய கட்டிடத்தை 1958 இல் அப்போதைய சிலாங்கூர் மாநில சுல்தான் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

ஆனால்,78 ஆண்டுகளுக்கு முன் நம்முடன் இருந்து வந்த இடைநிலைப்பள்ளியைத்தொலைத்துவிட்டு இன்று அல்லாடுவது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் அலட்சியம் அல்லவா?

இன்னொரு உண்மையையும் புறம் தள்ளிவிட முடியாது. சுமார் ஆயிரம் பள்ளிகள் சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலை மாறி இன்று 523 பள்ளிகளாகக் குறைந்திருக்கின்றன.அவற்றுள் பல பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் மூடுவிழா காணும் துயர நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்னும் செய்தி மனதுக்கு வேதனையைத் தந்து கொண்டிருக்கிறது.இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அவசரமாக சமுதாயம் கூட வேண்டும்.தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டால் பலன் இல்லாமல் போய்விடும் அல்லவா?

டிசம்பர் மாத இறுதி வாரத்தில், ஞாயிற்றுக்கிழமை எல்லா மாணவர்களும்,பெற்றோர்களும் கலந்து கொள்ள ஏதுவாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் அறிமுக விழாவுக்குகான  எல்லா ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள்  கவனித்துக்கொள்கின்றனர்.நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வருகை புரிந்த பெற்றோர்களையும் மாணவர்களையும் முன்னின்று வரவேற்றேன்.எதிர்பார்த்தது போல் மாணவர்களின் பதிவு சிறப்பாக அமைந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மாணவர்கள் இருந்தாலும்,இருபது விழுக்காட்டினர் வேற்று இனங்களைச்சேர்ந்த மாணவர்களும் வழக்கம் போல் கல்வி கற்க பதிந்திருந்தனர்.

பத்தாண்டுகளுக்கு முன் அறிமுக விழாவுக்கு வரும் மாணவர்கள் பயத்தால் அழுது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.ஆனால், இப்போதெல்லாம் மாணவர்கள் அவ்வாரெல்லாம் நடந்துகொள்வதில்லை. இதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளை வீட்டிலேயே தயார் படுத்திவிடுவதேயாகும்.நான்கு வயதிலேயே மாணவர்கள் கற்றல்,கற்பித்தலுக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொண்டிருப்பது கால மாற்றத்தின் விளைவு என்றே கூறவேண்டும். இது ஆரோக்கியமான வளர்ச்சிதான்.

பாலர் பள்ளியின் வளாகத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்களில் போடப்பட்டுள்ள இருக்கைகள் அனைத்திலும் வருகை புரிந்தோர் அமர்ந்திருந்தனர்.இருக்கைகள் இல்லாமல் தவித்த சிலருக்கு இருக்கைகளைக் கொடுத்து அமரச் செய்வதில் ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

“வணக்கம் ஐயா”

“வணக்கம்.வாங்க தமிழரசி”

“இவர்தான் என் கணவர்”

“வணக்கம்,வந்து உள்ளே உட்காருங்க”

“வணக்கம் ஐயா……என் பெயர் தமிழன்பன்”

“என்னது………குடும்பமே தமிழ் மயமாக இருக்கே!” வியப்பாகிப்போகிறேன்.

“எங்கப்பா பெயர் தமிழரசன்” என்று கூறி வேகமாகச் சிரிக்கிறார்

அவரோடு நானும் சேர்ந்து சிரிக்கிறேன்.

தமிழன்பன் அங்கு வந்ததுமே, அன்று நடை பெறவிருந்த நிகழ்வே உயிர் பெற்றுவிட்டது போல் உணர்கிறேன். புத்துணர்சியடைகிறேன். பல சிரமங்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வு எப்படி நடை பெறுமோ என்ற மனத்திகிலுக்கிடையில் உற்சாக மூட்டும் தமிழன்பனின் பேச்சு மனதுக்கு இதமாக இருந்தது.

தமிழன்பன் எல்லாரிடமும் கலகலப்புடன் பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. வருகை புரிந்த பெற்றோர்களிடையே அவர் இனிமையாக உரையாடிக்கொண்டிருந்தார்.அவரைச் சுற்றியிருந்த பெற்றோர்களும் அவருடன் ஆர்வமுடன் பேசி  மகிழ்வதைப் பார்த்து எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழன்பனைப் போன்று யாராவது ஒருவர் சொல்லி வைத்தது போல் அமைந்துவிடுவார். நிகழ்ச்சி களைகட்டிவிடும்.இதுவரையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லா நிகழ்வுகளும் வெற்றிகரமாகவே நடந்து முடிவது ஒருவகையில் என் அதிர்ஸ்டம் என்றே எண்ணிக்கொண்டேன்.

அப்போது, திடீரென,வாசலில் காவல் துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து இறங்குகின்றனர்.வாசலில் பெற்றோர்களை வரவேற்று கொண்டிருந்த நான் அதர்ச்சிக் குள்ளானேன்! உயர் அதிகாரி ஒருவர் காரைவிட்டு இறங்கி என்னை நோக்கி வருகிறார்.சில காவல் துறையினர் அவரை பின் தொடர்கின்றனர்.ஏதும் புரியாமல் வரும் அதிகாரியைப் பதற்றமுடன் எதிர்கொள்கிறேன்.

“வணக்கம் மிஸ்டர் தமிழ்ச்செல்வன்!” என்னுடன் கைகுலுக்குகிறார்.அவரது உடையில் அணிந்திருந்த  பெயர் பட்டையில் ‘தமிழரசன்’ என்ற பெயர் பளிச்சென்று தெரிகிறது.

“மிஸ்டர் தமிழரசன்……தாங்கள் வந்த நோக்கத்த நான் தெரிஞ்சிக்கலாமா?”

“நிச்சயமா…….நான்தான் இந்த மாவட்ட காவல் துறைத்தலைவர்.என் பேரனும்,பேத்தியும் உங்க பாலர் பள்ளியில் படிக்கப்போறாங்க.இன்றைய அறிமுக விழாவுல நானும் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.கலந்து கொள்ளலாமா?!”

“உங்க பேரன்,பேத்தியின் பெயர்களச் சொல்ல முடியுமா?”

“தமிழகன்,தமிழகி!”

“ஓ………அவர்களோட பெற்றோரும் வந்திருக்கிறாங்க,பிளீஸ் கம் இன்!”

காவல் துறையின் திடீர் வருகை அங்கிருந்த பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

“செலாமட் பாகி செமுவா……!அனைவருக்கும் காலை வணக்கம்…..!” அனைவரையும் வணங்கிய, தமிழரசன் பேரன்,பேத்தி அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் சென்று அமர்கிறார். ஏதோவொரு அசம்பாவிதம் நடைபெறப்போவதாகப் பதறிப்போனக் கூட்டத்தினர்,அவ்வாறு ஏதும் நடைபெறாமல் போனதால் நிம்மதிப்பெருமூச்சு விட்டவர்களாக அமைதி அடைகின்றனர்.

அன்றைய நிகழ்வு குறிப்பிட்டபடித் தொடங்குகிறது. பள்ளி ஆசிரியை குமாரி இராஜபிரியா மலாய், ஆங்கிலம், தமிழ் மற்றும் மென்ரின் ஆகிய நான்கு மொழிகளிலும் வரவேற்புரை ஆற்றி  வருகை புரிந்த அனைத்து பெற்றோர்களையும் கவர்கின்றார்.

குறிப்பாக மென்ரின் மொழியில் வரவேற்பு கூறிய போது,சீனப்பெற்றோர் அனைவரும் கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுமார் ஒரு மணி நேரமாக நிகழ்ச்சி சுமூகமாக நடைபெறுகிறது.

வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு,எதிர்பாராமல் நிகழ்வுக்கு வருகையளித்த மாவட்ட காவல் துறைத் தலைவர் உயர்திரு.தமிழரன் அவர்களை நிகழ்வில் சிற்றுரை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.அவரும் எனது வேண்டு கோளை மறுக்காமல்,பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் பற்றி  துல்லியமாக பல அரிய தகவல்களை அவரது உரையில் எடுத்துக் கூறினார்.

“அடுத்து பேசிய தொழிலதிபர் திரு.தமிழன்பன், எனக்கு ஆரம்பக் கல்வியைப் புகட்டி, பண்பாளனாக, வாழ்வில் உயர்வதற்கு உந்து சக்தியாக விளங்கியத் தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்களின்  அர்பணிக்கு   நன்றிகூறும் வகையிலும், தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் வகையிலும்  ஆண்டுதோறும் கல்வி நிதி வழங்க விரும்புகிறேன்.

இந்த ‘செம்பூர்ண பாலர்’ பள்ளியில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய முப்பது மாணவர்களுக்கான ஓராண்டுக் கல்விக் கட்டணத்தை வழங்க விரும்புகிறேன்.இவர்கள் அனைவரும் தவறாமல் முதலாம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிக்குச் செல்லவிருப்பதை உறுதி செய்யப்படுவார்கள்.  இந்த ஆண்டு முதல் அந்நிதி என் நிறுவனத்தின் சார்பாக ஆண்டு தோறும்  வழங்கப்படும்!” என்று கூறி மரி.50,000- க்கான காசோலையைப் பள்ளி நிர்வாகியான என்னிடம் வழங்கி பின் இருக்கையில் அமர்கிறார்.

அவரது உரையைக் கேட்டுத் தமிழ்ப் பெற்றோர்கள் வாயடைத்துப் போகின்றனர்.

Series Navigationஒரு மொக்கையான கடத்தல் கதைபின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Re.Karthigesu says:

    அன்புள்ள அருச்சுணன்,

    ஓர் இன்பமான கனவு போல் இருக்கிறது உங்கள் கதை. அது நனவாக வாழ்த்துக்கள். ரெ.கா.

  2. Avatar
    வே.ம.அருச்சுணன் says:

    தங்களிடம் வாழ்த்து பெறுவது யான் பெற்ற பேறு என்பேன்.தொடந்து சிறுகதை வடிப்பதில் சாதனைப் பெற தங்களது ஆசி எனக்கு என்றும் உண்டு என நம்புகிறேன்.தாங்கள் நலமுடன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் தாங்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்து மகிழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *