நாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசு

This entry is part 21 of 25 in the series 3 மே 2015

 

கோடை நாடக விழாவில் அரங்கேறிய நாடகம். இம்முறை காமெடி களம். நவீன தொழில் நுட்பத்தை கையில் எடுத்து சாடியிருக்கிறார் ஆசிரியர் நாணு.

வழக்கம்போல நாடகத்தை தாங்கி நிற்பவர் வெட்டரன் காத்தாடி தான். இனி அவரை ‘விட்’ டரன் என அழைக்கலாம். சகஜ வார்த்தைகளே அவர் வாயிலிருந்து புறப்படும்போது ஹாஸ்ய லேகியம் ஆகி விடுகின்றன.

நவீன தொழில் நுட்பம் அறியாத அப்பா சிவராமன், அவரை விட ஐ க்யூ குறைவான அவரது மனைவி லலிதா. மென்பொருளில் புகுந்து விளையாடும் அறிவு ஜீவி வாசு அவர்களது பிள்ளை. அவனது சக ஊழியை ஜானகி. அவர்களது காதல்.

நேர கெடுவின் நெருக்கடியால், மண்டை காய்ந்து போகும் வாசு, விஷ் லிங்க் எனும் மென்பொருளால், முதிய உருவத்தை அடைவதும், அதனால் ஏற்படும் குழப்பங்களுமே நாடகம். ஜானகிக்கு தாத்தா வாசுவை பிடித்துப் போகிறது. கல்யாணம் செய்து கொள்ளவும் தயாராய் இருக்கிறாள். ஆனால் வாசு மீண்டும் வாலிப உருவத்தை அடையும்போது அவள் ஏற்றுக் கொண்டாளா என்பதே க்ளைமேக்ஸ்.

காமெடி என்கிற மேஜிக் ஷோவிற்கு லாஜிக் இல்லை. அதனால், மென்பொருளால் உருவத்தை மாற்ற முடியுமா என்கிற கேள்வியை எல்லாம் புறந்தள்ளி விட்டு , நாடகத்தை ரசித்தால் ஒன்றரை மணி நேரம் சிரிப்பு கார்னிவல் தான்.

வழக்கம்போல லலிதாவாக ஹேமா நந்தினி. ஜானகி, மைதிலி போல இதையும் நிரந்தர பெயராக நாணு வைத்துக் கொள்ளலாம். கதையும் கொஞ்சம் கிரேசி. பெயரும் அந்தப் பாணியில் இருந்து விட்டுப் போகட்டுமே.

ஜானகியாக வரும் ஆண்டாள் ஜெயந்தி ஒரு ஆச்சர்யம். நிமிடங்களில் மாறும் பாவங்கள் அவரிடம் உள்ள நடிப்புப் புதையலைக், கோடி காட்டுகின்றன. வாழ்த்துக்கள்.

சிவராமன் தம்பி சுவாமிநாதனாக எஸ்.பி.ஐ. முரளி. காத்தாடிக்கு ஈடு கொடுத்து நடிப்பதே அவருக்கான பாராட்டு.

அதிசயமாக, பின்கட்டில் இருக்கும் ஶ்ரீனிவாஸ், ஜானகியின் தந்தை கடையம் கல்யாணராமனாக இம்முறை முன்கட்டில். குழப்பல் பாத்திரமாக அவர் செய்யும் ரகளை நாடகத்திற்கு சேர்க்கிறது சிரிப்பலை.

தாத்தா வாசுவாக ஆசிரியர் நாணு. மைய பாத்திரத்தில் அவர் வருவது நல்ல முன்னேற்றம்.

இம்முறை நிறுவன அதிபர் நம்பிராஜனாக வரும் ஶ்ரீதருக்கு அதிக தீனியில்லை. செய்தவரையில் சோடையில்லை. பாதி நாடகம் வரை வாலிப வாசுவாக மகேஷ்வர்.

இந்தக் கதையில் இன்னமும் பல ஹாஸ்யத் திருப்பங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நேரம் கருதி குறைத்து விட்டதாக நாணு சொன்னார்.

இது காஞ்சனா 2 காலமாச்சே! இன்னொரு பாகம் எழுதி ‘வாட்ஸ் அப் வாசு 2 ‘ என்று போட்டாலும் கூட்டம் குழுமி சிரிக்கும். வாழ்த்துக்கள்.

0

Series Navigationவைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்தொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *