பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்

This entry is part 12 of 25 in the series 3 மே 2015

 

 

‘பிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில் (20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவில் இருந்து வருகை தர இருக்கின்றார். ஒரு வாரகாலம் நடைபெறும் இந்த எழுத்தாளர் விழாவின்போது அவர் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பார். அவருடன் கலந்துரையாடுவதற்கு வசதியாக ஒருநாள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்படுகின்றது. கலந்துகொள்ள விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும் – பாலமுருகன்’ – என்று ஒரு விளம்பரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

 

பெண்கள் பற்றியும் செக்ஸ் பற்றியும் கூசாமல் எழுதுவதில் வல்லவர் சாரங்கன். அதுவே ’பின்நவீனத்துவம்’ என நினைத்துக்கொள்ளும் பாலமுருகன், விளம்பரத்தில் ‘பிரபல பின்நவீனத்துவ எழுத்தாளர் சாரங்கன் ….’ எனப் போட்டுக் கொண்டார். சாரங்கன் அரச அழைப்பின் பேரில் வருவதால், அவருக்கு ஏற்கனவே தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. சிற்றியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வசதி இருந்தபோதும், பாலமுருகனின் அன்புத் தொல்லையால் அவரது வீட்டில் தங்குவதற்கு சாரங்கன் உடன்பட்டிருந்தார்.

 

பாலமுருகன் சமீபகாலங்களில் எழுதத் தொடங்கிய ஒரு இளம் படைப்பாளி. அவர் தன்னை எப்போதும் ஒரு வித்தியாசமான எழுத்தாளராகக் காட்டிக் கொள்ள முனைபவர். அவர் தனது சிறுகதைகள் நாவல்களிற்குப் போடும் தலைப்புகளிலிருந்து அவரை அடையாளம் கண்டுகொள்ளலாம். அடிக்கடி இந்தியா சென்று வருவார். அங்கே அவருக்கு விருதுகள், பொன்னாடை எல்லாம் காத்திருக்கும். சென்று வந்த பின்னரும் அவரைத்தேடி விருதுகள் பறந்து வரும். அவர் பணத்தை வாரி இறைத்து ’இந்த மாதிரியான’ வேலைகளைச் செய்து வருகின்றார் என்று இலக்கிய வட்டாரத்தில் ஒரு பேச்சு பரவலாக உள்ளது. அவருடைய உழைப்பு முழுவதும் அதிலேயே கரைந்துவிடும்.

 

பாலமுருகனும் பிரபல பி.ந.எழுத்தாளர் சாரங்கனும் பேஸ்புக் நண்பர்கள். புலம்பெயர்ந்த நாட்டுப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் பற்றி எழுது எழுது என்றெல்லாம் எழுதிக் கிழித்து யூனிவர்சிட்டிப் பட்டங்களையெல்லாம் பெற்றுவிட்டார் பாலமுருகன். ஆனால் யாராவது பேஸ்புக்கில் போடும் எந்தவொரு புலம்பெயர் விழாக்களைப் பற்றியோ படைப்புகள் அல்லது படங்களைப் பற்றியோ ஒரு ’லைக்’ ஒரு ‘மூச்சு’ விடமாட்டார் பாலமுருகன்.

 

பாலமுருகனும் அவனது நண்பனும் மெல்பேர்ண் எயப்போர்ட்டில் சாரங்கனுக்காகக் காத்திருக்கின்றார்கள்.

 

கம்பீரமான நெடிய உயரம். தடித்த மீசை. கண்டவர்களைக் கவர்ந்து கொள்ளும் வசீகரத் தோற்றம். சாரங்கன் வந்துவிட்டார்.

சம்பிரதாயக் கை குலுக்கல்கள். கேட்டுக் கேட்டே அலுத்துப் போன பிரயாணம் பற்றிய கேள்விகள், விசாரணைகள். கார் ரொலமறைன் எயர்போட்டிலிருந்து சறுக்கிக் கொண்டு கிழம்புகின்றது. ஒரு காலத்தில் ‘சுக்கா சுக்கா’ என்று நூறு வேகத்தில் ஓடிய ’வெஸ்டேர்ண் றிங் றோட்’, இப்ப ஐந்து வருடமாகக் கிழறுப்பட்டு ‘நாய் வேறு சீலைப்பாடாகக்’ கிடக்கின்றது.

 

வீட்டிற்கு வந்துவிட்டார்கள். இரண்டு அடுக்கு மாடி வீடு வெறிச்சோடிக் கிடக்கின்றது.

 

“என்ன குடிக்கின்றீர்கள்? காப்பி… ரீ…?”

“ஒரே வெக்கையாக் கிடக்கு. ஏதாவது கூல் ரிங்ஸ் தாருங்கோ.”

 

ஃபிரிஜ்ஜைத் திறந்து சாரங்கனுக்கும் நண்பனுக்கும் கூல்ரிங்ஸ் கொடுத்தான் பாலமுருகன்.

 

”எங்கே மனைவியும் மகளும்? உங்களுடைய மகளுக்கு அப்போது பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். இந்தியாவுக்கு வந்தபோது ஆட்டுக்குட்டிக்குப் பின்னாலே ஓடித் திரிந்தாள் அல்லவா? நோட்டி கேர்ள்…” சாரங்கனின் கண் முன்னே பாலமுருகனின் அழகான மனைவியும் சுட்டிப்பெணும் தோன்றினார்கள்..

 

”இப்பவும் ஞாபகம் வைச்சிருக்கிறியள். அது நாலைஞ்சு வருஷத்திற்கு முன்னாலை. பிறகெல்லாம் தனியத்தானே இந்தியா வந்து போறனான். மகள் இப்ப பெரிய பெண். பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கின்றாள்.”

 

”ஆமாம்… அவர்களைத்தான் தேடுகின்றேன். எங்கே அவர்கள்?”

 

“மகளிற்கு இப்போது பாடசாலை விடுமுறை என்றபடியால், அவளையும் கூட்டிக் கொண்டு தனது தாயாரின் வீட்டிற்குப் போய்விட்டார் மனைவி.”

 

சாரங்கனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பாலமுருகனுடன் பின்நவீனத்துவம் பற்றி முன்னர் சர்ச்சையில் ஈடுபட்டது ஞாபகத்திற்கு வந்தது.

 

“நான் வருவது பற்றி அவர்களுக்குத் தெரியுமா?”

 

”தெரியுமே! ஆனால் அவர்கள் இருந்தால் குடித்துக் கும்மாளமிட முடியாது என்பதால் நான் தான் அவர்களை அனுப்பி வைத்தேன்.”

 

நான் குடித்துக் கும்மாளமிடவா இங்கு வந்தேன். அதற்கும் மேலாக சாரங்கனின் மனதிற்குள் இன்னொன்று ஓடியது. பாலமுருகன் என்னை ஒரு கீழ்த்தரமான எழுத்தாளன் என எண்ணிவிட்டானே!

 

“உங்கள் ரொயிலற்றை ஒருக்கால் யூஸ் பண்ண முடியுமா?” சாரங்கனின் கேள்விக்கு “தாராளமாக” என்று சொல்லிக்கொண்டே ரொயிலற்றைக் காட்டினான் பாலமுருகன்.

 

சாரங்கன் ரொல்யிலற்றுக்குள் நுழைந்ததும்,

 

“இவனையும் வீட்டிலை வைச்சுக் கொண்டு, மனிசி பிள்ளையையும் வீட்டிலை வைச்சிருந்தா என்னைப் பற்றி சனம் என்ன நினைப்பினம்?” நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான் பாலமுருகன்.

 

ரொயிலற்றுக்குள் இருந்த சாரங்கன், தான் நிற்கவேண்டிய சிற்றி ஹோட்டலுக்கு ஒரு குறும் தகவல் அனுப்பினார்.

 

”தயவு செய்து பின்வரும் முகவரிக்கு ஒரு ரக்‌சி அனுப்பி வைக்கவும். நன்றி.”

 

“வீட்டிற்குள் ஒரே புளுக்கமாக் கிடக்கு. வாருங்கள் வெளியே நின்று காற்றோட்டத்தில் கதைப்போம்” வீட்டிற்கு வெளியே வந்து ஒன்றும் நடவாதவர்போல பலதும் பத்தும் என கதைத்துக் கொண்டிருந்தார் சாரங்கன்.

 

”முன்னர் அடிலயிட்டில் நடந்த விழாவின் போது சல்மான் ருஷ்டியும், மெல்பேர்ணில் நடந்தபோது அம்பையும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தடவை நான் வந்திருக்கின்றேன்” என்றார் சிரித்தபடியே சாரங்கன்.

 

சற்று நேரத்தில் ரக்‌சி ஒன்று வாசலில் வந்து நின்றது. வீட்டிற்குள் சென்று தனது பாக்கைத் தூக்கிக் கொண்டார் சாரங்கன். ’பாய்’ என்று சொல்லிவிட்டு நிதானமாக நடந்து ரக்‌சியில் ஏறிக் கொண்டார்.

Series Navigationநல்ல காலம்Release of two more books in English for teenagers
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

5 Comments

  1. Avatar
    BS says:

    உங்கள் ரொயிலற்றை ஒருக்கால் யூஸ் பண்ண முடியுமா?”//

    இதைப்படித்தவுடன் குழம்பிப்போய்விட்டேன். பின்னர் தெரியவந்தது: டாய்லெட் என்பது.

  2. Avatar
    BS says:

    கதையின் முற்பகுதியில் கதாநாயகன்; பாலமுருகன், எழுத்தாளர் சாரங்கனின் கதைகளின் மூலமாகவும் அவர் ஆளுமையின் மூலமாகவும் கவரப்படுகிறான். அவரின் படைப்புக்களை பின்நவீனத்துவத்தின் வலுக்கருவிகளாக எடுத்து மகிழ்கிறான். ஆனால், கதையின் பிற்பகுதி அவனின் குணத்தை தலைகீழாக்குகிறது: உண்மையிலே நம்பினானா அல்லது நடித்தானா என்ற குழப்பத்தை உருவாக்குகிறார் இங்கே இப்படி:

    //இவனையும் வீட்டிலை வைச்சுக் கொண்டு, மனிசி பிள்ளையையும் வீட்டிலை வைச்சிருந்தா என்னைப் பற்றி சனம் என்ன நினைப்பினம்?” நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான் பாலமுருகன்.//

    கதாநாயகனை விட எழுத்தாளர் கொஞ்சம் உண்மைதான்: அவர் இப்படி:

    //நான் குடித்துக் கும்மாளமிடவா இங்கு வந்தேன். அதற்கும் மேலாக சாரங்கனின் மனதிற்குள் இன்னொன்று ஓடியது. பாலமுருகன் என்னை ஒரு கீழ்த்தரமான எழுத்தாளன் என எண்ணிவிட்டானே!//

    இறுதியில் இருவருக்கும் ஒன்று புலனாகிவிட்டது. தங்கள்தங்கள் வாழ்க்கைகளை நாடக மேடையாக்கி கோமாளித்தனத்தைச் அவுஸ்திரேலியாவில் அரங்கேற்றிவிடுகிறார்கள். பின்நவீனதத்துவ எழுத்தாளன் ஒரு பொம்பிளை பொற்றுக்கியென்றும் அவனின் இரசிகன் ஒரு டுபாக்கூர் ஆசாமியென்றும் என்பதை நேரடியாகச் சொல்லமுடியாமல் புனைவாக்கி நாம் இரசித்து நம்ப் வேண்டுமென்கின்ற ஆவல். ஆனால் இந்த ஆவல் நல்ல கதையைத்தந்துவிட வாய்ப்புண்டு.. ஆனால், பாலமுருகனைப்பற்றி முதலில் சொன்னதே இடையூறாகி கதையைக்கீழேபோட்டு மிதித்துவிடுகிறது.

    இருகரணியங்களுக்காக இக்கதை தன் தரத்தை இழக்கிறது: 1. கதாநாயகனின் முன்னுக்குப்பின் முரணான குணச்சித்திரம். இருபத்திகளுக்குள்ளேயே நடந்துவிடுகிறது. 2. ஒரு வாழும் எழுத்தாளரை கதை தன் பிம்பமாகக் கொண்டு கதை வடிக்கப்படுகிறதாகத் தோன்றுவது.
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *