விவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )

This entry is part 14 of 25 in the series 3 மே 2015

 

சளைக்காமல் நாடகம் எழுதுவதிலும், அதை மேடையேற்றுவதிலும் விவேக் ஷங்கரின் பிரயத்தனா குழு ஒரு முன்னுதாரணம். இப்போதுதான் “நதிமூலம்” பார்த்த மாதிரி இருக்கிறது. உடனே இன்னொரு புதிய நாடகம். இம்முறை நதிமூலம் இல்லை! நாசவேலைகளின் மூலம், பவுத்திரம் எல்லாமும்!

ஹாக்கர்ஸ் எனப்படும், கணிப்பொறி வலைப்பதிவுகளில், கன்னம் வைப்பவர்களின் கதை. அதன் மூலம் சமூக விரோதிகள் தண்டிக்கப்படுவது மெசேஜ்! இன்செப்ஷன் என்று நீங்கள் கத்துவது தெரிகிறது. ஆனால் தமிழ் நாடக மேடைக்கு இந்தக் கரு ஒரு எக்ஸப்ஷன்!

ஒரே பெயர்.. இரு கதை மாந்தர்கள். அதனால் ஏற்படும் ஒரு கொலை. இதுதான் மைய இழை.

திவாகர் ( சூரஜ்) ஒரு கணிப்பொறி ஜீனியஸ். எந்த வலையிலும் புகுந்து புறப்பட்டு, சேதமில்லாமல் தப்பிக்கும் தந்திரம், அவனுக்கு அத்துப்படி. ஆனால் அதை பயன்படுத்தி, சட்டப்படி தண்டிக்க வேண்டியவர்களை, சிறையிலடைக்க அவன் உதவுகிறான். அவனுக்கு உறுதுணையாக இருக்கும் காவல் அதிகாரி பரமேஸ்வரன் அய்யர். ( கிரீஷ் ). திவாகரின் அறை நண்பன் கலியவரதன். ( மது ). பிள்ளையை அமெரிக்கா அனுப்பிவிட்டு, தனிமையில் வாடும் மேன்ஷன் பெரியவர் நரசிம்மன் ( டி டி சுந்தரராஜன்) இவர்களது பக்கத்து அறைக்காரர்.

கலியவரதனின் சொந்த ஊரில், திருநெல்வேலி பக்கத்திலிருக்கும் கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் ஐ ஏ எஸ் தேர்வு எழுத சென்னை வரும் திவாகர், அதே மேன்ஷனின் ஒரு அறையில் தங்குகிறான். ( இது என் யூகம். இது நாடகத்தில் தெளிவாக விளக்கப் படவில்லை ) கணிப்பொறி திவாகரை பழிவாங்க ஏவப்பட்ட கூலி படையன், ஐஏ எஸ் திவாகரைப் போட்டுத் தள்ளிவிட, தலைமறைவாக இருக்கும் ஒரிஜினல் டார்கெட் திவாகர், கொல்லப்பட்ட திவாகர் வீட்டிலேயே தங்குவது சின்ன டிவிஸ்ட். ஆனால் இதில் பழைய சிவாஜி படம் மாதிரி உணர்ச்சிகளுக்கு எல்லாம் இடம் தராமல், கதையை ஜெட் வேகத்தில் நகர்த்திக் கொண்டு போகிறார் இயக்குனர் விவேக் ஷங்கர். கடைசியில் கூலிப்படை ஆள் பிடிபட்டானா? இறந்த திவாகரின் குடும்பம் இந்த திவாகரை மன்னித்ததா என்பது க்ளைமேக்ஸ்.

சின்னதாக ஒரு திருப்பம் வைத்திருக்கிறார் ஷங்கர். தலைமறைவாகும் திவாகர், தன் பெயரில் உள்ள ஒரு நபரின் புகைப்படத்தை தன் அடையாளமாக மாற்றி விட்டுச் செல்கிறான். இது ஒரு காட்சியாக அமைக்கப்பட்டிருந்தால் இன்னமும் தெளிவாக புரிந்திருக்கும் பார்வையாளர்களுக்கு. ஆனால் இரண்டு வரி வசனத்தில் அதைச் சொல்லி விடுகிறார் விவேக் ஷங்கர்.

கொல்லப்பட்ட திவாகரின் கிராமத்து அக்கா ஜானகியாக பிரேமா சதாசிவம். அனுபவம் அவரை முதலிடத்தில் நிறுத்துகிறது. வழக்கம்போல கிரீஷ் பாஸாகிறார். ஆச்சர்யம், கனமான பாத்திரத்தில் கதை நாயகனாக நடித்திருக்கும் சூரஜ். சபாஷ்! புலம்பல் தாத்தாவாக வரும் சுந்தரராஜன், அரங்கில் அதிகம் கைத்தட்டல் பெற்றவர். யதார்த்தம் பாராட்டைப் பெறுவதில் அதிசயம் ஏதுமில்லை!

தினேஷின் இசை நாடகத்திற்கு பக்க பலம். இன்னும் கொஞ்சம் இசைத்திருக்கலாமோ என்று தோன்றுமளவிற்கு அற்புதம். சேட்டா ரவியின் ஒளி ஜாலங்கள் மேடைக்கு மெருகு.

விந்தையான கதைகளை யோசிக்கும் விவேக் ஷங்கர், அடுத்தது ரோபோக்களை வைத்து நாடகம் எழுதுவாரோ? ஷங்கர் என்று பெயர் இருக்கிறதே செய்தாலும் செய்வார்!

நூறு நிமிட நாடகம். நறுக் வசனங்கள். இயல்பான நகைச்சுவை. தேர்ந்த நடிப்பு. வெற்றி பெற இவைதானே ஃபார்முலா! நம்பர் ஒன்னாக வரும் இந்த ஐ டி! வாழ்த்துக்கள்!

0

Series NavigationRelease of two more books in English for teenagersஎட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *