இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது ஒரு கடிதம் வந்தது. சினிமா பற்றி ஏதாவது எழுதும்படி. அது மாலனோ அல்லது ஜெயபாரதியோ அல்லது இருவருமே அடுத்தடுத்தோ, சரியாக நினைவில் இல்லை. என்ன எழுதினேன் என்று நினைவில் இல்லை. என்ன எழுதக்கூடும் நான் என்ற தயக்கத்தோடு தான் எழுதிய ஞாபகம். ஏதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதுவும் இல்லை. இதை நினைவு கூறக் காரணம், நான் என்ன எழுதினேன் என்பது அல்ல. இப்போது தனக்கு அறுபத்து மூன்று வயதாவதாகச் சொல்லும் ஜெயபாரதி அப்போது 22 வயதினராக இருக்க வேண்டும். ஒரு பத்திரிகை, சினிமா பற்றி, அதுவும் தமிழில் சினிமா பற்றி மிகவும் வித்தியாசமாக, சிந்திக்கும் மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயபாரதி.
சத்யஜித் ரே, மிருணால் சென், ரித்விக் காடக், என பலர் அகில இந்திய தளத்திலும் உலக சினிமா தளத்திலும் புதிய சரித்திரம் படைப்பவர்களாக, உலவத் தொடங்கிய பிறகு, தமிழ் நாட்டிலும் ஒரு ஜெயகாந்தன் ஒரு எளிய தொடக்கமாக உன்னைப் போல் ஒருவனைத் தந்து விட்ட பிறகு, ஒரு சில நூறு பேராவது, சரி ஒரு சில ஆயிரம் பேர்களாவது முற்றிலும் வேறு பாதையில் தமிழ் சினிமாவைப் பற்றி சிந்திக்கவாவது தொடங்கியிருந்திருக் கிறார்கள். இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை ஆகிவிடவுமில்லை.
அந்த எழுபதுகளில் தான் தில்லியில் எனக்கு ரவீந்திரன் என்னும் அன்பர், பிரக்ஞை இதழின் பொறுப்பாளரில் ஒருவராகத் தெரியவந்தார். கொஞ்ச காலம் அவர் தில்லியில் இருந்தார். அப்போது அவருடன் நெருங்கிய பழக்கம். நல்ல ரசனை உள்ளவர். சினிமா, இலக்கியம் என்று பலவாறாக. எங்கள் பொழுதெல்லாம் மாக்ஸ்ம்யூல்லர் பவன், ஹங்கரியன் செண்டர், தில்லி ஃபில்ம் சொசைட்டி என்று தான் கழியும். நாடகம் பற்றி நான் ஒருவர் கேட்டு எழுதிய மிக நீண்ட கட்டுரை, பின்னர் பிரசுரமாகாமல் போகவே, நான் இதை பிரக்ஞையில் போடுகிறேன் என்று பிரக்ஞையில் பிரசுரித்தார். அவர் ப்ரக்ஞையில் நீண்ட ஆழமான கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ஒன்று ஞாபகத்துக்கு வருவது ஒரு ஜெர்மன் படம். “The Brutalization of Herr ……. என்னவோ பேர். ஒரு சிறைச்சாலையில் அமைதியாக இருந்தவன், கூட இருந்த முரடர்களிடையே தன்னைக் காத்துக்கொள்ள தானும் ஒரு முரடனாகிறான். வெற்றுச் சண்டைப் படம் இல்லை. வாழும் நிர்ப்பந்தங்கள் பற்றியது. ஒரு சமயம் சென்னையில் ஒரு நாள் முழுதும் என்னுடன் செலவழித்தார். புத்தகக் கடைகளிலும் ஹோட்டலிலும். மிக நுண்ணிய ரசனையும் நகைச் சுவை உணர்வும் கொண்டவர். ஒரு சமயம் ஹோட்டலில் சாப்பிட்டபிறகு காசு கொடுக்க நான் பர்ஸைத் தேடிக்கொண்டிருந்த போது, ரவீந்திரன் ஒரு புன்னகையுடன், “we will share it. You do the fumbling with the purse and I will pay the bill, right? ”. அப்போது ஏதோ ஒரு நிரந்தர வேலையில் சம்பாதித்துக் கொண்டிருந்தவன் நான் தான்.
அவருடனான நெருங்கிய பழக்கத்தின் பின் தான் அவர், தம்பி ஜெய பாரதி குடிசை படம் எடுப்பதில் தீவிரமாக இருக்கிறார் என்றும், அவரது பெற்றோர்கள் தான் பிரபல எழுத்தாளர்கள் து. ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி தம்பதிகள் என்றும் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் படித்திருக்க வில்லை. அல்லது படித்தது நினைவிலிருக்க வில்லை. அவரும் “ஏன்?” என்று கேட்கவில்லை. எத்தனையோ நல்ல விஷயங்களும் நம் பாதையின் குறுக்கே தென்படாதே பின் தங்கி விடுகின்றன. சார்பாகவோ, எதிர்த்தோ சொல்வதற்கு ஏதும் இல்லை. அவர் தன்னைப் பற்றியோ, தன் பெற்றோர்கள், தம்பி பற்றியோ ஏதும் விசேஷமாகச் சொல்வதற்கு இருப்பதைப் பெருமையாகச் சொல்லும் இயல்பினர் இல்லை. இயல்பான பழக்கத்தில், அவ்வப்போது பேச்சில் இந்த விவரங்கள், எந்த அழுத்தமும் பெருமைப் படலும் இன்றி வந்து விழுமே அன்றி யோசித்து திட்டமிட்டு சொல்லவேண்டுமென்று சொன்னதில்லை. தீர்க்கமான, பலமான கருத்துக்கள் அவருக்குண்டு. ஆனால் எதையும் உரத்துப் பேசி, எதையும் வலியுறுத்தி காரசாரமான வாதங்கள் நடத்துவது பற்றி பேச்சே இல்லை. மெல்லிய சன்னக் குரலில் தான் பேசுவார். மெல்லிய புன்னகை தான் அவர் இதழ்களில் தவழ நான் கண்டிருக்கிறேன். அவர் தில்லியில் இருந்த கிட்டத் தட்ட ஒரு வருஷ காலமோ என்னவோ தான் அவருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பின்னர் விடுமுறையில் தெற்கே வந்த போது ஒரு நாள் முழுதும் அவருடன் கழிந்திருக்கிறது. ஒரு நாள் அவர் மறைந்துவிட்ட செய்தி வந்தது. மிக மெல்லிய தேகம். “பூஞ்சான் உடம்பு” என்று கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர் வயதோ, உடல்நிலையோ மரணத்துக்கு இட்டுச் செல்லும் ஒன்றல்ல. இப்போது அவர் தம்பி ஜெயபாரதியின் புத்தகம் படிக்கும் போது தான், ரவீந்திரனுக்கு கல்லூரி நாட்களிலிருந்தே இருதயத்தில் வால்வ் ஒன்று அடைத்துக்கொண்டுள்ளது என்று தெரியவந்து, அதற்கான சிகித்சை அக்காலத்தில் இருக்கவில்லை, ஆக, கடைசி நாள் வரை அடைத்துக் கிடந்த வால்வோடேயே அவர் வாழ்ந்திருக்கிறார் என்றும் தெரிகிறது. இது பற்றி அவர் என்றும் பேசியதில்லை. குறைப்பட்டுக்கொண்டதில்லை. என்னிடம் மட்டுமல்ல. அது பழகியது ஒரு சிறிய காலம் தான். பின் சென்னையில் பழகிய இடங்களில் வாழ்ந்த ஆண்டுகளில் அவரோ வேறு யாருமோ அதைப் பற்றிப் பேசி அவரை வருத்தியிருப்பார்களா தெரியாது. எனக்குத் தெரியாது போனது போல, இன்னும் அனேகர் இருக்கக் கூடும். தன்னுள்ளேயே இதைப் புதைத்து புன்னகை முகம் காட்டியே வாழ்ந்த மனிதர். இதைத் தான் எதற்கும் அலட்டிக்கொள்ளாத, அமைதியுடன் தம் அசாதாரணத்துவத்துடன் வாழ்ந்தவர் என்று எனக்குத் தெரிந்த ரவியும் அவர் குடும்பத்து மற்றவர்களும். இப்போது நினக்கும் போது கூட மனம் வேதனைப் படுகிறது, விதிக்கு ஏன் இத்தனை பாரபட்சம்? வஞ்சனை நிறைந்த நெஞ்சம்?
இத்துடன் தன் தம்பி ஜெயபாரதிக்கு சினிமா விஷயங்களில் உற்சாகமும், ஆலோசனைகளும் தந்து வந்திருக்கிறார். அண்ணன் தன் தம்பிக்குத் தரும் உற்சாக ஆதரவு மட்டும் அல்ல அது. விஷயமறிந்த வழிப்படுத்தல்.
அவரது குடும்பமே, எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் சாதாரணத் துவத்திலிருந்து மேலெழுந்து அதிகம் அலட்டலின்றி சாதனை படைத்தவர்களாக, அல்லது படைக்கும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இப்போது ஜெயபாரதியின் புத்தகத்தை மையப்படுத்தி பேசத் தொடங்கும் போது எண்ணத் தோன்றுகிறது.
நான் ஓய்வு பெற்று சென்னையில் தங்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, பாரதி மணி தானும் நடித்திருந்த ஜெயபாரதியின் படம் ஒன்று “நண்பா நண்பா” பார்க்க என்னை அழைத்திருந்தார். போனோம். நுங்கம்பாக்கம் ஹை ரோடில் எங்கோ, இப்போது நினைவில் இல்லாத ஒரு மாடியில். அந்தச் சின்ன திரையரங்கத்தில் நூறு பேர் இருப்பார்களோ என்னவோ. இரு நண்பர்களைப் பற்றிய கதை. வெகு அமைதியான, அலட்டல், இரைச்சல் எதுவும் இல்லாத படம். நல்ல முயற்சி. அழுக்குகள் இல்லாத சுத்தமான ஒன்று என்று பட்ட நினைவு தான் இருக்கிறது இப்போது. குடிசையோ அல்லது வேறு எந்த படமோ நான் பார்த்ததில்லை. பார்க்கும் வாய்ப்புக்கள் இருக்கவில்லை. இரண்டு விஷயங்கள்: ஒன்று அதில் எனக்குத் தெரிந்த பெயர்கள் இரண்டு. ஒன்று பாரதி மணி. இரண்டாவது சார்லி, தமிழ்ப் படங்களில் பார்த்த முகம். ஆனால் இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமான சார்லி அவர். இது சார்லியா? என்று ஆச்சரியப் படத் தோன்றும். ஆக, வாய்ப்புக் கிடைத்தால் நம்பகமான மனிதராக ஒரு சித்திரத்தைத் தரக்கூடியவர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். வாகை சந்திரசேகர் எனக்குத் தெரியாத பெயர்.முன் பின் தமிழ்த் திரையில் பார்த்திராத நடிகர். நண்பா, நண்பா படத்திற்கு கதையையும் சொல்லி, அதில் சார்லியையும் நடிக்கச் சொல்லவேண்டும் என்று ஜெயபாரதிக்குச் சொன்னது ரவீந்திரன் என்று ஜெயபாரதி எழுதுகிறார் தன் புத்தகத்தில்
”இப்புத்தகத்தில் சொல்லப்படுவதெல்லாம் உண்மை, உண்மை தவிர வேறு எதுவும் இல்லை, இறைவன் மீது ஆணை” என்று ஒரு வாக்குறுதி பத்திரத் தோடு தான் ஜெயபாரதியின் புத்தகம் நம் முன் விரியத் தொடங்குகிறது. இன்றைய தமிழ் வாழ்க்கையின் நிர்பந்தங்களில் இதுவும் ஒன்று. இல்லாததைச் சொல்லி தனக்குத் தானே பொன்னாடை போர்த்திப் பெருமைப் பட்டுக்கொள்வதே நியதி ஆகிவிட்ட காலம். இதிலிருந்து தான் வேறுபட்டவன் என்று சொல்லவேண்டிய காலம். ஆக, இது ஜெயபாரதியைப் பற்றியும் ரவீந்திரனைப் பற்றியும் கூட, அவர் நினைவு கூறும் எல்லா சம்பவங்கள், மனிதர்கள் பற்றியும் சொல்கிறது.
ஜெயபபாரதி தன் சினிமாவைப் பற்றி ஏதும் அதிகம் சொல்லி விடவில்லை. அவரது இடைவிடாத, சோர்வும் அலுப்பும் அடையாத முயற்சிகள் பற்றியும் அத்துடன் சம்பந்தப் படும் மனிதர்கள், சம்பவங்கள் பற்றியும் தான் நாம் தெரிந்து கொள்கிறோம். அவரது திரைப்பட வாழ்க்கைக் குறிப்புகள். குறிப்புகள் மட்டுமே. இருப்பினும் இவை நமக்கு தெரியவராத, பல ஆச்சரியம் தரும் விஷயங்களைச் சொல்லும். பல நம்மால் முதலில் நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கும். இருப்பினும் இவை அந்த ஆரம்ப கால உண்மைகள் என்றே நாம் கொள்ளவேண்டும். இவையும் தமிழ்த் திரை உலகின், அதன் பல பிரபலங்களின் ஒரு முகம். இன்று அடையாளம் காணமுடியாத ஒரு பழைய முகம். உண்மை என்று ஜெயபாரதி சொல்கிறார்
அது ஆரம்பம். ஏதோ நாடகம் போட்டுக்கொண்டு, கணையாழியில் கதைகள் எழுதுவதும் சினிமா பற்றி புத்தகங்கள் படிப்பதும் சினிமா டைரக்ஷன் தயாரிப்பு கனவுகளில் மிதந்து கொண்டுமாக இருந்த காலம்.. சந்தர்ப்ப வசங்கள் அவரை எம் ஜி ஆர் முன்னும் நிறுத்தும். கமலுடன் ஆழ்வார் பேட்டை அலுவலகத்தின் அருகில் உள்ள கடையில் கமலும் நண்பர்களுமாக டீ குடித்துப் பேசிக்கொண்டிருந்த காலம். இவர்கள் எல்லாம் அறிவுஜீவிகள் என்று ஒதுங்கிய ராதா ரவியுடனான இன்னொரு கூட்டம் அங்கே கொஞ்சம் தள்ளி டீ குடித்துகொண்டிருந்த காலம். படம் தயாரிக்க மும்பையின் ஃபில்ம் ஃபைனன்ஸ் கார்ப்பரேஷனை அணுகிக்கொண்டிருந்த காலம். இரண்டு முறை தோல்வி. யாரோ ஒரு உற்சாகம் மிகுந்த இளைஞன் என்பது தவிர வேறு ஏதும் தெரியாத போதிலும் வந்தவனுக்கு விருந்தளித்து பண உதவி கிடைக்கவும் உதவுவதாகச் சொல்லும் ரிஷிகேஷ் முகர்ஜி, வாசுதேவன் நாயர் போன்றோர் இருந்த காலம். இருப்பினும் அது நடக்கவில்லை. ராஜாஜியின் கதையை படமாக்க வந்தவருக்கு அந்த உதவி சென்றது. இதுபோலவே இன்னொரு முறையும் நிகழ்ந்தது. அது ஒரு சூழல்,
ஒரு திரைப்படத் தேர்வுக் குழுவில் பங்கு கொண்ட போது கடைசி நாளில் ஒரு பிரமுகர் நுழைந்து, சிவாஜிக்கு சிறந்த நடிகர் என்று தொடங்கி தான் தயாரித்துக் கொண்டு வந்த முழு விருதுப் பட்டியலை அவர்கள் மீது சுமத்த, குழுவினர் அதை மறுத்து முத்துராமன் தான் சிறந்த நடிகராக தேர்ந்திருக்கிறோம் என்று இவர்கள் சொல்ல, “நீங்க பாட்டிலே இப்படிச் செய்தா, சிவாஜி கேப்பாரே ஐயா, அவருக்கு நான் என்ன பதில் சொல்றது?” என்று முறைக்க, கடைசியில் சிவாஜியே “ என்னமோ வேறே ஆளுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப் போறீங்களாமே?” என்று இந்த பிரமுகரை விசாரணை செய்ய, இப்படி ஒரு தமிழ் சினிமா சூழல். இதில் தான் ஜெயபாரதி தனி மனிதனாக, பணமும் இல்லாது, ஒரு மாற்றம் செய்ய கிளம்புகிறார்.
அப்போது தான் தன்னை ஒரு புதிய பாதையில் பயணிப்பவனாக புகழ், வசூல் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டத் தொடங்கியிருந்த கே.பாலசந்தர், “ உன்னைக் கதாநாயகனாக்கிக் காட்டுகிறேன். உன் கண்கள் நிறையப் பேசுகின்றன” என்று ஜெயபாரதியைப் பாராட்டுகிறார். ஆனால், சந்தர்ப்ப வசம், ஜெயபாரதி, குடிசையோ இல்லை வேறு ஏதோ தயாரிப்பில் பிஸி என்று தகவல். அது பாலசந்தருக்கு பிடிப்பதில்லை. கமல் ஏதோ ஸ்டண்ட் வேலை டூப் இல்லாது நானே செய்வேன் என்று எங்கோ உயரத்திலிருந்து குதித்து காலை ஒடித்துக்கொள்ள, “எல்லாம் உன்னால் வந்த வினை. கமல் இப்போ நிறைய இலக்கியம் படிக்க ஆரம்பிச்சுட்டான். அதான் எல்லாம் நானே பண்றேன்னு கிளம்பி காலை ஒடிச்சிண்டிருக்கான். ஷூட்டிங் என்ன ஆறது? நடிப்புக்கும் இலக்கியத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? என்று சீறுகிறார் இயக்குனர் சிகரம். பாலசந்தர் கூப்பிடும்போதெல்லாம் ஜெயபாரதி ஏதோ படத் தயாரிப்பில் இருக்க, அவர் ரஜனிகாந்த் என்னும் இன்னொரு இளைஞனுக்கு வாய்ப்புக் கொடுக்க, அந்த இளைஞன் சூப்பர் ஸ்டார் ஆகிறான். கெடுத்தது விதியா? இல்லை சினிமா தயாரிப்புக்கு முக்கியத்வம் கொடுத்ததா? வெகு வருஷங்கள் பின்னால், ”ரஜனிசாரிடம் நீங்கள் கேட்டால் அவர் கால் ஷீட் கொடுப்பார், படத்துக்கு நிறைய பணம் குவிந்துவிடும்” என்று ஒரு நண்பர் சொல்ல, ரஜனிசாரோ, ஜெயபாரதி சாரைத் தொல்லை படுத்தாதீங்க, எப்ப அவருக்கு உதவணும்னு தோணுதோ அப்ப நானே வந்து உதவுவேன் என்று சொல்லி விடுகிறார்.
இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள் என்னும் கதையை படமாக்க தான் பணம் கொடுப்பதாகவும் ஆனால் கமல் நடிக்கவேண்டும் என்று ஒரு கண்டிஷனோடு, சொல்ல, ஜெயபாரதி கமலைப் போய்ப் பார்த்துக் கேட்க, கமலும் ஒப்புக்கொள்கிறார். ரூ 500 முன் பணம் சம்பிரதாயமாகக் கொடுக்கிறார், தயாரிப்பாளர் ரமேஷ். இந்த செய்தி பரவினால் எல்லோரும் உன் சம்பளத்தைக் குறைத்து விடுவார்கள் என்று கமலுக்கு அண்ணன் சாருஹாசன் எச்சரிக்க, “ஜெயபாரதிக்கு நான் இலவசமாகவே நடித்துக் கொடுப்பேன்” என்று கமல் சொல்கிறார். பாடல்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று பணம் கொடுப்பவர் சொல்கிறார். கண்ணதாசனிடம் செல்கிறார்கள். ஒரு பாட்டில் விஸ்கி, ஒரு தண்ணீர் பாட்டில், பின் ஒரு பாக்கெட் சிகரெட் எல்லாம் ஒரு டீ டேபிளின் மேல் கண்ணதாசனுக்காக வைக்கப்பட்டுள்ளது தயாராக. டூன் அமைத்தது அலிதாலியா ராஜாமணி என்னும் ஒரு நண்பர், புது முகம். அப்போது கூட இருந்தது மனோ பாலா. அவரும் புதுமுகமாகத் தான் இருக்கவேண்டும். டூன், பாடல் எல்லாம் தயார். எல்லோரும் கமலிடம் போகிறார்கள். “என்ன பாடல் எல்லாம் சேர்க்கிறாப் போல இருக்கு. நான் உங்களுக்கு நடிக்க மாட்டேன்” என்று தீர்மானமாகச் சொல்லிவிடுகிறார். இப்படி நடந்திருக்கிறது. இது அன்றைய கமல். இன்றைய கமல்சாரோடு உலகநாயகனோடு இதை குழப்பிக்கொள்ளக் கூடாது.
போகட்டும் பண்டரிபாய், மல்லியம் ராஜகோபால் காலத்து சிவாஜி கணேசனைப் பார்க்கலாமா? கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம் பின்னால் போகிறோம். ஜெயபாரதி சினிமா பத்திரிகை நிருபராகவும் பணியாற்றிய அக்காலம் அது. இளைய தலைமுறை என்ற படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிவாஜி, பண்டரிபாய் ஒரு ஏழைக்குடும்பத்தினர். தங்கைக்கு திருமணம் செய்து கொடுக்க பணம் இல்லாது, பணம் சம்பாதிக்க தாய் பண்டரி பாய் மகன் சிவாஜி கணேசனைப் பட்டணத்துக்கு அனுப்புகிறாள். வழிச்செலவுக்கு வைத்துக்கொள் என்று கொஞ்சம் சில்லரையை சிவாஜிக்கு கொடுக்க, சிவாஜிக்கு அது அவமானமாகப் படுகிறது. “என்னங்க இது சில்லறையைத் தொடச்சொல்றீங்க. நோட்டைக் கொடுக்கச் சொல்லி ஷாட் எடுங்க” என்று சொல்கிறார். நடிகர் திலகமாச்சே, மேலும் ஒரு வெள்ளைக்காரக் கூட்டம் வேறு ஷூட்டிங்க் பார்க்க வந்திருக்கே. தமிழ் சினிமாவில் ஹீரோக்களும் ஹீரோயின்களும் கோலோச்சுகிறார்கள். டைரக்டர்களுடைய ஸ்தானமே கொஞ்சம் அப்படி இப்படித் தான். அப்படி இருக்க, மற்ற எல்லாரும் டெக்னீஷியன்களும் வேறு வேறு தரங்களில் நிற்கும் எடுபிடிகள் தான்.
ரிக்ஷாக்காரனானாலும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மேக்கப் பட்டுசட்டை, பாண்ட், கழுத்தில் ஸ்கார்ஃப், தலையில் தொப்பி என்று தானே ரிக்ஷா மேல் ஏறி நின்று பாட்டுப் பாடினால் தானே ரிக்ஷாக்காரன். தமிழ் சினிமா உலகமே தனி. நடிகர் திலகத்துக்கு சில்லரையைத் தொடுவது ஒரு கௌரவப் பிரசினை ஆகுமே வெள்ளைக்காரக் கூட்டம் பார்த்து நிற்க. ஜெயபாரதியைக் காட்டி, “என்னய்யா இவர் எழுத்தாளர் என்கிறீர்கள். பாண்ட் சட்டையெல்லாம் போட்ருக்கார்?” என்று ஷூட்டிங்கில் கேள்வி எழுகிறது.
பல முறை பணப்பிரசினை எழுந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு வழியாக குடிசை (அப்பா து ராமமூர்த்தியின் கதை) 1979-ல் வெளியாகிறது. ஒரு சத்யஜித் ரே தமிழ் சினிமாவில் உதயமாகிவிட்டதாக கொண்டாடப்படுகிறது. ஆனால், பழைய நண்பர்கள் பலர் விட்டுச் செல்கிறார்கள். மனோ பாலா கமலின் சிபாரிசில் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனர் ஆகிறார். ராபர்ட், ராஜசேகரன், இருவரும் டி ராஜேந்திரனின் ஒரு தலை ராகம் படப்பிடிப்புக்கு சென்று விடுகின்றனர். ஒருநெருங்கிய நண்பர் கூட்டம் சிதைகிறது. அடுத்து 24 C வேதபுரம் முதல் வீதி என்று அடுத்த படம் ஒன்று. எஸ் வி.சேகர், விசு, ப்ரியா எல்லாம் நடிக்கும் ஒரு ஏழ்மைப்பட்ட கமர்ஷியல் படம். பணம் தருகிறேன் என்று ஜாயிண்ட் அக்கௌண்ட் வைத்துக்கொண்ட நபரிடம் ஏமாந்தது. இப்படி சில அனுபவங்கள்.
• தன்னுடைய நாவல் தேநீரைப் படமாக எடுத்தால் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் நிதி திரட்டி உதவி செய்வார்கள் என்கிறார் டி. செல்வராஜ். திரைக்கதையும், இயக்கமும் தான் ஜெயபாரதி வேலை, மற்ற வேலையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முன்வருகிறார், செம்மலர் பத்திரிகையின் செல்வன் என்னும் கட்சித் தோழர்.. இளைய ராஜாவை இசையமைக்கச் சொல்கிறேன் என்கிறார் செல்வராஜ். அவர் ரொம்ப பிஸியாயிற்றே என்று சொல்ல, நான் சொல்கிறேன் இளையராஜாவிடம் என்று சொல்லிச் சென்ற டி.செல்வராஜ், இளையராஜா ”எனக்கு நிறைய படங்கள் இருக்கே, எனக்கு நேரமில்லை, கங்கை அமரனிடம் சொல்கிறேன்’ என்று தன் இயலாமையைச் சொல்ல, டி.செல்வராஜ், “நான் கேட்டும் மாட்டெங்கிறே, நீங்கள்லாம் சாப்பாட்டுக்கில்லாமே கஷ்டப்பட்ட போது கம்யூனிஸ்ட் கட்சி தானே உங்க அண்ணனைக் காப்பாத்திச்சு. அதை மறந்துட்டு பேசறே நீ.” என்று தோழர் செல்வராஜ் இளையராஜாவை விளாசித் தள்ளி விடுகிறார்.
பட ஆரம்ப விழாவுக்கு தொழிற்சங்கத் தலைவர் வி/பி. சிந்தன் அழைக்கப் படுகிறார். ஆனால் அவர் விழாவுக்கு வர மறுத்து, சொல்கிறார்., “கையில் காசில்லாதவரை தான் தோழர்கள் ”கம்யூனிஸ்டுகளாக” இருப்பார்கள். கையில் நாலு காசு கிடைத்ததும் கள் குடித்த குரங்கைப் போல் ஆட்டம் போடுவார்கள். ஆகவே துவக்க விழாவுக்கு வரலை. படம் முடிஞ்ச பிறகு கூப்பிடு பார்க்கலாம்” என்கிறார். தொழிற்சங்கத் தலைவருக்குத் தோழர்களைத் தெரியாமலா போகும். கடைசியில் ஜெயபாரதி ,செம்மலர் செல்வனிடம் பட்ட பாடு மகா பரிதாபமானது. சிந்தனோ கள் குடித்த குரங்கு போல் என்று தான் சொன்னார். செம்மலர் செல்வனோ, “இப்பத் தானே கையிலே பணம் புரளுது. நாளை என்ன ஆகுமோ, இப்பவே அனுபவிச்சுடணும்” என்று குடி மாத்திரம் இல்லை, கூத்தியாளும் அவர் அனுபவ சொர்க்கத்தில் சேர்கிறது. கடைசியில் அவ்வப்போது பணம் வேண்டும் போது ஜெயபாரதியைக் காப்பாற்றுவது, பாக்கிய ராஜின் மனைவி பிர்வீணா தன் நகைகளைக் கொடுத்து இதை வைத்துக்கொண்டு உடனடிச் செலவுகளைச் செய்யச் சொல்கிறார். அது போல இன்னொரு முறை ரேணுகா என்னும் நடிகை, பணம் இல்லேன்னு ஷூட்டிங்கை நிறுத்தாதீங்க என்று தான் அணிந்திருந்த நகைகள் அத்தனையையும் கொடுக்கிறார்.
அடுத்து ஜெயபாரதி ஜனகராஜ் என்னும் ஒருவரைச் சந்திக்கிறார். ”அம்பிகாவை கதாநாயகியாக வைத்து படம் எடுப்பதால் இருந்தால் தான் பணம் கொடுக்க முடியும்,’ என்கிறார். காரணம், அப்படி ஒரு ஆசை அவர் அண்ணனுக்கு இருந்து, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதால், அவர் அண்ணனின் ஆசையை நிறைவேற்ற அவர் விரும்புகிறார். வேடிக்கை, குடிசை படம் எடுத்து தென்னாட்டின் இன்னொரு சத்யஜித் எனப் பாராட்டப் பெற்ற ஜெயபாரதி, அப்படி ஒரு உந்துதலோடு ஒரு படம் ரெண்டும் ரெண்டும் அஞ்சு என்ற தலைப்பில் வெளிவருகிறது. ஜனகராஜின் அண்ணா ஆன்மா சாந்தி அடைய அம்பிகா கதாநாயகி. சரத் பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி, நாஸர், வாகை சந்திரசேகர், செந்தில் மற்ற நடிகர்கள். இசை கங்கை அமரன். இவர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் ஜெயபாரதிக்கு உதவும் ஏழை பங்காளர்கள் தான். ஸ்ரீ வித்யா குடிசை எடுத்த ஜெயபாரதிக்கு இலவசமாகவே நடித்துக் கொடுக்கும் மனம் கொண்டவர். வடிவேலு, ஏதோ ஒரு தயாரிப்புக்கு காமிக் காட்சி சேர்க்க வந்தவர், ஜெயபாரதி விருதுப் படங்கள் தயாரிக்கும் இயக்குனர் என்று அறிந்து, சார் எனக்கும் ஒரு விருது வாங்கிக்கொடுக்கணும் நீங்க என்று மிகவும் ஆதுரத்துடன் கேட்கிறார்.
இப்படி ஒரு வாழ்க்கை, வாலிப வயதிலிருந்தே தனக்கான சினிமா என்னவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அதற்கு முற்றிலும் எதிரான சூழலில் மிதமான வெற்றிகளும் தோல்விகளுமாக, இரண்டு தலைமுறைக் காலம் கடந்து வந்திருக்கிறார் ஜெயபாரதி. சில இனிய நட்புக்களும், சம்பவங்களும் இதில் உண்டு. இந்த ராக்ஷஸ் சூழலிலும் கூட இனிய மனிதர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
சில ஆச்சரியங்களை இதில் நாம் எதிர் கொள்வோம். சில எதிர்பார்த்த அவலங்களும் தான். வெற்றுப் படாடோபங்கள். மனம் கசந்து நாம் திடுக்கிட வைக்கும் வி.பி. சிந்தனின் அனுபவங்கள். எல்லாம் தான்.
ஜெயபாரதி முயன்று இருக்கிறார். தமிழ் சூழலில் இயலாத ஒன்றைத் தேடி அலைந்திருக்கிறார். சமரசங்கள் இல்லையென்று இல்லை. பாலு மகேந்திராவின் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் போது, பிற்காலங்களில், அரசியல், சினிமா பிரபலங்கள் அமர்ந்திருக்கும் மேடையில் அவர் பேசுவதைக் கேட்கும் போது, ஏன் இந்த வீழ்ச்சி இந்த கலைஞனுக்கு என்று கேட்கத் தோன்றும். அந்த கலைஞனை அறிந்தோர் மனம் வெதும்பும். அப்படியும் அவர் பெற்றது ஏதும் இல்லை. அவரையும் தமிழ் சினிமா வாழவிடவில்லை. ஜெயபாரதி ஒன்றும் விதி விலக்கில்லை.
பி.கு. அவ்வப்போது ஜெயபாரதி சில சம்பவங்களைச் சொல்லும் போது இது எப்போது நடந்தது என்ற விவரமே இல்லை. புத்தகத்தின் கடைசி பக்கங்களில் அப்பா, து ராமமூர்த்தி, ராண்டார்கை, சுஜாதா, தியோடார் பாஸ்கரன் போன்றாரின் கட்டுரைகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன, இவை எப்போது எழுதப்பட்டன என்ற விவரம் இல்லாததுடன், நிறைய அச்சுப் பிழைகள் இந்த ஆங்கிலக் கட்டுரைகளில். பிழை திருத்தப்படாதது யாருடைய அலட்சியம்?
நிறைய படங்களுடன் நன்றாக அச்சிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் இந்த அலட்சியம் கண்களையும் மனத்தையும் உறுத்துகிறது.
இங்கே எதற்காக: திரைப்பட வாழ்க்கைக் குறிப்புகள்: இயக்குனர் ஜெயபாரதி: டிஸ்கவரி புக் பேலஸ் பி. லிட். கே.கே நகர் மேற்கு, சென்னை-78 பக்கங்கள் 182. விலை ரூ 150
வெங்கட் சாமிநாதன்/18.3.2015
- இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?
- தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்
- இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்
- முகநூல்
- தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்
- தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்
- உதவும் கரங்கள்
- ஒர் இரவு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10
- பொறி
- மூன்றாம் குரங்கு
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு
- இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்
- விழிப்பு
- நான் அவன் தான்
- யானையின் மீது சவாரி செய்யும் தேசம்
- திரை விமர்சனம் – காக்கா முட்டை
- மிதிலாவிலாஸ்-22
- கல்பீடம்
- ஒரு நிமிடக்கதை – நிம்மி
- தெருக்கூத்து
- பூகோளப் பருவ மாறுதலின் எதிர்காலக் கணிப்பீடுகளை விளக்கமாக இப்போது நாசா வெளியிடுகிறது