நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10

This entry is part 9 of 23 in the series 14 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

நான் புறப்படறேண்ணா என்றாள் யாழினி

ஏன் என்ற கேள்வி அனைவர் முகத்திலும் தெரிந்தது. யாழினிக்கு அந்த கடிதத்தைப் படித்த பின்பு வினோதனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அந்தகடிதம் தன்னை இலக்கு வைத்து எழுதியதைப் போன்ற உணர்வு. யாழினி கவனமாய் அந்த நாட்குறிப்பை எடுத்துவைத்துக்கொண்டாள்.

அடுத்து படிக்க வேண்டும். படிப்பதற்கும் இங்கிருந்து வெளியேறியாக வேண்டும். ஏதோ ஒரு இலக்கு வைத்துத்தான் அனைத்தும் நடந்தேறுகிறதோ. யாரோ ஒருவரின்வாழ்வின் தொடர்ச்சியாக யாழினியின் பயணம்.

மாறுப்பட்ட கோணமாய் தோன்றினாலும், இரு பெண்களுள் நேர்ந்த ஒரே அனுபவம். பூமிக்கு கீழ் புதியதாக ஒன்றுமில்லை. அது புதியதாய் பிறந்த மனதின் அனுபவத்த தன்மைப் பொறுத்ததே!

அங்கிருந்து போய்விட்டாலும், அத்தை நிலத்திற்கு வந்து நிற்பாள். அப்பாவின் இரண்டு லட்ச பாண்டு இன்னும் அவளிடத்தில் இருக்கும். வீட்டுப் படி ஏறினாள்சிண்டைப் பிடித்துக்கொண்டு ஆட்டுவாள்.

பணத்திற்காக உண்மையைத் தொலைத்து விடும் மனித வக்கிரங்கள்.

ராஜம் தடுக்கவில்லை. யாழினியின் தீர்க்கத்தை உணர்ந்தவளா அல்லது பெயர்த்தியின் நாட்குறிப்பை அவளும் படித்திருப்பாளோ என்று எண்ணினாள் யாழினி. அது நிஜம் என்பது போல் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றவள். சில துணிகளை ஒரு பேகினுள் வைத்து இது என்னுடைய பேயர்த்தியினுடையது நீ பயன்படுத்திக்கொள் என்று பணித்தாள்.

யாழினி அந்த பையோடு வெளியில் வந்த போது, அது தேவகியாகவே தோன்றியது டேவிட்டின் கண்களுக்கு.

யாழினியின் மனம் முழுவதும் விநோதன் மீதே இருந்தது.

நான் வந்து விட்டுட்டு வரேன் தேவகி என்றான்

நீங்க ஏன்னா மாத்தி மாத்தி கூப்பிடறீங்க என்றாள் யாழினி.

சில நேரம் தேவகியாகவே தோன்றிவிடுகிறாய் என்றான் எங்கோ பார்த்தபடி

சரி வாங்க பஸ்டேண்டு வரைக்கும் என்றாள்

பஸ்டேண்டு வரைக்கும் இல்ல உங்க வீடு வரைக்கும் என்றவன், யாழினி ஒரு சின்ன ரெக்வஸ்ட் என்றான்.

என்ன என்று அவன் முகம் நோக்கினாள் யாழினி.

நீ ஏன் தாலி கட்டிக்கொள்ளக் கூடாது என்றான் டேவிட்

தாலி என்று புருவம் சுருக்கினாள் யாழினி. யார் கட்டுறது என்ற வினாவும் தொடர்ந்தது.

நீயே தான் யாழினி! உனக்கு நீ தான் காவலனாகவும் இருக்க வேண்டும் இந்த சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதன் போக்கிலேதான் அதன்யோசனையும் இருக்கும், கழுத்தில் தாலி இல்லாமல் பிள்ளை என்பது கேவலமாய்த்தான் பார்க்கும் என்றான் டேவிட்.

அது தேவை இல்லாத தலை சுமை அண்ணா என்றாள் யாழினி.

தாலி என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புனிதம் யாழினி, தாலியோடு வலம் வரும் பெண்களின் பின் கணவன் என்ற காதாப்பத்திரம் இருக்கவே செய்யும் என்பதுஇந்திய ஆண்களின் மனதில் பதிந்து போன ஒன்று. அனாவசிய சிக்கலில் இருந்து அது உன்னை விடுவிக்கும் என்றான்.

இதில் உடன்பாடில்லை யாழினிக்கு, கணவன் என்றொருவன் இல்லாத போது எதற்கு சடங்கைத் தலையில் ஏற்றிக்கொள்ளவேண்டும் என்றே எண்ணினாள்.

நிதர்சனத்தைப் புரிந்து எதார்த்தத்தில் வாழ வேண்டும். அது தான் வாழ்க்கை. இல்லாத உறவுகளை உருவாக்கிக்கொள்வதும், அதற்காக ஏங்குவதும் மனதில்குழப்பத்தையும், சந்தோஷமின்மையையும் தான் ஏற்படுத்தும். பிரச்சனைகளை நம் காதில் போட்டுக்கொள்ளலாமல் போவதைத் தவிர வேறு எந்த தீர்வும் இல்லை என்றுஉறுதியாக கூறினாள் யாழினி.

அவளின் மனத் திட்பத்தை உணர்ந்தவன் அதற்கு மேல் அவளை நிர்பந்திக்கவில்லை.

உனக்கு எப்பொழுதெல்லாம் தாய்வீடு போகவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் என்னை பார்க்க வந்து விடு என்றாள் ராஜம்.

கீதாவிடம் மட்டும் பாட்டியை பத்திரமா பாத்துங்கங்க கீதா, சீக்கிரம் மேரேஜ் பண்ணி செட்டில் ஆகுங்க என்றாள் குரல் தாழ்த்தி, நானும் அண்ணாக்கிட்ட சொல்றேன் என்ற போது, கீதாவின் எண்ணம் வேறு விதமாய் இருந்தது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம், ஆதரவில்லேன்னு வந்தவளுக்கு வந்த வாழ்வைப்பார்த்தியா என்று கருவினாள்.

நேரமாயிடுச்சு வா யாழினி என்றான் டேவிட்

காரில் ஏறிய போது பிரின்சி கையை பிடித்து இங்கே இருந்து விடேன் யாழினி நீ

ஏன் போக வேண்டும் என்றாள்.

இல்லேம்மா கொஞ்சம் வேலை என்று இழுத்தாள் யாழினி

உங்க அம்மா அப்பாதான் இல்லையாமே உங்கண்ணா சொன்னாரே யாழினி நாங்க ஊருக்குப் போற வரைக்கும் ஆவது இரேன் என்றாள் மழலை விழிகளை மலர்த்தி.

அவளைப் போக விடு பிரின்சி காரணமில்லாமல் தேவகி முரண்டு பிடிக்கிறவள்

இல்லை என்றான் டேவிட்

ம்ம்ம் நீங்க சீக்கிரம் வந்துருங்க என்றாள் தயக்கமாய்

நான் வர்ற வரைக்கும் பாட்டிக்கூட இரு என்றான் டேவிட்

அது சரி பாட்டியைப் பார்த்தாலே பிசாசு போல இருக்கு என்று முணுகினாள் பிரின்சி

என்ன என்று டேவிட் கேள்வியில் அழுத்தம் தர ஒன்றுமில்லை என தலையசைத்து அங்கிருந்து வேகமாய் அறையை நோக்கி நடந்தாள் பிரின்சி.

நீங்க பஸ்டேண்ட்ல பஸ் ஏத்துங்கண்ணா போதும், நான் போய்ட்டு உங்களுக்கு கால் பண்ணி வந்துட்டேன்னு சொல்றேன். இந்த மாதிரி நேரத்துல பிரின்சி தனியாஇருக்க வேண்டாமே. பாட்டியால பிரின்சிய பார்த்துக்க முடியாது, கீதா பாட்டியையே பாத்துக்க மாட்டாங்க பிரின்சியை எங்கிருந்து பாத்துக்கறது.

இவ்ளோ அக்கறைப்படுற நீ இங்கேயே இருந்துடலாமே யாழினி என்றான் டேவிட்

அவன் யாழினி என்று கூற என்னவோ போல் இருந்தது அவளுக்கு, தேவகி என்றழைத்த போதெல்லாம் தான் அவனின் தங்கை என்ற உள்ளுணர்வு இப்போதுவிலகியதைப் போல் உணர்ந்தாள்.

என்ன பதில் சொல்வது என்ற தடுமாற்றத்தைக் கண்ணுற்ற அவனே சரி செங்கம் பஸ் ஏத்தி விடுறேன் என்றான். இதற்கிடையில் பேருந்து நிலையமும் வந்துவிட,யாழினி அவனிடம் இருந்து விடைப்பெற்று ஓடி திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாள்.

[தொடரும்]

Series Navigationஒர் இரவுபொறி
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *