சிறகு இரவிச்சந்திரன்.
0
காரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில், விடலையென்றால், ஏதோ தாம்பத்திய வாழ்வில் தவற நேரிடும் என்ற குழப்பமான செக்ஸ் பாதிப்பால் அரைகுறையாய் டிகிரி வாங்கும் பல்கலைப் பட்டதாரிகள் பலரை என் வாழ்வில் நான் சந்தித்ததுண்டு.
அப்போதெல்லாம் அம்மாதிரி ஆட்கள் ஒரு மாதிரி கனவு நிலையிலேயே இருப்பார்கள்! இவர்கள் நிதர்சனத்தை சந்திக்கும்போது என்ன அதிர்ச்சிக்கு ஆளாவார்கள் என்று நான் எண்ணியதுண்டு.
ஆரம்ப நாட்களில் மாம்பலம் கண்ணம்மாப் பேட்டை ஒண்டுக் குடித்தன வீடுகளில் நிறைய சுவாரஸ்யம். அங்கு நான் கண்ட பல சுந்தரிகளின் வாழ்க்கை சித்திரத் தொகுப்பே இது.
இவர்களில் யாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் அடுத்தவர்களின் வாய்ச்சொல்லில் இவர்கள் ‘ஒரு மாதிரி ‘ என ஆக்கப்பட்டவர்கள். அவர்களின் உண்மை கதை அவர்களைப் பற்றிய வதந்திகளை விட வெகு சுவாரஸ்யம்!
இது செக்ஸ் கதையல்ல. நிச வாழ்வு செக்ஸ் கதைகளை விட சூடும் சுவையும் நிறைந்தது என்பதை உணர்த்தும் வாழ்க்கைச் சித்திரம்.
0
1.சிவகாம சுந்தரி
சிறகு இரவிச்சந்திரன்.
0
கீழே எட்டும் மேலே எட்டுமாக குடித்தனங்கள் நிறைந்த குடியிருப்பு அது. ரெட்டியார் வீடு என்று பரவலாக அதைச் சொல்வார்கள். முன் வீடு பால்கார். பின் வீடு செட்டியார். காலை வேளைகளில் முன்பக்கம் சந்தடி ஏதும் இருக்காது. ஆனால் பின்பக்கம் ஏகத்துக்கு சப்தம் சதிராடும். நான்கு வீடுகளுக்கு ஒரு அடிபம்பு என்று போட்டிருந்தார் ரெட்டியார். அங்கு எல்லாமே சிங்கிள் பெட்ரூம் போர்ஷன்கள். அதனாலெல்லாம் சனத்தொகை ஒன்றும் குறைந்து விடவில்லை. ஸ்பேனர் செட் மாதிரி வயசுக்கும் சைசுக்குமாக ஏகப்பட்ட நட்டுகள் போல்டுகள் அங்கு உண்டு. பின் பக்கம் கிணற்றை ஒட்டி இருக்கும் போர்ஷனில் மேல் தளம் காலி. மொட்டை மாடி என்று இருக்கும் ஒரே பகுதி அந்தக் குடியிரூப்புக்கு அதுதான். தேர்வு சமயங்களில் மூலைக்கொன்றாக பல குழுக்கள் அங்கே படித்துக் கொண்டிருக்கும். தாவணிகளும், மேடிட்ட மேல் சட்டைகளும் தனித் தனிக்குழுக்களாக.. பையன்கள் பெரும்பாலும் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வாசல் கேட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டிச் சுவர் மீது அமர்ந்து படிக்க வேண்டியதுதான்.
ரெட்டியார் கொஞ்சம் வயசாளி. ரெண்டாம் தாரமாக ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடமாகியும் அவருக்கு குழந்தை இல்லை. கட்டிட காண்டிராக்டு எடுத்து வேலை செய்பவர். நல்ல கைராசிக்காரர். அதனால் வருமானம் அதிகம். ரெட்டியார் பொண்டாட்டி மதர்த்துக் காணப்படுவாள். அகன்ற தோள்களும் பெரிய விழிகளும் சிவப்புத்தோலுமாக ஆறடி உயரம் இருப்பாள். நெஞ்சை நிமிர்த்தி அவள் நடந்து வரும்போது வந்த காமமும் காணாமல் போகும். கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பது அவளது திராவிடக் குரலில் அரண்டு ஓடும்.
ரெட்டி மனைவியின் பெயரினை இதுவரை யாரும் அறிந்ததில்லை. ரெட்டியார் சம்சாரம் என்றே அவள் அழைக்கப்படுவாள். ஒரு குழந்தை இருந்தாலாவது மீனா அம்மா, ராதா அம்மா என்று கூப்பிடலாம். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.
ரெட்டியார் மிகவும் நாணயஸ்தர். அதிகம் ஆசைப்படுபவர் அல்லர். வாடகை அதிகம் கேட்க மாட்டார். உயர்த்துவதும் எப்போதாவது தான். ரெட்டியார் சம்சாரம்தான் குடக்கூலி வசூலிப்பது எல்லாம். அந்தக் காலத்தில் செக்கெல்லாம் கிடையாது. கேஷ்தான். அதை எண்ணி ஐந்தாம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். ரெட்டியார் சம்சாரம் அதைக் கையால் எல்லாம் வாங்க மாட்டாள். பூசை அறையில் பெரிய பித்தளைத் தட்டு இருக்கும். அதில் வைத்து விடவேண்டும். பெரிய குங்குமப் பொட்டுடன் பின்னால் கையைக் கட்டியபடி அவள் பார்த்துக் கொண்டிருப்பாள்.
சின்னச் சின்ன சச்சரவுகள் அவ்வப்போது தலை தூக்கும். அப்போது முன்கட்டு அலறும். கட்சி சேர்ந்து பதினாறு குடித்தனமும் போர் புரியும். பால்கனி டிக்கெட் வாங்கியவர்கள் போல மேல் போர்ஷன்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது வார்த்தைகளை வீசி எறிவார்கள். அது எசகு பிசகான இடத்தில் பட்டு பற்றி எரியும்.
இத்தனை களேபரத்திலும் ரெட்டியாரோ அவரது சம்சாரமோ ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள். பேசிக் களைத்து ஓய்ந்து போகும் இரண்டு அணிகளும். அதன் பிறகு யாராவது ரெட்டியார் சம்சாரத்தை பார்க்க நேர்ந்தால் முந்திக்கொண்டு விசய தானம் செய்ய முற்படுவர். ரெட்டிச்சி சொல்வாள்: “”அது ஒங்க பிரச்சினை. இதுல நான் எந்துக்கு.. “”
ஒரு கால கட்டத்தில் ஆந்திரா குண்டூர் மாவட்டத்திலிருந்து கறுப்பாக களையாக ஒரு இளைஞன் ரெட்டியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வந்த போது பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவனை யாரும் வெளியில் பார்க்கவே இல்லை. வாடகை கொடுக்க போகும்போது கண்ணில் படுகிறானா என்று விளக்கெண்ணை போட்டு தேடியும் தட்டுப்படாமல் ஏமாந்து திரும்பிய குடித்தனக்காரர்கள் கிசு கிசு பாணியில் பேச ஆரம்பித்தார்கள்.
ரெட்டியாரால் எதுவும் முடியல. ஆனா ரெட்டிச்சி இன்னும் இளமையாத்தானே இருக்கா. அவளுக்கு தேவைன்னா பதினாறு குடித்தனத்து ஆம்பளைங்களுக்கு பந்தி போட்டுறப்போறாளேன்னு ஊரிலேர்ந்து குண்டூர் காளையை ஓட்டிக்கிட்டு வந்திருக்காரு. எதுக்கு வந்தானோ அதச் சுத்தமாச் செய்யறான்னு. அவன் எதுக்கு வெளிய வரணும்னு பேசிக்கிட்டாங்க.
நல்ல சித்திரை வெயிலில் சூரியன் உச்சத்திற்கு வரும் முன்னரே வத்தல் போடும் முனைப்பில் இருந்த இரு மாமிகள் மொட்டை மாடியில் குளித்து முடித்த தலை ஈரம் காய உலர்த்தியபடியே வத்தல் பிழிந்த ஒரு அதிகாலை வேளையில் அவனைக் கண்டார்கள். ரெட்டியார் வீட்டின் மொட்டை மாடி கொஞ்சம் உசரம். குடித்தனக்காரர்களின் மொட்டை மாடி கொஞ்சம் தாழ.. பிழிந்த வத்தல் காய காய தலை ஈரம் காய கூந்தலைப் பிரித்து _ அது ஒன்றும் அறுபதடி கூந்தல் இல்லை.. ஜிட்டு மசுரு ஆறு அங்குலத்திற்கு இருந்தால் அதிகம்_ பிரித்துக் காயப்போட்டு தலையை சூரியன் திசைப் பக்கம் சாய்த்து நாற்பத்தி ஐந்து டிகிர் கோணத்தில் நிமிர்ந்தபோது அவன் அவர்கள் கண்களில் பட்டான்.
செம்பட்டை நிறத்தில் மெலிசான வேட்டியைக் கீழ்பாய்ச்சிக் கட்டியிருந்தான். கனமான கர்லாக் கட்டையை சுழற்றியபடியே வேர்க்க விறுவிறுக்க இருந்தான். நல்ல கடப்பா கல்லைப் போல் மினுமினுத்தது அவன் தேகம். வர்ணாஸ்ரம தர்மங்களை விலக்கி வைத்துவிட்டு லஜ்ஜையில்லாமல் அவனை விழி மூடாமல் பார்த்தார்கள் இரு மாமிகளும். பயிற்சி முடிந்து விட்டாற்போலிருந்தது. சட்டென்று கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து உடலைத் துவட்டிக் கொண்டான். அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியைப் பற்றிய கற்பனையிலேயே மாமிகள் வியர்த்துப் போனார்கள். வத்தலோடு வத்தலாக மாமிகள் காய்ந்தது அந்த சித்திரை முழுவதும் தொடர்ந்தது.
சில வேளைகளில் குண்டூரான் ஆறு முட்டைகளை உடைத்து அப்படியே விழுங்குவான். அவன் முட்டை எடுத்து வரும் கூடை மெல்லிய கம்பிகளில் முடையப்பட்டது. அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் முட்டை கூடைகள் கிடையாது. எல்லாம் இரும்புக் கம்பிக் கூடைகள் தாம். முட்டை வியாபாரி வழக்கமாக வாங்கும் வீடுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வருவார். சைக்கிளில் மூங்கில் கூடையில் வைக்கோல் பரப்பி முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டு இரும்புக் கூடைகளை வாங்கி பழைய வைக்கோலை அகற்றி புதிய வைக்கோல் வைத்து முட்டைகளைத் தேவைக்கு ஏற்ப அடுக்குவார். பழைய வைக்கோல் துண்டுகள் வட்ட வடிவில் கூடையின் அளவிற்கேற்ப ஆங்காங்கே விழுந்து கிடக்கும். பால் வற்றிப் போன மாடுகளும் அவைகளின் நோஞ்சான் கன்றுகளும் அவைகளை சாப்பிட்டு பசியாறும்.
பின்கட்டு குழாயடிச் சண்டைகளும், முன்கட்டு ரேழிச் சர்ச்சைகளும் இல்லாத ஒரு திருநாளில் ரெட்டியார் வீட்டிலிருந்து சப்தம் அதிகமாகக் கேட்டது. ரெட்டியார் குரலும் அதற்கும் மேலாக ரெட்டிச்சி குரலும் கேட்டது. கொஞ்ச நேரத்தில் ரெட்டியார் குரல் அடங்கிப் போனது. அடுத்த அரைமணி நேரத்தில் மஞ்சள் மண்டை டாக்ஸி வந்து ரெட்டியார் ராஜி நர்ஸிங் ஹோமிற்கு கொண்டு போகப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவர் குணமாகி விட்டதாகவும் மாலை திரும்பி வரப் போவதாகவும் தகவல் கசிந்தது.
அன்று மதியம் ஒரு பெரிய பையுடன் குண்டூரான் அந்த வீட்டை விட்டு வெளியேறினான். அவன் தெரு முனை திரும்பும் வரை ரெட்டியார் சம்சாரம் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரெட்டியார் திரும்பி வந்த கொஞ்ச நாட்களிலேயே அவரைப் பார்க்கப் போன குடித்தனக் காரர்கள் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டார்கள்.
“என்னாச்சும்மா” என்று ரெட்டிச்சியைக் கேட்டபோது “ நாக்கு கட்டுப்படுத்தணும். லேக போத்தே ஆஸ்பத்திரிதான் “ என்றாள்.
ரெட்டிச்சி சுத்த சைவம் என்பதும், இதுகாறும் அவள் அசைவம் சமைத்தாலும் சாப்பிட்டதில்லை என்பதும், சில மாதங்களாக அவள் அசைவம் சமைக்க மறுத்ததால் குண்டூர்காரனை சமையலுக்கு ரெட்டியார் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அதிக காரமும் எண்ணையும் அசைவமும் சேர்ந்து இதய நோய்க்கு அவரை ஆளாக்கி இருந்தது.
குடித்தனக்காரர்களின் கற்பனை உடைந்த அதே நேரத்தில் ரெட்டியார் சம்சாரத்தைப் பற்றிய தப்பான பிம்பமும் உடைபட்டது.
0
- பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?
- கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது
- கோணல் மன(ர)ங்கள்
- மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015
- இருதலைக்கொள்ளி
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1
- மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3
- உதவிடலாம் !
- பயன்
- சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி
- அப்துல் கலாம்
- சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு
- இரா. பூபாலன் கவிதைகள்
- பரிசு
- என் வாழ்வின் வசந்தம்
- பந்தம்
- நிலாமகள் கவிதைகள்
- பொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்
- மாரித்தாத்தா நட்ட மரம்
- இசை: தமிழ்மரபு
- அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- தொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு
- அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்