சுந்தரி காண்டம். 7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி

This entry is part 20 of 22 in the series 27 செப்டம்பர் 2015

0

மேடலி தெரு வாசிகள் ஒரு வினோதக் கலவையானவர்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கம். கொஞ்சம் மேட்டுக்குடி, கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே. அதனால் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு சேட்டுக் கடைகள் இருந்தன. முன்னாலால் சேட் பன்னாலால் சேட் என்று பெயர் பலகைகள் சொல்லும்.
“ அரைச் சவரத்த வாங்கிக்கினு அம்பது ரூபா நீட்டறான் சேட்டு “
“ யாரு முன்னாலா பன்னாலாலா? “
“ எல்லாம் அந்த பன்னாடை லால்தான் “

வறுமை எக்காலத்திலும் ஏழைகளின் நகைச்சுவை உணர்வைப் போக்குவதில்லை என்ப்தற்கு இது ஒரு உதாரணம்.

முன்னாலாலின் மகன் கமல் அப்போதே பதினெட்டு வயது இளைஞனாக இருந்தான். அவனுக்குத் தொழிலில் ஆர்வம் வரவேண்டும் என்று பெரிய சேட் வீட்டிற்குச் சென்று விடுவார். வீடு கடைக்குப் பின்புறமே இருக்கும். சேட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார் என்பதற்கு அடையாளமாக பித்தளை டிபன் பாக்ஸ்கள் கழுவி பள பளவென்று துடைக்கப்பட்டு கடை வாசலில் படியோரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

செந்தாமரை மேடலி முதல் தெருவில் இருந்த மல்லிகாவின் மகள். மல்லிகாவின் புருசன் கை ரிக்ஷா ஓட்டுபவன். இரண்டு ரூபாய்க்கு மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் தாண்டி இழுக்க வேண்டி இருக்கும். கொஞ்சம் குண்டான பயணிகளை அவன் மூச்சிழுத்து இழுக்கும்போது நெஞ்சுக்கூடு வெளியே துருத்திக் கொள்ளும். இரவு கைக்காசை மல்லிகாவிடம் கொடுத்து விட்டு – எல்லாமே ச்¢ல்லறைக் காசாகத்தான் இருக்கும் – அவளிடம் இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு மூன்றாவது தெருவுக்கு சாராயம் குடிக்கப் போவான். மல்லிகாவின் அங்கீகாரத்தோடுதான் அவனது குடிப்பழக்கம் தொடர்ந்தது. அவனால் ஒரு பிரச்சனையுமில்லை. அவனுக்கான சோறு அலுமினியத் தட்டில் வைக்கப்பட்டு, வாழை இலையால் மூடப்பட்டு, அது பறந்து விடாமலிருக்க ஒரு கல்லும் மேலே வைக்கப்பட்டு, குடிசையின் விளக்குப் பிறையில் வைக்க்ப்பட்டிருக்கும். காசு தீர்ந்தவுடன் அவன் கமுக்கமாக வந்து சோற்றைத் தின்று விட்டு, அடிபம்பில் தண்ணீர் அடித்துக் குடித்துவிட்டு படுத்து விடுவான். படுத்த உடன் தூங்கியும் போவான். வாடிக்கைக் காரர்க்ளின் பிரசவ அவசரத்திற்கோ, ஆஸ்பத்திரி அவசரத்திற்கோ அவன் எழுப்பப்பட்டால், உடனே முழிப்பு வந்துவிடும் அவனுக்கு.

கமல் கடையிலிருந்த ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் செந்தாமரை கால் சவரன் மூக்குத்தியை அடகு வைக்க அங்கு வந்தாள். வெள்ளிக்கிழமை மதிய நேரம். தலைக்குக் குளித்து, மஞ்சள் பூசி, பெரிய பொட்டு இட்டு, மஞ்சள் ரவிக்கையும் சிகப்பு தாவணியும் அணிந்து அவள் பிரச்சன்னமானபோது அம்மன் வந்தது போல் ஆகிவிட்டது கமலுக்கு. அருள் வாக்கு சொல்லும் அளவிற்கு ஆடிப் போய்விட்டான்.

சிறு வயதிலிருந்தே அந்தப் பகுதியில் அவன் வளர்ந்தான் என்றாலும், அப்பகுதி சிறுவர், சிறுமிகளுடன் சேர விட்டதில்லை அவன் தந்தை. குதிரை வண்டியைப் போல பொட்டி வைத்திருக்கும் நீலக்கலர் சைக்கிள் ரிக்ஷாவில் அவன் பள்ளிக்குப் போவான். மாலை அதே வண்டியில் வீடு. வீட்டுக்கு உள்ளேயே விளையாட்டு, பாடம், படிப்பு எல்லாம். வருடம் ஒரு முறை ஜகன்னாத் யாத்திரை போகும்போது வடநாட்டுக் கிராமத்திற்குப் போய் வருவார்கள். வெளியுலகம் என்பது அவனுக்கு அப்போதுதான் தெரியவரும்.

வெண்ணையையும் வெண்மை நிறப்பெண்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்த அவன் கண்களுக்கு கறுப்பும் மாநிறமும் மயக்கத்தையே தந்தன. அவன் பார்த்த ஆண்களும் (கறுப்பாக) கட்டுமஸ்தாக இருந்தார்கள். ஆக ‘வலிமையின் நிறம் கறுப்பு’ எனும் புதுமொழியே அவன் மனதில் கல்வெட்டு எழுத்துக்களாய் பொறிக்கப்பட்டது.

செந்தாமரை எப்பவும் அவன் கண்களில் படுபவள்தான். ஆனால் இன்று போல அவள் எப்போதும் இருந்ததில்லை என்று நினனத்தான் கமல். இயற்கையாக கொஞ்சம் கூச்ச சுபாவம் என்பதால் அவள் கடையை நெருங்க நெருங்க அவனால் அவளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மெல்ல கண்களைத் தாழ்த்த்¢க் கொண்டு கணக்குப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான். செந்தாமரைக்கு அவன் கவனத்தை எப்படித் திருப்புவது என்று தெர்¢யவில்லை. எப்படிப்பட்ட ஆம்பளையாக இருந்தாலும் ஒற்றைச் சொல்லில் “ தே தள்ளு “ என்று கூறும் இயல்பினள் அவள். ஆனால் இன்று அவளுக்குக் குரல் கண்டத்தோடு ஒட்டிக் கொண்டதுபோல் வெளியே வர மறுத்தது. லேசாக செருமினாள் தாமரை. மெல்ல தலையைத் தூக்கினான் கமல்.

என்ன வேணும் ? எனக் கேட்க நினைத்தான். குரல் பிரிய மறுத்தது. அவனும் லேசாகச் செருமிக் கொண்டான். பாட்டுக் கச்சேரியில் மிருதங்கமும் கடமும் ஒன்றையடுத்து ஒன்று வாசிப்பது போல் இரு செருமல்களும் தொடர்ந்ததில் இருவருக்கும் சிரிப்பு வந்தது. முதலில் பொத்திகிட்டு வந்தது ச்¢ரிப்புதான். அப்புறந்தான் எல்லாமே பத்திகிச்சு.  மூக்குத்தியை எடை போடாமல் முப்பது ரூபாய் கொடுத்துவ்¢ட்டு, மூக்குத்தியைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் கமல். “ சீட்டு “ என்றாள் தாமரை. “ நீயே எழுதிக்க “ என்பது போல் ரசீது புத்தகத்தைத் தள்ளினான் கமல். ‘ கால் சவரன் மூக்குத்தி ‘ என்று எழுதி ‘ தாமரை ‘ என்று கையெழுத்திட்ட ரசீதைக் கிழித்து அவளிடம் தந்துவிட்டு நகலை எடுத்து பையில் வைத்துக் கொண்டான்.

மறுமாதம் முதல் வாரத்தில் அவள் முப்பது ரூபாய் தந்ததும், அவன் மூக்குத்தியைத் திருப்பித் தந்ததும் பெரிய சேட்டுக்குத் தெரியாமலே   நடந்தது. பின்வந்த நாட்களில் மூக்குத்தி இல்லாமலே முப்பது ரூபாய் பணமாக மாறும் வித்தை புரியாமல் விழித்தாள் மல்லிகா.

“ மூக்குத்தி இல்லாம ஒன் மொகம் நல்லால்லியாம், கமல் சொல்லிச்சு அதான் அதே பணம் தருது “

மூக்குத்தியை வைத்து தனக்கு காது குத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மல்லிகா அறியவில்லை. மல்லிகாவின் தம்பி சின்னதுரை எண்ணூர் பக்கம் லாரி ஓட்டுபவன். யதேச்சையாக மாம்பலம் வந்தவன், தாமரையைப் பார்த்து அசந்து போனான். அடுத்த நாள் அரை சவரன் தாலியும் அரக்குப் புடவையும், தட்டு நிறையப் பூவும் லட்டுமாக அவன் பரிசம் போட வந்த போது, தாமரை கலங்கிப் போனாள். கமல் தன் காதலைத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெர்¢ய சேட்டிடம் சொன்னான்.

“ பேட்டா தாமரை லடுக்கி ரோட்டி செய்யுமா? சப்ஜி செய்யுமா? ஜகன்னாத் யாத்ரா போனா பஜன் செய்யுமா? ஷாதி பண்ணிக்கிட்டா தகராறுதான் செய்யும். பாகல் மாதிர்¢ பேசாதே. சுப்ரஹோ! “ ஒரே அதட்டலில் அடங்கிப் போனான் கமல். சின்னதுரை பரிசம் போட்ட ஒரே வாரத்தில் தாமரையைக் கல்யாணம் செய்து கொண்டு எண்ணூருக்குப் போனான்.

திருமணமான முன்றாவது மாதத்தில் லாரி விபத்தொன்றில் சின்னதுரை காலமானான். அப்போது தாமரை முழுகாமல் இருந்தாள். மல்லிகா தன் மகளை மறுபடியும் தன் வீட்டிற்கே கூட்டி வந்து விட்டாள்.

தாமரைக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. செக்க செவேலென்ற நிறத்தில் அது இருந்தது. ஆனால் அதற்குச் சின்னதுரை சாடை சிறிதுமில்லை.

பெரிய சேட்டின் மனைவி தாமரையின் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். அவளுக்குத் தெரிந்த சாடையில் அது இருந்தது. அது கமலின் குழந்தைப் பருவ சாடை!
0

Series Navigationமாயாமருத்துவக் கட்டுரை- தலை சுற்றல் ( Vertigo )
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *