தாண்டுதல்

This entry is part 17 of 22 in the series 27 செப்டம்பர் 2015

 

“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க”

“என்ன கதையா”

“சின்னக் கதையா“

“குட்டிக் கதையா“

“குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா”

“சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது”

“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் மல்லி……”

“மல்லிகையா மல்லிகைக்கு அவ்வளவு முக்கியத்துவமா”

“மல்லிகா”

“உம்”

“மல்லிகாவைப் படச்சிருக்கார்”

“என்ன ஐஸ் வெக்கரதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா”

வெட்கத்தால் முகம் சிவந்திருந்தது மல்லிகாவிற்கு வீரக்குமாரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கம்பளிப் பூச்சியாய் அவன் மீசை உட்கார்ந்திருந்தது. இடது கன்னத்து மச்சம் பளபளத்துக் கொண்டிருந்தது, கண் புருவத்திலிருந்து ஒரு மயிர் நீண்டதாய் தொங்கியது. அவன் மெல்ல அதை இழுக்க சாய்ந்தான் வீரக்குமார் “அய்யே வலிக்குது”

“பேர்லதா வீரக்குமார். இந்த மயிரை இழுத்ததுக்கே அய்யோவா?”

“என் வீரத்தை எங்க காட்டனும்கறே மல்லிகா”

“காம்பவுண்ட் சுவரை எட்டிக் குதிக்கறதிலதா காமிக்கிறீங்க.. போதும். செரியா.”

வீரக்குமாரின் வீட்டிலிருந்து நூறடியில் புகைவண்டி நிலைய காம்பவுண்ட் சுவர் ஆரம்பிக்கும். அது புகைவண்டி இருப்புப் பாதையை ஒட்டி ஒரு கிலோ மீட்டருக்கு நீண்டிருக்கும். புகைவண்டி நிலையத்திற்கு போக வேண்டுமென்றால் காம்பவுண்ட் சுவரையொட்டி ஒரு கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும். பல வருடங்களாய் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு போகிறவன். காலை நேரத்தில் அவசர கதியில் கிளம்புகிறவனுக்கு காம்பவுண்ட் சுவர் பெரிய தடையாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் வலது பக்கத்தில் ஒரு வேப்பமரம் அதன் வேர்கள் காம்பவுண்ட் சுவரை ஊடுருவிக் கொண்டு நின்றிருந்தது. அதன் கிளையொன்றைப் பிடித்து காம்பவுண்ட் சுவற்றின் மேல் ஏறி உட்கார்வான். பின் எம்பிக் குதிப்பான். வேப்பமரம் பெருத்துக் கொண்டே போனபோது அதை வெட்டிவிட்டார்கள். அதன் அடிப்பாகம் மட்டும் தலையை மண்ணுள் புதைந்திருக்கிற மனிதனைப் போல நின்றிருந்தது. வேப்ப மரத்தை வெட்ட விட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான். அதனடியில் சிறிய கல்லை  நட்டு இரண்டு நாள் குங்குமம் தெளித்திருந்தால் சிறு தெய்வம் ஆகியிருக்கும். வாரம் இரண்டு முழப் பூவை உதிர்த்துவிட்டுப் போனால் நிரந்தரமாகியிருக்கும். முனியப்பனோ அங்காளம்மாளோ ஏதாவது பெயர் வைத்திருக்கலாம். வேப்பமரமும் நிரந்தரமாயிருக்கும். நழுவவிட்டு விட்டோமே என்றிருந்தது வீரக்குமாருக்கு.

காலை புகைவண்டி நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றிப் போவது அவனுக்கு அவஸ்தையாக இருந்தது. வேப்பமரத்தின் அடிப்பகுதியில் கால்களை வைத்து எம்பியபோது சட்டென காம்பவுண்ட் சுவரின் மேல் அவன் உடம்பு, உட்கார்ந்து கொண்டது ஒருமுறை. அது எதேச்சையாக நடந்தது போலிருந்தது. அதற்குப் பின் அப்படி எம்பி காம்பவுண்ட் சுவரின் மேல் உட்கார முடியவில்லை.

திருப்பூருக்குப் பேருந்தில் கிளம்பிப் போவதென்பது பெரிய அவஸ்தையாக இருந்தது அவனுக்கு. வஞ்சிபாளையம், மங்கலம், கருவம்பாளையம் கடந்து பேருந்தில் தடக்தடக்கென்று உடம்பை இம்சைப் படுத்திக் கொண்டு போவதில் அலுப்பிருந்தது. பேருந்து நெரிசல் வேறு மூச்சு திணற வைத்தது. திருப்பூரின் குப்பையும், சாயக் கழிவும், அசுத்தமும் இன்னமும் மூச்சடைக்க வைக்கும் பனியன் கம்பெனியில் பேட்லாக் ஸ்டூலில் உட்கார்ந்தால்தான் ஆசுவாசம் பிறக்கும் அவனுக்கு.

அவனின் அம்மா கல்யாணப் பேச்சை எடுக்கிற போதெல்லாம் எரிச்சலடைவான். “ஏண்டா எரிச்சல் படறே. வார்ரவ ஒரு டி.வி.எஸ்ஸோ, பைக்கோ வாங்கிட்டு வரமாட்டாளா”

“வர்ரவகிட்ட எதுக்குக் கேட்டுட்டு. நானே சம்பாதிச்சு வாங்கிக்கிறேன்”

“சம்பாதிக்கிற வரைக்கும் என்ன பண்ணப் போறே”

இரட்டைச் சக்கர வாகனம் வாங்குவதை விட காம்பவுண்ட் சுவரைக் கடப்பதுதான் அவனின் அப்போதைய லட்சியமாயிருந்தது. பள்ளியில் விளையாட்டில் அக்கறையில்லாதவன் ஓட்டப் பந்தயமோ, உயரந்தாண்டுதலோ மனசில் இருந்திருந்தால் காம்பவுண்ட் சுவரைக் கடப்பது சுலபம். பேட்லாக் மிஷின் முன்னால் உட்கார்ந்து பனியன் தைக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் பனியன் கம்பெனி இளம் பெண்கள் அவனை இம்சித்ததை விட காம்பவுண்ட் சுவர்தான் இம்சித்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் வீட்டிலிருந்து சற்றே வேகமாகக் கிளம்பியவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். காம்பவுண்ட் சுவரின் வலது பக்க மூலையிலிருந்து கால்களை எம்பி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிவிட்டான். அவனுக்கு மலைப்பாக இருந்தது. எப்படித் தாண்டினோம் என்று ஆச்சரியப்பட்டபடியே பனியன் கம்பெனிக்குப் புகைவண்டி பிடித்துப் போனான். பிறகு தினந்தோறும் உடற்பயிற்சி போல வேகமெடுப்பதும், ஓடுவதும், காம்பவுண்ட் சுவரை அந்த வேகத்திலேயெ கடப்பதும் சாதாரணமாகிவிட்டது. தாண்டுவது வெகுவாக இருக்கட்டும் என்று “பவர் ஷு” ஒன்றையும் வாங்கிக் கொண்டான்.கொஞ்சம் வயிறு கனமில்லாமல் இருந்தால் சுலபமாயிற்று.

பனியன் கம்பெனி வேலைக்கு காலையில் கிளம்பும்போது   அம்மா வருவதைத் தவிர்ப்பான். “என்னடா வர்ரேன்னு சொன்னாக்கூட விறுவிறுன்னு போயிர்ரே”

“டிரெயினைப் பிடிக்க வேண்டாமாம்மா”

“வேற யாரையாச்சும் பாக்கணுமா, சைகை காட்டணுமா, பேசணுமா”

“நீதா ஆள் பிடிச்சுத் தரணும்”

“ச்சீ..பேச்சைப் பாரு”

 

அவன் அம்மாவும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தாள். புகைவண்டி நிலையத்திலிருந்து அடுத்த வீதியில் அவளை ஏற்றிச் செல்ல மில்லின் ஒரு சிறப்புப் பேருந்து வரும்.

“எப்படிம்மா உன்னை அந்த பஸ்ல ஏத்திக்கிறாங்க”

“ஏண்டா”

“சின்ன வயதில் பொண்ணுகளை சுமங்கலித் திட்டமுன்னு சொல்லி ஏத்திட்டுப் போறாங்க. அஞ்சு வருசம் வேலை செய், உங்க கல்யாணத்துக்கு முப்பதாயிரம் தர்ரமுன்னு கூட்டிட்டுப் போறாங்க, நீயும் அந்த மில்லுல வேலை செய்யற… உனக்கும் முப்பதாயிரம் கெடைக்குமா”

“சும்மா இருடா…. அது சுமங்கலிகளுக்கு”

அம்மாவை துன்புறுத்தி விட்டோமோ என்றிருக்கும் அவனுக்கு ஏதோ பேசுவதாக நினைத்துக் கொண்டு, அம்மாவை துன்புறுத்தி விடுவதாகத் தோன்றும். அப்பா மட்டும் இருந்திருந்தால், ” சுமங்கலி “ பேருந்தில் அவள் வேலைக்குப் போகும் அவசியம் இருந்திருக்காது.

ஒருநாள் அவனைப் பின் தொடர்ந்து வந்த அம்மா அவன் காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் புகைவண்டி இருப்புப் பாதைக்குப் போவதைப் பார்த்தாள். அதிர்ந்து போய்விட்டவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. அன்று மாலை உடம்பு சுகமில்லையென்று சீக்கிரமே மில்லிலிருந்து வந்துவிட்டாள். இப்படி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிக்கிற வீரகுமாரை எந்த சிரமமும்  இல்லாமல் முழுசாய் பார்க்க முடியுமா என்ற பயத்தினாலேயே வீட்டிற்கு வந்துவிட்டாள்.

“என்னடா எத்தனை நாளா இந்தப் பழக்கம்”

“என்னமா………. என்ன கண்டுபிடிச்சிட்டியா………எந்த பிரண்டும் இல்லம்மா, கேர்ல்ஸ் கூட”

“அதெல்லா இல்லடா….. காம்பவுண்ட் சுவற்றை எட்டிக் குதிச்சு தாண்டிப் போறது”

“ரொம்ப நாளா நடக்குதம்மா”

“எப்படிடா”

“பழகிருச்சும்மா…..பயப்படாத”

“ஐய்யோ….பாத்தப்போ திக்குன்னு இருந்துச்சு. விசுக்குன்னு தாண்டிப் போயிட்டே இருந்தே”

“பழகிட்டம்மா”

“இதுக்காகவே உனக்கு ஒரு வண்டி வாங்கிக் குடுத்துரணும்”

“நீங்க காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டிப் போனதை நானும் இரண்டு மூணுதரம் பார்த்த ஞாபகம். என்னவோ பொண்ணுகளக் கவர் பண்றதுக்குக் குதிக்கிறீங்கன்னு நெனச்சேன். கொரங்கு தாவிப் போனது மாதிரி இருந்திச்சு”

“அப்பவே கொரங்குன்னு முடிவு பண்ணிட்டியா”

“இப்பவுந்தா……நாலு வீதித் தள்ளித்தானே, அப்புறம் என்னைப் பொண்ண பாக்க வந்தப்போ காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குரங்கென்ன நாலு வீதி தள்ளி வந்திருக்கன்னு நெனச்சேன். சிரிப்பா இருந்துச்சு அப்படி வெரசலா காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் போகாட்டி என்ன.. போயி ரயில்வே ஷ்டேசன் கூட்டத்தில் கலந்துர்ணுமா”

“உன்னைக் கூட மொதல் மொதலா விநோதமான எடத்திலதா பாத்தேன். பெரியாஸ்பத்திரியில”

“ஆமாமா”

“பெரியாஸ்பத்திரியில மார்ச்சுவரி ரூமுக்கு முன்னால உட்கார்ந்திருந்தீங்க, என்னமோ ரொம்பவும் பழகினமாதிரி என்ன இங்க உட்கார்ந்துன்னு சட்டுன்னு கேட்டுட்டேன்”

“ஆமா நானும் சட்டுனு திரும்பிப் பாத்தா, பிணவறைன்னு போர்டு தொங்குது. பயமாப் போச்சு. பெரியாஸ்பத்திரியில கூட்டம். ஒரே க்யூ மயம். எங்காச்சும் நெழல்லே உக்காரணும்னு ஒதுங்கினேன். நீங்க சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது. அது மார்ச்சுவரி கட்டிடம்னு”

“என்ன உங்களுக்கு மார்ச்சுவரி கட்டடம்னா பயமா”

“ரொம்ப பயம். அந்தக் கூட்டத்தைக் கண்டாவே ஓடி ஒளிஞ்சுக்குவேன். திருவிழாக் கூட்டத்தில் ஒரு தரம், சந்தைக் கூட்டத்தில் ஒரு தரம்ன்னு தொலைஞ்சு போயிட்டேன். ஒரு தரம் திருப்பூர் பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவுல எங்கப்பாவை விட்டுட்டு யாரோ ஆம்பளை ஒருத்தர் கையைப் புடுச்சுட்டு நடந்துட்டிருக்கேன். தெரிஞ்சதும் பகீர்ன்னு பயம் வந்தது. வீர்ன்னு அலறிட்டேன். ரயில்வே ஸ்டேசன்ல காலையில பனியன் கம்பெனிக்குப் போற கூட்டத்தைப் பாத்த பயமா இருக்கும். நீங்க எப்படித்தா அந்தக் கூட்டத்தில் போறீங்களோ”

“உங்கக் கல்யாணத்துக்குக் கூட்டம் வருமே…. அதப் பாத்துட்டு ஒளிஞ்சிருவீங்களோ, மாப்பிள்ளைக் கோலத்தில் என்ன உக்கார வெச்சிட்டுத் தவிக்க வுட்டுறாதீங்க.. காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டறதில் ஒரு திரில். திருப்பூருக்குப் போற டிரென் கூட்டத்தில் நசுங்கறது ஒரு திரில், அப்புறம் திருப்பூர் போயி குப்பையில, ஜனங்க நெரிசல்ல நடமாடறதும் திரில்தா….”

இலவச அரசாங்க வண்ணத் தொலைக்காட்சி இருட்டாய் சும்மா பார்துக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி கண்ணாடியில் மல்லிகா உருவம் வந்து வந்து போனது. குளித்து முடித்து தலையை லகுவாக்கிக் கட்டியிருந்தாள். தலைமயிரிலிருந்து நீர் சொட்டி பின் ஜாக்கெட்டை நனைத்திருந்தது.

“என்ன உடுமலைக்காரியை வெச்சுட்டு அரட்டை……..”

“ஒண்ணுமில்ல…. திலகவதிகிட்டே சட்டுன்னு  மனசுல வந்ததைச் சொல்லிட்டு இருந்தேன்”

“திலகவதிக்கென்ன திருமூர்த்திமலை தண்ணியும், உடுமலை குளுகுளுமாக நெலச்சு நிக்கறவளாச்சே, கௌம்பு. திலகதி…. ஞாயிற்றுக்கிழமை வேலை எவ்வளவோ  கெடக்குது. இவருக்கென்ன அசடு வழிய எதாச்சும் சொல்லிட்டிருப்பாரு….”  திலகவதி முன்புறம் போட்டிருந்த சடையை லாவகமாக பின்புறம் தள்ளி விட்டபடி பவித்ராவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுக் கிளம்பினாள். பவித்ரா வலி தாங்காது போல் வலியால் உஸ்ஸென்றாள். “கொழந்தையைக் கிள்ளறது உனக்குக் கெட்ட பழக்கம். எத்தனை தரம் சொல்றது….” திலகவதி முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு பவித்ராவிற்குக் கையசைத்துக் கிளம்பினாள்.

“திலகவதிகிட்ட என்ன சொல்லிக்கிட்டிருந்தீங்க……”

“உங்கிட்ட சொல்ல வேண்டாமுன்னுதா”

“சின்னதா கவிதை மாதிரி ஒரு ஸ்பார்க் மனசில வந்தது. அதுதா.“

“என்ன”

“மூத்திரப் புரையைப் பெண்கள் கடக்கும் போது அதன் நாற்றம் உணர்வதில்லை நான். இதில் மூத்திரப் புரைன்னா என்னன்னு திலகவதி கேட்டிருந்தா,…..”

“பெரிய கவிதைதா……. எங்கிருந்து புடுச்சீங்க”

“டைரியைப் புரட்டினான். நான் எழுதுனது இருந்துச்சு”

“அவளுக்கு புரிஞ்சுதாமா”

“அதுக்குள்ளதா நீ வந்துட்டியே, செரி உனக்கொண்ணு”

“கதையல்லா வேண்டா. சின்னதா துணுக்கு மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க. இட்லிக்கு மாவு கலக்கிட்டு இருக்கேன். கதை எல்லாம் வேண்டாம். இப்பதா கதையெல்லாம் அரை நிமிசக் கதை, கால்பக்கக் கதைன்னு ஆயிப்போச்சு. துணுக்கா சொல்லுங்க. நேத்திக்கு தொட்டிச் செடி ஒன்னு காமிச்சான். அது வளர்வதற்கு நிழல் தேவையாமா? இருட்டிலே ராத்திரியிலே ஒளி வீசும்னு சொன்னான். அதுக்கு பேர் கேட்டேன். நீங்களே ஒன்னு வெச்சுக்கோங்கன்னான். நான் மல்லி…..”

“மல்லிகா” என்றால் மழலைக் குரலில் பவித்ரா. “போதும் போதும் ஐஸ் வெச்சது போதும். தலைக்குக் குளிச்சதே ஜிவ்வுன்னு இருக்கு. இதுல நீங்க வேற ஐஸ் வெச்சுட்டு, உங்களுக்குக் காலையிலே இட்லிக்கு தக்காளி குறுமாவும் மத்தியானம் சாப்பாட்டிற்கு நெத்திலி மீன் கொழம்பும் வெச்சுத் தரேன். ஐஸ் வெக்கத்தேவையில்ல. நெத்திலி மீனுக்கு பையை எடுத்துட்டுக் கிளம்புங்க.”

“மீன் மார்க்கெட்டுக்குப் போகணும்னா அலுப்பா இருக்கு. ரயில்வே ஸ்டேசனை கடந்துதான் போகணும். ரயில்வே காம்பவுண்டு சுவத்தைத் தாண்டு போறது கிண்டலா சவாலா எப்படி வேணுமின்னாலும் வெச்சுக்கங்க. கல்யாணத்திற்கு முந்தி பனியன் கம்பெனிக்குப் போக டெய்லி காம்பவுண்டு சுவத்தைத் தாண்டித்தானே போயிட்டிருந்தீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நீதானே காம்பவுண்ட்டை தாண்டறதெல்லாம் வேண்டா. எதுக்கு ரிஸ்க்குன்னு தடா போட்டே. மீறவே முடியல. எனக்கு எதுக்குச் சிரமம். தாண்டரதுல பேலன்சு தப்பி விழுந்து கைகால் முறிஞ்சிறுமுன்னு பயம். அடி மனசுல வந்துருச்சு. பிரசவத்துக்கு நீ போயிருந்தப்போ, காம்பவுண்டு சுவத்தை தாண்டிடனும்னு நெனப்பேன். தாண்டரதில உள்ளுர பயம்தான்.”

“இன்னிக்கு முயற்சி பண்றது”

“கொழந்தையை வச்சிட்டு சீண்டிப் பாக்கறயா”

“தாண்டப்பா” என்றாள் பவித்ரா.

“வேண்டாம்மா கைகால் முறிஞ்சு நான் கெடந்தா நீ அழுவியே. அதப்பாத்து எனக்கும் அழுகை வந்திரும்”

மீன் வாங்கப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், வாசலில் வந்து நின்று புகைவண்டிப் பாதை காம்பவுண்டு சுவரைப் பார்த்தான். அது நீளமாகி  ரொம்ப உயரத்திற்கு வளர்ந்து விட்டது போலிருந்தது.

 

-சுப்ர பாரதி மணியன்.

Series NavigationThe Deity of Puttaparthi in Indiaலாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *