தொடுவானம் 91. தேவை ஒரு பாவை

This entry is part 14 of 24 in the series 25 அக்டோபர் 2015

911
நள்ளிரவு நேரத்தில் விழுப்புரம் சந்திப்பு அடைந்தேன். சூடாகத் தேநீர் அருந்தியபின் இருக்கையில் படுத்துவிட்டேன். அது முதல் வகுப்பு பெட்டி என்பதால் என்னைத்தவிர வேறு பிரயாணிகள் இல்லை.
வண்டி ஓடும் வேகம் தாலாட்டு போன்று உறங்கமூட்டியது. விடியலில்தான் கண் விழித்தேன். கண்ணமங்கலம் தாண்டியாயிற்று. இனி வேலூர் கண்டோன்மென்ட்தான். கழிவறை சென்று முகம் கழுவிக்கொண்டேன்.
சன்னலைத் திறந்து விட்டேன். ஜிலிஜிலுவென்று குளிர் காற்று உள்ளே புகுந்தது. காலைப் பனி மூட்டம் வெளியில் படர்ந்திருந்தது. இங்கு ஆறுகள் இல்லை. வானம் பார்த்த வறண்ட பூமி. புன்செய் நிலங்கள் பறந்து காணப்பட்டன. சிலவற்றில் புழதி அடிக்கப்பட்டிருந்தது. மண் கூட சிவந்த நிறத்தில் காணப்பட்டது.
கலை ஆறு மணிக்கு புகைவண்டி நிலையம் வந்தடைந்தேன். சாமான்களை எடுத்து.தளமேடையில் ( பிளாட்பாரத்தில் ) வைத்தேன். காத்திருந்த வாடகைச் சீருந்து ஒட்டுனர் என்னை வரவேற்றார். கால் மணி நேரத்தில் விடுதி வாசலில் இறங்கினேன். என்னைக் கண்ட நண்பர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
உடன் அறைக்கு விரைந்தேன். உணவகத்தில் பணி புரியும் முருகேசன் பெட்டியைத் தூக்கி வந்தான். அறையில் கணேஷ்,சம்ருதி, மாமன் ஆகியோர் வகுப்புக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். நான் உடனடியாகக் குளியல் அறைக்குச் சென்றேன். சரியான நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து விடுதி உணவகத்தில் பசியாறியபின்பு மண் பாதையில் கல்லூரிக்கு நடந்து சென்றோம்.
மீண்டும் நேரப்படி வகுப்புகள் செல்வதும், மாலையில் ஆரணி ரோட்டில் உலாத்துவதும்,, இரவில் அறையில் உறங்குவதுமாக நாட்கள் இயந்திரமாக ஓடின. ஊர் ஞாபகம் வரும். தாம்பரம் நினைவு வரும். சிங்கப்பூர் நினைவும் வரவே செய்யும். அவை நினைவோடு சரி. அவை பற்றி இங்கு யாரிடமும் பகிந்துகொள்ள முடியாது. மனதிலேயே மறைத்து வைத்து மறந்து வாழவும் பழகிக்கொண்டேன்.
வகுப்புகளில் மிகுந்த உட்காகத்துடன் கவனம் செலுத்தினேன். இரவில் பாடங்களை வெகுநேரம் படிப்பேன். நேரத்தை அழகாக பயனுள்ள .வகையில் பயன்படுத்தப் பழகிக்கொண்டேன். நேரத்தின் அருமையை அறிந்துகொண்டேன்.
பாட நூல்களைப் படிப்பதோடு, தமிழ் ஆங்கில நாவல்களும் படித்துவந்தேன். திருக்குறள் தினமும் படித்தேன். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதினேன். அங்கிருந்து சில கதைகளை தமிழ் நேசனுக்கு அனுப்பிவைத்தேன். அவற்றை அப்பா படித்துவிட்டு எனக்கு அந்த இதழை தபாலில் . அனுப்பி வைப்பார். அதன் ஓரத்தில் ” பாடங்களில் கவனம் செலுத்து. காதல் கதைகளில் கவனம் வேண்டாம். ” என்று எழுதியிருப்பார். என்னுடைய கதைகள் வெளிவருவது உள்ளுக்குள் அவருக்கு பெருமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையேல் சிரத்தை எடுத்து அதை அனுப்பிவைப்பாரா?
படி படி என்ற பல்லவியை அப்பா ஒவ்வொரு கடிதத்திலும் பாடிவருகிறார்.அவருக்கு மகன்கள் இருவரும் பட்டதாரிகள் ஆக வேண்டும் என்ற வேட்கை.அதனால் தன்னுடைய வாழ்நாளை சிங்கப்பூரிலேயே தனியாக வாழ்ந்துவிட்டார்.ஒரு வகையில் அவர் பெரிய தியாகம்தான் எங்களுக்காக செய்து வருகிறார். அண்ணன் அவருடைய எண்ணத்தை ஓரளவு நிறைவேற்றிவிட்டார். இனி நான்தான் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நான் நேரத்தை வீணாக்காமல் படிப்பதில் செலவழிக்க வேண்டும்.
இந்த நூல்களுக்கு ஒரு மாயை உள்ளது.படிக்கச் ஆரம்பித்துவிட்டால்,வேறு எல்லாமே மறந்துபோகிறது. லதா, வெரோனிக்கா நினைவுகளைக்கூட குறைத்தவை இந்த நூல்களே.அதுபோல இப்போது கோகிலத்தின் நினைவையும் குறைத்துக்கொள்ளவேண்டும்.
நல்ல வேளையாக இந்த மூவரில் யாரும் அருகில் இல்லை. அதனால் படிப்பு கெடாது. மனதை ஒரு முகமாக படிப்பில் செலுத்தினாலே போதுமானது.
இப்போதெல்லாம் ஆங்கில வகுப்பில் நான் தூங்குவதில்லை. ஒருவர் நூலை வாசிப்பார். அதைக் கேட்டு பலர் தூங்குவார்கள் நான் அப்படியில்லை. நான் நூலை முழுதுமாக தீர வாசித்துவிட்டேன். ஆகவே அந்த நேரத்தில் நான் தமிழ் சிறுகதை எழுதலானேன்.பாட முடிவில் ஏதாவது கேள்விகள் எழுந்தால் அது பற்றி தெரிந்ததுபோல் பதில் சொல்லிவிடுவேன்.
எனக்கு எப்போதும் ஏதாவது ஒரு நாவலைப் படித்துக்கொண்டேயிருக்கவேண்டும். நான் முன்பே ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவலை படித்து முடித்துவிட்டேன். அடுத்து படிக்க ஐடா ஸ்கடர் அம்மையார் பற்றிய நூல் வாங்கியிருந்தேன். அதை கையில் எடுத்துக்கொண்டேன். நூலை எழுதியவர் டாரதி கிளார்க் வில்சன் என்பவர். ( இது இன்றும் உலகில் பிரசித்திப்பெற்று விளங்குகிறது ) இதை கையிலும் பையிலும் வைத்துக்கொண்டால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கலாம். நானும் இந்த பெண் மருத்துவ சாதனையாளர் பற்றி உங்களுக்குக் கொஞ்சங்கொஞ்சமாகக் கூறலாம். இப்போது அவர் பற்றிய முன்னுரையை எழுதிவிடுகிறேன். இவர்தான் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியையும் மருத்துவமனையையும் நிறுவிய அமெரிக்க பெண்மணி. ஒரு பெண்ணால் எந்த அளவுக்கு சாதனை செய்ய முடியும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.
டாக்டர் ஐடா சோபியா ஸ்கடர் ( 9 டிசம்பர் 1870 – 23 மே 1960 ) இந்தியாவில் பணியாற்றிய மூன்றாம் தலைமுறை அமெரிக்க மருத்துவ இறைப்பணியாளர் ஆவார்.இந்திய நாட்டுப் பெண்களின் நல்வாழ்விற்காகவும், பிளேக், காலரா, தொழுநோய் ஆகிய கொடிய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காவும் தம்முடைய வாழ்வை அற்பணித்துக்கொண்டவர். 1918 ஆம் வருடத்தில் இவர் ஆசியாவிலேயே முதன்மையான மருத்துவக் கல்வியைப் போதிக்கும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நிறுவினார். அதில்தான் நானும் தற்போது மருத்துவம் பயில்கிறேன்.
இந்த இமாலயச் சாதனையை அவரால் எப்படி நிறைவேற்ற முடிந்தது என்பதைக் கூறுவதுதான் அந்த நூல். அவருடைய நிகரில்லா வாழ்க்கையைப் பற்றி இனிவரும் தொடர்களில் கூறிவேன்.நம்முடைய வாழ்க்கையையும் தியாகங்கள் நிறைந்ததாக அது மாற்றியமைக்க உந்துகோலாக அமையும் என்பது என்னுடைய அவா!
விடுதி வாழ்க்கை அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தது. பெஞ்சமினும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்களானோம். வெளியில் செல்லும்போதெல்லாம் நாங்கள் இருவர்தான். வேலூர் கடைத்தெருவுக்குச் செல்லும்போதும் இரவில் ஆங்கிலத் திரைப்படம் பார்க்கவும் அப்படியேதான்.மாலையில் ஆரணி வீதியில் நடக்க அவனால் வரமுடியாவிட்டால் சம்ருதி என்னுடன் சேர்ந்துகொள்வான். அவனும் நானும் ஒரே அறையில் உள்ளதால் முன்பே நாங்கள் நெருக்கம்தான்.
ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு எங்கள் வகுப்புக் கூட்டம் நடைபெற்றது. அனைவரும் இரண்டாம் மாடியில் உள்ள நீண்ட கூடத்தில் கூடினோம். வகுப்புத் தலைவன் கணேஷ் கூட்டத்தின் நோக்கத்தைக் கூறினான்.
இன்னும் இரண்டு வாரத்தில் விடுதி நாள் கொண்டாடப்படும். அதற்கு விடுதி அலங்காரம் செய்யப்படும். அதில் சீனியர் மாணவர்களுடன் சேர்ந்து நாம் அனைவரும் பங்குகொள்ளவேண்டும். அதை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம்.
அடுத்து அவன் சொன்ன செய்தியை நாங்கள் கரகோஷம் செய்து வரவேற்றோம்! விடுதி நாளன்று ஒவ்வொருவனும் கட்டாயமாக வகுப்பு மாணவி ஒருத்தியை விருந்தினராக அழைத்துவரவேண்டும். அன்று இரவு விருந்து முடிந்தபின்பு நடைபெறும் கலை நிகழ்சிகள் முடியும் வரை அவளுடன்தான் இருக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக பெண்கள் விடுதி செல்லவேண்டும். அங்கு மாணவிகள் காத்திருப்பார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு ஒன்றாக விடுதி திரும்பவேண்டும். அங்கு அவரவர் விருந்தாளியை ( மாணவியை ) தங்களுடைய அறைக்கு அழைத்துச்சென்று உபசரிக்க வேண்டும். அவர்களை இரண்டு மணி நேரம் மட்டும் அறையில் வைத்துக்கொள்ளலாம். அதன்பின்பு ஜோடியாக விருந்து நடக்கும் வெளி அரங்குக்கு வந்து அவர்களுக்கென்று குறிக்கப்பட்டுள்ள இடத்தில அமர்ந்துகொள்ள வேண்டும். விருந்து முடிந்ததும் அங்கிருந்தே கலை நிகழ்சிகளைக் கண்டு இரசிக்க வேண்டும். அப்போது அறைக்கு மீண்டும் கூட்டிச் செல்லக் கூடாது. இதுவே விடுதி நாளுக்கான விதிமுறைகள் என்று கணேஷ் கூறினான். இதில் யாருக்கும் ஏதும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டான்.
ஏபெல் ஆறுமுகம் கை உயர்த்தினான். அவன் மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்தவன்.எப்போதும் கலகலப்பாக நகைச்சுவையுடன் பேசுபவன்
.” விருந்துக்குப்பின் அறைக்குக் கூட்டிச் செல்லக்கூடாது என்றாய். ”
” ஆம் ” கணேஷ் தலையாட்டினான்.
” என்னுடைய விருந்தாளிக்கு இடையில் சிறுநீர் கழிக்கவேண்டுமென்றால் கூட்டிக்கொண்டு போகலாமா? ” என்று ஏபெல் கேட்டதும் அனைவரும் கொல்லென்று நகைத்தனர்.
” அது அவசரம். கூட்டிக்கொண்டு கழிவறை போகலாம். அனால் உடன் நீயும் உள்ளே போகக்கூடாது.” என்று எச்சரித்தான் கணேஷ்.
அனைவரும் உரக்க கத்தி ஆரவாரம் செய்தனர்!
சுரேந்தர் கையை உயர்த்தினான். அவன் பஞ்சாப் மாநிலத்தவன். அவனுக்கு கணிதத்தில் ஆர்வம் அதிகம்.
” நாம் முப்பத்தைந்து பேர்கள் உள்ளோம். ஆனால் நம் வகுப்பில் இருபத்தைந்து மாணவிகளே உள்ளனர். எப்படி நம் எல்லாருக்கும் ஒரு பெண் கிடைப்பாள்? ” இது கேட்டு மீண்டும் கரகோஷம். இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பது தெரியவில்லை.
சார்லஸ் பிரேம் குமார் கையைத் தூக்கியவாறு எழுந்து நின்றான். அவன் ஆந்திராவைச் சேர்ந்தவன்.
” இப்போதே நம் வகுப்பில் சில ஜோடிகள் உருவாகி வருகின்றனர்.அவர்களுக்கு பிரச்னை இல்லை. அவர்கள் தங்கள் ஜோடிகளை அழைத்துக்கொள்வார்கள். ஜோடி இல்லாதவர்கள் யாரை அழைப்பது என்பதுதான் இப்போது பிரச்னை. முதலில் யார் யாருக்கு ஜோடிகள் உள்ளனர் என்பதை இப்போது சொல்லிவிட்டால் நல்லது. ” என்ற அருமையான கருத்தைக் கூறினான்.
” ஆமாம். காதல் ஜோடிகளைக் கலைப்பது நல்லதல்ல. காதலிப்பவர்களும் காதலிக்க முயன்றுகொண்டிருப்பவர்களுக்கும் சலுகை தருவோம்..” ரஞ்சித் ஊமன் அதை ஆதரித்தான். அவன் கேரளாவைச் சேர்ந்தவன்.அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தோம்.
” ஆமாம். காதலிக்கும் ரோமியோக்கள் கையை உயர்த்தலாம். ” இது பாலாஜி நாயிடு. கோயம்புத்தூரைச் சேர்ந்தவன்.
” அந்த ஜூலியட்டுகள் யார் யார் என்பதையும் சொல்லிவிடுவது நல்லது. ” இது டேவிட் ராஜன். இவன் பாளையங்கோட்டை.
முதலில் ஒரு கை உயர்ந்தது. அது ரூப் கிஷன். காஷ்மீரைச் சேர்ந்தவன். ” மீரா நரசிம்மன் .” என்றான். அவள் தமிழ் நாடு. அவனைத் தொடர்ந்து மேலும் ஒன்பது கைகள் உயர்ந்தன. கைகள் உயர உயர கரகோஷமும் உயர்ந்தது!
கணேஷ் கையசைத்து அமைதி உண்டாக்கியபின் பேசலானான்.
” இப்போது இருபத்தைந்து மாணவிகளில் பத்து பேர்கள் புக்கிங் ஆகிவிட்டனர். மீதம் பதினைந்து மாணவிகளே மிச்சம் உள்ளனர். இவர்களை எப்படி இருபத்தைந்து பேர்கள் அழைப்பது என்பதுதான் இப்போதைய இமாலயப் பிரச்னை. .உங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. நீங்களே மாணவிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி கேட்டுப் பாருங்கள். உங்களுடன் வர அவர்களுக்கு சம்மதம் என்றாலே போதும்.. அதில் எத்தனை பேர்களுக்கு புது ஜோடி சேர்க்கிறது என்பதையும் பார்ப்போம். அதன்பின்பு ஜோடிப்பறவைகள் கிடைக்காமல் விடு பட்டவர்கள் பற்றி யோசிப்போம். ” கரவொலி ஓய கொஞ்ச நேரமானது.
அவசரமாக போரஸ் டாபார் கை தூக்கினான். அவன் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவன். ” ஒரே பெண்ணை இருவர் மோதினால் என்ன ஆவது? அதில் சிக்கல் வராதா? ” இதுவும் நல்ல கேள்விதான். ஒரு பெண்ணை அழைத்து அவள் மறுத்துவிட்டால் மூக்கு உடைபட்ட மாதிரிதானே?
” டாபார். நீ எந்தப் பெண்ணை அணுகினால் சம்மதிப்பாள் என்பதை இந்நேரம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். உன்னை அவள் மறுத்தால் அவளுக்கு வேறொருவன் மேல் கண் உள்ளது என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். ” கணேஷ் சொன்னதைக்கேட்டு சிரிப்பொலியால் கூடம் அதிர்ந்தது.
” சரி. கூட்டம் இத்துடன் முடிந்தது. இன்னும் இரண்டு நாளில் உங்கள் வேட்டையை முடித்துக்கொண்டு விடையுடன் வாருங்கள். அதன்பின் விடுபட்டவர்கள் யார் என்று பார்த்து விடை காண்போம் .குட் நைட் . ” நாங்கள் கலைந்து கூடத்தை விட்டு வெளியேறினோம்.
எந்தப் பெண்ணை அணுகுவது என்ற சிந்தனையுடன் அறைக்குத் திரும்பினேன். சம்ருதி உடன் நடந்து வந்தாலும் அவனும் மெளனமானான். அவனுக்கும் அதே சிந்தனைதானோ?

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஅவன், அவள். அது…! -7அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *