இதோ ஒரு “ஸெல்ஃபி”

This entry is part 2 of 16 in the series 17 ஜனவரி 2016

இதோ ஒரு “ஸெல்ஃபி”

==============================================ருத்ரா

யார் இந்த மானிடப்புழு?

நெளிந்து கொண்டிருந்தாலும்

நெளிந்த தடம் எல்லாம்

மின்னல் உமிழ்வுகள்.

ஆயிரம் கைகள்.

ஆயிரம் கண்கள்..தலைகள்.

ஆயிரம் ஓசை எழுப்பும்

ஆயிரம் நயாகராக்களை

கடைவாயில் ஒழுக விடும்

கடையனுக்கும் கடையவன்.

ஒளியாக‌

ஒலியாக‌

நரம்புகளைத் துளை போடும்

அதிர்வுகளை

இரைச்சல்களை வெளிச்சங்களை

சர்க்கரைப்பொங்கலாய்

தின்று கொண்டிருப்பவன்.

எங்கிருந்தோ

எதையோ

எப்படியோ

இழுத்துவந்து வெளியே போட்டு

அதன்

கருப்பொருள் தெரியாமல்

ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன்.

காரணமே கரு தரிக்காமல்

காரியமாய்

பெரிய

அசிங்கமான அழகான‌

ரெட்டை மயிர் மீசையை

ஒற்றி ஒற்றி

இந்த பில்லியன் ஆண்டுகளை

துப்பறிய வந்த கரப்பான் பூச்சியாய்

துரு துருப்பவன்..

கொடிய மரண வடிவத்தை

வைரஸ்ல் புதைத்து

தன் பிம்பம் காட்டுபவன்.

“செர்ன்”உலையில்

குவார்க் குளுவான் குழம்பை

தாளித்துக்கொண்டிருப்பவன்.

ஹிக்ஸ் போஸானயும்

நியூட்ரினோவையும்

கடுகு வெடிக்க வைத்து

கலகச்சமையல் செய்து கொண்டிருப்பவன்.

சீசனுக்கு சீசன்

எந்த நாட்டிலாவது

ரத்தம் கொப்புளித்துக்கொண்டிருப்பான்.

உண்மை சதை பிய்ந்து

கிடக்கும் போது

உண்மையை மொய்த்துக்காட்டும்

ஈக்களாய் அங்கே

அலையடிப்பான்.

வெள்ளமாய் வந்து

தேர்தல் பிரகடன‌ங்களை

கொட்டு முழக்குவான்.

ஈசல்களின் சிறகுகளில்

ஈஸாவாஸ்யம் ஸ்டிக்கர் ஒட்டி

தெறிக்க வைப்பான்.

காளையாய் வந்து

கொம்பை ஆட்டி ஆட்டி

ஒரு தேவரகசியத்தை

தெருவெல்லாம்

மூக்கணாங்கயிறு வழியே

மூசு மூசு என்று

மண் குத்தி

மண் கிளறி

தன் “பார் கோடு” தனை

தரையில் கிழித்துக்காட்டுபவன்.

வதை செய்பவர்கள்

வாலை முறுக்குபவர்கள் அல்ல.

பிரபஞ்ச மூச்சையே சுவாசிக்கத் தெரியாமல்

ஒரு வட்டமேஜைக்குள்

வார்த்தைகளை

சவைத்துக்கொண்டிருப்பவர்கள்

கையில் தான் வெட்டரிவாள்

என்று

கொதித்துக்குதிப்பவன்.

படீரென்று

கீழே விழுந்து

சுக்கல் சுக்கலாக‌

நொறுங்கியது அது.

அது நிழலா?

நிழலின் இமேஜா?

உடுக்கையிலிருந்தும்

வெர்ச்சுவல் ரியாலிட்டியின்

தூரிகை மயிர்கள் துடித்தன.

கோணா மாணா சித்திரத்துள்ளே

கோணல் கோட்டின் இன்ஃபினிடியில்

காட்சியில் பிடி படாத நேர்கோடு

வளைந்து வளைந்து

வக்கிரம் காட்டியது.

யார் அவன்?

எது அது?

அது வேறு ஒன்றுமில்லை.

தன் “செல்ஃபியை”

கீழே எறிந்த‌

இறைவனே அது!

Series Navigationநாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்இலக்கிய வட்டம் வானொலி ஒலிபரப்பின் இரண்டாம் பகுதி
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *