ஜி.ஜே. தமிழ்ச்செல்வி
டர்ர்ர்ர்ரென்று டயர் தேயும் சப்தத்துடன் யு டேர்ன் அடித்துத் திரும்பியது அந்த ஆட்டோ. அதன் டிரைவர் அதிகம் குடித்திருந்தான். அதற்குள் ஒரு மூதாட்டி…தன் சுருக்குப் பையை திறந்து உள்ளே இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கி, அதிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியில் எடுத்து, உள்ளங்கையில் அடிக்கிக் கொண்டு, சுருக்கு பையை இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
ஆட்டோ போதை லயத்துடன் சாலையில் அலைந்தாடியபடி சென்றது. அதைப் பற்றி அந்த மூதாட்டி அலட்டிக் கொள்ளாது அமர்ந்திருந்தாள்.
ஏய் சாவு கிராக்கி வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? ரோட்டில் தக்காளி வண்டிக்காரன் கூவினான். அந்த கூவலும் அந்த ஆட்டோ டிரைவரை சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆட்டோ டிரைவரின் கண் சொருகி, புத்தனின் தியான நிலையில் இருந்தது. தலை சற்று தாழ்ந்து திரும்பவும் நேராகியது. கைகள் மட்டும் பழக்கத்தின் கவனம் போல் இறுக்கமாய் ஸ்டேரிங்கைப் பற்றியிருந்தது. அத்தனை போதையிலும், அவன் யாரையும் விபத்தாக்காது கவனமாய் கடந்து கொண்டிருந்தான்.
அவன் கைத்தேர்ந்த ஆட்டோ டிரைவர் என்பது அவன் அந்த வண்டியை ஓட்டும் இலாவகத்திலேயே தெரிந்தது.
குடிவெறி மிகுந்திருந்த போதும் அவனுள் மனிதம் நேர்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஆட்டோ இராமமூர்த்தி டாக்டரின் கிளினிக் முன்பாக நின்றது. அந்த மூதாட்டி இறங்கினாள். இந்த என்று அந்த இரண்டு ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்தாள்.
அவன் சிரித்தான்
நீ எனக்கு காசு தரியா? எங்க பாட்டி மாதிரி இருக்க…எங்க ஔவா தெரியுமா உனக்கு லஷ்மி பாட்டி, குள்ளச்சி உங்கிட்டா காசு வாங்கினா பாவம் போ போ…
அவன் அவளிடம் பணம் ஏதும் வாங்கவில்லை…
டர்ர்ர்ர்ர்ர் ரென்று சப்தத்தோடு மண் புழுதியை கிளப்பி அந்த ஆட்டோ வந்த திசையே பயணமாகியது. இப்பொழுது அந்த ஆட்டோ நூல் பிடித்தது போல் ஒரே நேர்கோட்டில் ஓடி, அந்த குடிசையின் வாசலில் நின்றது. நாய் ஒன்று வாலை ஆட்டியபடி அந்த ஆட்டோ டிரைவரிடம் ஓடி வர, இன்னா உனக்கு சோறு வேணுமா? என்றான் நாயிடம்.
நாய் வாலை ஆட்டியபடி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் கையில் இருந்த பிரியாணி பொட்டலத்தைப் பிரித்தான். இப்பொழுது நாயின் கவனம் அவன் முகம், பிறகு பிரியாணி என்று அவன் கையசையும் லயத்திற்கு ஏற்ப மாறியது.
அவன் சாப்பிடவில்லை… இந்த உனக்குத்தான்…. என்று நகர்த்தி நாயிடம் வைத்தான்.
நாய் முகத்தில் சிறு தயக்கம்… உண்மை தானா? என்ற பார்வை…. நான் சாப்பிடட்டுமா என்ற கேள்வி? சிறு ஒலி எழுப்பி, வாலை வேகமாய் ஆட்டிக் கால்களை முன்னும் பின்னும் மாற்றி வைத்தது.
அவன் இன்னும் அதன் பக்கமாய் பிரியாணியை தள்ளி வைத்தான்.
நாய் ஐயம் தெளிந்து, அச்சம் அழித்து அவ் அவ் என்று கவ்வி உண்ணத் தொடங்கியது.
நான் பத்தாங் கிளாஸ் படிக்கும்போது என் வயத்துக்கு சோறு இருக்காது…ரோட்ல தம்பி அன்பு பழக்கடையில வாழைப் பழத்தோல்களைக் கொட்டி வச்சிருப்பான்… இன்னா தோலு…ஏய் நாயி கேக்குறியா? வாழப்பழத் தோலு, அதை பொறுக்கித் தின்ன வயிறு தான் இது…நீ நல்லா தின்னு…உஞ்சோறு எனக்கு வேணாம்.
அவ்ளோ கஷ்டப்பட்டு, இப்ப நான் நல்லா இருக்கேன் ராஜா மாதிரி ஜம்முன்னு, குடிக்கறேன் சாப்பறேன், தெம்பா இருக்கேன்.
ஏய் நாயி நீ சொல்லு, எதுக்கு சம்பாதிக்கறோம். புள்ளையா குட்டியா யாருக்கு குடுக்கப் போறேன் நீ நல்லா தின்னியா?… நாய் போதுமான அளவுக்கு சாப்பிட்டு மீதி சொச்சத்தை விட்டுவிட்டு அவன் அருகில் வந்து நின்றது.
வா வந்து தூங்கு வா என்று காலை நீட்டினான். அந்த நாய் அவன் தொடையில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு வாலை லேசாய் ஆட்டியது.
எனக்கும் தூக்கம் வருது…நானும் தூங்கறேன் நீயும் தூங்கு.
இரு கைகளையும் இயேசுகிறிஸ்துவின் ஆணி அடிக்கப்பட்ட கரங்கள் போல விரித்துப் படுத்துக் கொண்டான். அழுதான் விழிகளில் கண்ணீர் பக்கவாட்டில் வழிந்தது. மெல்ல அவன் உடல் உறங்க உள்ளம் அலை அலையான எண்ணங்களால் கொந்தளித்துக் கொண்டிருந்தது,
அன்பில்லா தருணங்கள், விளையாட முடியா நாட்கள், குடிக்காரத் தகப்பனின் கோபங்கள், இயலா தாயின் மன அழுத்தங்கள் என்று ஒரு பிஞ்சு, வெம்பி வதங்கி தன் இயல்பை இழந்து போன அம்மரணத்தின் ஆணி வேரை நோக்கி ஓடிக் கொண்டிருந்த எண்ணங்கள்.
அந்த கிழவி வேகு வேகு என்று நடந்து கொண்டிருந்தாள். அவளின் சுருக்குப் பை இப்படியும் அப்படியுமாய் அசைந்தது அவள் உள்ளக் குமுறல் போலவே…
அவனுக்கு எவ்ளோ திமிரு இருக்கும், அவளின் மனம் ஆங்கரித்தது. பத்து ரூவா கொடுத்தேன்… வாங்கல… என் மூட்டு மண்ணெண்ணையை தூக்கிட்டு போயிட்டா நாதாரி…
ஆட்டோ ஸ்டேண்டின் முன் வந்து நின்றாள். அவிழ்ந்து துண்டு துண்டாய் புட்டை கட்டித் தொங்கிய கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டாள். ஆக்ரோஷமான கதாநாயகி போல.
“இங்க ஒரு எடுவட்ட பய இருந்தானே,” அவன் எங்க என்றாள்
“யார கேக்குற,” என்றான் அங்கிருந்த ஆட்டோ காரரில் ஒருவன்.
“அதான் அந்த குடிக்கார ஆட்டோ டிரைவர்”, என்றாள்
அங்கிருந்த இன்னு மொருவன் ஆட்டோ உள்ளிருந்து எட்டிப்பார்த்தான்.
“இன்னா ?” என்று இறங்கி வந்தான் என் மண்ணெண்ணைய தூக்கிட்டுப் போயிட்டான்.
“வேணும் உனக்கு, கம்மி காசுன்னு அவம் பின்னாடி போன இல்ல அதான் தூக்கிக்கினு போயிட்டான். அவ ஊட்டாண்ட இருப்பாம் பாரு போ போ..”
“யப்பா ராசா…. எம்பொண்ணுக்கு எடுத்துட்டு போன எண்ண கொஞ்சம் வாங்கித்தாயேன்…” என்று கெஞ்சினாள். முந்தானையில் கண்களை ஒத்தி எடுத்தாள்.
“சும்மா வருவாங்களா ஆளுக்கு ஒரு பானிப்பூரி,” சொல்லு என்றான் ஒருவன்.
“அம்புட்டு துட்டு ஏது எங்கிட்ட” என்றாள்
“சுருக்கு பைல இருக்கும் பாரு எடு… யாருக்கு சேப்புக்கட்ட போற,” என்றான்
“இல்ல ராசா,” என்று வெள்ளந்தியாய் கைகளை விரித்தாள். முந்தானையில் முடிந்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று சத்தம் போடாமல் திருதிரு வென விழித்துக் கொண்டிருந்தது முடிச்சுக்குள்.
இதோ பாரேன் என்று சுருக்குப் பையை அவிழ்த்துக் கொட்டினாள். அதிலிருந்து சில்லறைகள் சிதறி அவர்களின் காலடியில் உருண்டன.
அதை ஒருவன் பொறுக்கி எடுத்தான். ஒன்னு, ரெண்டு, மூணு எண்ணினான்.
“முப்பது ரூவா இருக்கு, அஞ்சு பேருக்கு டீயாச்சு….பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். சரி வாங்கடா போலாம் கிழவிக்கு எண்ண வாங்கிக்குடுத்துடலாம்…”
“அடிங்க் ஒக்காலி ஒம்பாக் கெட்ல போட்டுகினு எங்கள எதுக்கு லந்தடிக்கிற….”
“அடச்சீ வாடா தாயோளி சாயந்தரம் சைடிஷ்காச்சு நீயுந்தான் சேந்து குடிப்ப,” என்று அழைத்துக் கொண்டு போனான். ஓரே ஆட்டோவில் ஐந்து பேரும் நெக்கி அடித்து உட்கார…ஆட்டோ மெல்ல வேகமெடுத்தது.
ஆட்டோ போன திசையை வெறிக்கப் பார்த்தபடி சாலையோரம் குத்தங்கால் போட்டு உட்கார்ந்த கிழவி தலைமீது கையை வைத்துக்கொண்டாள். மாராப்பு விலகி தொங்கிய சுருக்க வரியும் தோலுமாய் தொங்கிய முலையை சேலையின் மடிப்பை பிரித்து மறைத்து, ஒரு முந்தி முனையை எடுத்து பின் பக்கம் இறுக்கிச் சொருகினாள்.
குடிசை வாசலில் சாணத் தரையில் விழுந்து கிடந்தவனை டேய் என்று எழுப்பினான் காசு வாங்கியவன். யூதாஸ்காரியோத்தின் குணங்களை அங்கமாய் தரித்துக்கொண்டிருந்தவன் போல் நின்றான். சரட்டென்று எழுந்த நாய் வள்ளென்ற குரைத்தது. உர்ர்ர்ர் ரென்று மூர்க்கமாய் முழங்கியது. அதன் கோரப் பற்களை வெளிக்காட்டி அடிவயிற்றின் ஆழத்தில் இருந்து கோபக் குரல் எழுப்பியது. ஐவரும் சற்று பின்வாங்க… அதில் ஒருவன் ஒரு கல்லை எடுத்து நாயின் மேல் குறிப்பார்த்து எறிந்தான்.
நாய் வலி பொறுக்காமல் ஒரு ஹீன ஒலி எழுப்பியபடி ஓடி தூர நின்று…சன்னமாய் உர்ரென்று உறுமியபடி அவர்களையே பார்த்தது.
“டேய், டேய் எந்திரிடா எண்ண எங்க வச்சிருக்க,” என்று உலுக்கினான். ஒருவன்.
“தள்ளுடா நீ,” என்ற மற்றொருவன் நச்சென்று முகத்தில் அடித்தான்.
மெல்ல கண்விழித்தவன்..”எதுக்குடா அடிக்கிறிங்க,” என்று குளறினான்.
“திருட்டு நாய அடிக்காம முத்தங் குடுப்பாங்களா,” என்றான் இன்னும் ஒருவன்.
அவனை யாரோ அடித்தார்கள். அவனுக்கு வலித்தது… அவன் அதை பொருட்படுத்தவில்லை. அவன் வேறு உலகில் இருந்தான். மிதமிஞ்சிய போதை ஏற்படுத்திய உலகம். பலகையோடு எழுதிக்கொண்டு…பக்கத்தில் இருந்த பரமேஸிடம் காக்காக் கடி மிட்டாயை சுவைத்தபடி இருந்தான். அந்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்து சிறு புன்னகயாய் விரிந்தது. வாயில் இருந்து வழிந்த எச்சிலை புறங்கையால் வழித்து எறிந்தான்.
“ஏய் ச்சீ” என்று விலகினார்கள். “எவ்வளவு அடிச்சும் ஒரைக்கலியாட இவனுக்கு சிரிக்கிறான் பாரேன்..” என்றான் வந்தவர்களில் ஒருவன்.
விழுந்துகிடந்தவனின் உலகத்தில் திடீரென்று அவன் காலில் முள் குத்திவிட்டது. வலி… அம்மா என்றான்… ஒரு பொட்டு இரத்தம் பாதத்தை சிவப்பாக்கியது. “அம்மா வலிக்குதே” என்றான் அவன் . அந்த வலி அவன் இதயத்தை கழிவிரக்கத்தால் நிரப்பியது. “எனக்கெங்க இருக்கா அம்மா… அவளுக்கு அவ புருஷந்தான் முக்கியம்….” ஒரு மெல்லிய கீற்று கண்ணீர் வழிந்து முன் காய்ந்த கண்ணீர் கோடுகளை ஈரமாக்கியது.
போதை தெளியாது… அடிகளை வாங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி நிறுத்தினார்கள். சில நொடி சிரித்தான். திடீரென்று அழுதான். திடீரென்று கோபமாய் சட்டையை கிழித்தெறிந்தான். ஐவருக்கும் ஒன்றும் புரியவில்லை. சலித்துக் கொண்டவர்கள் பின் வாங்கினார்கள்.
ஆட்டோவில் ஒருவன் எட்டிப்பார்த்தான்…
எண்ண இங்க இருக்குடா என்றான்.
அவன் உதட்டில் இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. “டேய்… அந்த எண்ணைய எடுக்காதீங்கடா… லட்சுமி பாட்டி மறந்து வச்சுட்டு போய்டிருக்கா… பாவம் டா அவ எடுக்காதீங்கடா “ என்றபடி மீண்டும் தரையில் சரிந்தான் அவன்.
கிழவியின் கண்கள் பளிச்சிட்டது. “நீங்க மவராசனா இருக்கனுஞ்சாமி” என்று ரெண்டு கைகளையும் கூப்பினாள். எண்ணையை தூக்கிக்கொண்டு நடந்தாள்.
“ச்சே …. ஏன்டா அவன் அப்படி இருக்கான்…”
“இன்னான்னு தெரியலடா குடிக்காம இருந்தா நல்லவந்தான்” என்றான் மற்றவன்.
குடித்தாலும் குடிக்காவிட்டாலும் அவனுக்குள் இருக்கும் மனிதத்தை ஒருவராலும் அறிய முடியவில்லை.
கிழவிக்கு எண்ணெயை தூக்கிக்கொண்டு நடக்க முடியவில்லை. கால் செத்து போச்சு… தோளுக்கு வளந்த பேர பசங்க இருக்கறானுவ… வந்து செத்த கூட்டிக்கினு போன என்ன…நாக்கு வரண்டு போனது.
வா அத்த என்றான் மருகன்
“உங்க ஆத்தா வந்திருக்கு பாரு, என்ற கணவனிடம் அரியலும் பொரியலும் தூக்கிக்கினு வந்திருக்கா என்ன லட்ச பிடிச்சது. குடுச இருக்கு பொங்கித்தின்னுக்குனு இருக்கறதுக்கு என்ன கேடு..” முனுமுனுத்தாள்.
உள்ளிருந்து வந்தவள்… “இப்பத்தான் வந்தியா? ஓ எண்ண கொண்டாந்தியா…. கூழு கரைக்கவா…. கொஞ்ச சோறு இருக்கு, கணேசன் காலேசு முடிச்சு இப்ப வந்துருவான் அவன் கூழு குடிக்கமாட்டான்…”
“நான் வர்றப்ப ஓட்டல்ல பொடல்லஞ் சோறு தின்னுட்டுத்தான் வந்தன் எனக்கு ஒன்னும் வேணாம்….ஒரு சொம்பு தண்ணிக்குடு…. வெயில் தாழ கிளம்பறேன்.”
“இருந்துட்டுத்தான் போயேன்.. போயித்தான் என்னத்தப் பண்ண போற.. நாளைக்கு காலம்பற மொளகாய்ல கள புடுங்கனும்… ஆள் குறையுது…” என்று இழுத்தாள் மகள்
“மாட்ட காட்டுக்கு ஓட்டி உட்டுட்டு வந்தேன். புடிச்சு கட்டனும்…போவனும்… குடிசைக்கு கதவுக் கூட இல்ல…”
“அந்த குடிசைல இன்னா லட்சமா வச்சுக்கினு இருக்கற” என்று நொடித்தாள் அவள்.
வெப்பம் சற்று தணிந்ததுமே புறப்பட்டு விட்டாள் கிழவி… யாரிடமும் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. மனம் வலித்தது. கண்ணை கரித்துக்கொண்டு வந்தது. இடுப்பிலேயே வைத்துக்கொண்டு சீராட்டிய பெண் தான்… தாய் என்று பார்க்க தோதில்லாது போய்விட்டது அவளுக்கு…ஏதேதோ எண்ணப் பிதற்றல்கள் மனக்களத்தில்
ஆட்டோ ஸ்டேண்டைக் கடந்து , எம் ஜி ஆர் சிலையைக் கடந்து…. ஊர் போகும் பேருந்தை நோக்கி கடந்தவளை பிரேக் இல்லாமல் வந்த லாரி தூக்கி எறிந்தது….
கூட்டம் சர சரவென புற்றீசல் போல் கூடிவிட….
“இன்னாடா ஆச்சு அங்க ?”
“ஆக்சிடெண்ட்டா ?”
“யாரோ பாவம் கிழவி…தரைல கிடக்கிறா.”
பொதுவில் யாரோ பேசிக்கொண்டே கடந்தார்கள்….
போதையில் இருந்தவன் தெளிவாய் இருந்தான். நெற்றி நிறைய திருநீறு…துவைத்து அயர்ன் செய்யப்பட்ட சட்டை… மெருன் நிற பேண்ட் என்று தெளிவான வாலிபன்.
“என்னடா ஆச்சு….?”
“காலம்பற ஆட்டோல போச்சே ஒரு கிழவி அது மேல லாரி ஏத்திடுச்சு… ஸ்பாட் அவுட்….”
ப்ச் என்றவன் கூட்டத்தில் புகுந்து கிழவியின் அருகில் சென்றான்….
“டேய்ய் இருடா போலீசு வரட்டும்….”
கிழவி அரை நினைவாய் குழறினாள்…”என்ன பெத்தவனே, வலி உசுறு போவுதுடா…”
“உசுரு இருக்கு மச்சி” என்று யாரோ யாரிடமோ கூறினார்கள்.
இரு கைகளிலும்… ஒரு குழந்தையை ஏந்துவது போல் ஏந்தினான். வேகமாய் நடை நடந்து ஆட்டோவின் பின் இருக்கையில் கிழவியை கிடத்தி… சீட்டோடு பிடித்து கட்டினான்.
ஆட்டோ டர்ர்ர்ர்ர் ரென்று ஒரு யுடேர்ன் அடித்து கவர்ண்மெண்ட் ஆஸ்பிடல் நோக்கி ஓடியது.
லட்சுமி ஔவா இடுப்பை விட்டு இறக்கி விட மாட்டா…கொஞ்சூண்டு பூவா தின்றா ரேய்ய்ய் ஹப்பா என்பாள். எத்தனை வெள்ளந்தி அவள்… காசை எண்ணக் கூட தெரியாது. பெரிய பொட்டோடு, வாயில் அடக்கிய புகையிலை பருத்த கன்னத்தோடு அவனின் நினைவுகளில் ரேய்ய் அப்போடு குஞ்சூண்டு பூவா தின்றா என்று தெலுங்கும் தமிழுமாய் கொஞ்சினாள் லட்சமி ஔவா. அவன் புறங்கையால் கண்ணைத் துடைத்துக்கொண்டான். ஆட்டோ சீராய் ஓடிகொண்டிருந்தது.
+++
- ஆட்டோ ஓட்டி
- காக்கைக்குப் பிடிபட்டது
- ’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….
- அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!
- பிளந்தாயிற்று
- விசாரணை
- பெங்களூர் நாட்கள்
- கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு
- பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்
- விஜயதாரகை அறிமுகம் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்
- ஆண் பாவங்கள்
- வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்! – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
- குப்பையும் சாக்கடையும் துணை!
- புரட்சித்தாய்
- பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்
- தைப்பூசமும் சன்மார்க்கமும்
- தொடுவானம் 107. அவள் பறந்து போனாளே!
- முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு – 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை