0
தெளிவில்லாத தகவல் அறிக்கை போல குழப்பமான திரைக்கதையுடன் ஒரு போலீஸ் ஸ்டோரி.
நேர்மையான காவல் ஆய்வாளரை உரசிப் பார்க்கும் ஊழல் உலகத்தின் வழக்கமான கதை.
0
சேதுபதி, மதுரை வட்டத்தின் காவல் ஆய்வாளர். மனைவியும் இரு பிள்ளைகளுமாக நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் கொலைகளுக்கு அஞ்சாத வாத்தியார் எனும் தாதா! காவல் நிலையத்தில் ஒரு பள்ளி மாணவன் சுடப்பட, பழி சேதுபதியின் மேல் விழுகிறது. பின்னணியில் இருப்பது வாத்தியாரா இல்லை வேறு யாரா என்பதை வேகமில்லாமல் சொல்கீறது படம்.
அடிதடி மாஸ் ஹீரோவுக்கு ஆசைப்பட்டு, கையை சுட்டுக் கொண்டிருக்கிறார் சேதுபதியாக விஜய் சேதுபதி. அவருக்கு இருக்கும் திரை ஆளுமையை தவறான கதையில் செலுத்தியதால் கவனம் சிதறுகிறான் ரசிகன். ஆனாலும் அந்த நெருப்பு விழிகள் ஏதாவது நடிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு கடைசி காட்சி வரையில் நீண்டு ஏமாற்றம் தருகிறது.
‘ பீட்ஸா’ வை ஒத்த வேடத்தில் ரம்யா நம்பீசன், சேதுபதியின் மனைவியாக வருகிறார். சின்ன சிணுங்கல்களும், இதழோர புன்னகையும் இதம். வாத்தியாராக வேல. ராமமூர்த்தி ஏதோ பெரிதாக செய்யப் போவதாக போக்கு காட்டி பொசுங்கிப் போகிறார்.
படத்தின் பெரிய ப்ளஸ் இசைஞர் நிவாஸ் பிரசன்னா. கார்த்திக், சைந்தவி குரல்களில் ஒலிக்கும் “ ஹவ்வா ஹவ்வா “ புதிய துள்ளல் இசை. அனிருத் குரலில் ஒலிக்கும் “ ஹே மாமா “ நாயக பில்டப் பாடல். சித்ரா, ஶ்ரீராம் பார்த்தசாரதி குரல்களில் ஒலிக்கும் “ கொஞ்சிப் பேசிட வேணாம் “ புது மொஸ்தர் நகையாக உடனே கவர்கிறது. பின்னணி இசையிலும் புது வெள்ளமாக பாய்ந்திருக்கீறார் இந்த இளைஞர். பலே!
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஶ்ரீகர் பிரசாத்தின் கத்தரிதான் கொஞ்சம் சாணை பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
“ பண்ணையாரும் பத்மினியும் “ என்கிற குறும்படத்தை நெடும்படமாக்க இயக்குனர் எஸ்.யூ.அருண் குமார் செய்த முயற்சி தந்த வெற்றி, இதில் எடுபடவில்லை. சம்பவக் கோர்வையோ நேர்த்தியோ இல்லாமல், விஜய் சேதுபதிக்காகவே எழுதப்பட்ட திரைக்கதை பல இடங்களில் பல்லிளிக்கிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் அதிகாரி மீண்டும் தன் காவல் நிலையத்திலேயே உட்கார்ந்து அதிகாரம் செய்வதும், ஊழலுக்கு உடைந்தையான காவலர்களை அடிப்பதும் எந்த லாஜிக்கை சேர்ந்தது என்று அருண் விளக்கினால் தேவலை. கொலை செய்ய அஞ்சாத வாத்தியார் அடியாட்கள், ஒற்றை ஆளான சேதுபதியை கண்டதும் பம்முவது; எத்தனை அரிவாள்களுடன் ஆட்கள் வந்தாலும், சிறு கீறல் கூட இல்லாமல் நாயகன் தப்பிப்பது; சாதாரண வசனங்களைக் கூட சேதுபதி கூச்சலிட்டு சொல்வது; இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நமக்கு வாய் வலிக்கும். அதனால் வேண்டாம்.
கோழி கிளறியது போல கொத்து பரோட்டா இருந்தால் வந்த பசி ஓடிப் போகும்.
அருண்குமார் நல்ல இயக்குனர்களிடம் பயிற்சி பெறுவது அவசியம்.
0
பார்வை : சேறுபதி! / பொய் கேஸ் / த்தூ! பதி
மொழி : ரம்யாவை நனைய விட்டு ஒரு பாட்டு கூட இல்லையே மக்கழே!
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்
- தொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .
- ராதையின் தென்றல் விடு தூது
- இயந்திரப் பொம்மை
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- தனக்குத் தானே
- சேதுபதி
- அசோகனின் வைத்தியசாலை
- மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.
- ஒற்றையடிப் பாதை
- நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி
- அனைத்துலக பெண்கள் தின விழா
- ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ்
- சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்
- 2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில்
- வைகறை கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரிஜினல் தாஜ்மகால் ‘ தொகுப்பை முன் வைத்து ….