அதுவரை வேகமாக சவாரி செய்த காளைகள் இரண்டும்கூட அசம்பாவிதம் அறிந்ததுபோல் அப்படியே நின்றுவிட்டன!
பால்பிள்ளை பதறினான்!
” என்ன அண்ணே இப்படி ஆகிவிட்டது? நான் கொஞ்ச நேரந்தான் தோட்டத்து பக்கம் சென்றேன். அதற்குள்ளாக இப்படி செய்துவிட்டது. ” என்று கண்கலங்கினான்.
” சரி….வண்டியைத் திருப்பு . ‘ என்றவாறு அவளுடைய களையிழந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் எதையும் நம்ப முடியவில்லை. இதுபோன்றுகூட நடக்குமா? எதைப் பற்றியும் நினைக்க அப்போது தோன்றவில்லை. பெரும் அதிர்ச்சியான மனநிலை!
வண்டி மீண்டும் அவளின் வீட்டு வாசலில் நின்றது. ஊர் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். வண்டிக்குள் எட்டிப்பார்த்துவிட்டு கதறி அழுதனர். நாங்கள் அவளுடைய உடலைத தூக்கிச்சென்று திண்ணையில் கிடத்தினோம். பெண்கள் பலர் சுற்றிலும் உட்கார்ந்து ஒப்பாரி வைத்தனர்.
அவளுடைய கணவன் இன்னும் ஊர் திரும்பவில்லை. ஊர்ப் பெரியவர்கள் வந்து சேர்ந்தனர். என்னிடம் விசாரித்தனர். அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை மட்டும் சொன்னேன். அவர்கள கூடிப் பேசினார்கள் . இனி கால தாமதம் செய்யாமல் இருட்டுவதற்குள் சுடலைக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்று முடிவு செய்தனர். காலம் கடந்தால் காவல் துறையினர் வந்துவிட்டால் பிரச்னை என்றனர். தற்கொலை சட்டப்படி குற்றமாகும். அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்வார்கள். எதனால் தற்கொலை செய்துகொண்டாள் என்பதையும் வழக்காகப் பதிவு செய்து விசாரிப்பார்கள்.அதெல்லாம் வீண் பிரச்னை. ஆகவே உடன் உடலை தடயம் இல்லாமல் எரித்துவிடவேண்டும் என்றனர்.
மாலை ஐந்து மணி வரை அவளுடைய கணவனுக்காகக் காத்திருந்தனர். அவன் வருவதாகத் தெரியவில்லை. உடலை பாடையில் வைத்து சுடலைக்குத் தூக்கிச் சென்றனர். பால்பிள்ளையும் நானும் அவர்களோடு சேர்ந்து சென்றோம். அது கட்டை வண்டிகள் செல்லும் வயல் வெளிச் சாலை. குண்டுங் குழியுமாய் கரடு முரடான மண் சாலை. சற்று தொலைவில் ஆண்டவர் கோவில் தெரிந்தது. அவள் பாடிய அந்த சோக கீதம் காதில் ஒலிப்பது போன்றிருந்தது. அதிலும் அந்த கடைசி வரிகள்!
சிதையில் உடலை வைத்து வறட்டிகளால் மூடி தீ மூட்டினர். நெருப்பு குபுகுபுவென்று எரிந்தது. அந்தக் கோரக் காட்சியைக் காணச் சகியாமல் நான் திரும்பினேன்.பால்பிள்ளை எனக்கு ஆறுதல் சொன்னான். இனி யார் ஆறுதல் சொல்லி என்ன பயன். அவள் இனி திரும்பவும் உயிரோடு வரப்போகிறாளா? அவள் போனது போனதுதான். ஆனால் அவள் சொன்னதுபோல் இனி எக்காலத்திலும் அவளை மறக்க முடியாதுதான்!
பிரயாணத்தை நான் தள்ளிப்போட்டேன். மறுநாள் செல்ல முடிவு செய்தேன்.
இரவு உணவு உண்ணவும் விரும்பவில்லை. பால்பிள்ளைதான் உடன் இருந்தான். அன்று இரவு படுத்தபின் வெகு நேரம் விழித்திருந்தேன். தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் அவள் வாசலில் நிற்பது போன்ற பிரமை! தூங்கினால் அவள் அருகில் அமர்ந்து எழுப்புவது போன்ற உணர்வு! அதுபோன்று விடிய விடிய மாறி மாறி தோன்றிய நிலையில் இரவும் முடிந்து விடிந்தும் விட்டது.
நல்ல வேளையாக காலையிலேயே பால்பிள்ளை வந்துவிட்டான். இருவரும் ஆற்றங்கரைக்குக் குளிக்க சென்றோம்.வழி நெடுக அவளைப் பற்றிதான் பேசினோம். இதுபோன்ற நிலையில் மனச் சுமையை யாரிடமாவது சொன்னால்தான் பாரம் குறையும். இல்லையேல் மன அழுத்தம் அதிகமாகும்.
இப்போது வயல் வரப்புகளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவுதான் வருகிறது. வாய்க்காலைப் பார்த்தாலும் அவள் நினைவுதான். இனி அவள் என்னைத் தேடிக்கொண்டு வரமாட்டாள் கதறி அழ மாட்டாள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லமாட்டாள்.
எப்போது மாலை வரும் என்று காத்திருந்தேன். உடன் ஊரை விட்டுப் போகணும் போன்று தோன்றியது. இனிமேல் விடுமுறைகளில் முன்புபோல் ஆர்வமுடன் வர முடியாது. எங்கு பார்த்தாலும் அவள் நிற்பது போலவே தெரியும். வயல் வரப்புகளில், ஆற்றங்கைகளில் அவள் காத்திருப்பது போல் தோன்றும்.
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்
- தொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .
- ராதையின் தென்றல் விடு தூது
- இயந்திரப் பொம்மை
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- தனக்குத் தானே
- சேதுபதி
- அசோகனின் வைத்தியசாலை
- மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.
- ஒற்றையடிப் பாதை
- நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி
- அனைத்துலக பெண்கள் தின விழா
- ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ்
- சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்
- 2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில்
- வைகறை கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரிஜினல் தாஜ்மகால் ‘ தொகுப்பை முன் வைத்து ….