சிறகு இரவி
0
ஆங்கிலேயர்கள் விளையாடிய மைதானம். அதை அபகரிக்க எண்ணும் அரசியல் கூட்டம்.
இன்னொரு வண்ணத்தில் ‘மெட்ராஸ் ‘ கதை!
0
நியாயத்துக்காக போராடும் புகழும் அவனது நண்பர்களும், பஞ்சாயத்து தலைவர் தாஸ் என்கிற அரசியல்வாதியால் பகடைக்காய்களாக உருட்டப்படுகிறார்கள். பல தலைமுறைகளாக அவர்கள் விளையாடும் மைதானம், மந்திரி ஒருவரால், தாஸின் உதவியோடு அபகரிக்கப்படும்போது புகழ் வெகுண்டு எழுந்து, அவர்களை வீழ்த்துகிறான். தன் காதலி புவனாவை கைப்பிடிக்கிறான்.
புகழாக, லோ பட்ஜெட் மாஸ் ஹீரோவாக புதிய பரிமாணம் காட்டியிருக்கீறார் ஜெய். அது அவருக்கு பொருத்தமாகவும் இருப்பது சுவை! நியாயத்தை தட்டிக் கேட்கும் அடங்காப் பெண் புவனாவாக அறிமுகமாகும் சுரபி, சின்ன பாவங்களில் அவர் ஒரு தேர்ந்த நடிகை என நிரூபிக்கிறார். புகழின் அண்ணன் அரசு தான் கருணாஸ். மெல்ல குணச்சித்திர வேடங்களில் களை கட்டும் அவர், சீக்கிரம் தம்பி ராமையாவுக்கு போட்டி ஆகி விடுவார். நண்பனாக வரும் ஆர் ஜே பாலாஜி, யதார்த்த நகைச்சுவையில் புன்னகை வரவழைக்கீறார்.
வேல்ராஜ், சீனிவாஸ் தேவாம்ஸன் கூட்டணியில் ஒளிப்பதிவு பளிச். புதிய இசை இரட்டையர்கள் விவேக், மெர்வின் நம்பிக்கை தருகிறார்கள். பாடல்கள் நினைவில் நிற்காதவை என்றாலும் காதுகளை ரணமாக்காமல் இருப்பதே அவர்களுக்கான பெருமை.
இயல்பான சண்டைக் காட்சிகள் அமைத்த திலீப் சுப்பராயனுக்கு செல்லமாக ஒரு குத்து கொடுக்கலாம்.
“ கோயில்ல போய் மொட்டை போடறவன் கூட சாமி ஏதாவது பண்ணும்னு நம்பித்தான் போடறான். ஓட்டு போடறவனுக்கு அது கூட இல்லை”
இயக்குனர் மணிமாறனின் வசனங்கள் பல இடங்களில் யதார்த்த கூர்மை. அதிக திருப்பங்களோ, நாயகனின் புத்திசாலித்தனத்திற்கான உத்திகளோ இல்லாமல் திரைக்கதை அமைந்ததில் படம், ஆர்வத்தை விட சோர்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும் சராசரி படங்களை விட இந்தப் படம் கொஞ்சம் கூடுதல் கவனத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
0
பார்வை : கருப்பட்டி
0
மொழி : இன்னும் கொஞ்சம் கதைகளில் கவனம் செலுத்தினா ஜெய் முதல் வரிசைக்கு வந்துருவார் மச்சி!
0