சிறகு இரவி
0
அவசரக் கோலமாக ஒரு ஆவி யுத்தம்! கொட்டாவியை வரவழைக்கும் அலங்கோலம்!
0
முன்னாள் மந்திரி சித்திரவேலும் அவனது கூட்டாளிகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட நெல்லி எனும் பெண்ணின் ஆவி, அவனது மகள் தேவதையின் உடலில் புகுந்து அவர்களை பழிவாங்கும் கதை!
ஆஸ்கர் விருது வாங்கிய ‘ஸ்லம் டாக் மில்லியனர் ‘ பட நாயகி டன்வி லோன்கர் ( Tanvi Lonkar ) தேவதை வேடத்தில் அதிகம் பேசாமல் வெளிறிப் போகிறார். ஜே.கே.ஆதித்யா மந்திரி சித்ரவேலாக வலம் வருகிறார். ரகசிய போலீஸ் நாகராஜாக சீரியஸாக நடிக்கும் இயக்குனர் நாகமானிசி ( Nagamamanece ) சிரிப்புக்கு குத்தகை எடுத்துக் கொள்கிறார். நடுத்தர வயதில் தொந்தியோடும், இளம் நடிகைகளோடும், அவர் ஆடும் இரு டூயட்டுகள் காமெடி பக்கங்கள். தேவதையின் காதலன் கவுசிக்காக ராம், தேவதையின் சகோதரி நித்யாவாக ஸ்வப்னா பானர்ஜி என டப்பிங் இந்தி சீரியல் முகங்களாக வலம் வரும் அனைத்து கலைஞர்களும் தமிழ் திரைக்கு அன்னியமாக தெரிகிறார்கள். இது நேரடி தமிழ் படமா என்கிற சந்தேகம் படம் நெடுக ஏற்படுவதை எந்த ஆவியாலும் தடுக்க முடியவில்லை!
இலக்கில்லாமல் பயணிக்கும் கேமரா, ஆவியை விட அதிகம் பயமுறுத்துகிறது. நடுக்கத்துடனே அதை கையாண்ட கோபாலை நெல்லி ஆவி தண்டிக்கலாம்!
இரைச்சலே இசை என்று புது வழியை தேர்ந்தெடுத்திருக்கீறார் இசைஞர் மித்துன் ஈஸ்வர். ஐம்பது வருடங்களுக்கு முந்தைய மெட்டுகளிலேயே பாடல்கள் போட்டு அசதியாக்குகிறார் அவர். பல காட்சிகளில் தொடர்பில்லாத பின்னணி இசை போட்டு மித்துன் மெர்சலாக்குகிறார்!
ஞானத்தின் கலை வண்ணத்தில் அந்த காட்டு பங்களா கொஞ்சம் ஈர்க்கிறது. 138 நிமிடங்களே ஓடும் படத்தை, அயர்ச்சி ஏற்படும் வகையில் கத்தரித்த ஷெபின் செபாஸ்டியன், ப்ரதீப் ஜோடிக்கு ஒரு மண்டையோடு பரிசு தரலாம்.
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கீறார் இயக்குனர் நாகமானிசி! டைரக்டோரியல் டச்சாக அவர் பெயரில் சினிமா இருப்பதை நாகசினிமா என்று காட்டி, எழுத்துக்களை மாற்றி நாகமானிசி என்று காட்டுகிறார். அதைவிட வெளியிடாமல் படத்தை டப்பாவுக்குள் திருப்பிப் போட்டிருந்தால் ரசிகன் பிழைத்திருப்பான்!
0
பார்வை : விஷம்
மொழி : இங்கிலீஷ்காரங்க இந்தப் படத்துல டன்வியை பாத்திருந்தா ஆஸ்கரை திருப்பி கேட்டிருப்பாங்க!
0