முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com
இந்தியாவில் தோன்றிய பழைமையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்மைகளையே வாழ்வியல் தத்துவங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சமண சமயம் எடுத்துரைக்கும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை சிந்தாமணிக் காப்பியம் கதைவழியாகவும் கருத்துக்கள் வழியாகவும் தெளிவுற விளக்கிச் செல்கின்றது.
சீவகன் சமணத் தத்துவங்களை அறிய விரும்பினான். தன் விருப்பத்தை அருகன் கோவிலிலிருந்த சாரணர்களிடம் தெரிவித்தான். அச்சாரணர்களில் ஒருவரான மணிவண்ணன் என்னும் சாரணர் சமணத் தத்துவத்தைச் சீவகனுக்கு எடுத்துக் கூறுகிறார். இதில் அழகிய உருவத்தையும் தோற்றத்தையும் கொண்ட அருகப்பெருமானின் இன்னருளைப் பெற விரும்புபவர்கள் ஐந்து அத்திகாயங்களையும் ஆறு திரவியங்களையும் ஏழு தத்துவங்களையும் ஒன்பது பதார்தங்களையும் அறியவேண்டும் என்பதனை,
“மன்ற னாறு மணிமுடிமேன் மலிந்த சூளாமணி போலும்
வென்றோர் பெருமா னறவாழி வேந்தன் விரிபூந் தாமரைமேற்
சென்ற திருவா ரடியேத்தித் தெளியும் பொருள்க ளோரைந்தும்
அன்றி யாறு மொன்பானு மாகு மென்பா ரறவோரே” (2814)
என்று திருத்தக்கதேவர் எடுத்துரைக்கின்றார்.
இதில் இடம்பெறும் ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது என்பன சமணத் தத்துவங்களைக் குறிப்பதாக ஸ்ரீசந்திரன் குறிப்பிடுகிறார். இவர் ஐந்து என்பது ஐந்து அத்திகாயங்களையும், ஆறு என்பது ஆறு திரவியங்களையும் ஏழு என்பது ஏழு தத்துவங்களையும் ஒன்பது என்பது ஒன்பது பதார்த்தங்களையும் குறிக்கும் என்கிறார். ஒன்பது பதார்த்தங்கள் என்பவை உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், உற்று, செறிப்பு, உதிரிப்பு, கட்டு, வீடு ஆகியனவாகும்” (ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் கதைப்போக்கில் வினைவிளக்கம், ப,93)
ஸ்ரீசந்திரன் குறிப்பிடும் ஒன்பது பாரத்தங்களை, “சீலம், அசீலம், புண்ணியம், பாவம், ஆஸ்ரலம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என்று ஒன்பது பொருள்களாக புலவர் அரசு குறிப்பிடுகின்றார்(சிந்தாமணி வசனம், ப.,461).
அத்திகாயம் என்பது உயிரல்லது என்று பொருள்படும். இது ஐந்து வகைப்படும். அவையாவன, “புத்கலம், தர்மம், அதர்மம், ஆகாயம், காலம் என்பனவாகும்”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் கதைப்போக்கில் வினை விளக்கம், ப,93) இவ்வைந்தனையே ஐந்து அத்திகாயம் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த ஐந்து அத்திகாயங்களோடு உயிர் என்ற ஒன்று சேர்ந்ததால் அதுவே ஆறு திரவியமாகும்” (ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் கதைப்போக்கில் வினை விளக்கம், ப,93) உயிர், உயிரல்லது, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு ஆகிய ஏழும் ஏழு தத்துவமாகும் ”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் கதைப்போக்கில் வினை விளக்கம், ப,93). இவ்வேழு தத்துவங்களோடு புண்ணியம், பாவம் ஆகிய இரண்டும் சேர்ந்தால் ஒன்பது பதார்தங்களாகும் ”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் கதைப்போக்கில் வினைவிளக்கம், ப,93).
ஒன்பது பதார்தங்களில் உயிர், உயிரல்லது என்ற இருவகைப் பொருள்களால் ஆனது இவ்வுலம்.() இவ்வுலகில் உள்ள உயிர்கள் இயற்கையில் தூய்மை வாய்ந்தவை. இத்தூய்மையான உயிரில் முற்புறப்புக் கருமங்கள் சேர்ந்து விருப்பு வெறுப்புகளை ஏற்படுத்திப் பிறத்தல், இறத்தல் என்ற பிறவிச் சூழலில் உயிரைச் சுற்ற வைக்கிறது. பிறவிப்பிணியில் உழலும் உயிரைச் செறிப்பு, உதிர்ப்பு ஆகிய இரண்டும் முத்திக்கு அழைத்துச் செல்கின்றன. இச்செயலைப் பரிநிர்வாண நிலையென்று சமணம் குறிப்பிடுகின்றது. பரிநிர்வாண நிலையினை உயிர்கள் அடைய உயிரின் இயல்பையும் அவை இருவினைகளில் சிக்கி எடுக்கும் பிறப்புகளையும் அப்பிறப்புகள் இழிவானது என்பதையும் சிந்தாமணி எடுத்துரைக்கின்றது. ”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் கதைப்போக்கில் வினைவிளக்கம், ப,100)
உயிர்க்கொள்கை
சச்சந்தன் தன் மனைவியிடம் உயிர்களின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறான். நம் பிறப்புகளை எண்ணிக் கணக்கிட முயன்றால் கடலின் மணலும் ஒப்பிட முடியாததாகும்(பாடல், 270). அத்தகைய முற்பிறப்பில் எல்லாம் நாம் பிரிந்திருந்தோம். இனிவரும் பிறவிகளிலும் ஒன்றுபட்டிருப்போம் என்பதற்கில்லை. இப்போது இவ்வில்லத்தில் கூடியிருந்து வாழ்வதும், இரண்டுநாள் உறவைப் போன்றதாகும்(பா.,270). பண்டைய தீவினையை அனுபவிக்கவே இப்பிறப்புக் கிடைத்துள்ளது(பா.,269). உயிர்களின் பிப்புக் கணக்கில்லாதது. அது தான் செய்த தீவினையை அனுபவிக்கப் பலவகைப் பிறப்பை எடுக்கக்கூடியதாகும் என்பதை,
“தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடு கடன்மணலு மாற்றா
எல்லைய வவற்று ளெல்லா மேதிலம் பிறந்து நீங்கிச்
செல்லுமக் கதிக டம்முட் சேரலஞ் சேர்ந்து நின்ற
இல்லினு ளிரண்டு நாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா”(1234)
என்று திருத்தக்கதேவர் கதையினூடே தெளிவுறுத்துகிறார்.
சச்சந்தனின் இக்கூற்றிலிருந்து உயிர் பல பிறவிகளைக் கொண்டது என்றும், அப்பிறவிகளில் வாழ்க்கை நிலை ஒன்று போலவே இருக்கும் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடும் இல்லை என்றும் அஃது அவ்வப்பிறவிகளில் நாம் செய்யும் வினையைப் பொறுத்தே அமையும் என்றும் முற்பிறப்பில் உயிர்களைக் கொன்ற பாவத்தால் இப்பிறவில் இழிந்த வேடராகப் பிறப்பர் என்றும் உயிரின் தன்மையை திருத்தக்கதேவர் வாழ்வியல் உண்மைகளை விளக்கிச் செல்கிறார்.
சீவகன் முற்பிறப்பில் தாதகி என்ற நாட்டில் பவணமாதேவன் எனும் மன்னனின் மகனாக இருந்தான். அசோதரன் என்பது அப்பிறவில் அவனது பெயராகும். இவன் இனிய நரம்புகள் எழுந்த இசையும் கூத்துக்களும் செவ்வரி பரவிய கண்களையுடைய மங்கயைருடன் மகிழ்ந்திருந்தான். அவர்களுடன் நீர்விளையாட்டை நிகழ்த்துவதற்காகக் குளக்கரைக்குச் சென்றான்(2859). குளக்கரையிலிருந்த அன்னப் பார்ப்புகளைக் கண்ட பெண்கள் அவற்றில் ஒன்றைப் பிடித்துத் தருமாறு வேண்டினர். அசோதரனும் அன்னப் பார்ப்பொன்றைப் பிடித்து அவர்களுக்குக் கொடுத்தான். இதனால் மகிழ்ந்த பெண்கள் அன்னக் குஞ்சுக்குத் தம் மார்பிலே இடமளித்து அவை உண்ணப் பாலும்சோறும் பரிவுடன் தந்தனர்(2863) என்று சீவகனின் முற்பிறவியை சிந்தாமணி எடுத்துரைக்கின்றது.
வினைக்கோட்பாடு
உயிரின் ஆக்கத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக விளங்குவது வினைக்கோட்பாடாகும். இதனை நல்வினை, தீவினை என்று இருவகைகளாகப் பகுப்பர்.
கேமசரியார் இலம்பகத்ல் நல்வினைப் பற்றிய குறிப்பொன்று உள்ளது. தானம், சீலம், தவம், அறிவர் சிறப்பு ஆகிய நான்கின் வாயிலாக உயர்ந்த நிலையே நல்வினை என்று இக்குறிப்பானது தெளிவுறுத்துகின்றது. இந்தக் குறிப்பானது,
“நல்தானம் சீலம் நடுங்காத்தவம் அறிவர் சிறப்பு இந்நான்கு
மற்றாங்கு சொன்ன மனைவியர் இந்நால்வர் அவர் வயிற்றுள் தோன்றி
உற்றான் ஒருமகனே மேற்கதிக்குக் கொண்டுபோம் உரவோன் தன்னை
பெற்றார் மகப்பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிறரே கண்டீர்”(1545)
என்ற பாடலில் இடம்பெற்றுள்ளது.
நல்வினை என்பது முற்பிறப்பில் செய்த புண்ணியச் செயல்களாகும். ஒன்பது பாதர்த்தங்களில் மூன்றாவது பதார்த்தம் இதுகுறித்துப் பேசுகிறது. நல்ல செயல்கள் செய்தால் நன்மை விளையும் என்று சச்சந்தன் குறிப்பிடுகிறான். இவன் மனைவி தான் கண்ட தீக்கனவைத் தன் கணவனுக்கு எடுத்துரைரக்கின்றாள். கனவின் தன்மையைக் கேட்ட சச்சந்தன் தனக்கு நேரவிருக்கும் துன்பத்தை உணருகிறான். அவனுக்குத் தன் மனைவியையும் பிறக்கப்போகும் குழந்தையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது. சிறந்த தச்சனைக் கொண்டு மயிற்பொறி ஒன்றைச் செய்யுமாறு சச்சந்தன் கூறிகிறான்.
குறுகிய காலத்தில் தச்சனும் அழகிய மயிற்பொறியினைச் செய்து தருகின்றான். அதனைக் கண்ட சச்சந்தன் நான் செய்த நல்வினையின் பயனால் இம்மயில்பொறி கிடைத்துள்ளது என்று மகிழ்ந்தான் என்பதை,
“உரிமைமுன் போக்கி யல்லாளொளியுடை மன்னர் போகார்
கருமமீ தெனக்கு மூர்தி சமைந்தது கவல வேண்டா
புரிநரம் பிரங்கூஞ் சொல்லாய் போவதே பொருண்மற் றென்றான்
எரிமுயங் கிலங்கு வாட்கை யேற்றிளஞ் சிங்க மன்னான்”(272)
என்ற பாடலில் சிந்தாமணி எடுத்துரைக்கின்றது.
விசயை சீவகனைச் சுடுகாட்டில் பெற்றெடுக்கிறாள்.. இந்தக் குழந்தையை வளர்க்கக் கந்துக்கடன் எனும் வணிகன் வருவான். ஆகையால் இங்கேயே குழந்தையை விட்டுவிடு என்று விசயையின் தோழி கூற தன் மகனைச் சுடுகாட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள். அப்போது,”உன்னைப் பெற நல்வினை செய்திருந்தும் வளர்க்கும் நல்வினையைப் பெறவில்லையே” என்று கூறுகிறாள்(319). இவ்வாறு சிந்தாமணிக் காப்பியம் நல்வினை பற்றி எடுத்துரைத்து, அந்நல்வினை செய்தவர்களுக்கு இப்பிறவில் நல்லதே நடக்கும் என்றும் அது கடல் ஆழத்தில் வீழ்ந்து அழுந்தியவரையும் உயிர்பிழைக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தது(510) என்று அதன் தன்மையையும் எடுத்துரைக்கின்றது.
தீவினை
பிற உயிர்களுக்குக் கேடு செய்வதால் உண்டாகும் வினை தீவினை. நண்பரை வஞ்சித்தவரும், பிறர் மனைவியின் இன்பத்தை நாடியவரும் மிக்க அழல் போலும் காமத்தீ மிகுந்து கன்னியைக் கெடுத்துப் பின் மணம் செய்து கொள்ளாது விட்டவரும் உயிரைக் கொன்று உடலைத் தின்றவரும் தீவினை செய்தவர்களாகக் கருதப்படுவர்(255,256). முற்பிறப்பில் தீவினை செய்திருந்தால் இப்பிறப்பில் அத்தீவினை வந்து வருத்தும். முற்பிறவியில் தீய செயல்கள் செய்தவர்களை இப்பிறவியில், “தெளிந்த நல்ல நீரும் உயிரைப் போக்கி விடும்(510) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.
வணிகரான ‘சீதத்தன்’ வாணிகத்தின் பொருட்டுக் கப்பலில் செல்கிறான். கப்பல் கடல் கொந்தளிப்பாலும், புயல் காற்றாலும் கடலில் மூழ்குகிறது. அதில் வணிகன் சிக்கிக் கடலில் தத்தளிக்கின்றான். அப்போது தான்படும் இத்துன்பத்திற்கு முற்பிறவியில் தான் செய்த துன்பமே காரணம் என்று புலம்புகிறான்((511). தீவினை மறுபிறப்பிலும் உடன் வந்து ஒருவரைத் துன்புறுத்தும் என்பதை சிந்தாமணியில் இடம்பெறும் இக்காட்சி தெளிவுறுத்துகிறது.
சீவகன் முற்பிறப்பில் அசோதரன் என்ற இளவரசனாகப் பிறந்தான். இவ்தந்தை தாதகி நாட்டின் மன்னனான பவணமாதேவன். அவசோதரன் தம் உரிமை மகளிர் வேண்டுகோளின்படி தாமரைக் குளத்தில் வாழ்ந்த அன்னப் பார்ப்பொன்றை அதன் சுற்றத்திடமிருந்து பிரிதிதான். இதைப் பவணமாதேவன் கண்ணுற்றான். தன்னுடைய மகனுடைய கொடுஞ்செயலைக் கண்டு அவனைக் கடிந்து கொண்டான். அதன் பின்னர் தனது மகனுக்கு இவ்வுலகில் ஏற்படும் தீவினைகள் பற்றி விளக்குகின்றான்(2867).
உயிர்க்கொலை செய்யாமலிருத்தல் அறங்களில் மிகப்பெரிய அறமாகும். பொய்யுரையாமல் வாழ்ந்தால் இவ்வுலகத்தில் புகழ் நிலைபெறும். மேலுலகில் இறைக்கோயிலும் கிடைக்கும். ஆகையால் உயிர்க்கொலையையும் பொய்யுரையையும் நீக்குக என்று தன் மகனுக்கு பவணமாதேவன் அறிவுறுத்தினான்(2869).
இனி இவ்வுலகில் களவு செய்தவர்களை யானையின் கூரிய மருப்புகளைக் கொண்டு அக்கள்வர்களின் நெஞ்சை மன்னர்கள் பிளப்பர். மறுமையில் அக்களவு செய்தவர்களை நரகில் தள்ளிக் கொடுமையான துன்பங்களுக்கு எமன் உள்ளாக்குவான். ஆகையால் களவை கைவிடுதல் வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றான்(2870).
தம் மனைவியல் மனம் வருந்தப் பிறனில் விழையும் ஆடவரைத் தாங்கற்கரிய துன்பத்தைத் தந்து அறக்கடவுள் வருத்தும். ஆகையால் காமத்தைக் கைவிடுதல் வேண்டும் என்றும் அறிவுரைகூறுகின்றான்(2871).
தீய வழியில் ஈட்டும் பொருள் நல்ல பொருளன்று. ஆகையால் நன்னெறியில் நின்று பொருள் ஈட்ட வேண்டும். அப்பொருள் இம்மையில் புகழையும் மறுமையில் சொர்க்கத்தையும் விளைவிக்கும்(2872). பரத்தமை, காமம் மாலையும் சாந்தும் பினைதல் பிச்சை ஏற்றல், கிளி அன்னம் முதலியவற்றை அவற்றின் இனத்திலிருந்து பிரித்துக் கூண்டில் அடைத்து வைத்தல் ஆகியவை தீய செயல்களாகும்(2873-2875). இத்தீவினைகள் இவ்வுடலிலிருந்து உயிர் பிரிந்த போதும் அவ்வுயிரை விடாது துரத்திச் சென்று அது புகும் உடலில் தானும் புகுந்து துன்பத்தைத் தரும்(2876).
நல்வினை செய்தோர் நல்வினைகள் பறவையும் நிழலும் போன்று உடன் வந்து நினைத்ததைப் பெறும் வல்லமையை உண்டாக்கும். ஆகையால் தீவினையைக் கைவிட்டு நல்வினையைக் கைக்கொள்க என்று அறிவுறுத்தினான்.(2877).
மன்னனின் இவ்வறிவுரையைக் கேட்ட அசோதரன் அழுது கண்ணீர் சிந்தித் தாம் செய்த தீவினைகள் அனைத்தையும் களைவதற்காகத் தவ வாழ்க்கையை மேற்கொண்டான். இங்ஙனம் அசோதரனாக இருந்த நீ சிறந்த தவத்தை மேற்கொண்டு சாசாரன் என்னும் இந்திரனாகிச் சிறந்த இன்பமுடைய அழகிய வானுலகத்தை ஆண்டு அவ்வானுலகில் இருந்த மங்கையருடன் மண்ணுலகில் சீவனாகப் பிறந்தாய். அன்னப்பார்ப்பை அதன் சுற்றத்திடம் இருந்து பிரித்ததற்காக நீயும் இப்பிறப்பில் உன் சுற்றத்தாரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தாய் என்று சீவகனின் முற்பிறவி வாழ்க்கையை சாரணர் கூறினர்(2878-2889). இத்தன்மை வாய்ந்த நல்வினையின் பயனாகவோ அல்லது தீவினையின் பயனாகவோ பிறப்பு ஏற்படுகிறது. அப்பிறப்பு நரககதி, விலங்குகதி, மக்கள் கதி, தேவகதி என்னும் நாற்கதிகளைத் தரக்கூடியது.(தொடரும்—5)
- ஆண்களைப் பற்றி
- தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5
- உள்ளிருக்கும் வெளியில்
- காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்
- நீ இல்லாத வீடு
- மே-09. அட்சய திருதியை தினம்
- ஒன்றும் தெரியாது
- கவிதை
- அவளின் தரிசனம்
- தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்