முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com
ஞானம் என்பது அறிவு என்பதாகும். கற்றலால் பெறும் அறிவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஐம்புலன்களையும் அடக்கி இறைவனைக் குறித்த சிந்தனையுடன் தவமியற்றி இறைவனது அருளால் மெய்யறிவு பெறுதலையே ஞானம் பெறுதல் என்று சமய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதனைத் தன்னை உணர்தல் என்றும் வழங்குவர். தவமிருந்தால் மட்டுமே ஞானத்தைப் பெற முடியும்.
தவத்தின்போது கடுமையான சோதனைகள் பல ஏற்படும். அவற்றில் மனதை ஈடுபடுத்தாது மனதை ஒருநிலைப்படுத்தி சோதனைகளை வெற்றி கொண்டால் ஞானத்தைப் பெற்றுய்யலாம். ஞானம் பெறும் வழிகளை சிந்தாமணிக் காப்பியம் கதை நிகழ்ச்சிகள் வழி எடுத்துரைக்கின்றது.
சீவகனின் ஞானம் பெறும் முயற்சி
சீவகன் தவமிருக்கின்றான். அவனுக்குப் பல்வேறு சோதனைகள் ஏற்படுகின்றன. அவன் செய்யும் தவ வேள்வி என்னும் நற்செயலுக்கும் அதை அடைய முடியாமல் தடுத்து அழிக்கின்ற தீய உணர்விற்கும் இடையே கடும்போர் நடந்தது. மெய்ஞ்ஞானம், உயிர் நற்சிந்தனை, இறையருள், நல்லொழுக்கம், அறவுரைகள் ஆகியவற்றைக் கொண்டு இருவினையை அழிப்பதற்குச் சீவகன் முயன்றான்(3074).
சீவகனின் இம்முயற்சியை எதிர்த்து உறக்கம், பசி, மறதி, நோய், தீய சிந்தனை ஆகியவை தடுத்தன(3075). சீவகன் இத்தீவினைகளைத் தம் கடுந்தவத்தால் வென்றான். மாயை, லோபம், முதலான ஏழுவகைகளும், விலங்கு கதி, நரக கதி, மனித கதி, தேவ கதி ஆகிய நால்வகைக் கதிகளால் உண்டாகும் பதினாறு வகைத் துன்பங்களும் மானம், குரோதம் முதலிய எட்டுவகைத் துன்பங்களும், நவுஞ்சக வேதம், ஸ்ரீவேதம் குறிப்பிடும் வேண்டுதல், வெறுத்தல், அஞ்சுதல், அசைதல், வருந்துதல், மகிழ்தல் என்னும் அறுவகைச் சுவைகளும் தவத்தால் கிடைத்த தூயசிந்தனையால் அழிந்தன((3076).
பற்றின்மை நெறி
சீவகன் முத்தியைத் தடுக்கும் அனைத்துத் துன்பங்களும் அழிய எஞ்சிய மோக வேட்கை என்னும் வலிமையான உணர்வை, யாக்கை நிலையாமை எனும் அரிய தத்துவத்தை மனதில் நிறுத்தி அழித்தான். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களால் உண்டாகும் கேடுகளையும் அழியுமாறு செய்தான்((3077-3079). இதனால் குரோதம், மானம், மாயை, லோபம் ஆகிய நான்கு துன்பங்களும் சீவகனைத் துன்புறுத்தின.
இத்துன்பங்களை சீவகன் மனத்தடுமாற்றமின்றி, உறுதியைக் கைக்கொண்டு வென்றான். நித்திரை, அரைத்தூக்கம் என்ற துன்பங்களைப் பற்றின்மை என்னும் நெறியைக் கையாண்டு வென்றான்((3080) என்று துன்பங்களை வெல்வதற்கு பற்றின்மை நெறியைக் கைக்கொள்ளுதல் வேண்டும் என்று சிந்தாமணி எடுத்தியம்புகிறது.
தீய சக்திகளை அழித்தல்
உணர்வு, காட்சி, பேறு என்பவை தீய சக்திகளாகும். இவை உயிரை அழிக்கக் கூடியன. இவற்றை சுக்கிலத்தியானம் என்ற முறையால் சீவகன் அழித்தான். காதி, காமம் ஆகிய துன்பங்கள் அழிய அருகன் ஆகமத்தில் கூறிய அருள்நெறியின் வழி நின்று அவற்றை அழித்து மூவுலகையும் வென்று முதலும் முடிவுமில்லாத கேவலஞானம் என்னும் இறையிலையைச் சீவகன் அடைந்தான்(3081-3082).
சீவகன் இறைநிலையை அடைத்ததைக் கண்ட தேவர்கள் சங்கு, முரசு ஆகியவற்றை முழக்கி அவனது திருவடிகளைக் கோவிலாகக் கண்டு வணங்கினர்(3083). இவ்வுலகில் உள்ள இந்திரன் முதலிய தேவர்களும் வணங்கினர். சுதஞ்சணன் உடம்பெலல்லாம் கண்ணாகக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடினான்(3085). ஒளிவீசும் மாணிக்க மாலையின் ஒளியில் மங்கி வயிரமும் முத்துக்கோவையும் கொண்ட இவ்வுலகைக் காத்தளிக்கும் குடை விரிந்தது. மிகப் பேரொளியோடு வெண்சாமரம் வீசப் பொன்னாசனம் வந்து சேர்ந்தது(3086).
சிக்கிலத்தியானத்தால் காதி கர்ம வினைகள் நான்கையும் வென்ன கடையில்லா ஞானம், காட்சி வீரியம், இன்பம் ஆகியவற்றைப் பெற்று முக்காலத்தையும் உணர்ந்த கடவுள் என்று தேவர்கள் சீவகனை வாழ்த்தி வணங்கினர். நிறைந்த இருளைப் போக்கும் பரமாகம நெறியை எமக்குக் கூறியருளுக என்று அவனிடம் வேண்டினர்(3087-3090).
சீவகனும் இன்பமாகிய பெரிய பசு, மக்கள், தேவர், நரகர், விலங்கு ஆகிய நான்கு கதிளாகிய தொழுவிலே தோன்றி வேட்கையென்னும் புல்லைத் தின்று துன்பமாகியப் பாலைச் சுரக்கும். ஆகவே அவ்வின்பத்தின் மேல் வைத்த பற்றையும் ஆர்வத்தையும் நீக்கித் தூயவன் திருவடிகளை நினைத்து வீட்டுலக இன்பத்திற்கு விலையாக அன்பைக் கொடுத்து, வீடுபேற்றை அடையலாம்(3105). அவ்வாறன்றி ஆசையை மிகுதியாக வளர்த்துக் கொண்டு வாளைக் கையிலேந்திய இளைஞர்களையும், அழகிய பெண்களாகவும் பிறக்கும பிறவிப்பிணியைப் பெருக்கி விடாமல் தேளைக் கையிலே பிடித்திருக்கும் தன்மை போன்ற நோயும் சினமும் கொண்ட பிறவித்துயரை வெறுப்பவர்கள் அருகப்பெருமானுடைய திருவடியை வணங்குக என்று சீவகன் கூறினான்(3106).
சீவகன் அறவுரை வழங்குதல்
கடவுள் தன்மையை அடைந்த சீவகன் தன்னை வேண்டிய தேவர்களுக்கு நல்லறவுரைகளையும் வழங்கினான். தன் உயிரைப போலப் பிற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி நாள்தோறும் காத்து வாழ்ந்தால் உயர்குலத்துத் தலைவனாக அழகிய உருவம் உடையவனாய், புகழுயிர் உடையவனாக உயர்ந்து போவான்(3107) என்று எடுத்துரைத்தான்.
மேலும் வீடுபெற்ற உயிரும், பொன்னைப் போன்ற வானவர் உயிரும் வெள்ளியைப் போன்ற மக்கள் உயிரும் செம்பைப் போன்ற விலங்கின் உயிரும் இரும்பைப் போன்ற நரகர் உயிரைப் பற்றிக் கூறினேன். இவற்றில் எதைப் பெறவேண்டும என்று விரும்புகிறீர்களோ அவற்றைத் துணிந்து தேர்ந்தெடுத்துக் கொள்க என்று கூறினான்(3111). இதைக் கேட்ட தேவர்கள் அனைவரும் வணங்கிப் பணிந்தனர்.
ஞானத்தின் இரு வகைகள்
ஞானம் கேவல ஞானம், சுருத ஞானம் என்று இருவகைப்படும். இவற்றை அடைந்தால் மட்டுமே வீடுபேற்றினை அடைய இயலும். சீவன் தனது ஆயுள் கர்மம் கெட கீழ்த்திசையில் தோன்றிய எழு ஞாயிறு பெரும் நெருப்பிலே மூழ்கியதைப் போன்று பரவி எழும் செந்தீச்சுடர்கள் உடலை விழுங்கியது(3116). வானவரும் மன்னவரும் பரிநிர்வாணம் என்ற திருமணத்தை வணங்கிச் சென்ற3118). சீவகன் தவ வாழ்க்கையை மேற்கொண்டு பரிநிர்வாணம் அடைந்து கேவலஞானம், சுருத ஞானம் என்ற இரண்டையும் அடைந்தான்.
மேலும் எஞ்சிய மண் வாழ்க்கை முடிய சீவகன் வீட்டுலகம் அடைந்ததை திருத்தக்கதேவர் கூறுவதிலிருந்து முத்தியின் திறத்தைத் திருத்தக்கதேவர் தெளிவுறுத்துகின்றார்.
சீவகனின் மனைவியர் இந்திரலோகம் ஆளல்
சீவகன் மனைவியர் மிகப்பெரிய தவத்தைச் செய்ய விழைந்தனர். தம் உடலில் தூசு படிய இரங்கத்தக்க பெண் பிறப்புக் கெடுமாறு தியானத்தில் ஈடுபட்டனர்(3120). ஆசையையும் பற்றையும் விட்டொழித்த இவர்களின் தவப்புகழ் விண்ணுலகம் வரை சென்றது. அதனால் இழிந்த பெண் பிறவி ஒழிந்து இந்திரப் பதவி ஏற்றனர்(3121). பொற்கொம்பு போன்ற தேவ மகளிர் போக இன்பத்தைப் பெற்றனர்(3122).
இந்திரன் உடல் பெற்ற சீவகன் தேவியர் தேவமகளிருடைய பாதங்களைத் தன் தலைமேல் ஏற்று அவர்களின் ஊடலைப் போக்கினர்(3124). இங்ஙனம் மண்ணுலகில் சீவகனின் மனைவியராகப் பிறந்து தவம் ஏற்றுப் பின்னர் இந்தரராய்ப் பிறந்து இந்திரலோகம் ஆண்டு தேவமகளிரோடு இன்பம் துய்த்து மகிழ்ந்திருந்தனர்(3125-3131).
ஞானமடைந்தவர்கள்
நந்தட்டன் முதலிய சீவகனின் நண்பர்களும் ஐம்பொறிகளை அடக்கி ஆளும் வலிமை பெற்றனர்(3132). பின்னர் தவ நூல் கூறும் நெறிமுறைகளைப் பின்பற்றி உண்ணாநோன்பு இருந்து பாவ வினைகளைப் போக்கிக் கொள்ள இறைவனை வணங்கினர்(3133). உணவை வெறுத்தனர். வானுயர உயர்ந்த குன்றின் மேலிருந்து மற்ற தவங்களையும் செய்து முடித்து, மனித உடல் நீத்து, தேவ உடம்பைப் பெற்றனர். பின்னர் இதுவரை தாம் ஒழித்திருந்த ஐம்புல ஆசைகளையும் தேவமகளிரோடு கொண்ட காதலில் பயன்படுத்தி இன்பக்கடலில் அமிழ்ந்தனர் என்று(3135) சிந்தாமணி எடுத்துரைக்கின்றது.
சமண சமயம் குறிப்பிடும் நான்கு தவ வாழ்க்கையில் அச்சணந்தியும் சீவகனும் மட்டுமே ஞானப்பேறாகிய வீடுபேற்றை அடைகின்றனர். இவ்விருவரும் பெரும் மன்னர்களாக வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் நல்வினையை மேற்கொள்வதால் அல்லது ஐம்பத மந்திரங்களை ஓதுவதால் இந்திர வாழ்க்கை கிடைக்கிறது. இந்திரலோகத்தில் ஐம்புல இன்பங்களை நுகர்ந்து இறுதியில் மண்ணுலகில் பேரரசர்களாகப் பிறந்து அருகனின் வீடுபேற்றில் மனம் வைத்தால் கிடைக்கும் பதவி வீடுபேறு என்னும் பெரும் பதவியாகும் என்றும் அச்சணந்தியும் சீவகனும் அப்பேறு அடைந்தனர் என்றும் சிந்தாமணி குறிப்பிடுகின்றது.
அசோதரன், விசயை, சுநந்தை, சீவகன் மனைவியர், நண்பர்கள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட பேரரசர் என்ற தகுதியைப் பெறாதவர்கள். இதில் அசோதரன் இளவரசனாகப் பிறந்து பேரரசனாக நாட்டை ஆட்சிபுரியவில்லை. நாட்டை ஆண்டு பின்னர் ஞானத்திற்குரிய தவத்தை மேற்கொள்ளலாம் என்று அசோதரன் தந்தை பவணமாதேவன் குறிப்பிடுவதையும் கேட்கவில்லை. அதோடு அன்னப்பார்ப்பை அதன் சுற்றத்திடமிருந்து பிரித்துப் பெரும்பாவத்தைச் செய்ததால் இந்திரனாய்ப் பிறந்து இன்பம் நுகர்ந்து சீவகனாகப் பிறந்து ஞானம் பெறுகிறான்.
விசயை, சுநந்தை, சீவகன் மனைவியர் ஆகியோர் பெண்களாவர். அதனால் தவ வாழ்க்கையின் பயனாக நேரடியாக ஞானம் பெற முடியவில்லை. சீவகன் நண்பர்களும் அரிய தவத்தின் விளைவாகப் பேரரசர்களாக இல்லாத காரணத்தால் வீடுபேறு அடையமுடியவில்லை. அதனால் இவர்கள் அனைவரும் இந்திரர்களாகப் பிறந்து தேவ மகளிர் தரும் இன்பங்களில் மகிழ்ந்து வாழ்கின்றனர் என்று ஞானம் பற்றிய செய்திகளையும் தவ வாழ்க்கையின் பயன்களையும் சிந்தாமணி தெளிவுபடுத்துகின்றது.
சமண சமயத்தின் உயர்ந்த நிலையான ஞானம் பெறும் வழிமுறைகளையும் தவ வாழ்க்கையின் சிறப்புகளையும் சிந்தாமணி சீவகனின் வாழ்க்கையை வைத்துத் திருத்தக்கதேவர் விளக்கிச் செல்வதும், பெண்கள் வீடுபேறடைய முடியாது என்ற சமணசமய உண்மையையும் கதையோட்டத்தினூடே தெளிவுறுத்துவதும் நோக்கத்தக்கதாகும். (தொடரும்—–9)
- `ஓரியன்’
- சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்
- அணுசக்தியே இனி ஆதார சக்தி
- அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை
- துரும்பு
- கோடைமழைக்காலம்
- ரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வை
- தொடுவானம் 123.கைவிடப்பட்ட திராவிட நாடு
- ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு மர்மங்கள் : வால்மீன்கள் முறிவது எப்படி, இணைவது எப்படி ?
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் கணித முறைப்பாடுகள் -9
- Original novel
- காப்பியக் காட்சிகள் 8.ஞானம்
- வலைஞர்கள் வாசகர்கள் கலந்துரையாடல்
- புகைப்படமாய் உருமாறும் புனைவு – [ ”வளவ. துரையன் சிறுகதைகள்” முழுத்தொகுப்பை முன்வைத்து ]
- எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2