புதிய பயணம் – லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ –

This entry is part 17 of 21 in the series 10 ஜூலை 2016

 

 

நீர்க்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து அறிதலின் தீ என்னும் தலைப்பில் லாவண்யா சுந்தரராஜனின் மூன்றாவது தொகுதி வெளிவந்திருக்கிறது. நான் கவனித்த வகையில் தொடர்ச்சியாக சீராகவும் சிறப்பாகவும் எழுதி வரும் கவிஞர்களில் ஒருவர் லாவண்யா சுந்தரராஜன். முந்தைய தொகுதிகளில் காணப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதிய திசையில் புதிய வடிவத்தோடு பயணம் செய்பவையாக காணப்படுகின்றன இக்கவிதைகள். கவிதை முயற்சியில் லாவண்யாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையே இது சுட்டிக்காட்டுகிறது.

தொகுப்பின் முக்கியமான கவிதைகளில் ஒன்று நீர்ப்பாறை.  நீர்ப்பாறை என்னும் சொல்லிணைவில் வசீகரம் நிறைந்திருக்கிறது.  நீரில் இருக்கும் பாறையா அல்லது நீராக இருக்கும் பாறையா என்றொரு பொருள்மயக்கம் அச்சொல்லை மனசுக்கு நெருக்கமுள்ளதாக மாற்றுகிறது.

ஆதியில் அவள் பாறையென்றிருந்தாள்

நீலக்கடல் அலைந்து அலைந்து நித்தம் அவளை

கெஞ்சிகொண்டிருந்தது

சிறிதும் இரக்கமில்லை கடல்மீது

பெருமிதம் கொண்டிருந்தாள்

கவலையற்ற கடல்

மெல்ல தின்னத் தொடங்கியது பாறையை

மேனி மெலிந்தாள்

கரடுமுரடுகள் குறைந்தன

கொடியிடையாள்

கடலாலே அழகியானோம்

என்றே மகிழ்ந்திருந்தாள்

மெல்ல

கூழாங்கல்லாகி

தன்னைத் தொலைத்திருந்தாள்

கடலடியில்

ஒரு பெண்ணின் மொத்த வாழ்நாள் அனுபவத்தையும் பாறை தேய்ந்து கூழாங்கல்லாகும் உருமாற்றத்துடன் இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது கவிதை. தன்னைச் சுற்றி நிகழ்வன அனைத்தும் நன்மைக்கே என்ற எண்ணத்தில் மகிழ்ந்திருக்கும் பாறை என்றோ ஒருநாள் தான் ஒரு கூழாங்கல்லாக சிறுத்துப் போயிருப்பதை அறிந்துகொள்கிறது. அறிந்துகொள்ளும் அனுபவமே அறிதலின் தீ.

வெறுமனே நோக்குதல் என்னும் கவிதையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சி கவித்துவம் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு யானையும் ஒரு நாரையும் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இக்காட்சிச்சித்திரத்தைப் படித்ததுமே, அக்காட்சி மனத்தை நிறைத்துவிடுகிறது. மிகக்குறைந்த வண்ணக்கலவையால் தீட்டப்பட்ட மிகச்சிறந்த ஓவியமெனத் தோற்றமளிக்கிறது கவிதை. ’பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்’ என்று சுட்டிய சத்திமுத்தப் புலவரைப்போல அகப்பைவாய் நாரை என்று குறிப்பிடுகிறார் லாவண்யா சுந்தரராஜன்.

சிறுகுன்றை எப்போதும்

சுமந்து திரியும்

கருஎருது எச்சிலொழுக

அமர்ந்திருந்தது யானையென

அகப்பை வாயைக்

கொண்ட நாரை

குச்சிக்காலால் தவம் செய்து

நெருங்கிவிட முயன்றாலும்

 

தன் முன்னிருக்கும்

சிறு உருவைப்பற்றி

எந்தவித சலனமுமற்றிருக்கும்

பிரம்மாண்டத்தை ஏறிட்டுப்

பார்ப்பதைத் தவிர

வேறென்ன செய்யமுடியும்

அச்சிறு நாரையால்

முதுகுத்திமிலுடன் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறது ஓர் எருது. அதன் அருகில் நெருங்கிச் சென்று அண்ணாந்து பார்க்கிறது ஒரு நாரை. நாரையின் இருப்பை எருது உணர்ந்துகொண்டதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எருதுவிடம் நாரை என்ன எதிர்பார்க்கிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் எருதுவின் இருப்பைக் கண்டதும் நாரையின் உள்ளத்தில் ஏதோ ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி பொங்குகிறது. எருதுவின் தோற்றத்தை ஒரு விஸ்வரூபமாக உணரும் நாரை, அதை ஏறிட்டுப் பார்ப்பதன் வழியாகவே தன் மனத்தை மகிழ்ச்சியால் நிரப்பிக்கொள்ள முயற்சி செய்கிறது.

ஒரு வெட்டவெளி. வெட்டவெளியில் தன் மகிழ்ச்சியைக் கண்டடைந்து திளைக்கும் எருது, எருதுவின் இருப்பில் தன் மகிழ்ச்சியைக் கண்டடையும் நாரை என மூன்று புள்ளிகள் நமக்கு இக்கவிதை வழியாகக் கிடைக்கின்றன. மகிழ்ச்சியின் பாதையென இப்புள்ளிகள் வழியாக நம்மால் ஒரு கோட்டை இழுத்துக்கொள்ள முடியும். நாரையைப் பார்த்து மகிழக்கூடிய இன்னொரு உயிர், அதைப் பார்த்து மகிழக்கூடிய மற்றொரு உயிர் என நம் கற்பனையில் அந்தக் கோட்டை இன்னும் நீட்டித்துக்கொண்டே செல்லலாம். அதற்கான சாத்தியங்களோடு உள்ளது கவிதை. எனினும் கவிதையின் இறுதியில் லாவண்யா கொடுத்திருக்கும் சமர்ப்பணக்குறிப்பு, கவிதையின் விரிவைத் தடுத்துவிடுவதுபோல உள்ளது.

மெளன ஊற்று என்னும் கவிதையில் வசீகரமான ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மெளனத்தை ஊற்று நீராக்கி

நிறைத்திருந்த கிணறு

விடாது பொழியும் நிலவை

சலசலத்து பிரதிபலிக்கிறது

கழுத்திறுகப் பிணைக்கப்பட்டிருந்த

காயம் பட்ட குடம்

தன் விருப்பத்தோடோ இல்லாமலோ

முகர்ந்தெடுத்த நீரில்

கூட வந்த துளி நிலவைச்

சலனமின்றி எடுத்துச் சென்றது.

ஒரே கணத்தில் மூன்று இடங்களில் தெரியும் நிலவின் இருப்பைக் கண்டடையும் மகிழ்ச்சி இந்தக் கவிதையில் பொங்கி வழிகிறது. வானத்தில் ஒரு நிலா. கிணற்றுக்குள் ஒரு நிலா. குடத்துக்குள் ஒரு நிலா. குடத்திலிருக்கும் தண்ணீரை கைநிறைய அள்ளியெடுத்தால், அதிலும் ஒரு நிலா தெரியக்கூடும். அந்த நிலாவைக் குனிந்து பார்க்கும் கண்களிலும் ஒரு நிலா தெரியக்கூடும். நிலா எங்கெங்கும் நீக்கமற நிறைந்துவிடுகிறது.

ஒரு புனைகதையின் அழகோடு உள்ள சிறுமி வளர்க்கும் வெயில் கவிதை லாவண்யா சுந்தரராஜனுக்குப் பெருமை சேர்க்கும் கவிதை. ஒருவேளை, எதிர்காலத்தில் அவர் இக்கவிதையின் வழியாகவே நினைக்கப்படவும் கூடும். கவிதையில் ஒரு சிறுமி இடம் பெற்றிருக்கிறாள். வீட்டுக்குள்ளேயே விளையாடி மகிழ்கிறவள் அவள். ஒருநாள் ஜன்னலோரமாக விளையாடிக்கொண்டிருக்கும்போது அங்கே வெயில் வந்து படர்கிறது. அதன் வசீகரத்தில் மனம் பறிகொடுத்துவிடுகிறாள் சிறுமி. அகல்விளக்கை இரு கைகளுக்கு இடையில் வைத்து காற்றில் சுடர் அணைந்துவிடாமல் எச்சரிக்கையுணர்வோடு எடுத்துச் செல்வதுபோல வெயிலை கைக்குள் மறைத்துப் பொத்தி எடுத்துக்கொள்கிறாள் சிறுமி. ஏதாவது ஒரு இடத்தில் அதை வைத்து பாதுகாக்கவேண்டுமே என மறைவிடம் தேடி வீடு முழுதும் சுற்றிச்சுற்றி வருகிறாள். அவள் கைக்குள் மறைந்திருந்தாலும் விரலிடுக்கின் வழியாக கசியும் வெளிச்சத்தால் அந்த வீடே ஒளி பொருந்தியதாக மாறுகிறது. பொம்மைக்குள் ஒளித்துவைக்கலாமா, புத்தகப்பைக்குள் ஒளித்துவைக்கலாமா என ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து, அடுத்த கணமே அது பொருத்தமல்ல எனத் தவிர்த்துவிடுகிறாள். ஆடைகள் வைக்குமிடம், அலங்காரப்பொருட்கள் இருக்குமிடம், குளியலறை என எந்த இடமுமே அவளுக்குப் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. கடைசியில் ஒரு வழியாக அடுக்களை அடுப்புக்குள் கொண்டு சென்று வைக்கிறாள். ஜன்னலில் தொடங்கும் கவிதை அடுக்களையில் வந்து முடிகிறது. அடுக்களையை பாதுகாப்பான ஒன்றாகத் தேர்ந்தெடுத்த  சிறுமியின் செய்கைக்குப் பின்னணியாக இருந்த விசை என்ன என்பது புரியாத புதிர். தன்னைப்போலவே வெயிலுக்கும் அதுவே பாதுகாப்பான இடமென அவள் ஏன் தேர்ந்தெடுத்தாள் என்பது அடுத்த புதிர்.

முதுகுப்பாரம் என்னும்  இன்னொரு கவிதையிலும் அடுக்களை இடம்பெறுகிறது.

சொந்த அடுக்களையற்றவள்

முதுகில் அடுப்பைக் கட்டிக்கொண்டு

பாதையற்று அலைகிறாள்

காலம்காலமாய்

அடுப்பின் பாரத்திலிருந்து பெண்ணை விடுவிப்பது என்பதே இச்சமூகத்தின் மிகப்பெரிய சவால். பாதை என ஒன்று இருந்தாலாவது அல்லது தெரிந்தாலாவது அந்த இடத்துக்குச் சென்று அங்கே அவள் அந்தப் பாரத்தை இறக்கிவைத்துவிடலாம். செல்லும் திசை எது என்னும் தெளிவற்ற நிலையில் அவள் காலம்காலமாக அலைந்துகொண்டே இருக்கிறாள்.

துடைப்போவியம், மலைப்பெண் ஆகிய இரண்டு கவிதைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப்போல வெளிப்பட்டுள்ளன. ஒரு கவிதையில் கார் கண்ணாடியில் படிந்த பனிப்புகையை விரலால் தொட்டுக் கிறுக்கிய வரிகளின் தொகுப்பை தள்ளி நின்று உற்றுப் பார்க்கும்போது அணில், பூனை, யானை, முயல் என ஒவ்வொரு உருவமாக நினைவூட்டியபடியே வந்து இறுதியில் ‘அத்தனை உருவங்களும் என்னைப் போலவோ என் கவிதைகளைப்போலவோ அவ்வப்போது அர்த்தமும் அநர்த்தமும் கொண்டதாயிருக்கின்றன’ என்ற எண்ணத்துடன் முற்றுப் பெறுகிறது. இரண்டாவது கவிதையில் தொலைவில் தெரியும் ஒரு மலைத்தொடரை விலகி நின்று பார்க்கப்பார்க்க சிங்கம், முயல், மான்கொம்பு, சுயம்புலிங்கம், சயனப்பெருமாள் என பற்பல உருவங்களை நீனைவூட்டியபடியே வந்து இறுதியில் அந்தி கவியும் தருணத்தில் அனைத்துமே ஒரு பெண்ணாகத் தெரிகிறது. இரவு கவியக்கவிய அந்தக் கற்பனைப்பெண்  புரண்டு படுக்கும் ஓசை கூட கேட்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கற்பனையின் ஊடாக நம்மால் செல்லமுடிந்த தொலைவின் சித்திரமாகவும் சாட்சியாகவும் இக்கவிதைகள் உள்ளன.

சற்றே தேவதச்சனின் சாயலைக் கொண்டதாக இருந்தாலும் சலனம் கவிதை இத்தொகுப்புக்கு ஓர் அழகைச் சேர்க்கிறது.

விட்டுவிட்டு

சொட்டிக்கொண்டிருந்த குழாயை

இறுக மூடியபின்னர்

நின்று போயின

நீர்த்துளிகள்

என்னவோ செய்கிறது

சொட்டாத குழாயின் நிசப்தம்

இந்தக் கவிதையின் திசைக்கு எதிர்த்திசையை தன் இயங்குதளமாகக் கொண்ட கவிதை உறங்காத வீடு. இங்கு இடைவிடாமல் ஒலித்தபடியே இருக்கும் சப்தங்கள் என்னவோ செய்கின்றன. ஒரு வீட்டுக்குள் மின்விசிறியில் சத்தம் கேட்கிறது. குளிரூட்டியின் இரைச்சல் கேட்கிறது. இன்னும் ஏதேதோ சத்தங்கள் கேட்கின்றன. எல்லாச் சத்தங்களையும் கேட்டபடி வீட்டுக்குள் உலவும் மனிதர்கள் சத்தம் போடுவதே இல்லை. அவர்களிடையே பேச்சே இல்லை. பேச்சே இல்லை என்பதால் அவர்களுடைய இருப்புக்கும் இன்மைக்கும் இடையில் வேறுபாடே இல்லாமல் போகிறது. உறங்காத வீடாக உறைந்துபோகிறது. இறுதியில் வீடு என்றால் என்ன என்கிற கேள்வி மட்டுமே எஞ்சி நிற்கிறது. வீடு என்பது மேசை, நாற்காலி, மின்விசிறி, குளிரூட்டி என அடுக்கிவைக்கப்படும் பொருட்களுக்கான இடமல்ல. அது உயிருள்ள மனிதர்களுக்கான இடம். ஒருவரை ஒருவர் தம் அன்பால் நிறைத்துக்கொள்பவர்களே மனிதர்கள். வீடு அப்படிப்பட்டவர்களால் மட்டுமே பொலிவுறுகிறது. அத்தகு வீடு உறங்கும்போதும் பொலிவுடன் காணப்படும். அப்படி அமையாத வீடு சப்தங்களால் நிறைந்து உறங்காத வீடாகவே எஞ்சியிருக்கும்.

 

(அறிதலின் தீ. லாவண்யா சுந்தரராஜன். கவிதைகள். பாதரசம் வெளியீடு, 377/16, கங்கா காவேரி குடியிருப்பு, கம்பர் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை -40. விலை. ரூ.60)

Series Navigationஆத்மாவின் கடமைமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *