ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு

This entry is part 12 of 23 in the series 24 ஜூலை 2016

 

அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு… அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது – கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய மாந்தர்களின் பெயர்கள் சரளமாய் அவரின் கவிதைகளில் தென்படுவதைப்பார்த்து ஒரு மூத்தப் பேராசிரியர் அவரின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பினார். ஆ.செங்கதிர்செல்வன், கதிர்பாரதி என்ற பெயர்களையே முணுமுணுத்தேன்.  ஆனால் அவர் வேறெதையோ தேடிக்கண்டடைந்தார். அந்த “ அடையாளத் “தை மேம்படுத்தும் முயற்சிகள், வேறு அடையாளங்களைச் சிறுமைப்படுத்தும்  முகங்களை அவர் அதில்  தேடினார். எதையும் கண்டடையவில்லை என்பதில் எனக்கும் ஆறுதல்தான்.ஆனால் அந்தப் பேராசிரியர் போன்றோர் அதில் அடையாளம் கண்டு கொண்டதை இதில் உள்ள கவிதைகளைக் கொண்டு  ( ஆதியாகமம், மற்றும் இரண்டாவது கல், பத்து நிந்தனைகள், அய்ந்து அப்பங்களும்…..) நிச்சயப்படுத்திக் கொள்வர். ஆனால் அதை மீறி குதர்க்கமாய் எதையும் கண்டு கொள்ள முடியாது. அவையும் சங்கீத வசனங்களாய் கவிதைக்குள் வந்திருக்கும் வழக்கைதான் காண முடியும்..சாதி வேண்டாம் மதம் வேண்டாம்  என்ற உறுதியான மனநிலையில் சாதி இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு போக்கு தீவிரமாகியிருப்பது எவ்வளவு துயரம் கை நிலத்தை வாய்க்கரிசி போடுவது போல்.

கதிர்பாரதியின் தமிழ் சமூக்கதையில் – ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சமூக வழக்கு புதைந்திருப்பதையும் நிலம் சார்ந்த அநுபவங்களின் விஸ்தரிப்பும் ஒரு அழகியலாக அமைந்து வருவதையும் காணலாம்.அது உருவாக அந்நிலத்து சாரமான வாழ்வும் நிலத்தை விட்டுப் இடம் பெயர்தலில் உண்டாகும் சீர்குலைவுகளும் மூலங்களாக இருக்கின்றன. அவரின்            “ நெற்பயிரின் பனிமொட்டுகளில் பின்னங்கால்களை ஊன்றும் வெட்டுக்கிளிகள் பறந்துலவும் நிலம் “ கார்பரேட்டுகளால் சிதைக்கப்படுவதைப் பற்றிய சித்தரிப்புகள் முக்கியமானவை.                     ” நிலவே../மதுவே/ உனை ஒருவருக்கும் கொடேன் “ என்ற தீர்மானத்தில் இருப்பவர்தான். ஆனால் எல்லாம் கை நழுவிப் போகின்றன. காலடி நிலம் சரசரவென்று பாம்பு நழுவுவது போல் வேற்றாள் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து வழக்குத்தொடுப்பதிலும் அந்த உணர்வுகளைச் சங்கமிக்க வைத்து வாதாடி மனிதாபிமான சான்றுகளை எடுப்பதுரைப்பதிலும் அவரின் கவிதைகள் முன் நிற்கின்றன எனலாம். அதுவே அவர் கவிதைகளின் பொது அழகியலாவும் மிளிர்கிறது.

ஆனந்தியைப் பெண்ணாக நான் நினைத்துக் கொண்டு ( முதிரிளம் பருவத்து முலையுடன் ) தட்டான்கள் பெண் கவர்ச்சி சார்ந்தே தாழப்பறப்பதாக நினைத்தேன். ஆனால் ஆனந்தி நிலமாகிப் போனதில் எனக்கும் இன்னும் மகிழ்ச்சிதான். தானியக்கிடங்குகள் நிறைந்த நிலத்தின் பாடல்கள்,மெட்ரோபாலிட்டன் நிலத்தின் நாற்சந்தி, டம்ளரில் தண்ணீர் எடுத்து காடு வளர்க்கும் சிறுவன், மாநகரப்பூங்காவின் வடமேற்கு மூலை  என்று காட்டி     மெட்ரோபாலிட்டன் நிலத்தில் வேரறுந்து கிடப்பவர்களைக் கவிதைக்குள் கொண்டு வருகிறார்.ஆட்றா ராமா.. .  ஆட்றா ராமா.. ஆட்றா ராமா.. ஆட்டங்கள் ஆடி சமரசம் செய்து கொள்பவர்களால் காணப்படும் பின் தங்கியவர்களின் உயரம் தட்டுப்பட்டு விடுகிறது. கருவாட்டு ரத்தமூறிய இட்லிகளும் இரு கரு நிற கோலாக்களும், இனும் பிறவும் பொய்யா மெய்யா என நாம் வெடித்து விளையாடு எருக்கம் மொட்டுகளாக மாறி நம்மை அலைக்கழிக்க வைக்கிறது. பகலும் இரவும் மாறி மாறி அலைக்கழிக்கின்றன. ( இத்துணை ஆதூரமானதா உன் விரல்.. இத்துணை ஆதூரமானதா உன் பகல் .,சில்லென விடியப்போகும் இரவால் அழகாகப் போகிற பகல் – வெட்கமில்லா இரவு )

பல ஆங்கிலத் தலைப்புகள் உறுத்துகின்றன. பலரை உறுத்தவென்றே பல பொருட்களின் மேல் அவதானித்து எழுதப்பட்ட இத்தொகுப்பின் கவிதைகள் –கேரட், ரயில், குரங்கு, எறும்பு, முயல்குட்டிகள், புறா , ஆமை , அணில் – ம்னிதர்களின் மேலான அவதானிப்புகள் என்றேயாகிறது.

வெட்டுக்கிளி, சிட்டுக்குருவி போன்றவற்றை உருவகப்படுத்திய  ( பக். 65, 69 ) கவிதைகள்  ஆவணக்கொலை போன்ற சமூக நிகழ்வுகளின் மீதான விமர்சனமாகவும் இருக்கிறது. விமர்சனங்களை மீறி ” மோதி மிதித்து  முகத்தில் உமிழ்ந்து விடும் ( நான் ..பக்க.92 )  ” கோபத்தை எதிர்ப்பின் விதைகளாகவும் இக்கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். முப்பரி பின்னலிட்ட நாக சர்ப்பமாகக் கிடக்கும் ஜடையைப் போல மொழியின் இறுக்கத்திலும் அனுபவங்களின் அடர்த்தியிலும்  இக்கவிதைகள்  வாசிப்பின் போதும் பின்னாலும் யோசிக்கையில் சுழித்தபடி சிலேப்பி மீன்களைப் போல் நீந்திக்கொண்டிருக்கின்றன.

(ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்

96 பக்கங்கள் .ரூ 85, உயிர்மை பதிப்பகம். 

Series Navigationகாசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …சாகும் ஆசை….
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *