டாக்டர் மில்லர் மருத்துவ வரலாறு பற்றி சுவையான சொற்பொழிவு ஆற்றியபின் எங்களுக்கு ஒரு பயிற்சி தந்தார்.அது அதைவிட சுவையானது. நாங்கள் கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெத்தெஸ்கோப்பை கையில் எடுக்கச் சொன்னார். அதை அருகில் உள்ள மாணவரின் நெஞ்சில் வைத்து கேட்கச் சொன்னார். என் அருகில் கிச்சனர் இருந்தான். நான் அவன் நெஞ்சில் வைத்துக்  கேட்டேன்.அவன் என் நெஞ்சில் வைத்துக் கேட்டான்.
          நான் முன்பே என்னுடைய நெஞ்சில் அதை வைத்து கேட்டுள்ளேன். இதயம் துடிக்கும் ஓசை கேட்கும். கிச்சனர் இதயமும் அது போன்றுதான் துடித்தது. ஐந்து நிமிடங்கள் அவ்வாறு கேட்டபின்பு வேறொருவனின் நெஞ்சில் வைத்துக் கேட்கச் சொன்னார். நான் அசோக் தயாள் சந்த் என்பவனின் இதயத் துடிப்பைக் கேட்டேன். அவன் பஞ்சாப் மாநிலத்தவன். அவன் இதயமும் கிச்சனர் இதயம் போலவேதான் துடித்தது. பின்பு இன்னொருவனின் இதயம். சில பெண்களின் இதயம். எல்லார் இதயமும் ஒரே ஓசையுடன்தான் கேட்டது. அவர்கள் வேறு மொழி பேசினாலும், வேறு மாநிலத்தவரானாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதயத் துடிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கேட்டது. இதயத் துடிப்புக்கு சாதி, மத, இன, மொழி வேறுபாடில்லை! எல்லார் இதயமும் ஒன்றுபோல்தான் துடித்துக்கொண்டிருக்கின்றன  இது ஒன்றும்  பெரிய தத்துவம் இல்லாவிட்டாலும் இதுவே உண்மை!
          மில்லர் எங்களைப் பார்த்துச் சொன்னார்.
          ” நீங்கள் கேட்ட இதயத்தின் ஓசையை ஒவ்வொருவராக வர்ணிக்கவேண்டும் .அதன் ஓசை எப்படி இருந்தது என்று நீங்கள் சொல்ல வேண்டும். “
          நாங்கள் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு விதமாக வர்ணித்தோம்.இரயில் ஓடுவதுபோல், குதிரை ஓடுவது போல் என்று விதவிதமாகச் சொன்னோம்.டுக் டுக் , டக் டக் என்று ஓடுவதாகவும் வர்ணித்தோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார் மில்லர்.
          அதன்பின்பு அவர் இதய ஓசை பற்றி விளக்கினார்.
          இதயம் அல்லது இருதயம் உடலின் உன்னதமான உறுப்பு. பிறந்ததிலிருந்து இறக்கும்வரை நில்லாமல் இயங்கும் உயிர் நாடி இதயம்தான். இதயத் துடிப்பு இல்லையேல் உயிர் இல்லை.
          நோயாளி எந்த நோய்க்காக வந்தாலும் மருத்துவர் இதயத் துடிப்பைக் கவனிப்பார். அது சீராக இயங்கவேண்டும். ஒரு நிமிடத்தில் அது 72 தடவைகள் துடிக்க வேண்டும். கையைப்  பிடித்து நாடி பார்ப்பதும் இதயத் துடிப்பை அளப்பதுதான். நாடியும் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கும். சில நோய்களில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். குறிப்பாக காய்ச்சலில் இதயம் வேகமாகத்  துடிக்கும்.
          இதயத் துடிப்பை லப் டப் என்று இரண்டு வகையான ஓசைகள் அலங்கரிப்பதாகக் கூறினார். நன்றாக உற்று கேட்டால் இது புரியும் என்றார். எங்களை மீண்டும் கேட்கச் சொன்னார். கேட்டோம்.ஆம். உண்மைதான். இதயம் லப் டப் என்ற ஓசையுடன்தான் துடிக்கிறது. லப் டப் லப் டப் என்று தொடர்ந்து கேட்கிறது. இந்த லப் டப் இதய ஓசையை ஒரு நிமிடம் எண்ணச் சொன்னார். எண்ணினேன். 70 முதல் 80 வரை கேட்டது. சராசரியாக ஆரோக்கியமான மனிதனின் இதயம் ஒரு நிமிடத்த்ல் 72 தடவைகள் துடிக்கும் என்றார்.
          பின்பு இதயத் துடிப்பு எதனால் உண்டாகிறது என்று விளக்கினார். இதயத்தின் வேலை இரத்த  ஓட்டத்தை இயக்குவது.அது இயங்கினால்தான் இரத்தம் அதிலிருந்து வெளியேறி தமனிகளின் ( Arteries ) வழியாக உடலெங்கும் பாயும். இதயத்துக்கு இரத்தம் எங்கிருந்து  வருகிறது.உடலின் எல்லா பகுதிகளிலுமிருந்துதான் வருகிறது. அதைக் கொண்டுவருவது சிரைகள் ( Veins ) என்றார். உடலின் பயன்படுத்திய இரத்தத்தில் கரியமிலவாயு  உள்ளதாகவும் அது சிரைகளின்  மூலமாக இருதயத்தின் வலது பக்க மேல் அறைக்குக் ( Right Atrium ) கொண்டு செல்கின்றன. இந்த கெட்ட இரத்தம் வால்வுகள் வழியாக வலது பக்க கீழ் அறைக்குச் ( Right Ventricle ) சென்று அங்கிருந்து இதயத் துடிப்பின் மூலம் வேறு வால்வுகள் மூலமாக நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரலில் அந்த கெட்ட இரத்தத்திலிருந்து கரியமிலவாயு வெளியேறி பிராணவாயு இரத்தத்தில் புகுந்து அதை சுத்திகரிப்பப்பட்ட நல்ல இரத்தமாக மாற்றுகிறது. இந்த நல்ல இரத்தம் மீண்டும் சிறைகளின்  வழியாக இருதயத்தின் இடது பக்க மேல் அறைக்குள் ( Left Atrium ) செல்கின்றன.. அங்கிருந்து வால்வுகள் வழியாக இடது பக்க கீழ் அறைக்கு ( Left Ventricle ) வால்வுகளின் வழியாகச் செல்கின்றன. பிறகு இதயத் துடிப்பின்போது இந்த நல்ல இரத்தம் வேறு வால்வுகளின் வழியாக  வெளியேறி தமனிகள்  வழியாக உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்கின்றன. பிராணவாயுவைக் கொண்டு செல்வதோடு நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகளையும் குடலிலிருந்து உறிஞ்சி அவற்றையும் இந்த இரத்த ஓட்டம் இதயத் துடிப்பின் மூலம் உடலின் செல்களுக்கு கொண்டு செல்கின்றன. இதுவே இதயத் துடிப்பின்  செயலும் பயனும் ஆகும்.
          இவ்வாறு இதயம் துடிக்கும்போது இதய வால்வுகள் மூடும்போது உண்டாகும் ஒலிதான் இந்த லப் டப் ஓசை. இதயத்தில் நான்கு விதமான வால்வுகள் உள்ளன..இரண்டு பக்க மேல் அறைகளுக்கும் கீழ் அறைகளுக்கும் நடுவில் இரண்டு வால்வுகளும், கீழ் அறைகளிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் பகுதியிலும், பெரிய தமனிக்கு செல்லும் வழியிலும் இரண்டு வால்வுகளும் உள்ளன.
          இதயத்தின் இரண்டு வகையான சத்தங்களில் லப் என்பது முதல் ஓசை. டப் என்பது இரண்டாம் ஓசை. மேல் அறைகளுக்கும் கீழ் அறைகளுக்கும் நடுவில் இருக்கும் வால்வுகள் மூடும்போது எழும் ஓசைதான் லப் என்னும் முதல் ஓசை.  கீழ் அறைகளிலிருந்து இரத்தம் வெளியேறியபின் மூடும் வால்வுகளின் ஓசைதான் டப் என்னும் இரண்டாம் ஓசை.
          இதை மனதில் வைத்துக்கொண்டு இனிமேல் இதய ஓசையைக் கேட்கவேண்டும் என்றார் மில்லர். இந்த லப் டப் ஓசை ஆரோக்கியமானவர்களிடமும், நோய்வாய்ப்பட் டவர்களிடமும் கேட்கும். சில இருதய நோய்களில் இந்த இரு ஓசையுடன் வேறு சில ஓசைகளும் எழும் என்றார். அது பற்றி பின்பு அறியலாம் என்று சொன்னார். நான் முன்பே உடற்கூறு  பாடத்திலும், உடலியல் பாடத்திலும் இதய அமைப்பையும், அதன் செயலையும் பயின்றுள்ளதால் இதய ஓசை பற்றி மில்லர் விளக்கியது எளிதில் புரிந்தது!
          ( தொடுவானம் தொடரும் )
- நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு
 - குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3
 - சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்
 - எதுவும் வேண்டாம் சும்மா இரு
 - திண்ணை வாசகர்களுக்கு
 - கவி நுகர் பொழுது – சொர்ணபாரதி
 - கவி நுகர் பொழுது- உமா மோகன்
 - ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்
 - திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்
 - சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.
 - காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …
 - ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு
 - சாகும் ஆசை….
 - காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்
 - தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை
 - எல்லாம் நுகர்வுமயம்
 - உற்றுக்கேள்
 - எனக்குப் பிடித்த சிறுகதைகள்
 - பரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.
 - கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்
 - சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்
 - ஆண் மரம்
 - இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி